உலகம் ததும்பும் ஒசை

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் நோபல் ஏற்புரையில் தான் முதன்முறையாக  தோஜென் (Priest Dogen) என்ற மதகுருவைப்பற்றி விரிவாக அறிந்து கொண்டேன், முன்னதாக அவரது ஒன்றிரண்டு ஜென் கவிதைகளை தொகுப்பில் வாசித்திருந்த போதும் அவர் மீது தனித்த கவனம் குவிந்ததில்லை,

பாஷோ தான் எனக்கு மிகவும் நெருக்கமான கவி. ஆனால் கவாபத்தாவின் நோபல் உரை அதுவரையான எனது  ஜென் கவிதைகள் பற்றிய மதிப்பீட்டினை அப்படியே உருமாற்றுவதாக அமைந்தது, கடந்த இருபத்தைந்து வருசங்களில் நோபல் பரிசு வாங்கிய பலரது ஏற்புரைகளையும் படித்திருக்கிறேன், அத்தனையிலும் சிறப்பானது கவாபத்தாவின் உரை,

அது ஜப்பானியக் கவிதைமரபை முன்வைத்து தனது நவீன இலக்கியச் செயல்பாட்டை பேசிய விரிவான உரை, கவாபத்தா ஒரு கவிஞரில்லை, நாவலாசிரியர். அதிலும் முக்கியமாக சிறந்த சிறுகதை எழுத்தாளர். ஆனால் அவர் தனது எழுத்தின் ஆதாரமாக இருப்பது ஜப்பானியக் கவிதை மரபு என்கிறார், அதுதான் முக்கியமானது.

உரைநடை எழுத்து என்பது சந்தையை வேடிக்கை பார்ப்பது போன்றது, அங்கே காண் உலகம் மிக யதார்த்தமாகத் தெரியும், வாழ்வின் நெருக்கடியும் பண்டமாற்றும்  நேரடியாகக் காணமுடியும். மேலும் ஒரே இரைச்சல். இடைவிடாத பேச்சு நிரம்பியிருக்கும். ஒரே இடத்தினுள் நூறுவிதமான நிகழ்வுகள். அன்றாட தேவைகளுக்கான அலைமோதல்கள் நடைபெறும். சந்தைக்கான பொருளின் விலை பணம். ஏமாற்றம். பிழைப்பிற்கான முட்டி மோதல்கள் என காலில் மண்ணும் நுரையீரலில் புழுதியும் படியும் படியான இயல்புவாழ்வு  கொண்டதாகயிருக்கும்,

கவிதை என்பது  நீர்நிலையை நாடி வரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது, எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும், எது தரைஇறங்கும் என்று தெரியாது,  எவ்வழியே இப்பறவைகள் வந்தன, எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை, பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல  அறிந்த. அறியாத விந்தைகள் கொண்டது கவிதை,

அங்கே சொற்கள் சிறகடிக்கின்றன, கரைந்து போகின்றன. திமிர்ந்து எழுந்து  உள்ளார்ந்த இசையைப் பாடுகின்றன, கனவை உருவாக்குகின்றன, சொற்களின் விடுபடலும் தரையிறங்குவதலும் புதிராகவே இருக்கிறது, ஆகவே கவிதை ரசனை கொண்டவன்  தன் அளவில் வாழ்வின் அரூபமான தளங்களின் மீது  பரிச்சயம் கொண்டவனாகவே இருக்கிறான்

ஜப்பானிய மரபில் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இயற்கை என்பதற்கு தனிச்சொல்லே கிடையாது என்கிறார்கள், மேற்கத்திய கருத்தியலின் காரணமாகவே அதற்கான தனிச்சொல் உருவாகி முக்கியமடைந்திருக்கிறது, அது வரை இயற்கை என்பதைத் தனித்துச் சொல்லும் சொல் எதுவும் பயன்படுத்தபடவில்லை, Kami அதாவது உயிர்த்துவம் என்ற சொல்லே இயற்கையைக் குறிப்பதாக இருந்துள்ளது,

கவிதையை  மொழியின் சிறப்பான உயர்வடிவம் என்பதாகயின்றி மொழியின் சூட்சும வடிவம் என்றே கருதுகிறார்கள், ஆகவே கவிதை என்பது பனித்துளி போல தன்னளவில் முழுமையாகவும், ஈரமும் வசீகரமும் கொண்டதாகவும், தனக்குள் பெரிய உலகை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஜென் கவிஞர்கள்.

ஜென் கவிதையுலகில் சமூகப்பிரச்சனைகள். சகமனித உறவுகள், உளவியல் சிக்கல்கள் எதுவுமில்லை, அது எல்லையற்ற பிரபஞ்சமும் ஒரேயொரு மனிதனும் மட்டுமே இருப்பதைப் போலவே சித்தரிக்கிறது, கவிதைகள் சொற்களால் காட்சிப்படுத்தப்பட்ட சித்திரங்களை போலிருக்கின்றன, கவிதையின் மையம் அதன் மனோநிலை, கிளர்ச்சியுற்ற ஒரு நிமிச எழுச்சி போல அமைகிறது கவிதை

ஜென் கதைகளைப்போல அறவுரைகள். உரையாடல்கள் எதுவும் கவிதைகளில் இல்லை, பௌத்தக்கருத்துக்கள் எழுதப்பட்டாலும் அவை மதம் சார்ந்த கவிதைகளாக அமையவில்லை,  காலக்குறிப்புகளுக்கோ. வரலாற்று நினைவுகளுக்கோ அவை முக்கியத்துவம் தருதவதேயில்லை, அதனால் வீழ்ச்சியைப் பாடும் போதும் அவை துயரஉணர்ச்சியை பீறிடச் செய்வதில்லை, அடங்கிய தொனியை தனது ஆதாரமாக கொண்டிருக்கிறது, நுண்மையான ஒரு மனோநிலையை உருவாக்கவும் வெளிப்படுத்தவுமே ஜென் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன

அந்த மனோநிலையின் வெளிப்பாட்டினை முழுமையாக பாஷோ, லிபே. தூபே. ரியோகான், தோஹன், இஸா போன்ற முக்கியமான ஜென் கவிஞர்களிடம் காணலாம், புனைகதையைப் பற்றிய ஜப்பானிய விளக்கம் இதற்கு மாறானது, அது அருள் வந்த ஒருவன் ஒரே நேரத்தில் இயல்பிலும் மாயத்திலுமாக இரட்டைதன்மைகள் கொண்டிருப்பதைப் போலவே யதார்த்த உலகை சொல்லும் போதே அது எளிதாக விவரிக்கமுடியாத வாழ்வின் உயர்தன்மைகளை. மாயங்களை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்கிறார்கள், 

ஆகவே கவிதைகளைப் பற்றி கவிஞர்கள் பேசுவதற்கும் உரைநடையாசிரியர்கள் பேசுவதற்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது, அதிலும் கவாபத்தா போன்ற் ஆளுமைகள் ஜப்பானியக் கவிதை மரபைப்பற்றி பேசும் போது அதன் நுட்பமும் வளமையும் தனித்துவமும் ப்ரகாசமடைகின்றது.

தமிழ் புனைகதை எழுத்தாளர்கள் பலருக்கும் தமிழின் நீண்ட கவிதைமரபே ஆதாரமாக இருக்கிறது என்பது என் எண்ணம், நம் கவிதைமரபிலிருந்தே நமக்கான இலக்கியப்பார்வைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்,

அது போன்ற ஒன்றேயே கவாபத்தா முன்வைக்கிறார், ஜப்பானிய மரபில் ஜென் தத்துவம் தோன்றிய நாள் தொட்டு இன்றைய செயல்பாடுகள் வரையான ஒரு நீண்ட தொடர்ச்சி இலக்கியத்தில் எப்படிப் பதிவாகி உள்ளது என்பதை அறிய அவரது  உரையை  அவசியம் வாசிக்க வேண்டும் அந்த உரை ஒரு இலக்கியக்கோட்பாடு போல எவை இலக்கியத்தின் ஆதாரங்கள் என்று தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

கவாபத்தாவின் வழியாக கண்டுணர்ந்த மதகுரு தோஜென்னை பற்றி A STUDY OF DOGEN: HIS PHILOSOPHY AND RELIGION – MASAO BAE,  MOON IN A DEWDROP: WRITINGS OF ZEN MASTER DOGEN என்ற இரண்டு முக்கியமான புத்தகங்களின் வழியே விரிவாக அறிந்து கொண்டேன், ஒன்று அவரது கவிதையுலகம் மற்றது அவரது ஜென் தத்துவம் சார்ந்தது.

தோஜென்னை வாசிப்பது ஒரு பேரனுபவம், அவர் நம்மைப் புகைபோல எடையற்று மிதக்க செய்கிறார், இயற்கையை நுண்மையாக அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாலே தோஜென்னில் மிதக்க முடியும்,

மெய்ஞானம் என்பது தண்ணீரில் மிதக்கும் நிலவைப் போன்றது, நிலா நனைவுதுமில்லை, தண்ணீர் உடைபடுவதுமில்லை என்பது தான் தோஜென்னின் வழிகாட்டுதல்

ஜப்பானியர்கள் இயற்கையை அவதானிப்பதற்கும் நமக்கும் பெரிய இடைவெளியிருக்கிறது, நாம் இயற்கையை பற்றி பேசுகையில் அதிகம் உதாரணங்களையும் உவமைகளையும் உருவகங்களையும் கையாளுகிறோம், வியப்பே நமது பிரதான உணர்ச்சியாக உள்ளது,

ஜப்பானியர்கள் இயற்கையைக் கண்டு வியப்பதில்லை, மாறாக ஒன்றிப்போக முயற்சிக்கிறார்கள், நேரடியான எளிய சொற்களாலே இயற்கை, விவரிக்கபடுகிறது எந்த அலங்கார வார்த்தைகளும், கனத்த சொற்களும் பயன்படுத்தபடுவதில்லை, ஆனால் வாசிப்பின் வழியே இயற்கை முழுமையாக உணரச் செய்யப்படுகிறது, அது தான் கலையின் உன்னதம்.

நமது செவ்வியல் கவிதைமரபில் இயற்கையைச் சொல்லும் போது மொழி கவித்துவ நிலையின் உச்சமடைகிறது, ஆனால் ஜப்பானிய கவிதைமரபில் மொழி சொற்களின் மீது படிந்துள்ள அர்த்தசுமையைக் கூட உதறியதாக கையாளப்படுகிறது, தண்ணீரை போல எளிமையாக, ஆனால் ருசிமிக்கதாக மொழி கையாளப்படுகிறது, இயற்கையை எதிர்கொள்ளும் தருணமும் அந்த நிமிசத்தின் மனநிலையுமே அவர்களின் முக்கிய கவனம், நாமோ மனம் லயக்கும் தருணத்தில் துவங்கி உணர்ச்சிக் கொந்தளிப்பை நோக்கி நகர்ந்துவிடுகிறோம்,

ஜப்பானியர்கள் மொக்கு மலர்வதைப் போன்ற தன்னியல்பையே தங்களின் கலைவெளிப்பாடாகக் கொண்டிருக்கிறார்கள், பிரயத்தனம் என்பதே இல்லை, ஆகவே ஜப்பானியக் கவிதைகள் இயற்கையை அறிந்து கொள்வதற்கான தனித்த அறிதல் முறையை உருவாக்குகின்றன

தோஜென் அதைத்தான் செய்கிறார், அவர் கவிதைகளின் ஊடாக மெல்லிய பரிகாசக்குரல் ஒன்று ஒலிக்கிறது, அது தன்னைக் கேலி செய்யும் சுயபரிகாசம், அந்த கேலியே உலகின் பரிகாசமாகவும் ஆகிறது, ஞானத்தின் ஒரு நிலை கேலி, அதை ஜென் கவிஞர்கள் சரியாகவே வெளிப்படுத்துகிறார்கள்

தோஜென்னின் புகழ் பெற்ற ஒரு கவிதை

மனம் தான் புத்தன்,  இதைப் பயிற்சி செய்வது கடினம், ஆனால் விளக்குவது எளிது,

மனமுமில்லை, புத்தனுமில்லை இதை விளக்குவது கடினம், ஆனால் பயிற்சி செய்வது எளிது

இது தான் தோஜென் பாதை, இயற்கையைக் காண்கையில் நாம் கொள்ளும் உணர்ச்சி பீறிடல் எதுவும் தோஜென்னிடமில்லை, அவர் இயற்கையை  ஒரு நிரந்தரமான,  பிரிக்கமுடியாத துணை என்றே அடையாளம் காட்டுகிறார்,

நள்ளிரவு அலைகளில்லை

காற்றுமில்லை வெற்றுப்படகு

மிதந்து கொண்டிருக்கிறது நிலவொளியில்

இப்படிதானிருக்கிறது தோஜென் தரும் அனுபவம், இங்கே நித்யமான இயற்கையின் சாட்சியைப் போலவே தோஜென் இருக்கிறார், அவரது சுயஅடையாளங்கள் கரைந்து போயிருக்கின்றன, அவருக்கும் நிலவொளிக்கும்  இடைவெளியில்லை, அவர் தான் அந்த வெற்றுப்படகு, மிதத்தல் மனதின் அடையாளம், நிலவொளி என்பது பேரன்பின் வெளிப்பாடகவோ, உன்னதமான மெய்ஞானத்தின் அடையாளமாகவோ கொள்ளலாம், புறஉலகின்  இயக்கங்கள் ஒடுங்கிப் போனாலும் ஒரு மிதத்தல் இருந்து கொண்டேதானிருக்கிறது, அந்த மிதத்தல் எளிய அனுபவமில்லை, மாறாக அது ஒரு பேருண்மை, ஒரு தரிசனம்,

நீர்ப்பறவைகள்

வருகின்றன, போகின்றன

அதன் சுவடுகள் அழிந்து போய்விடுகின்றன

ஆனால் அது பாதையை மறப்பதேயில்லை

என்பதும் தோஜென் தான்,

இரவு, நிலவு, மேகம், இருள், ஒளிர்தல், மறைதல் என்று கவிதையில் வரும் சொற்கள் யாவும் நாம் முன்பு அறிந்தவையே, ஆனால் அதன் சூட்சும அனுபவத்தை நாம் முழுமையாக்கி கொள்ளவேயில்லை, அதைத் தான் ஜென் கவிதைகள் கற்றுத்தருகிறது,

ஜென்  இயற்கை குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது அதை சாத்தியமாக்குவது அறிவால் அல்ல, தன்னியல்பான மனதின் அலைபாய்தல் வழியாக, பனிக்கட்டி தண்ணீரில் கரைவதைப் போல சுய அடையாளமற்றதாக.

ஒடும் தண்ணீரில் நிழல் விழுவதில்லை என்ற ஜென் வரி படிக்க எளிமையானது ஆனால் அது சுட்டிக்காட்டும் உண்மை மகத்தானது. இதை வாசிக்கையில் அம்பின் சுதந்திரம் வில்லின் தயவால் தான் சாத்தியமாகிறது என்ற தாகூரின் வரி ஏனோ நினைவில் வந்து போகிறது,

கவாபத்தாவின் உரையில்  சின்நுங் என்ற ஒவியரின் ஒரு குறிப்பு வருகிறது, அது நீ கிளையை கவனமாக வரைய முடியுமானல் உன்னால் காற்றின் ஒலியை கேட்க முடியும் என்கிறது,

இதயத்தினுள் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதென்பது ஒவியத்தில் உள்ள பைக் மரத்தில் அடிக்கும் காற்றின் ஒலியைக் கேட்பதை போன்றதாகும் என்கிறது இக்கியுவின் கவிதை

இரண்டும் சொல்லும் ஒரே உண்மை, உலகம் ததும்பும் ஒசை அரூபமானது, அதை நுட்பமாகப் பதிவு செய்ய சொற்களின் அலங்காரங்கள் எதுவும் தேவையில்லை, எளிமையும் நேரடித்தன்மையும் நுண்மையுமே முதன்மையானது என்பதே,

நிலவைப் பார்க்கும் ஒருவன் தானே நிலவாகிவிடுகிறான், அல்லது அவனால் பார்க்கப்படும் நிலவு அவனாகிவிடுகிறது என்கிறது ஜப்பானிய மரபு, இது தான் இயற்கையைப் புரிந்து கொள்ள சரியான வழி.

நிலவைப்பற்றி ஜப்பானில் அதிகமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன, நாம் நிலவை உணர்ச்சியின் வெளி வடிவமாகக் கொண்டு அதில் மனதின் ஏக்கத்தை சந்தோஷத்தை ஏற்றிச் சொல்கிறோம், ஜப்பானியர்கள் அப்படி ஏற்றிச் சொல்வதில்லை. அதை நித்யத்துவத்தின் வெளிச்சமாகவே கருதுகிறார்கள்,

இரவு என்பது அறியாமையின் குறியீடு. நிலவு தோன்றுதல் என்பது விழிப்புணர்வு. ஆகவே நிலவைப் பற்றி பாடுவது என்பது ஒரு மெய்தேடலின் பயிற்சி என்கிறார்கள் ஜென்பௌத்தர்கள்,

சூரியனின் உக்கிரமான ஒளியைத் தனதாக்கிக் கொண்டு நிலவு குளிர்மையான வெளிச்சம் தருகிறது, தனக்கென தனியே எந்த ஒளியையும் அது கொண்டிருக்கவில்லை,   மனிதனின் இயல்பும் அதுவே, ஆனால் நிலவு  செய்யும் வேலையை மனிதன் மறந்துவிட்டான், ஆகவே உலகின் உக்கிரத்தைத் தனது அன்பின் வழியாக பரிசுத்தமான வெளிச்சமாக்க வேண்டியதே மனிதனின் ஆதாரச் செயல் என்கிறது ஜென் கவித்துவம், ஒருவகையில் நிலவு என்பது குளிர்ந்த சூரியன் என்றே கருதப்படுகிறது, ஜென் கவிதைகளில் நிசப்தம் தான் நிலவாக சுட்டப்படுகிறது என்றும் ஒரு கருத்தியல் இருக்கிறது,

நிலா பார்த்தல் என்பது ஜப்பானிய இயற்கை அறிதலின் முதற்செயல், ஒவ்வொரு முக்கிய கவியும் நிலா பார்ப்பதைப் பற்றி எழுதியிருக்கிறான், செப்டம்பர் மாதம் 22ம் நாளை ஜப்பானியர்கள் நிலாப் பார்க்கும் நாளாகக் கொண்டாடுகிறார்கள், அன்று வானில் நிலா காண்பது ஒரு சடங்காகவே நடைபெறுகிறது,

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் சித்ரா பௌர்ணமிக்கு இன்றும் நிலாப்பார்த்தல் நடைபெறுகிறது அல்லவா, அது போன்றதே இந்தச் சடங்கும்,

அந்த நாளில் நிலவின் வெண்மையைக் குறிக்கும்படி வெள்ளை அப்பம் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது,  ஜப்பானில் நிலா இயற்கையின் அடையாளம் மட்டுமில்லை, அது  முடிவற்ற தேடலின் குறியீடு.

லிபேயின்(Li Bai) கவிதை ஒன்றில்  லிபே குடிப்பதற்கு துணியில்லாமல் தனியே மலைஉச்சியில் இருக்கிறார், ஆகவே தனக்குத் குடித்துணையாக நிலவை சேர்ந்துக் கொள்கிறார் லிபே, நிலாவிற்கு குடிக்கத் தெரியாது, ஆகவே அது துணைக்கு  ஒரு நிழலை உருவாக்கித் தருகிறது, இப்போது லிபே அவரது நிழல் மற்றும் நிலா மூவரும் ஒன்றாக குடிக்கிறார்கள்,

தனது துணைக்காக நிலவு நிழலை உருவாக்கி தந்துள்ளது என்று அதன் அன்பை வியந்தபடியே போதையில் லிபே பாடுகிறார், நிலா ரசிக்கிறது, லிபே ஆடுகிறார், நிழலும் சரிந்து சுழல்கிறது, முடிவில் களியாட்டம் முடிந்து அவரவர் இயல்பிற்கு இருப்பிடத்திற்கு போய்விடுகிறார்கள்,

இந்தக்கவிதையில் நிலவு ஒரு நிரந்தர நண்பனைப் போலிருக்கிறது, களியாட்டதுணையாக நிற்கிறது, ஆனால் இது  போன்ற துள்ளல் கூட டோஜென்னில் கிடையாது, அவர் நிலவை எதிர் கொள்ளும் ஒரு மலையை போல மௌனமாக இருக்கிறார், தொலைவில் உள்ள நிலவைக் காண்கிறார். நிலவோடு மனதை உடன் நடக்கச் செய்கிறார், நிலவு மறைந்த பிறகு பெருமூச்சுவிடுகிறார், அவ்வளவே,

நிலவின் வெளிச்சத்தை காணும் போது மனதும் ஒளிரத்துவங்குகிறது, அந்த வெளிச்சத்தை நிலவு தன்னுடையது என்று தான் நினைத்துக் கொள்ளும் என்று மையோ என்ற கவி சொல்கிறான், எவ்வளவு மகத்தான நிஜமிது,

நிலவைப் பார்க்கும் போது பிரிவு தான் பெரும்பாலும் நினைவிற்கு வருகிறது, அதிலும் நெருக்கமானவர்களைப் பிரிந்து வாழ்க்கையில் நிலவு அவர்களை உடனே நினைவூட்டிவிடுகிறது, ஒரே நிலவின் கீழ் தான் மொத்த உலகமும் இருக்கிறது என்றாலும் அவரவர்களுக்கான நிலவு தனியாகவே இருக்கிறது, அல்லது அவர்களாக நிலவை தனதாக்கி கொள்கிறார்கள்,

பிரிவைச் சிறுவர்களாலும் தாங்கி கொள்ள முடியாது, வயதானவர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாது, ஆனால் பதின்வயதில் உள்ளவர்களுக்கு பிரிவு ஒரு பொருட்டேயில்லை, அந்த வயதை பிரிவின் துயர் அறியாத வயது என்கிறார்கள், தூபோ என்ற ஜென்கவி  தனது பயணநாள் ஒன்றில்   நிலவைக் காண்கிறான்

தன்னுடைய மனைவி தனிமையில் இதே நிலவை பார்த்தபடியிருப்பாள் என்று தோன்றுகிறது, பிரிந்து போன மகனையும் மகளையும் வேதனையுடன் நினைவு கொள்கிறான், அவர்களுக்குப் பிரிவை உணரமுடியாத வயது என்று தேற்றிக்கொண்டு வாசனையான இந்த மூடுபனியினுள் மனைவியின் கூந்தல் கூட தளர்ந்து அசைவற்று போயிருக்கும்  அவளது வெண்ணிற கைகளும்  குளிர்ந்து போயிருக்கும், என துயரம் பற்றிக் கொள்ள பிரிந்திருக்கும் எங்கள் இருவரின் கண்ணீரையும் நிலவின் கைகள் நெருங்கி வந்து துடைக்குமா என்று கேட்கிறான், மிக எளிமையான கவிதை போல வெளிப்படையாகத் தெரிந்தாலும் மனஉணர்ச்சிகளை இயற்கையோடு ஒன்று கலந்து இயற்கையை முன்உணராத நிலைக்குக் கொண்டு செல்கிறது

எப்போதுமே இயற்கையின் உன்னதங்கள் நமக்கு விருப்பமான இன்னொருவரைப் பற்றி நினைக்கவே தூண்டுகிறது, இயற்கையின் பேரழகைக் காணும் போதெல்லாம் அதை தனியாக அனுபவிப்பதை விடவும் விருப்பமானவர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்றே மனது தவிக்கிறது, அது தான் இயற்கையின் நோக்கமும் கூட, அது மனிதர்களை ஒன்று சேர்க்கிறது,

பின்னிரவில் நிலா பார்க்கும் ஒருவன் நிலவைப் பற்றி நினைக்கும் போதே உறங்கும் மனிதர்களைப் பற்றியும்  நினைக்கிறான், ஒருவகையில் இயற்கையின் பரவசம் தான் தன்னை நிலவாக. சூரியனாக. பறவைகளாக.  ஆகாசமாக.  வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிறது ஜப்பானிய மரபு, அதனால் தான் உலகின் ஒசைகளை விட ஒப்பற்ற நிசப்தமே அவர்களை கவிதை எழுதத் தூண்டுகிறது,

நிசப்தம் போடுகின்ற சப்தம் பற்றி தேவதச்சன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.

இது தான் தோஜென் சொல்லும் இயற்கையை அறியும் வழி, தேவதச்சன் கவிதை அவ்வகையில் ஒரு உன்னதமான ஜென் அனுபவத்தைத் தருகிறது,

இயற்கையை அவதானிக்கும் ஒருவன் அதன்வழியாக தனது இருப்பையே  அறியத்துவங்குகிறான், ஆகவே தன்னை அறிதலையே ஜென் கவிதைகள்  முதன்மைப்படுத்துகின்றன, இது மெய்த்தேடல் கொண்டவர்களுக்கு மட்டுமானதில்லை, மாறாக எளிய மனிதர்கள் கூட ஒவ்வொரு நிமிசத்தையும் ருசித்து வாழ்வதற்கு உதவி செய்யவே முன்வைக்கப்படுகிறது

மதகுரு தோஜென்  பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், சிறுவயதிலே பௌத்த இயலில் ஆர்வம் கொண்டு சீனாவிற்குச் சென்று பௌத்தம் பயின்று வந்தவர். ஜென் பௌத்தக் கொள்கைகளை ஜப்பானில் பரப்புவதற்காக நாடெங்கும் அலைந்து திரிந்தவர், ஜென்னை எப்படிப் பயில வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்கியவர்,  எளிமையான பேச்சு மொழியில் பௌத்த கருத்துக்களை மக்களிட்ம் கொண்டு சென்றவர் தோஜென்

தோஜெனின் இன்னொரு புகழ்பெற்ற கவிதை

வசந்தத்தில்  செர்ரி பூக்கள். கோடையில் குயில்

இலையுதிர்காலத்தில் நிலா, குளிர்காலத்தில் பனி.

தெளிவாக. ஜில்லென,

இதைத் தான் நோபல் உரையின் துவக்கமாக கவாபத்தா குறிப்பிடுகிறார்,

இந்தக் கவிதை மாறும்காலங்களை இடைவெட்டுகிறது, ஒவ்வொன்றுக்கும் ஒரு தேர்வை முன்வைக்கிறது, வசந்தகாலத்தை செர்ரி பூக்கள் தனித்துவமாக இருக்கிறது, கோடையின் உலர்ந்த பகலைக் குயிலின் குரல் ஈரமாக்கிவிடுகிறது, இலையுதிர்கால வெறுமையை நிலவு தணிக்கிறது, குளிர்காலத்தில் பனி நெருக்கத்தை உருவாக்குகிறது, இந்த நான்கும் தெளிவாக சில்லென தன்னியல்பில் தோன்றி மறைகின்றன.

கவிதையின் வழியாக ஒவ்வொரு காலமும் அதற்கான ஒரு தனித்துவத்தையும். சமன் செய்யும் நிலையையும் கொண்டிருப்பதை அறிகிறோம் , இது இயற்கையின் முழுமையை அறிந்து கொள்ளும் ஒரு வழிகாட்டல் 

கடந்து செல்லும் நாட்களை நாம் வெறும்காலக் கணக்காக மட்டுமே எடுத்துக் கொள்கிறோம், இக்கவிதையில் ஒவ்வொரு காலத்திலும் இயற்கையின் ஒருநிலை உன்னதமடைவதை காட்டுகிறது, இக்கவிதை பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் இன்றும் புதிதாகவே இருக்கிறது, காரணம் அது சுட்டிக்காட்டும் இயற்கையை பற்றிய உன்னதமான அறிதல்,

இயற்கையை விவரிக்க முயற்சிக்கையில் தோஜென் எந்தவொரு பகட்டான வார்த்தையையும் உருவகத்தையும் பயன்படுத்தவில்லை, மாறாக அவர் நேரடியான சொற்களையே பயன்படுத்துகிறார், ஹைக்கூ கவிதை மரபில் ஒரேயொரு வினைச்சொல் மட்டுமே பயன்படுத்தபடுகிறது, நான் என்ற சொல் நேரடியாக இன்றி அனுபவமாகவே எப்போதும்  வெளிப்படுத்தபடுகிறது

மிக உன்னதமான பௌத்த நீதிநூற்களை பயிற்றுவிப்பதன் வழியாக ஒருவனை மேம்படுத்துவதை விடவும் அவனை இயற்கையோடு ஒன்றச்செய்து அதை புரிந்து கொள்ளவும் தன்னை கரைத்துக் கொள்ளவும் செய்தாலே போதுமானது, என்பதே தோஜென் காட்டும் வழி.

அப்படியான மனநிலை கொண்ட ஒருவனால் எவ்வளவு நேரமும் தன்மனதை அலைபாயவிடாமல் ஒரே இடத்திலிருக்க முடியும், அது தான் அவர்களின் தியானம், உச்சநிலை,

அசையும் மனதை ஆராய்ச்சி செய்வதும். சதா அசைவுற்றபடியே இருக்கும் புறநிகழ்வுகளுக்குள் உள்ள சலமின்மையை கண்டு உணர்வதுமே தனது வேலை என்கிறார் தோஜென், முதலில் கேட்கையில் இது என்னவெனப் புரியாதது போல தோன்றும், ஆனால் ஆழ்ந்து பயின்றால் அதன் உண்மையை ருசிக்க முடியும்,

கலை எப்போதுமே நேரடியாக உலகை நகல் எடுப்பதில்லை மாறாக அது நம் கண்முன்னுள்ள நிகழ்உலகைப் போன்ற ஒன்றை எழுத்தின் வழியே உருவாக்கி காட்டுகிறது, இதுவும் ஒரு யதார்த்தமே, ஆனால் நாம் அறிந்து பழகியுள்ள யதார்த்தமில்லை,

ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒவியர்களுக்கு ஒரு பயிற்சியிருந்த்து, அது தினசரி ஒரு பூவை படம்வரைய வேண்டும், எப்படி வரைந்தாலும் அந்த பூவின் நிறமும் வடிவமும் சாத்தியமாகுமேயன்றி அதன் வாசனையை காட்சிபடுத்தவே முடியாது, ஆகவே சித்திரத்தில் உள்ள பூவில் வாசனை வரும்வரை வரைந்து கொண்டேயிரு என்று ஆசான் கட்டாயப்படுத்துவராம்,

அது எப்படிக் கோடுகளின் வழியே வாசனையை உருவாக்க முடியும் என்றதற்கு ஒருவன் பூவைச் சரியாகவும் நுட்பமாகவும் அவதானிப்பதற்கும் புரிந்து கொள்ளவும்  ஒரு வாழ்நாள் தேவைப்படும், அவ்வளவு விடா முயற்சியும் அர்ப்பணிப்பும் நுட்பமும் சாத்தியமானால் ஒவியத்தில் உள்ள பூ நிச்சயம் மணக்கும் என்பாராம்,

இது ஒரு செவிவழிக்கதையே, ஆனால் ஜப்பானில் கலையின் நுட்பம் எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இக்கதை உதாரணமாக சொல்லப்படுகிறது, இன்றும்  பூக்களை அலங்காரம் செய்யும் கலை ஜப்பானில் பிரபலமாகவே இருக்கிறது, அதுவும் ஜென் அனுபவமே, தேநீர் அருந்துவதில் துவங்கி மெய்ஞானத்தேடல் வரை அத்தனையும் இயற்கையோடு ஒன்று சேர்ந்திருக்கிறது ஜப்பானில், அத்தனையிலும் உள்ள எளிமையே உன்னதமாக இருக்கிறது,

காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது

-தேவதச்சன்

இந்தக் கவிதையில் உள்ள அந்த பிடிபடாத நடனத்தை தான் ஜென் கவிதைகள் தன்வசமாக முயற்சிக்கின்றன,

நம் காலத்தின் நவீன கொச்சைதனங்களை. அற்பங்களை உதறி எறிந்து முந்தைய நூற்றாண்டுகளின் மரபிலும். கவித்துவத்துவத்திலும். இருந்து நமக்கான ஒரு அறிதலை. இலக்கியப்பாதையை நாம் உருவாக்கி கொள்ள முடியும் என்கிறது கவாபத்தாவின் நோபல் உரை, ஒரு பரிசளிப்புவிழாவிற்கான உரை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு, இலக்கியம் எதைக் கைக்கொள்ள வேண்டும். எதைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்கும் இது ஒரு கையேடு
By three methods we may learn wisdom: First, by reflection, which is noblest; Second, by imitation, which is easiest; and third by experience, which is the bitterest.
என்கிறது கன்ப்யூசியஸ் வாசகம், எல்லாக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய உண்மை இதுவே,

பின்குறிப்பு : தமிழில் யாசுனாரி கவாபத்தாவின் நோபல் உரை புனைகளம் 2002 ஜீன் இதழில் வெளியாகி உள்ளது

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: