துயில் விமர்சனம்

புத்தகம் பேசுது, மே இதழில் வெளியாகி உள்ள துயில் நாவல் பற்றிய விமர்சனம்

**

துயில் : நோய்மையின் தரிசனம் - பி.வசந்தா

தமிழ் வாசகத் தளத்திற்கு நல்ல நாவல்கள் அபூர்வமாகவே வெளிவருகின்றன. இருண்மை, புரியாமொழி, கட்டுரைத்தனம், எனக் கதையின்றி வரும் நாவல்கள் வாசகரைச் சித்ரவதை செய்கின்றன. வாழ்க்கையைப்பற்றிய புரிதல் ஏற்படுத்தும் நாவல்கள் மிகவும் குறைந்துவிட்டன. இந்தக் களேபரங்களிலிருந்து விலகி சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், நோயாளிகளின் வாழ்வையும் முன்வைத்துச் சமூகத்திற்கு யதார்த்தமான நற்செய்திகளைச் சொல்லும் நாவலாய் எஸ்.ராவின் துயில் வெளிவந்துள்ளது. ஐநூறு பக்கங்களுக்கும் மேலிருந்தாலும் நாவல் படிக்க விறுவிறுப்பாகச் செல்கிறது,

வாழ்க்கை எப்போதும் அவலங்களையும், ஆரவாரங்களையும், அபத்தங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. இளகிய மனங்களும் இரக்கமற்ற கல்நெஞ்ங்களும் இணைந்தே ஒருவரோடொருவர் ஒட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாயநடையும் மந்திரச் சொற்களுமாய் யதார்த்த வாழ்வை எழுதிவரும் எஸ்.ரா. இந்த நாவல் யாவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்விதத்தில் வெற்றிகரமாகப் படைத்துள்ளார்.

கதையைச் சொல்லும்போதே  பலகிளைக்கதைகள் மாதிரி இயற்கை பற்றியும், சுற்றுச் சூழல்கள் பற்றியும், தத்துவங்கள் மதங்கள் பற்றியும் உள்ள அனைத்திலும் எஸ்.ரா. தனது ஒளியைப் பாய்ச்சிப் பயணிக்கிறார். இவை வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. துயரங்கள் பேரலைகளாய் எழும்போது நாவலை வாசிக்கின்ற நாமும் ஒருவிதக் கொந்தளிப்பான மனநிலைக்கு ஆளாகிவிடுகிறோம்.

நோய் தான் நாவலின் முக்கியக் கருப்பொருள், நோயாளிகளைப் பற்றி இதற்கு முன்பு யாரும் இவ்வளவு நுட்பமாக எழுதியதேயில்லை.

நோயில்லாமல் மனிதன் எப்படி வாழ முடியும்? நோயுற்றவர்களின் மீது எஸ்ரா காட்டும் அக்கறையும் அவதானிப்பும் மிக முக்கியமான ஒன்று, உலகில் காற்றையும் வெளிச்சத்தையும், குளிர்ச்சியையும், வெக்கையையும் நோயாளிகளே கவனமாய் உணர்கிறார்கள். மற்றவர்கள் அதை வெறும் சூழ்நிலையாகக் கருதிக் கடந்துபோய் விடுகிறார்கள். என்கிறார் எஸ்ரா, உண்மை தானில்லையா,

நோயாளிகளுக்கு எப்போதுமே மனம் கொந்தளித்துக் கொண்டும், நினைவுகள் முன்பின்னாக இடைவிடாது ஓடிக் கொண்டுமிருக்கின்றது. நாவலிலும் அதுபோலதான் நடை உள்ளது. நோயிலிருந்து நலமடைவதில் மருத்துவத்தைப் போலவே நம்பிக்கையும் கூடுதலாகவே செயலாற்றுகிறது.

மருத்துவம் ஒரு வேலையில்லை, அது மனிதவாழ்வில் ஆற்றப்படும் ஒரு சிறந்த சேவை. அதிலும்  மருந்துவர்கள் சொல்லும் ஆறுதலான  சொற்களை நம்பித்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொல் கசக்கும் போது மனம் நடுங்கத் துவங்குகிறது. ஆறுதலான சொற்களே நம்மை வலியிலிருந்து மீளச் செய்கிறது. குளிரில் நடுங்குவோருக்குக் கதகதப்பான போர்வைபோல ஆதரவான சொற்கள் நோயாளியைப் பாதுகாக்கின்றன. அதை இந்தநாவலில் நன்றாகவே உணரமுடிகிறது

இன்னொரு பக்கம்  நோயாளிகள் மருத்துவரிடம் சொல்வதைவிடக் கடவுளிடம் அதிகம் மன்றாடுகிறார்கள். அதற்காகக் காணிக்கை, விரதம், நேர்த்திக்கடன்கள் என்று பல்வேறு வடிவங்களில் முறையிடுகிறார்கள். நோய்மை பற்றிப் பேசாத மதங்கள் எதுவுமில்லை. அதை தான் நாவலின் மையமாக  கொண்டிருக்கிறார் எஸ்ரா, மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவே இந்த நாவலின் விவாதப்புள்ளி, அதற்கான தர்க்கம் விவாதம் காரணகாரியம் என்று நாவலில் ஒரு பெரிய கருத்தரங்கே நடைபெறுகிறது,

நோய்பற்றியும் வலி மற்றும் மரண அவஸ்தையை, குறித்து தமிழில் இதுவரை இத்தனை விரிவாக எந்தப் புத்தகமும் எழுதவில்லை. அதையே முழுக்களமாகக் கொண்டுள்ள நாவலாகத் துயில் முதன்முதலில் உருவாகியுள்ளது.

நாவலின் துவக்கமே ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கும் குடும்பங்கள், ஸ்டேசன் மற்றும் அதன் பணியாளர்கள், வெக்கையால் தணியாத தாகமுடன் காத்துக்கிடக்கும் யாத்ரீகர்களுமாய்.. அவர்களோடு சின்னராணி, அழகர், செல்வி மூவரும். அவர்கள் இந்நாவல் முழுதும் வரம் முக்கிய பாத்திரங்கள். இந்த மூவரும் அவர்களின் அவலமான வாழ்வும் அன்றாடம் நம் கண்முன் நடக்கும் அச்சுஅசலான பாத்திரப் படைப்புகள்.

சூழலை பற்றிய விவரிப்பு அதுவும் கரிசல் ரயில் நிலையத்தின் விவரிப்பும் கோடைகால பகல்வேளையும் கண்முன்னே காணும்படியாக இருக்கிறது நாவல் இரண்டு பகுதியாக உள்ளது, முதல்பகுதி நோயாளிகளின் வருகை. இரண்டாம் பகுதி தெக்கோடில் நடைபெறும் மாதாகோவில் திருவிழா,

மாதாகோவில் கோபுரம், , திருத்தேர், ஓவியங்கள், வெண்கலமணி, அதன் ஓசை, மாடங்கள், கலைஞர்கள், புனிதச் சொரூபங்கள், எக்காளமிடும் வானவர்கள், தேவதைகள், தேக்குமரப் பெஞ்சுகள், ஊசிக்கிணறு, மணிக்கூண்டு, கன்னிமார்மடம், பெரியமைதானம் என்று மிக விரிவாக பத்து நாள் திருவிழாவையும் நாமே நேரில் காண்பது போன்று எஸ.ரா. எழுதிக் காட்டும் போது ஒரு பேரழகு ஜொலிக்கிறது.

நாவலின் ஊடாக சமூகப் பிரச்சனைகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன, அழகர் இளவயதில் அன்பும் அரவணைப்பும் இன்றி ஊர்ஊராய்ச் சுற்றித் தவறான பெண்களிடம் சிக்கி அனுபவங்கள் கற்று வருகிறான். அந்தக் காட்சிகள் சமகால இளைஞர்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அழகர் தேர்வு செய்யும் தொழில் விசித்திரமானது. தனது மனைவியை மச்சகன்னியாக உடைமாட்டி, உருமாற்றிப் பொருட்காட்சியில்  ஷோ நடத்திக் காசு வசூலிக்கிறான். சிறுநீர்கழிக்கக்கூட முடியாமல் அவன் மனைவி சின்ன்ராணி படும்பாடு நம்மிடம் இரக்கத்தைத் தோற்றுவிக்கிறது.

மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு பிராணியின் புலம்பல் என்றார் மார்க்ஸ். மதம் பற்றி இந்நாவலில் எஸ்.ராவும் தனது கருத்துக்களைக் கதையோடு பின்னிப் பிசைந்து தருகிறார்.மிகப்பெரிய தத்துவங்களிலிருந்து வாழ்வைக் கற்பதைவிட எளிற விசயங்களிலிருந்து கற்பிப்பது எளிது என்பதை எஸ்.ரா. தனது எழுத்தில் எடுத்துக் கூறுகிறார். நாவலில் பல கிளைக்கதைகள் வந்து வலுச்சேர்க்கின்றன. நாவலெங்கும் சமூக அவலங்கள் மிகையின்றிக் கூறப்பட்டுள்ளன.

பசியை அலட்சியம் செய்பவனிடமும், மிகுதீனி தின்பவனிடமும் உடனே நோய் அடைக்கலமாகிவிடுகிறது என்பதையும். நோய்களுக்கு வைரஸ் கிருமிகளைவிடப் பசிதான்  பெரிதும் காரணமாகயிருக்கிறது என்பதையும் நாவல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. கொண்டலு அக்கா பற்றிய பகுதி நாவலின் மிகச் சிறந்த அம்சமாகும்.

இந்திய மருத்துவமுறைகள் மற்றும் மேற்கத்திய மருத்துவமுறைகளின் சாதக பாதகங்களை விவரிப்பதோடு சிறிய ஊர்களில் எப்படி மருத்துவமனைகள் உண்டானது என்பதையும் நாவல் சுட்டிக்காட்டுகிறது,

நாவலின் முதல்பகுதியில் மனிதர்களின் ஆசைகள் பொங்கி வழிகின்றன, இரண்டாம் பகுதி முழுவதும் வீழ்ச்சியாகவே உள்ளது, நாவலின் முடிவில் சின்னராணி அடையும் துயரமும் ஏலன்பவரின் மரணமும் மனதை உலுக்குகின்றன, ஏலனை கொன்றவர்கள் யார் என்று கூட தெரியாமல் போவது கூடுதல் சோகம்

தெற்கத்தி மக்களின் உணவுப் பழக்கங்கள், சொல்லாடல்கள், விசித்திர குணாதிசயங்கள் நாவலை அழகுபடுத்துவதோடு அந்த மக்களிடம் நம்மை அழைத்துச் செல்கிறது. நாவலில் நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கின்றன, அது கவனமாக சரிசெய்யப்பட வேண்டும்,

இந்த ஆண்டு வந்துள்ளவற்றில் துயில் மிகச் சிறந்த நாவல் என்பதில் சந்தேகமில்லை. எளியநடையில் உயிரோட்டமாய்க் கதையைச் சொல்லும் எஸ்.ரா.வை எவ்வளவும் பாராட்டலாம். கூடவே நாவலை அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ள உயிர்மையையும்.

உலகப்புகழ் பெற்ற நாவல்களுக்கு இணையாக இந் நாவல் தமிழில் எழுதப்பட்டுள்ளது அவ்வகையில் இது தமிழ் நாவல்களில் மிகப் பெரிய சாதனை, அதைக் கொண்டாட வேண்டியது இனி நம் கையில் தானிருக்கிறது

••

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: