ஹரிச்சந்திரா பேக்டரி

 

கடந்த இரண்டு மாதங்களுக்குள் 1) Jhing chik jhing.2)Valu3) Vihir 4) Gandh 5) Gho mala asla hava 6) Gabhricha paus 7) Harichandrasi factory8) Natrang 9) Dhossar, 10) Aarambh  என பத்து மராத்தியத் திரைப்படங்களைப் பார்த்து விட்டேன், பல்வேறு நண்பர்கள் வழியாக கிடைத்த டிவிடி மற்றும் இணையத்தில் தரவிறக்கம் செய்து கிடைத்த இப்படங்களை ஒருசேரப் பார்க்கும் போது மராத்திய சினிமா பற்றி மனதில் இருந்த  பிம்பம் முற்றிலும்  உருமாறிப்போனது,

சமகால இந்திய சினிமாவில் மராத்தி தான் முன்னோடியாக இருக்கிறது என்று சொல்லுமளவு  இவை ஆகச்சிறந்த படங்களாக உள்ளன,

கதை. நடிப்பு. ஒளிப்பதிவு. இசை. எடிட்டிங், அரங்கஅமைப்பு என்று எல்லா அம்சங்களும் சர்வதேசத் தரத்தினை அடைந்து, சமகால உலகசினிமாவிற்கு சவால்விடுகின்றன, மராத்திய சினிமாவின் இப் புதிய அலையைக் காண உற்சாகமாக இருக்கிறது,

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சவாஸ் (shawass) என்றொரு மராத்தியப் திரைப்படத்தை பார்த்தேன், அது மிக நன்றாக இருந்தது, அதன் பிறகு அவ்வப்போது ஒன்றிரண்டு மராத்திப் படங்களை மும்பையில் கண்டிருக்கிறேன், ஹிந்தி சினிமாவின் சவலைக் குழந்தைகள் போல தானிருந்தன,  அது தவறான எண்ணம் என்பதைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான இந்த மராத்திய படங்கள் உறுதி செய்கின்றன

நான் பார்த்த இந்த படங்கள் அத்தனையுமே மிகச்சிறந்தவை, அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஹரிச்சந்திராவின் பேக்டரி,

சென்ற ஆண்டு Paresh Mokashi ,இயக்கத்தில் மராத்தியில் வெளியான HARISHCHANDRACHI FACTORY திரைப்படம் சிறந்த இந்தியப்படமாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டதுடன் அரவிந்தன் புரஸ்கார் விருது. சிறந்த திரைப்படத்திற்கான மூன்று மாநில விருதுகள், கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது. சாந்தாராம் விருது என்று பத்திற்கும் மேலான விருதுகளைப் பெற்றிருக்கிறது, இப்படம் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, ராஜா ஹரிச்சந்திரா படத்தை எடுக்க பட்ட சிரமங்களையும் இந்தியாவிற்குச் சினிமா அறிமுகமான வரலாற்றையும்  விவரிக்கிறது,

இந்திய சினிமாவின் வரலாற்றை அறிந்திருப்பவர்களுக்கு தாதா சாகிப் பால்கேயைப் பற்றி ஒரளவு தெரிந்திருக்க கூடும், மற்ற பொது சினிமா ரசிகர்களுக்கு அது ஒரு பெயர் மட்டுமே, நாம் மறந்து போன பல முக்கிய திரைப்பட ஆளுமைகளில் இவரே முதன்மையானவர்,

இந்தியாவிற்குச் சினிமா அறிமுகமானதன் வரலாறு மிக சுவாரஸ்யமானது, சினிமா ஒரு கலையாக வளர்ந்த விதம் எழுதப்பட்டிருக்கிறது, பார்வையாளர்களிடம் அது உருவாக்கிய தாக்கம் இன்னமும் முழுமையாக ஆராயப்படவில்லை

1913ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி இந்தியாவின் முதல்சினிமா ராஜா ஹரிச்சந்திரா தாதா சாகேப் பால்கேயால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு வரி செய்தியின் பின்னே புதைந்திருந்த நினைவுகளையே இப்படம் வெளிப்படுத்துகிறது,

இது பால்கே என்ற ஒரு தனிநபரின் போராட்டம் மட்டுமில்லை, சினிமா என்ற கலைவடிவம் இந்தியாவிற்கு எப்படி வந்தது, அது எதிர்கொண்ட பிரச்சனைகள் என்ன என்பது சினிமாவோடு தொடர்புள்ள யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றே.

இன்று சினிமா வெகுமக்களின் கலை, ஆனால் சினிமா அறிமுகப்படுத்த நாளில் அதைக் காண்பது மிகப்பெரிய பாவம் என்றே கருதப்பட்டது, சினிமா பார்ப்பதே பாவம் என்றிருந்த சூழலில் சினிமா எடுக்க முயன்ற பால்கேயின் அவஸ்தைகளைப் பற்றியதே இந்தப்படம்

சமீபத்தில் இவ்வளவு நகைச்சுவையான படம் எதையும் நான் காணவேயில்லை, படம் முழுவதும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் வேடிக்கைக்காட்சிகள் இருக்கின்றன, சாப்ளின் படங்களைக் காணும் போது கிடைக்கும் அந்த ஆனந்தம் இந்தப்படத்தில் சாத்தியமாகியிருக்கிறது, அதற்குக் காரணம் பால்கேயின் கதாபாத்திரம் மற்றும் அதன் விசித்திர மனநிலை, அவர் எதிர் கொண்ட வியப்பான பிரச்சனைகள். அச்சிக்கல்களை சந்தித்து வென்ற அவரது மனஉறுதி.

பால்கேயின் கதையோடு மராத்தியக் குடும்ப வாழ்வும் பெண்களின் நிலையும் அன்றைய சமூகக் கட்டுப்பாடுகளும்.ஆசாரங்களும் படத்தின் பின்புலமாக விரிகின்றன , அந்தவகையில் இது ஒரு வரலாற்று ஆவணம் போலிருக்கிறது

தாதா சாகேப் பால்கே 1870களில் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். இவரது அப்பா ஒரு சமஸ்கிருத பண்டிதர், ஒவியம் பயில்வதில் ஆர்வமான பால்கே பரோடா சென்று ஒவியப்பள்ளியில் சிற்பம் மற்றும் ஒவியம் பயின்றிருக்கிறார், சில காலம் புகைப்படக்கலைஞராகப் பணியாற்றிவிட்டு அகழ்வாய்வுத் துறையில் வரைபட நிபுணராக வேலைக்கு சேர்ந்தார்.

அதுவும் பிடிக்காமல் மேஜிக் கலைஞராக வேலை செய்து பார்த்திருக்கிறார், பின்பு ராஜா ரவிவர்மாவோடு லித்தோகிராப் வரைவதற்கு உதவியாக பணியாற்றியிருக்கிறார், பிறகு ஜெர்மன் சென்று வந்து மும்பையில் சொந்தமாக ஒரு அச்சகம் நடத்தியிருக்கிறார், அதிலும் பிடிப்பில்லை,

அப்போது தான் இந்தியாவிற்குச் சினிமா அறிமுகமாகிறது, அதைக் கண்டு ஆச்சரியமான பால்கே எப்படியாவது சினிமா எடுக்கக் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்று முயற்சி செய்து அதற்காக உள்ளுர் சினிமாக் கொட்டகையில் உதவி ஆளாக வேலைக்குச் சேர்ந்து அங்கே ஆரம்பப் பாடங்களைக் கற்றுக் கொண்டு லண்டன் சென்று முறைப்படி சினிமா எடுப்பதற்குப் பயிற்சி பெற்று, இந்தியா திரும்பிவந்து தானே சொந்தமாக ஒரு சினிமா எடுக்க முயற்சி செய்தார், அது தான் ராஜா ஹரிச்சந்திரா,

இந்தப்படம்  பால்கேவிற்கு சினிமா எப்படி அறிமுகமாகிறது, அதில் எப்படி தன் மனதைப் பறிகொடுத்து பித்துப் பிடித்து அலைகிறார், சினிமாவைக் கற்றுக் கொள்ள அவர் எடுக்கும் எத்தனங்கள், அதற்காக வீட்டுச்சாமான்களை விற்பது, கண்பார்வை மங்கிவிடுவது என்று ஒரு பாதி பால்கேயின் சினிமா தேடுதலையும், மறுபாதி பால்கே தனது ராஜா ஹரிச்சந்திரா, எடுக்க நடிகர் நடிகை மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்த விதம். படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள். முதன்முதலாக மக்கள் சினிமா பார்த்த போது  ஏற்பட்ட அனுபவம். லண்டனில் அவருக்கு கிடைத்த வரவேற்பு, இந்தியாவிற்குச் சினிமா என்ற புதிய கலையை அறிமுகம் செய்து வெற்றி பெறச்செய்த அவரது சாதனை என்று விவரிக்கிறது

பால்கேயாக நடித்துள்ள நந்து மாதவ் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார், ஒரு உண்மை மனிதரின் கதை என்பதால் அந்தப் பாத்திரதோடு பொருந்திப் போவது மிக அவசியம், அதை நந்து மாதவ் உணர்ந்து செய்திருக்கிறார், அவரது மனைவியாக நடித்துள்ள விபாரி தேஷ்பாண்டே ஆகச்சிறந்த நடிகை, ஒரு மராத்திய குடும்பப் பெண்  நிரந்தர வேலையில்லாத கணவனையும் அவனது கலைத் தேடுதலையும் புரிந்து கொண்டு, வறுமையான சூழலில்  பிள்ளைகளை வளர்ப்பதோடு அவன் சினிமா எடுக்கத் தேவையான அத்தனை ஒத்துழைப்புகளையும் முழுமையாகச் செய்து தந்த மனைவியாகச் சிறப்பாக செய்திருக்கிறார்,

பால்கே, அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள். உறவினர்கள்  என அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி முதல் மௌனப்படத்தை எடுத்தார்கள் என்பதைக்காணும் போது வியப்பாக இருக்கிறது

படத்தின் முதல் முப்பத்தைந்து  நிமிசங்கள் வரை சினிமா என்ற சொல்லே பயன்படுத்தபடுவதில்லை, அதை திரைநாடகம் என்றே மக்கள் சொல்கிறார்கள், ஒடும் புகைப்படங்களைக் காண்பதற்கு குறைவான பார்வையாளர்களே இருக்கிறார்கள், பால்கே லண்டனுக்குப் பயணமாகும் போது தான் சினிமா என்ற சொல்லை உச்சரிக்கிறார்

சினிமாவில் நடிக்க நடிகைகளை அவர் தேட்டி அலைவதும் அதற்கு அந்தப் பெண்கள் மறுத்து சொல்லும் காரணங்களும் வேடிக்கையான உண்மைகள், நடிகராக வந்த ஒருவனுக்குப் பெண் கொடுக்கமறுக்கிறார்கள் என்ற போது பால்கே தாங்கள் பிக்சர் எடுப்பதாக சொல்லும்படியும். தங்களது வேலையை ஒரு பேக்டரி என்று அழைக்குமாறும் சொல்கிறார், அத்தோடு மக்கள் ஒரு வேலையை ஆங்கில சொல்லில் அழைத்தால் அது கௌரவமானது என்று எடுத்துக் கொள்வார்கள் என்கிறார், அந்த மனநிலை இன்றும் மாறிவிடவில்லை, அப்படித் தான் ஹரிச்சந்திரா பேக்டரி இயங்கியிருக்கிறது

படத்தில் பெண்வேஷமிட்ட நடிகர் மீசையை எடுக்க மறுக்கிறார், காரணம் கேட்டால் அப்பா உயிருடன் இருக்கும் போது மீசையை மழிக்ககூடாது என்கிறான். நீ இப்போது அரிச்சந்திரன் மனைவி சந்திரமதி, அரிச்சந்திரன் ஒரு ஆம்பளையைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பானா சொல்லு என்று பால்கே திட்டுகிறார். பிறகு உன் அப்பனைக் கூப்பிடு என்று  ஸ்திரிபார்ட் நடிகரின் அப்பாவை கூப்பிட்டு, நீயே சொல்லு, சந்திரமதி எவ்வளவு அழகாக இருப்பாள் என்று ராஜா ரவிவர்மா ஒவியத்தைக் காட்டி கேட்கிறார், மிகவும் அழகாக இருப்பாள் என்றதும் உன் பையன் மீசையோடு இருந்தால் எப்படி பெண்வேஷமிடுவது, எடுக்கச் சொல் என்று சொல்லி அப்பாவை சமாதானம் செய்ய வைத்து மீசையை எடுக்கிறார்,  

ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு நிஜமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள்முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும். எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார், அந்த நடிகர்கள் முடிவில் திரையில் தங்கள் நடிப்பைக் கண்டு கண்ணீர் விடும் போது நமக்கே சிலிர்த்துப் போகிறது

அது போலவே வீட்டில் இருந்து சாமான்கள் அடமானம் வைக்க பால்கே வெளியே கொண்டு போகும் முறை. அதற்குத் துக்கம் கேட்க வந்த அடுத்த வீட்டுக்காரகள், நடிப்பதற்காக வந்த ஊமை. பீடிகுடிக்கும்  ஸ்திரிபார்ட் நடிகர். காட்சியின் பின்னால் பலாமரம் இருக்கலாமா என்று லாஜிக் கேட்கும் கேமிராமேன். வேஷமிட்ட சிவனை வணங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர். வீதியில் அலையும் இசைக்கலைஞர். வேசையர் விடுதிக்காட்சிகள். பால்கே பீன்சு செடியை ஒளிப்பதிவு செய்யும் காட்சி, அவரது மனைவிக்கு கால்பிடித்துவிடும் அனுபவம் என நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் எண்ணிக்கையற்ற விசயங்கள் இப்படத்தில் இருக்கின்றன

படம் 90 வருசங்களுக்கு முந்தைய காலகட்டத்தை விவரிக்கிறது என்பதால் கலை இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள், அதே டிராம் ஒடும்வீதிகள். பழமை மாறாத துறைமுகம். ரயில். வீடுகள். அந்தக்கால உடைகள். வெள்ளைக்காரர்களின் கோச் வண்டிகள். பழைய எலக்ட்ரீக் தியேட்டர்.  பிக்சர் பேலஸ். அச்சு இயந்திரங்கள். காவலர்கள். அலங்கார நகைகள். நடிகர்களின் ஒப்பனைகள் என அத்தனையும் நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறது, இப்படத்திற்குச் சிறந்த கலைஇயக்கம் செய்ததற்காக நிதின் சந்திரகாந்த் தேசாய் விருது பெற்றிருக்கிறார்,

இசையும் எடிட்டிங்கும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை, குறிப்பாக பால்கே லண்டனில் இருந்து திரும்பிவந்து உறங்கும் மனைவியின் முன்னால் உட்கார்ந்திருக்கும் அந்தக் காட்சி வெட்டி இணைக்கப்பட்ட விதம் அற்புதம், அது போலவே பழைய மௌனப்படங்களில் காட்சிகள் ஒடுவது போன்ற வேகத்திலே பால்கேயின் காட்சிகள் எடிட் செய்யப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு

பால்கேயின் வாழ்க்கை ஒரு கலையின் ‘மீது ஈடுபாடு கொண்ட ஒருவன் அதற்காக எவ்வளவு சிரமங்களையும் தடைகளையும் எதிர் கெர்ள்ள் வேண்டியிருக்கிறது, சினிமா எடுப்பது என்பது எல்லாக்காலங்களிலும் பல்வேறு விதமான சிரமங்கள். அவமானங்கள். பொருளாதாரச் சிக்கல்கள். புறக்கணிப்பைத் தாண்டியே சாத்தியமாகியிருக்கிறது என்பதேயே காட்டுகிறது, இடைவிடாத முயற்சியும் உறுதியான ஈடுபாடுமே முடிவில் பால்கேயிற்கு வெற்றியைத் தருகிறது, பால்கேயின் சினிமா திரையில் ஒடும் காட்சி நேரடியாக காட்டப்படுவதில்லை, நாம் ப்ரொஜெக்டரின் ஒளிக்கற்றைகளையே திரையில் காண்கிறோம், படம் முடியும் போது ஏற்படும் பரவசம் பார்வையாளர்கள் முகத்தில் உறைந்து போயிருக்கிறது, அந்த நிமிசம் நாமும் பால்கே அடைந்த உன்னத மனவெழுச்சியை அடைகிறோம்

தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை எடுத்திருக்கிறார், 1931ல் இவர் உருவாக்கிய சேதுபந்தன் வெளியானது, அப்போது முதல் பேசும்படமான ஆலம் ஆராவின் வருகையால் அடையாளம் கண்டு கொள்ளப்படாமல் சேதுபந்தன் ஒதுக்கப்பட்டது, வேறு வழியில்லாமல் அவரும் படத்தை டப் செய்து பேசும்படமாக வெளியிட்டார் ஆனாலும் அவரால் பேசும்படத்தோடு போட்டியிட முடியவில்லை,  1937 எடுத்த கங்காவர்த்தனே அவரது கடைசிப்படம்,

பால்கேயைப் பற்றிய இந்தப்படத்தை உருவாக்க இயக்குனர் பரேஸ் மொகாசி பல்வேறு சிரமங்களை அடைந்திருக்கிறார், பால்கே படத்தை யார் பார்ப்பார்கள் என்று தயாரிப்பாளர்கள் கைவிட்ட நிலையில் தனது வீட்டை அடமானம் வைத்து இந்தப்படத்தை அவர் தயாரித்து இயக்கியிருக்கிறார், அது மிகப்பெரிய வெற்றி பெற்று பல்வேறு உலகத் திரைப்பட விழாவில் சரியான அங்கீகாரம் பெற்றிருக்கிறது

டாகுமெண்டரி போல எடுக்கப்பட வேண்டிய பால்கேயின் வரலாற்றை இவ்வளவு சுவாரஸயமாகவும் நுட்பமாகவும் மிகுந்த நகைச்சுவை உணர்வோடும் சொன்னது இயக்குனரின் வெற்றியே,

இப்படம் இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்து திரையிட வேண்டியது அவசியம், அது சாத்தியமானால் மௌனப்படங்களின்  வரலாற்றை அறிந்து கொள்ள இந்த ஒரு படமே போதுமானது.

சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய படமிது

•••

 இப்படத்தைக் காண உதவி செய்த நண்பர் சந்திரமௌலிக்கும் குமரகுருவிற்கும் மிகுந்த நன்றி.

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: