அது தான் சாப்ளின்

சினிமாவில் மௌனம் என்பதே முற்றிலும் புறக்கணிக்கபட்ட ஒன்றாகிவரும் சூழலில் மொத்தப் படத்தையும் உரையாடல்களின் உதவியில்லாமலே ரசிக்க முடியும் என்ற மௌனப்படக்காலம்  இன்றைய சினிமாப் பார்வையாளனுக்கு வியப்பூட்டும் புதிர், அதிலும் நகைச்சுவை என்றாலே வாய்ஒயாமல் பேசிக் கொண்டேயிருப்பது என்ற சமகாலச் சூழலில் சாப்ளினை நினைவூட்டவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை மறுபடி நினைவுறுத்துவதும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது,

சாப்ளின் நடித்த முதல் திரைப்படம் மேக்கிங் எ லிவிங், மௌனப்படமான இதை கீஸ்டோன் ஸ்டுடியோதான் தயாரித்தது.  அப்போது சாப்ளினுக்கு இருபத்திமூன்று வயது, ஒரு மௌனப்படம் சினிமா உலகையே திசைதிருப்பும் ஒரு மகத்தான ஆளுமையை உருவாக்கப்போகிறது என்று படம் வெளியான நாட்களில் எவரும் அறிந்திருக்கவில்லை,

மௌனப்படங்களில் இன்றும் திரும்பத் திரும்ப பார்க்கபட்டு வருபவை சாப்ளின் படங்களே, ஒருவகையில் இவையே சினிமாவின் ஆரம்பகால முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ள, இன்றைய தலைமுறையினருக்கு  வழிகாட்டியாக உள்ளன,

சாப்ளின் ஏன் இன்றும் உலகெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறார்

அதற்கான காரணம் அவரது நகைச்சுவை மட்டுமில்லை,

அவரது படங்களில் காணப்படும் யதார்த்தமான அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சித்தரிப்பு. தன்னைச் சுற்றிய சமூகத்தின் வறுமை. அதிகாரப் போராட்டம் சுயஅடையாளம் குறித்த தேடுதல். உதிரிமனிதர்களின் புறக்கணிப்பு மீதான அக்கறை. அடிபட்டு மிதிபட்டு வறுமையோடு போராடி அறிந்த வாழ்வைப் பற்றிய சுயபுரிதல்களும் அதிலிருந்த உண்மையுமே முக்கியக் காரணங்கள்.

சாப்ளின் சினிமாவின் வழியே நிறையக் கற்றுத் தருகிறார், ஒரு ஜென்குரு செய்வதைப் போன்ற பணியது, ஒருவகையில் முல்லா, பீர்பால் என்று நாம் அறிந்து வைத்துள்ள முட்டாள் ஞானிகளின் அடுத்த கண்ணியாகவே  சாப்ளினை உணர்கிறேன்,

சாப்ளின் நகைச்சுவைக்குப் பின்னால் உள்ளார்ந்த கோபம் இருக்கிறது, பணமும் அதிகாரமுமே மனிதனின் வெற்றிச்சின்னங்களாக உருமாறிப்போனதின் மீதான கோபமது, எவ்வளவு எளிதாக ஒரு மனிதனை நாம் துரத்தவும் அவமதிக்கவும். துன்புறுத்தவும் முடிகிறது என்பதற்கு எண்ணிக்கையற்ற சாட்சிகள் அவரது படத்தில் இருக்கின்றன

இன்று கொண்டாடப்படும் வடிவேலுவின் நகைக்சுவையின் பின்னால் கூட சாப்ளின் தனது படங்களில் அடிவாங்கும் காட்சிகளே ஆதாரமாக இருக்கின்றன, சாப்ளின் உலகின் இயக்கத்தைப் புரிந்து கொள்ளாத அப்பாவி போல நடந்து கொள்கிறார், ஆனால் அது ஒரு பொய்த்தோற்றம், உண்மையில் அவர் உலகின் சகல பரபரப்பிற்கும் ஒழுங்கிற்கும் எதிராக ஒரு கலகத்தை மேற்கொள்ள விரும்புகிறார், அதைத் தனது முட்டாள்தனம் என்ற யுக்தியின் வழியே சாத்தியமாக்குகிறார், ஆகவே சாப்ளின் படங்களில் ஒலிப்பது முடிவில்லாத கலகக்குரலே.

மனித அவமதிப்புகளே அவரது காட்சிகளின் அடிநாதமாக இருக்கின்றன, பசி, காதல், தங்கம் தேடி அலையும் பேராசை, யுத்தம். போட்டி, திருட்டு, நிராதரவான தனிமை. புறக்கணிக்கபட்ட முதுமை, அணுஆயுத எதிர்ப்பு, நாஜி எதிர்ப்பு என்று சாப்ளின் சுட்டிக்காட்டுவது காலத்தின் மாறாத பிரச்சனைகளே,

எனக்குச் சாப்ளின் படங்களில் வரும் நாய்களை மிகவும் பிடிக்கும், அவை சாப்ளின் நிழலைப்போன்றவை, ஒருவகையில் அவை அவரது மனசாட்சியின் உருவங்கள், அதன் மீதான பரிவும் சகஉயிராக அணைத்துக் கொண்டு அவர் உறங்கும் காட்சிகளும் அவை வெறும்நாய்கள் அல்ல, மாறாத நன்றியுணர்ச்சியின் அடையாளம் என்றே தோன்றுகிறது,

சீட்டுக்கட்டு கோபுரத்தை விரல்நுனியால் தட்டிவிட்டால் மொத்த கோபுரமும் கலைந்துவிழுவது போல சாப்ளின் இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உலகினுள் தனது பிரவேசத்தின் வழியே அதன் இயல்பைக் குலைத்துச் சிதறடிக்கிறார், அப்போது தான் பொது  இயல்பாக நாம் நம்பி வந்துள்ளதன் பின்னே எவ்வளவு சிறியதும் பெரியதுமான அம்சங்கள். தேவையற்ற கட்டுபாடுகள் இயங்கிவந்துள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது, நாம் நாகரீகம் என்று நம்புகின்றவற்றைக் கேலி செய்வதோடு அதன்பின்னே உள்ள ஒழுங்கைக் கேள்விகேட்கவும் செய்கிறார்.

சமூகக் கட்டுமானத்தில் ஏழைஎளிய மனிதர்களுக்கான பொதுக்கலாச்சாரவெளி என்று ஒன்றில்லை, அவர்கள் மற்றவர்களைப் போல காசு செலவழித்து குடிக்கவோ நடனமாடவோ, இசை கேட்கவோ முடிவதில்லை, ஆனால் அந்தக் கலாச்சார பொதுவெளியின் மீது அவர்களுக்கு இயல்பாக விருப்பமிருக்கிறது, அதை அடைவதற்காக அவர்கள் எப்போதும் எத்தனித்துக் கொண்டேயிருப்பார்கள் என்பதையே சாப்ளின் செய்யும் செயல்கள் நினைவூட்டுகின்றன,

அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் வலிமையானவர்கள்,அவர்களின் காதலே அவரை வெற்றிபெறச்செய்கிறது, அன்பின் கதகதப்பிற்காக ஏங்கும் மனதையே அவரது படங்கள் காட்சிப்படுத்துகின்றன, மௌனப்படங்களில் சாப்ளினைப் போல இசையை நுண்மையாக கையாண்ட இயக்குனர் எவருமில்லை, அவர் காட்சிகளின் பிரதான உணர்ச்சியை இசையின் வழியே சாத்தியப்படுத்திவிடுகிறார்,

சாப்பாடும் அமைதியான தூக்கமுமே சாப்ளினின் முக்கியப்பிரச்சனை, எல்லாப்படங்களிலும் இந்த இரண்டும் முக்கியமான காட்சிகளாக இருக்கின்றன  சாப்பாடு கிடைக்காமல் அல்லாடும் காட்சிகளை எவ்வளவோ முறைகளில் சாப்ளின் காட்டியிருக்கிறார், அதன் உச்சபட்சம் தனது காலணிகளை வேகவைத்து சாப்ளின் சாப்பிடும் கோல்ட் ரஷ் படக்காட்சி, அது பசியின் உச்சபட்ச அவலம், ஆனால் அதை வெடித்து சிரிக்கவைக்கும் பரிகாசமாக்குகிறார், அது தான் சாப்ளினின் தனித்துவம்,

மார்டன் டைம்ஸில் சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்குவது தொழிலாளர்களுக்கு நேரவிரயம் என்று உணரும் தொழிற்சாலை நிர்வாகம் உணவை ஊட்டிவிடும் இயந்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்துகிறது, அதில் மாட்டிக் கொண்டு சாப்ளின் அடையும் அவஸ்தைகள் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களிடம் மாட்டிக் கொண்டு உடலுக்கு நலமில்லாத அவசர உணவுகளை மென்று விழுங்கும் சமகால வாழ்வின் பகடி போலவே இருக்கிறது.

கோல்ட் ரஷ் படத்தில் இரண்டு ரொட்டித் துண்டுகளை கையில் வைத்து நடனமாடச் செய்யும் காட்சி இடம்பெறுகிறது, ரொட்டித்துண்டுகள் பாலே ஆடத்துவங்குகின்றன, ரொட்டிதுண்டுகள் கிடைக்காமல் போய் கனவில் அது நடனமாடுவதை கண்ட ஒருவனால் மட்டுமே இப்படியான ரொட்டிகளின் நடனத்தை உருவாக்க முடியும், உணவு என்பது மறந்து போய் ரொட்டிதுண்டுகள் இதுவரை நாம் காணாத புதிய அழகும் விநோதமும் கொள்கின்றன, பசி ரொட்டிதுண்டுகளின் நடனத்தை அனுமதிப்பதில்லை, பசித்த மனிதனுக்கு உலகம் வேறாகவே தோன்றுகிறது என்பதை சாப்ளின் அழுத்தமாக நினைவூட்டுகிறார்

இப்படி ஒவ்வொரு படத்திலும் பசி, உணவு சார்ந்த காட்சிகளை முதன்மைபடுத்துவதற்கான  காரணம் சிறுவயதில் வறுமையில் பட்டினிகிடந்த அவரது நினைவுகள்,

அதுபோலவே உறங்குவதற்கு நிம்மதியான இடமில்லாமல் தட்டளியும் காட்சிகளும் அவரது படங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன, கையில் காசில்லாத, சொந்த வீடில்லாத மனிதனால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, போலீஸ் துரத்துகிறது, சந்தேகப்பட்டு விரட்டி அடிக்கிறது, நகரம் பெரியது ஆனால் எளிய மனிதனுக்கு அங்கே உறங்க இடமில்லை,  உலகம் திடீரெனச் சுருங்கி உள்ளங்கையளவு ஆகிவிட்டதே  என  உணரும் தருணத்தை சாப்ளின்  சரியாக அடையாளம் காட்டுகிறார்,

சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்கக் காட்சியில் மூடியிருக்கும் சிலை ஒன்றினுள் சாப்ளின் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார், அந்தச் சிலையை திறப்பு விழா செய்வார்கள், திரை உயரும்போது சிலையின் மீது சாப்ளின் உறங்கிக் கொண்டிருப்பார், அவரை விரட்டுவார்கள், சிலையின் வாளில் அவரது பேண்ட் மாட்டிக் கொள்ளும், பாதி உறக்கத்தில்  அவரது பரிதவிப்பும் போராட்டமும் உறங்க இடமற்ற உலகின் நெருக்கடிக்கு உதாரணமான  காட்சியது,

எலும்புத்துண்டை கவ்விக் கொண்டு ஒடும் நாயைப் பார்த்து பொறாமைபடுகிறான் ஒரு மனிதன், அந்தக் காட்சியை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை, மனித வாழ்வு அவ்வளவு அவலமாக இருக்கிறது என்று ஆன்டன் செகாவ் மனம் வெதும்பி எழுதியிருக்கிறார், அதன் காட்சிபடுத்துதல் போலவே இருக்கின்றன சாப்ளின் படங்கள்.

•••

ஒரு நகைச்சுவைக் காட்சியை உருவாக்குவதற்கு ஒரு பூங்கா, அழகான இளம் பெண்  ஒரு போலீஸ்காரன் இந்த மூன்று விஷயங்கள் இருந்தால் போதும், அதற்குள் ஒரு காமெடிக் காட்சியை உருவாக்கிவிட முடியும் என்று சாப்ளின் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்,

அது அவரது முதல்படத்திலே இடம்பெற்றிருக்கிறது, இந்தப் படத்தில் சாப்ளின் வழக்கமான நாடோடி தோற்றத்தில் இல்லை, தொங்குமீசை, கறுப்புதொப்பி ஒடிசலான இடை கொண்ட உடல், கையில் ஒரு கைத்தடி, உடலுக்குப் பொருந்தாத உடை, ரப்பர்போன்ற வேகம் கொண்ட நடை என்று அவரது பின்னாளையப் படங்களின் ஆரம்ப அறிகுறிகள் இந்தப்படத்திலே காணக்கிடைக்கின்றன,

1914ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் சாப்ளின்  எட்கர் என்ற இளைஞராக கையில் காசில்லாமல் ஏமாற்றி வாழ்ந்து வரும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார், சாப்ளின் பாணி வேடிக்கைகள் இதில் குறைவு, ஆனால் சாப்ளின் உடல்சேட்டைகள் இதிலே ஆரம்பமாகிவிட்டிருக்கிறது, அவர் நிற்கின்ற பாங்கு. நன்றி தெரிவிப்பது. அழகான இளம் பெண்களைக் கண்டவுடன் அவரது தோற்றத்தில், நடையில் ஏற்படும் மாற்றங்கள். சண்டையிடும்போது காட்டும் ஆவேசம் அத்தனையும் முதல்படத்திலே இருக்கிறது

எட்கர் படத்தின் துவக்கதில் சாலையில் நின்றபடியே ஒரு பொய்கதையைச் சொல்லி ஒரு பத்திரிக்கையாளரிடமிருந்து இருந்து காசைப் பறிக்கிறான், அந்த ஆள் போன பிறகு ஒரு இடத்தில் அழகான இரண்டு இளம்பெண்களைக் காண்கிறான், உடனே காசுள்ள பெரிய கனவானைப் போல நடந்து கொள்வதுடன் அந்தப் பெண்களை எளிதாக வசீகரம்  செய்துவிடுகிறான், எல்லா படங்களிலும் சாப்ளின் அழகான பெண்களை கண்டவுடன் காதல் கொண்டுவிடுவார், அவர்களை நெருங்கிப் பழகுவது அவருக்கு எளிதானது, ஆனால் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் முன்பு எதிர்பாரத தடைகள் உருவாகிவிடுவது அவரது படங்களின் வழக்கம், அதுவே இந்தப் படத்திலும் நடக்கிறது,

சாப்ளின் படங்களில் அவர் அடையும் வெட்கம் அலாதியானது, வேறு எந்த நடிகரும் வெட்கத்தை இவ்வளவு தூரம் வெளிப்படுத்தியதேயில்லை, சாப்ளின் வெட்கப்படும் காட்சிகள் பெரும்பான்மை படங்களில் உள்ளது, அதிலும் சாப்ளின் கையில் ரோஜாவுடன் பல்லிடுக்கில் விரலைக் கடித்தபடியே வெட்கபடும் காட்சி அலாதியானது, உடல் அழகிற்கும் காதலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை நிருபணம் செய்து கொண்டேயிருக்கிறார் சாப்ளின், அது தான் இந்தப் படத்திலும் நடக்கிறது,

அவர் இளம்பெண்ணிடம் தன் காதலைச்சொல்ல முயலும் போது வழியில் சந்தித்த பத்திரிக்கையாளர் திரும்ப வந்துவிடுகிறான், இளம்பெண் முன்பாக அவமானப்பட விரும்பாமல் அவனை வம்புக்கு இழுத்துச் சண்டையிடுகிறார், சண்டையிலும் சாப்ளின் பாணி என்பது பெரும்பாலும் தானே அடிபடுவது, அல்லது தப்பிஒடுவது தான், சாப்ளினைக் காப்பாற்றுவது போலீஸ் அல்லது துணைகதாபாத்திரங்களே, அவர் தன்னை ஒரு சாகசநாயகனாக ஒருபோதும் முன்நிறுத்தியதில்லை, ஆனால் சண்டையிடுவதை எல்லாப் படங்களிலும் முக்கியமான காட்சியாகக் கொண்டிருந்தார், அதுவும் வம்புச்சண்டையைச் விரும்பும் ஆளாகவே இருப்பார்,

அந்தச் சண்டைகளுக்கு எப்போதும் இரண்டு காரணங்களே இருக்கின்றன, ஒன்று பசி, சாப்பிடப் போன இடத்தில் நடக்கும் சண்டை,  அடுத்தது தான் விரும்பும் பெண்ணிற்காக மேற்கொள்ளும் சண்டை, இரண்டிலும் சாப்ளின் அதிகம் அடிபடுவார், உதைபடுவார், சிலவேளைகளில் அவரும் பதிலுக்கு தாக்குவார், ஆனால் சாப்ளின் ஒரு போதும் வலியில் அழுவதில்லை,

சாப்ளின் அழும் தருணங்கள் பெரும்பாலும் நிராகரிப்பு மற்றும் காதல்தோல்வியால் ஏற்படும் தனிமைத் துயரமாகவே இருக்கின்றன,

வறுமையை எதிர்கொள்ளப் பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது, என எதையும்  செய்யலாம் என்றே சாப்ளின் கதாபாத்திரங்கள் செயல்படுகின்றன, ஆனால் அந்த செயல்களின் பின்னால் சாதுர்யமில்லாத ஏமாளித்தனமே இருக்கிறது, பெரும்பாலும் தனது தவறுகளை வெற்றிகரமாகச் செய்யமுடியாமல் மாட்டிக் கொள்ளும் மனிதராகவே சாப்ளின் இருக்கிறார்

சாப்ளின் படங்களில் தான் வாழ்வின் அடித்தட்டை சேர்ந்த உதிரி மனிதர்கள் அதிகம் இடம்பெற்றிருக்கிறார்கள், திருடர்களும் போலீஸ்காரர்களுமே அவரது விருப்பத்திற்கு உரிய கதாபாத்திரங்கள், இந்தப் படத்திலும் அழகான பெண்ணின் முன்னிலையில் நடக்கும் சண்டையில் இருந்து அவரைக் காப்பாற்றுவது காவலாளியே, சாப்ளினின் போலீஸ் எப்போதுமே பருத்த தொப்பையுடன் ஒடமுடியாத ஆளாகவே இருப்பார், அது இந்த படத்திலே துவங்கியிருக்கிறது,

சாப்ளின் வேலைதேடி ஒரு பத்திரிக்கை அலுவலகம் செல்கிறார், அங்கே வேலையில்லை என்று துரத்தப்படுகிறார், அப்போது சாலையில் நடைபெறும் விபத்து ஒன்றினைப் பத்திரிக்கையாளர் படம் எடுத்துவிட்டு, விபத்திற்கு உள்ளான ஆளிற்கு உதவிசெய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறான், அவனிடமிருந்த கேமிராவைத் திருடிக் கொண்டு சாப்ளின் ஒடுகிறார்,

அவன் சாப்ளினைத் துரத்துகிறான், தன்னிடம் ஒரு பரபரப்புச் செய்தி இருப்பதாக பத்திரிக்கை அலுவலகம் சென்ற சாப்ளின், அதைச் சூடாக அச்சில் ஏற்றுகிறார், முதல் பக்கச் செய்தியாக வெளியாகிறது, சாப்ளின் பாராட்டுப் பெறுகிறார், பத்திரிக்கையாளன் தன்னை ஏமாற்றிய சாப்ளினை அடிக்கத் துரத்துகிறான், சாப்ளின் தப்பியோடுகிறார்,

இருவரும் டிராம் ஒடும் சாலையில் நின்று சண்டையிடும் போது டிராம் வந்துவிடுகிறது, தப்பிக்க முயற்சிக்காமல் டிராமின் மீது விழுந்து சண்டையிடுகிறார், அது தான் சாப்ளின், அவர் சண்டையின் தீவிரத்தில் தனது புறச்சூழலை ஒருபோதும் கண்டுகொள்வதேயில்லை,

ஏமாற்றிவாழ்வதைத் தவிர வழியற்றுப் போன நகரவாழ்வினைப் பற்றியதே இப்படம்,  இந்தப் படத்தை காண்கையில் ஏனோ  சிவாஜி நடித்த முதல்படமான பராசக்தி நினைவிற்கு வந்தபடியே இருந்தது

அதில் ஏமாற்றிவாழவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் சிவாஜி கதாபாத்திரத்திற்கும் இப்படத்தில் சாப்ளின் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கும்  நிறையத் தொடர்புகள், ஒற்றுமைகளைக் காணமுடிகிறது,

சாப்ளினிற்கு தனது முதல்படத்தைப் பிடிக்கவேயில்லை, அதைத் தனது நேர்காணலில் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார், அப்படம் ஸ்டுடியோவின் கெடுபிடியால் உருவாக்கபட்டது, இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் வெட்டி எறியப்பட்டுவிட்டது,  தன்னளவில் மிகவும் ஏமாற்றமளிக்க கூடிய படம் என்று குறிப்பிடுகிறார்

படத்தில் அவருக்குப் பத்திரிக்கையாளர் வேடம் என்பது பிடிக்கவேயில்லை, அதிலும் உடலுக்குப் பொருந்தாத உடை, கையில் ஒரு கைத்தடி தொப்பியோடு நடிக்க வந்த போது தன்வயதை மீறிய ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குகிறோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது, ஆனால் கதாபாத்திரத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டவுடன் அந்தக் கதாபாத்திரம் உயிர்பெற்று வேடிக்கைகள் தானே துள்ள ஆரம்பிக்கின்றன, தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படியாவது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த்து என்கிறார் சாப்ளின்

ஆரம்பக் காட்சிகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சாப்ளினுக்கு உள்ள தடுமாற்றத்தை திரையில் நன்றாகவே காணமுடிகிறது, ஆனால் படத்தின் இறுதிக்காட்சிகளின் போது சாப்ளின் தன்னைச் சரியாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார் என்பது அவரது இயல்பான உணர்ச்சிமாற்றங்களில் உணர முடிகிறது

சாப்ளினுக்கு இப்படம் கிடைத்த கதை படத்தின் கதையை விடவும் சுவாரஸ்யமானது,  நாடகமேடையில் சாப்ளின் செய்யும் வேடிக்கைகளைக் கண்ட கீஸ்டோன் உரிமையாளர் மாக் சென்னட் அவரைப் படத்தில் நடிக்க வைக்க ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார், அப்போது சினிமா பற்றி சாப்ளினுக்கு அதிகம் தெரியாது, அவர் நாடகமேடையில் புகழ்பெற்ற காமெடி நடிகர், தனது நாடகங்களுக்கு கூடுதல் புகழ்கிடைக்ககூடும் என்றே அவர் சினிமாவிற்குள் நுழைந்தார். வாரத்திற்கு 150 டாலர் சம்பளம் இது முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே, அதன்பிறகு வாரம் 175 டாலர் சம்பளம் என்று ஒரு ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது

ஆனால் அன்றிருந்த சினிமாக் காமெடி காட்சிகளின் மீது சாப்ளினுக்கு மாறுபட்ட கருத்து இருந்தது, அவை மிகவும் மட்டரகமான காமெடிகள், பெரும்பாலும் வலிந்து உருவாக்கப்பட்டவை என்ற எண்ணமிருந்தது, மாக்ஸ் லிண்டர் என்ற பிரெஞ்சு  நடிகர் தான் அன்று சினிமாவின் முக்கிய காமெடி நடிகர், அவரது பாதிப்பு சாப்ளினிடம் கூட இருந்தது ,

அந்த நாட்களில் கீஸ்டோன் கம்பெனி மாதம் ஒன்றுக்கு பனிரெண்டு ஒரு ரீல் படங்களும் ஒரு இரண்டு ரீல் படமும் உருவாக்கிக் கொண்டிருந்த்து, ஆகவே அது காமெடி சினிவாவிற்கான சந்தையை உருவாக்கி வைத்திருந்தது,

மாக் செனடிற்கு ஸ்லாப்ஸ்டிக் காமெடி எனப்படும் உடலை வளைத்து நெளித்து உருவாக்கும் காமெடியின் மீது அதிக ஈடுபாடு இருந்தது, ஆகவே அவர் அந்த வகை நடிகர்களையே தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார், அதிலும் போலீஸ்காரர்களைக் கேலி செய்யும் காமெடிப் படங்களைத் துவங்கி வைத்தது இவரே

சாப்ளின் ஹாலிவுட்டிற்கு நடிக்க வந்தபிறகு தான் அதன் உண்மையான பிரச்சனைகளைச் சந்திக்கத் துவங்கினார், படத்திற்கு கதை என்று தனியாக எதுவும் கிடையாது, பேசிப்பேசி சம்பவங்களை உருவாக்கி அதை ஒத்திகை பார்த்துத் திருத்தி மறுமுறை ஒத்திகை பார்த்து என்று தான் படங்கள்  உருவாக்கபடுகின்றன என்பது அவருக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது, அதிலும் படத்தில் வரும் கதாபாத்திரம் தன்னை விட வயதில் அதிகமான நபர் போல இருக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தோற்றத்தை மாற்றிக் கொண்டது அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, ஒத்திகை மாறிமாறிப் பல நாட்கள் நடந்தது, சலித்துப் போகுமளவு அந்தக் கதாபாத்திரத்திற்கான ஒத்திகை நடைபெற்று முடிவில் படமாக்கபட்டது,

மாக் செனட்டிற்கு சாப்ளின் நடிப்பு பிடிக்கவேயில்லை, அவரைத் தூக்கிவிடலாம் என்று கூட யோசித்தார், ஆனால் மேபல் நார்மெண்ட் என்ற பெண் இயக்குனரது இடைவிடாத சிபாரிசின் காரணமாகவே படத்தில் சாப்ளின் தொடர்ந்து நடிக்க முடிந்தது (இதே போன்ற சம்பவம் பராசக்தியில் சிவாஜிக்கு இடம்பெற்றிருக்கிறது)

மொத்தம் மூன்றே நாட்கள் படப்பிடிப்பு, படம் முடிந்து வெளியான போது சாப்ளின் நடிப்பைப் பத்திரிக்கைகள் வெகுவாகப் பாராட்டியிருந்தன, ஸ்டுடியோ சாப்ளினை தங்களுக்கான நடிகர் என்று கண்டுகொண்டது, சாப்ளினும் தனது கதாபாத்திரத்தை சரியாக வடிவமைத்துக்  கொண்டால் தன்னால் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை உணரத்துவங்கினார், அதிலிருந்தே நாடோடிக் கதாபாத்திரம் உருவாக்கபட்டு பின்பு பிரபலமானது

ஹென்றி லெகர்மென் இயக்கிய இந்தப்படம் தற்போது இணையத்தில் எளிதாகக் காணக்கிடைக்கிறது, தன்னைப் பகடி செய்து கொள்வது உயர்ந்த கலைஞர்களின் பாணி, சாப்ளின் செய்வதும் அதுவே.

••

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: