தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ்


தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ்

உலகப்புகழ்பெற்ற நாவல்களை மறுவாசிப்பு செய்வதற்கு எளிதாக புதிது புதிதாக பல பதிப்புகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அதிலும் புகழ்பெற்ற நாவல்களை இளம்வாசகர்கள் படிக்கும் வகையில் காமிக்ஸ் வடிவத்தில் வெளியிடுகிறார்கள்,

நடைபாதைக் கடை ஒன்றில் தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ் ஒன்றை வாங்கினேன், தஸ்தாயெவ்ஸ்கியின் கதையில் பேட்மேனின் கதாபாத்திரம் இணைந்து உருவாக்கப்பட்ட விசித்திரமான காமிக்ஸ் இது

R Sikoryak என்ற ஒவியர் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ்வை பேட்மேன் முகமூடி அணிந்த சாசகநாயகனாக உருமாற்றி பகடி செய்வதன் வழியே இந்த காமிக்ஸை உருவாக்கியிருக்கிறார்,

இந்த முயற்சி முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே துவங்கப்பட்டது என்றும் இன்று உலகப்புகழ்பெற்ற நாவல்கள் மீது அதிக கவனம் உள்ளாகி வருவதால் நேர்த்தியான வடிவமைப்பில் புதிய காமிக்ஸ் உருவாக்கபடுவதாக தெரிவிக்கிறார்கள்,

ஷேக்ஸ்பியரின் முக்கிய நாடகங்களும் இது போல காமிக்ஸ் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன,

Richard Pevear and Larissa Volokhonsky  இருவரது புதிய மொழிபெயர்ப்பில்  THE BROTHERS KARAMAZOV நாவல் தற்போது வெளியாகி உள்ளது, முந்தைய மொழிபெயர்ப்புகள் அத்தனையிலும் இது மேம்பட்டதாக உள்ளது, தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர வாசகர்களுக்கு இது ஒரு அரிய பரிசு என்றே சொல்வேன்

தஸ்தாயெவ்ஸ்கி எழுதிக் கொண்டிருந்த போது ஒரு நாள் அவரது மேஜையிலிருந்த பென்சில் உருண்டு போய் அருகாமையில் உள்ள மர அலமாரியின் அடியில் போய்விட்டது. அதை எப்படி எடுப்பது என்று தெரியாமல் மர அலமாரியை நகர்ந்த முயன்றிருக்கிறார். ஆனால் அது எளிதானதாகயில்லை. எப்படியாவது தனது பென்சிலை எடுத்துவிட வேண்டும் என்று விரும்பிய அவர் முழுபலத்தையும் உபயோகித்து அலமாரியை நகர்த்திவிட்டு இடைவெளியில் நுழைந்து தனது பென்சிலை எடுத்திருக்கிறார்.

பென்சில் கைக்கு வந்துவிட்ட சந்தோஷத்தில் நிமிர்ந்த போது அலமாரியின் கூரிய நுனி முதுகில் இடிந்துவிட்டது. வலியில் துடித்துப் போய்விட்டார். அலமாரியை விட்டு வெளியேவந்து தன் முதுகைத் தடவியபடியே இருந்திருக்கிறார். இரவிலும் வலி குறையவேயில்லை. பல நாட்களுக்கு அந்த வலி மறையாமல் தனக்குள்ளே இருப்பதாகவே உணர்ந்திருக்கிறார். அதன் பிறகு அவரால் ஒருவரி கூட எழுத முடியவில்லை,

சில நாட்களில் அவருக்கு நரம்புத் தளர்ச்சியுற்று வலிப்பு கண்டு நோயாளினார். தனது சாவை முன் உணர்ந்தவரைப் போல மனைவியை அழைத்து நன்றி சொல்லியிருக்கிறார், தனக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்து வாசிக்க சொல்லியிருக்கிறார்;. மறுநாள் அவர் இறந்து போனார். அவரது இறுதி நிகழ்வில் நாற்பதாயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் வருவதைவிடவும் வாழ்க்கையில் அதிக துயரங்கள் நடந்தேறியிருக்கின்றன. அல்யோஷா என்ற கரமசேவ் சகோதரர்கள் நாவலில் வரும் கதாபாத்திரம் அவரது இறந்துபோன குழந்தையின் சாயலே

இந்தப் பென்சில் சமாச்சாரம் நிஜமா என்று தெரியவில்லை. எங்கோ வாசித்தேன். ஒருவேளை அது நிஜமாக இருக்கவும் கூடும் என்றே தோன்றியது.

புகழ்பெற்ற இயற்கையியலாளர் தோரூவின் அப்பா பென்சில் தயாரிப்பாளர், அதையே தோரூவும் வேலையாக செய்துவந்தார் இன்று நாம் பயன்படுத்தும் கடினத்தன்மையான பென்சிலை உருவாக்கியவர் தோரூவே, அவர் உருவாக்கிய பென்சில்களுக்கு தனியே மார்க்கெட் இருந்திருக்கிறது, இன்று அவை காட்சி பொருளாக ம்யூசியத்தில் இருக்கின்றன

••

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: