வரலாறு என்னும் கதை

எடுவர்டோ கலியானோ (Eduardo  Galeano) மிக முக்கியமான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்,  உருகுவேயைச் சேர்ந்தவர், பத்திரிக்கையாளராக துவங்கி முக்கிய வரலாற்றுஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் தனிஇடம் கொண்டவர்

இவரது Mirrors: Stories of Almost Everyone படித்திருக்கிறேன், கலியானோவின் எழுத்து மற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டது, நேரடியான அரசியல் ஈடுபாடும் இடதுசாரிக் கருத்தியலும் கொண்ட எழுத்தாளர் இவர்,

போர்ஹெஸ், மார்க்வெஸ், ப்யூந்தஸ். இசபெல் ஆலெண்டே, கொர்த்தசார், லோசா,  நெரூதா. ஆக்டோவியா பாஸ் என்று பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தமிழில் அறிமுகமாகி முக்கியக் கவனம் பெற்றிருக்கிறார்கள், ஆனால் கலியானோ தமிழில் அறிமுகமாகவேயில்லை,

கவிஞர் ரவிக்குமார் எடுவர்டோ கலியானோவின் முக்கியக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வரலாறு என்னும் கதை என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார், சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த புத்தகமிது, குறுங்கதைகளைப் போல கலியானோ வரலாற்றை மறுஉருவாக்கம் செய்திருப்பதே இந்தத் தொகுப்பின் சிறப்பு

கலியானோவைப்பற்றிய ரவிக்குமாரின் அறிமுகவுரையும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது, இந்தியாவை பற்றி அதிகம் அக்கறை கொண்ட எழுத்தாளர் கலியானோ. வரலாற்றைப் பற்றிய இவரது அவதானிப்பும் கேள்விகளும் மனசாட்சியை உலுக்கக்கூடியவை,

கலியானோவின் எழுத்துக்களை வாசிக்கையில் காப்கா தான் நினைவிற்கு வருகிறார், காப்காவிடம் காணப்படுவது போன்ற அதிகார எதிர்ப்புத் தொனியும் புறச்சூழலை குறிப்பாகச் சுட்டும் தன்மையும் இவரிடமிருக்கிறது,

கலியானோ வரலாற்றை ஒரு துர்சொப்பனம் போலவே கருதுகிறார், அதிலிருந்து பீறிட்டுகிளம்பும் அரூபங்களையும் அதனால் உருவாகும் வன்முறைகளையும் துல்லியமாக அடையாளம் காட்டுகிறார்

அதே நேரம் பண்பாட்டுக் களத்தில் வரலாற்றின் பங்களிப்பு எத்தகையது,  வரலாற்றின் முக்கிய போராட்டங்கள் எந்த முதல் புள்ளியிருந்து துவங்கியது, அரசியல் அதிகாரமும் மதமும் பன்னாட்டுவணிகமும் இனத் துவேசமும் எளிய மனிதர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தி வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்

ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பு மிகச்சரளமாகவும் கலியானோவின் எழுத்தில் காணப்படும் பகடியை அப்படியே தனதாக்கிக் கொண்டதாகவும் உள்ளது மிகுந்த பாராட்டிற்குரியது

இந்த நூலை மணற்கேணி பதிப்பகம் அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது

மணற்கேணி பதிப்பகம்

பி-1-4 டெம்பிள்வே அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை, லாஸ்பேட்டை புதுச்சேரி 605008.  பேசி 9443033305

விலை ரூ 70

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: