ஷேக்ஸ்பியரின் பறவைகள்

ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் 74 விதமான பறவைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

Blackbird, Bunting, Buzzard, Chough, Cock, Cormorant, Crow, Cuckoo, Dive-dapper, Dove and Pigeon, Duck, Eagle, Estridge, Eyas-musket, Guinea-hen, Handsaw Falcon and Sparrowhawk, Finch, Goose, Hedge Sparrow, House Martin, Jackdaw, Jay, Kite, Lapwing, Lark, Loon, Magpie, Nightingale, Osprey, Ostrich, Owl, Parrot, Partridge, Peacock, Pelican, Pheasant, Quail, Raven, Robin, Snipe, Sparrow, Starling, Swallow, Swan, Scamels Thrush, Turkey, Vulture, Wagtail, Woodcock and the Wren. என நீள்கிறது இந்தப்பட்டியல்

இந்தப் பறவைகளை அடையாளம் கண்டு  The birds of Shakespeare  எனத் தனியே தொகுத்திருக்கிறார் Archibald Geiki.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக  ஷேக்ஸ்பியர் ஆர்வலரான Eugene Schieffelin ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டுள்ள பறவைகள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவை என்று முடிவு செய்து தனது சொந்தப் பணத்தில் அவற்றைச் சேகரித்து அமெரிக்காவில் உள்ள தேசியக் காப்பகங்களில் பறக்க விட்டிருக்கிறார், அவை இன்று பல்கிப் பெருகி அமெரிக்காவெங்கும் வசிக்கின்றன, இலக்கியத்தின் மீதான ஈடுபாடு எப்படியான செயல்முறையாக மாறுகிறது பாருங்கள்

இன்று ஷேக்ஸ்பியர் குறிப்பிட்ட பல பறவை இனங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன, அதில் முக்கியமானது குருவிகள், 1852ம் ஆண்டு தான் குருவிகள் ஆஸ்திரேலியாவிற்கு அறிமுகமானது என்கிறார்கள், வடஅமெரிக்காவிற்கு Schieffelin 1851ல் வீட்டுக்குருவிகளை அறிமுகம் செய்திருக்கிறார்.

Hamlet, As You Like It, The Tempest ,Troilus and Cressida ஆகிய நான்கு நாடகங்களிலும் குருவிகள் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்

இதில் ஹாம்லெட்டில் there is special providence in the fall of a sparrow [Hamlet - V, 2]. என்ற புகழ்மிக்க வரி இடம் பெற்றுள்ளது, இது பைபிளில் வரும் மத்தேயு சொல்லும் குருவி பற்றிய வரிகளின் நினைவில் எழுதப்பட்டிருக்கிறது,

ஷேக்ஸ்பியர் போல எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் படைப்பில் இடம்பெற்றுள்ள பறவைகளையும் தனியே தொகுக்கலாம், அவ்வளவு எழுதியிருக்கிறார், கரிசல்காட்டில் வாழும் பறவைகளின் உலகம் பற்றி முழுமையாக எழுத்தில் பதிவு செய்திருப்பவர் அவரே,

காசியின் படித்துறைகளில் குருவிகளின் பெரும்படையொன்று ஒன்றையொன்று துரத்திப் போவதைப் பல நாட்கள் கண்டிருக்கிறேன், மாலைநேரங்களில் எல்லாப்படித்துறைகளிலும் இதைக் காண ஒரு கூட்டமே காத்துக்கிடக்கும் ,கங்கையின் மீது பறந்தபடியே அந்தக் குருவிகள் செய்யும் ஜாலம் அபாராமானது.

அலை அலையாக வானில் சுழன்று செல்லும் குருவிகளின் ஒன்றிணைந்த நடனத்தைக் காணப் பரவசமாக இருக்கும, இந்தக்குருவிகள் எங்கிருந்து வருகின்றன எங்கே செல்கின்றன என்று அறிய முடியாது, ஆனால் அவை வானில் சேர்ந்து நடனமாடுகின்றன, கீச்சிட்டுப் பறக்கின்றன,  ஆற்றில் விழுந்துவிடுவது போல பாவனை செய்கின்றன, குருவியின் வீழ்ச்சி  நடனத்தின் உச்சம் போலவேயிருக்கிறது,

இன்று நகரங்களில் குருவிகளைக் காண்பது அரிதாகிவருகிறது,

சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான முக்கியக் காரணங்களாக சொல்லப்படுபவை, கூடு கட்டுவதற்கு வசதியான கட்டிடங்கள். கூரைகள் இல்லாமல் போனது.  பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட உணவுதானியங்கள். காற்று மாசுபடல் மற்றும் ரசயானக் கழிவு புகையால் ஏற்படும் நெருக்கடி, வணிக காரணங்களால் இயற்கைச் சூழல் அழிக்கப்படுவது. மற்றும் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் ஏற்படும் அழிவு, உலகெங்கும் குருவிகள் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,

மார்ச் 20ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக்க் கொண்டாடுகிறார்கள், பெங்களுரில் உள்ள எனது நண்பர் சதீஷ் முத்துகோபால் இது குறித்து பழனியில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்த இருக்கிறார், இன்று இணையத்திலும் சிட்டுக்குருவிகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் பரவலாக வெளிப்பட்டு வருகிறது.

அழிந்து வரும் குருவிகளைக் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் முனைப்பு கொள்ள வேண்டும். குருவிகளுக்காக ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் வைக்கலாம், திறந்த வெளியில் தானியங்களை உணவாகப் போட்டுவைக்கலாம். இயற்கைச் சூழலை பாதுகாத்து அதற்கான வாழ்விடத்தை உருவாக்கித் தரலாம். அதைவிடவும் குருவிகளை வேட்டையாடல். துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் இருக்கலாம்,

டெல்லியில் அடிபட்ட பறவைகளுக்கு உதவி செய்ய ஜெயின் மருத்துவமனை ஒன்றிருக்கிறது, அங்கே பல்வேறுவிதமான  பறவைகள் உணவு மற்றும் குடிநீர் தரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன, இது போன்ற பறவைகளுக்கான மருத்துவமனைகள் இந்தியாவெங்கும் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: