ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கிறது

அகிரா குரசோவாவின் ரோஷாமானை மறுபடியும் நேற்றிரவில் பார்த்தேன், திரைப்பட விழாக்களில், பயிலரங்குகளில், தனிக்காட்சிகளில் என அந்தப்படத்தை இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன், இன்றும் அதன் வசீகரம் குறையாமலே இருக்கிறது.

இந்த முறை படம் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் தருவதாக இருந்தது, காட்சிகள், கதை சொல்லும்முறை யாவும் கடந்து போய் படத்தின் ஆதாரத்தொனியாக உள்ள அறத்தைப் பற்றியே மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது, ஒருவகையில் அது அகிரா குரசோவாவின் திரைப்படங்களில் எது முதன்மையாகக் கவனம் கொள்ளப்படுகிறது என்பதை அடையாளம் கண்டுகொள்ள உதவியது

செவ்வியல் இலக்கியங்கள் மனித வாழ்வின் ஆதார அம்சங்களைக் குறித்த விவாதங்களை. நுட்பங்களை, விசாரணை செய்வது போலவே இந்தப் படமும் மனிதனின் ஆதார இயல்புகளை ஆராய்கிறது, படத்தின் மையவிவாதம் மனிதன் ஏன் இவ்வளவு சுயநலமானவனாக இருக்கிறான் என்பதே,

You just can’t live unless you’re what you call selfish. என ரோஷாமானில் ஒரு வசனம் இடம்பெறுகிறது,

சுயநலமில்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்பது தான் நம் காலத்தின் நிஜமா, ஏன் மனிதன் தனக்குத் தானே கூட  நம்பிக்கையாக நடந்து கொள்ள முடிவதில்லை, சுயநலமாக இருப்பது தான் மனிதனின் உண்மையான இயல்பா என்ற கேள்வியை படம் உரத்துக் கேட்கிறது,

ஒருவகையில் இது தான் அகிரா குரசோவாவின் பலபடங்களுக்குமான ஆதாரக்கேள்வி, அவர் சுயநலமில்லாத மனிதன் என்பவன் யார், அவன் என்ன செய்கிறான், எப்படி வாழ்வை எதிர்கொள்கிறான் என்பதையே தனது திரைப்படங்களின் வழியே தொடர்ந்து தேடி வந்திருக்கிறார்

செவன் சாமுராயில் வரும் சாமுராய்கள் ஏழு பேரும் தங்களது சுயநலத்தைத் தாண்டி ஒரு ஊரை கொள்ளையர்களிடமிருந்து காக்க முன்வருகிறார்கள், இகிருவில் சாவின் முன்பாக ஒரு மனிதன் தன் சுயநலத்தை விட்டு பொதுவாழ்விற்குள் நுழைகிறான், ஹை அண்ட் லோவிலும் கடத்தப்பட்டது டிரைவரின் மகன் என்றதும் சுயநலம் எப்படி மேலோங்குகிறது என்ற விசாரணையே நடைபெறுகிறது, ரெட்பியர்ட் ஒரு சுயநலமற்ற மருத்துவர். டெர்சு உசலாவோ சுயநலத்திற்கு அப்பாற்பட்ட இயற்கையாளன். திரோன் ஆப் பிளட் சுயநலத்திற்காக நடைபெறும் கொலைக் கதையான ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை பேசுகிறது,  ரானிலும் லியர் அரசன்  தன் சுயநலத்திற்காகவே மகன் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்று  விவாதிக்கிறான், இடியட்டில் வரும் நாயகனும் சுயநலமற்றவனே, இப்படியாக அகிரா குரசோவாவின் முக்கிய கேள்வியாக இருப்பது மனிதனின் சுயநலமே.

Human beings are unable to be honest with themselves about themselves. Egoism is a sin the human being carries with him from birth; it is the most difficult to redeem.  என்கிறார் குரசோவா,

சுயநலம் தான் எல்லா பொய்களுக்கும் தாய்,  அது நம்மைக் கருணையற்றவனாக. கீழ்மையில் உழலுபவனாக மாற்றுகிறது, அதன் உச்சபட்சமாக குழந்தையின் உடைகளை கூட கடைசியில் வழிப்போக்கன் திருடுகிறான், அதைத் தடுக்கும் விறகுவெட்டியிடம் நீயும் திருடன் நானும் திருடன் அவரவர் வழி அவர்களுக்கு என்று ஏளனம் பேசுகிறான், எது அவனைக் குழந்தையின் ஆடைகளைக் கூட திருட வைக்கிறது என்பதற்கு துளியும் அன்பேயில்லாத சுயநலமே என்கிறார் குரசோவா,

சுயநலமான மனிதர்கள் அடிப்படை அறங்களை இழந்துவிட்டார்கள், நம்பிக்கையற்ற மனிதவாழ்க்கை நரகத்தைப் போலவே இருக்கிறது, இதிலிருந்து மீட்சியே கிடையாதா என்பதையே படம் விவாதிக்கிறது

ரோஷாமானின் கதை மரபான நீதிக்கதையொன்றைப் போலிருக்கிறது, மழைநாள் ஒன்றில் இடிந்து போய் கிடக்கும் ரோஷாமான் நுழைவாயில் கட்டிடத்தில் ஒரு புத்தபிக்குவும் ஒரு விறகுவெட்டி சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றைப்பற்றி பேசிக்  கொள்கிறார்கள், அப்போது ஒரு வழிப்போக்கன் மழைக்கு அங்கே ஒதுங்குகிறான், அவனிடம் நடந்த நிகழ்வை விவரிக்கிறான் விறகுவெட்டி,

அதன் வழியே காட்டினுள் கொலை செய்யப்பட்டுச் செத்து கிடந்த ஒரு சாமுராயைப் பற்றி விவரிக்கபடுகிறது, அந்த சாமுராயின் அழகான மனைவியை தோஜேமெரு என்ற திருடன் மடக்கி வன்புணர்ச்சி செய்துவிடுகிறான், இந்த துர்மரணத்தின் பின்னே என்ன நடந்தது என்பதை நீதிமன்றம் விசாரிக்கிறது, அங்கே விறகுவெட்டி ஒரு கோணத்திலும், தோஜோமெரு ஒரு கோணத்திலும், சாமுராயின் மனைவி ஒரு கோணத்திலும், இற்ந்து போன சாமுராய் ஆவியாக வந்து ஒரு விதமாகவும் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார்கள். ஆக ஆளுக்கு ஒருவிதமாக உண்மை உருமாறுகிறது , இதில் எது நிஜம் என்பது பார்வையாளனின் முடிவிற்கே விடப்படுகிறது,

ஜப்பானின் கியாடோ நகரத்தின் நுழைவாயிலே  RASHOMON GATE.  அது மிகப்பிரம்மாண்டமான நுழைவாயில் ஆனால் காலத்தில் கவனிப்பாரற்று இடிந்து போய் கிடக்கிறது,

ரோஷாமான் நுழைவாயில் பற்றி சொல்கையில் இப்படியான ஒரு குறிப்பு வருகிறது

Buildings are like people, they need constant care and attention, or they grow old and die. Well. We all grow old and die. But it is the attention and the growing that is important, not the dying.

இதன்படி ரோஷாமான் நுழைவாயில் என்பது அழிவின் மிச்சம், இதை அறநெறி வீழ்ச்சியுற்ற நம் காலத்தின் அடையாளமாகவும் சொல்லமுடியும்

We all want to forget something, so we tell stories என்றொரு வசனம் படத்தில் வருகிறது, இது தான் கதையின் முக்கியக் குறிப்பு, நாம் எதையே மறக்க விரும்புகிறோம், ஆனால் அது அவ்வளவு எளிதாகயில்லை, அதைக் கதையாக்குவதன் வழியே நமது நினைவுகளில் இருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறோம், கதைகள் நமது அந்தரங்க ரகசியங்கள், நாம் மறக்கவிரும்பிய உண்மைகள் என்பது தானே நிஜம்

அகுதகவாவின் சிறுகதைக்குள் பௌத்த ஜாதக்கதையின் சாரமேயிருக்கிறது, ஜாதக்கதைகளில் விலங்குகளும் துறவிகளும் விறகுவெட்டியும் திருடர்களும் எப்போதும் உருவகமாகவே இடம்பெறுகிறார்கள், நரியும் புலியும் துறவியும்  குணாம்சங்களாகவே முன்வைக்கபடுகின்றார்கள்

அந்த வகையில் பார்த்தால் ரோஷாமானும் ஒரு உருவகக்கதையே,

படத்தில் வரும் திருடனான தோஜேமேரு பௌத்த கதைகளில் வரும் திருடனின் மாற்றுவடிவமே,

அவனை எது குற்றவாளியாக்குகிறது என்ற கேள்விக்கு தோஜேமெரு ஒரு பதில் சொல்கிறான், அது ஒய்வில் ஒரு மரநிழலில் படுத்துகிடந்த அவனை ஒரு அழகான பெண் குதிரையில் கடந்து போகிறாள், அப்போது தென்றல் காற்று அடிக்கிறது, அதனால் அந்த பெண்ணின் முகத்திரை விலகுகிறது, தோஜேமெரு அந்தக் காற்றினை தீவினையின் அடையாளம் என்று சொல்கிறான்,

all of a sudden there was this cool breeze. If it hadn’t been for that breeze, maybe I wouldn’t have killed him.

அந்த காற்றின் உந்துதல் தான் அவனைக் கிளர்ந்து எழச் செய்கிறது, உடனே மூர்க்கமாகி அந்தப் பெண்ணை அடைய வேண்டும் என்று துரத்திப்போகிறான்,

தீவினை எனும் அந்த சுழிக்காற்று ஏன் மனிதர்களைச் சுற்றியலைகிறது, படத்தின் இரண்டு இடங்களில் இந்தக் காற்று பற்றி குறிப்பிடப்படுகிறது, ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலில் மெர்சோ தான் கொலை செய்ததற்குக் காரணமாக  உக்கிரமான சூரியனை குறிப்பிடுவது நினைவிற்கு வருகிறது,

தோஜேமெருவும் சூரியனால் தான் கிளர்ச்சி கொள்ளப்படுகிறான், விறகுவெட்டி காட்டிற்குள் நுழையும் காட்சியில் சூரியன் அவனை பார்த்தபடியே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது,  படத்தில் சூரிய வெளிச்சம் மனதின் ரகசிய இச்சைகளைத் தூண்டுவதாகவும் தீவினையின் அடையாளம் போலவுமே காட்டப்படுகிறது

தோஜேமெரு படம் முழுவதும் சிரித்துக் கொண்டேயிருக்கிறான், அந்தச் சிரிப்பு பல நேரங்களில் நம்மைப் பயமுறுத்துகிறது, அது வேடிக்கையான சிரிப்பு அல்ல, மாறாக ஏளனம் மற்றும் இறுமாறுப்பில் இருந்து உருவாகின்ற சிரிப்பு,

தோஜேமெருவும் அந்தப் பெண்ணும் ஒரே மனநிலையின் இரண்டு துருவங்கள், தோஜேமெரு கட்டுபாடற்ற மனதுடன் தனிச்சையாக அலைகிறான், பெண்ணோ கட்டுபாடுகளும் முகத்திரையுமாக தனது ஆசைகளை ஒடுக்கிக் கொண்டு வாழ்கிறாள்,  இந்த எதிர்நிலை மெல்ல உருமாறத் துவங்குகிறது, அவன் தன்னை புலி எனவும் அவளைப் பூனை போலவும் கருதுகிறான், அதனால் தான் அவள் தன்னோடு சண்டையிடுவதைப் பற்றி சொல்லும் போது She fought like a cat  என்று குறிப்பிடுகிறான்

தோஜேமெரு கதாபாத்திரம் போன்ற திருடர்கள் புத்த மரபுக்கதைகளில் வருகிறார்கள், அவர்களின் கோபமும் மோகஆவேசமும் தீவினையின் உருவமான மாராவின் செயல்கள் என்றே பௌத்தம் அடையாளம் காட்டுகிறது,

தோஜேமெரு உலக சினிமாவில் மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம், அவன் குற்றத்தை ஒரு போதும் மறுப்பதில்லை, அதற்கான காரணங்களைத் தான் மறுக்கிறான், மறைக்கிறான்,  பொய் தான் அவனது ஆயுதம், ஆரம்பக் காட்சியில் காட்டினுள் சென்று கொண்டிருக்கும் பெண்ணின் கணவனான சாமுராய் முன் ஒடி நின்று தான் அரிய வகை வாட்களை ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருப்பதாகப் பொய் சொல்கிறான், பொய்யை நம்பி அவனோடு கூடவே சாமுராய் செல்கிறான் , அவனை தனிஇடத்தில் மடக்கிக் கட்டிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஒடிவந்து அடுத்த பொய்யை சொல்கிறான் தோஜேமெரு, அவள் கணவனுக்கு ஏதோவாகிவிட்டது என்று பின்னாடியே ஒடுகிறாள், பொய் தான் கதையை முன்நகர்த்தும் விசை,

Dead men tell no lies. என்ற வசனம் படத்தில் உள்ளது, அது பகடியாக சொல்லப்பட்ட வசனம், காரணம் பெண்ணின் கணவன் இறந்து ஆவியாக வந்தும் பொய்யே பேசுகிறான், மனிதர்கள் இறந்த பின்னும் பொய் பேசுவார்கள் என்கிறது ரோஷாமான்

படத்தில் தோஜேமெருவின் கடந்தகாலமும் இல்லை, இளம்பெண்ணுக்கும் அவளது கணவனுக்குமான கடந்தகாலமும் இல்லை, விறகுவெட்டியின் கடந்தகாலமும் இல்லை,

படத்தின் ஆரம்ப காட்சிகளிலே அவள் கணவன் காட்டிற்குள் இருந்து தன் மனைவியை யாரோ அபகரிக்க்கூடும் என்பது போன்ற முகபாவத்துடனே வருகிறான், ஒருவேளை அது அவனது எதிர்பார்ப்பாக இருக்ககூடும், அதுபோலவே திருடனைச் சந்திக்கும் பெண்ணிற்கு வேறு வகையான நெருக்கடி உருவாகிறது, அது இரண்டு ஆண்களில் எவருக்கு தான் உரிமை என்ற  சிக்கலது, அவளை அடைய விரும்பும் ஆண் அன்பின் பெயரால் அவளை ஒடுக்கவே முற்படுகிறான், அது தான் கணவன் திருடன் இருவரிடமும் நடைபெறுகிறது

அந்தப் பெண்ணைக்  கணவன் அறியாமல் தூக்கி செல்ல ஏன் தோஜேமெரு விரும்பவேயில்லை, காரணம் அவன் குற்றம் செய்ய விரும்பவில்லை, மாறாக காட்டில் தனக்குள்ள அதிகாரத்தை நிலைநிறுத்தவே விரும்புகிறான்,

பெண்ணை அடைவதை ஒரு வேட்டையைப் போலவே நினைக்கிறான், படத்தில் பெண்ணின் கணவன் அதிகம் பேசுவதில்லை, ஆனால் அவன் மனத்தில் நிறைய கசப்புணர்ச்சியிருப்பதை அவன் கண்கள் காட்டித் தருகின்றன, அவன் ஆவியாக வந்து பேசும் போது தான் இருண்ட நரகத்தில் இருப்பதாகச் சொல்கிறான்,

அந்த இருண்மை அவனது உறவின் கசப்பால் இருந்து உருவானதே, If men don’t trust each other, this earth might as well be hell. என்று பிக்கு ஒரு இடத்தில் சொல்கிறான் அது தான் அந்த பெண்ணின் கணவனின் நிலையாகவும் இருக்கிறது

உண்மையில் தோஜேமெரு நமக்குள் இருக்கும் கட்டுபாடற்ற இச்சைகளின் வடிவம் போன்றே செயல்படுகிறான், நீதிமன்றத்தில் அவனது விளக்கமாக விரியும் காட்சிகளில் அவன் தனக்கு தாகமாக இருப்பதாக விலங்குகள் தண்ணீர் குடிப்பதை போல தண்ணீர் அருந்துகிறான், தண்ணீர் ஒரு குறியீடாகவே காட்டப்படுகிறது.

மழை முடிவில்லாத நினைவுகளின் உருவகமாக உள்ளது, விறகு வெட்டி சந்தர்ப்பங்களின் அடையாளமாகவும். துறவி உலக ஞானத்தின் அடையாளமாகவும். வழிப்போக்கன் தினசரி வாழ்வின் குறியீடாகவும்.  பெண் ஆசையின் உருவகமாகவும் அவளது கணவன் உலகியல் ஆசைகளின் காப்பாளன் போலவும், திருடன கட்டுபாடற்ற மனதின் அடையாளமாகவுமே இருக்கிறான்,

இடிந்த மண்டபம் வீழ்ச்சியுற்ற மனிதமாண்புகளின் அடையாளம், காடு நம்முன் விரிந்து நீளும் நாம் கடந்து செல்ல வேண்டிய வாழ்க்கை, ஆக இந்தப் படம் பௌத்த நீதிக்கதையின் மரபில் உருவான ஒரு படைப்பு என்பது தெளிவாக உள்ளது.

ரோஷாமானில் நடப்பது சமகால வாழ்விற்கு விடப்பட்ட எச்சரிக்கை போலவே இருக்கிறது

படம் முடியும் போது மனிதர்களின் மீது தனக்கு இன்னமும் நம்பிக்கையிருக்கிறது,உலகம் மாறக்கூடும் என்ற கூற்றுடன் முடிகிறது,  அது பௌத்தம் போதிக்கும் கருணையும் மானுட அன்பையே வெளிப்படுத்துகிறது

அது தான் குழந்தையின் வடிவில் கடைசியில் அவர்களிடம் வந்து சேர்கிறது,

ரோஷாமான் நுழைவாயிலில் பெய்யும் மழை அவர்களின் மனதிற்குள் உள்ள மௌனத்தைக் கரைக்கத் துவங்குகிறது, அங்குள்ள பிக்குவும் விறகுவெட்டியும் பேசிக் கொள்ளுவது தனக்குத் தானே பேசிக் கொள்வதை போலவே இருக்கிறது,

ஆரம்ப காட்சிகளில் விறகுவெட்டி தனது வறுமையை மறைத்துக் கொண்டிருக்கிறான், பிக்கு தான் நன்மை தீமை இரண்டிற்குமான மனசஞ்சலத்தில் இருக்கிறான், அவர்களுக்குள் உறவற்ற விலகலே உள்ளது, பிக்குவின் முகத்தில் குழந்தைதனமும் கலக்கமும் ஒன்று சேர்ந்துள்ளது, விறகுவெட்டி உணர்ச்சிகளை மறைப்பதும் பீறிடுவதுமாக இருக்கிறான், வழிப்போக்கனே கதையை நகர்த்துகிறான், அவன் இடிந்த மண்டபத்திலிருந்து ஒரு மரச்சக்கையை உடைத்துவந்து எரித்து குளிர்காய்கிறான், அவனுக்கு எல்லா குற்றங்களும் சுவாரஸ்யமான தகவல்கள் மட்டுமே, அவனது சுயநலம் கிடைத்த எதையும் அபகரித்துக் கொள்வது,  ரோஷாமானில் மழை பெய்வதும் நினைவில் உள்ள காடு சூரிய வெளிச்சத்தில் ஒளிர்வதும் மனநிலையின் இரண்டு தீவிரநிலைகளாகவே தோன்றுகின்றன,

மழை அவர்களின் பேச்சை நனைப்பதில்லை, அது உக்கிரமாக வெளியே சுற்றிக் கொண்டேயிருக்கிறது, இடிபாடுகளின் மீது மழை பெய்வதைக் காணுகையில் மனம் தானே பின்னோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது,

படத்தில் வரும் இன்னொரு குறியீடு பெண்ணின் கையில் உள்ள குறுவாள், அது முத்துகள் பதிக்கபட்டது, அதை தோஜேமெரு திருடவில்லை, அக்குறுவாள்  இறந்து போன கணவனின் இதயத்தில் நுழைத்திருக்கிறது, அந்தப் பெண்ணும் அது எப்படி நடந்த்து என்று தெரியவில்லை என்கிறாள், இன்னொரு பகுதியில் தனது குறுவாளால் தன்னை தற்கொலை செய்து கொள்கிறான் கணவன், அந்த பெண்ணின் கத்தி என்னவானது என்பதற்கு அது யாராலோ திருடப்பட்டிருக்கிறது என்ற சூசகம் தெரிவிக்கபடுகிறது,  அதை செய்தவன் விறகுவெட்டி தானா என்று சந்தேகிக்க இடமிருக்கிறது,

படத்தின் துவக்க வசனம் இது தான்

I can’t understand it. I just can’t understand it at all.

அது காட்சிக்கான வசனமில்லை, அது தான் கதையின் திறவுகோல், மனித மனதை நம்மால் புரிந்து கொள்ள முடியவேயில்லை, அவனது செயல்களுக்கு பின்வுள்ள விசித்திரங்களை, புதிர்தன்மை நம்மால் புரிந்து கொள்ளவேமுடியவில்லை என்பதைத் தான் இந்த வசனம் வெளிப்படுத்துகின்றது,

இதற்கு நிகரான வசனமாக மெக்பெத் நாடகத்தின் துவக்க வசனங்களைச் சொல்வேன்,

Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air.

புரிந்து கொள்ளப்பட முடியாத குழப்பங்களில் இருந்தே கதைகள் உருவாகின்றன,  அந்தக் குழப்பம் மனிதர்களால் பேசித்தீர்த்துக் கொள்ளவே முடியாதது போலும்,

ரோஷாமானில் பெய்த மழை ஒரு போதும் நிற்பதேயில்லை, அது மனிதர்களின் அந்தரங்களை ஆராய்கிறது, நன்மை தீமைகள் குறித்து மறுபடி மறுபடி விசாரணை செய்கிறது,  எல்லாக் குற்றங்களையும் துடைத்துக் கழுவி மனிதனை மீட்டுவிட முயற்சிக்கிறது,

படத்தின் இறுதியில் மழைக்கு ஊடாகவே குழந்தையின் அழுகையொலி கேட்க ஆரம்பிக்கிறது, அந்த இடத்தில் கதையில் அது வரையிருந்த குற்றம் தீவினை எண்ணங்கள் அத்தனையும் ஒடுங்கிப் போய்விடுகிறது, ஆறு குழந்தைகளின் தந்தையான விறகுவெட்டி அதைத் தானே வளர்ப்பதாக எடுத்துக் கொள்கிறான்

பிக்கு படத்தின் முடிவில் நம்பிக்கையோடு வெளியேறிப்போகிறான்

செயல்களே மனித இயல்பை வெளிப்படுத்துகின்றன, மழை மறுபடியும் பெய்யக்கூடும் என்பது போலவே இறுதி காட்சியில் இருக்கிறது

ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கும் வரையிலும் மனிதர்களின் மீது நம்பிக்கை இருந்து கொண்டேதானிருக்கும் போலிருக்கிறது,

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: