கவிதையில் நுழைந்த திருடன்

திருடன் விட்டுச் சென்றிருக்கிறான்

நிலவை

என்னுடைய ஜன்னலில்,

என்ற ரியோகானின் ஜென்கவிதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது நிலவை விடத் திருடனே மிக வியப்பாக இருக்கிறான், ஜென் கவிதையுலகின் மாஸ்டர்களில் முக்கியமானவர் துறவி ரியோகான், 1758ல் ஜப்பானின் இசிகோ பகுதியில் பிறந்தவர், இளவயதிலே பௌத்த துறவியாகி அலைந்து திரிந்தவர், இவரது மூன்று கவிதைகளில் திருடன் வருகிறான், பௌத்த நீதிக்கதைகளில் வரும் திருடனைப்போலவே தான் இவனும் இருக்கிறான், இந்தக்கவிதையை ஆழ்ந்து வாசிக்கையில் யார் அந்தத் திருடன் என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது,

கவிதையில் நுழைந்த திருடன், தினசரி உலகில் நாம் அறிந்த திருடனில்லை, இவன் ஒரு ரகசிய நடமாட்டத்தின் அடையாளம் போலவும்., நாம் விரும்பிச் சேர்த்தவற்றை நாம் அறியாமல் கவர்ந்து செல்கின்ற ஒரு அரூபியாகவும். பின்னிரவின் அடையாளச்சின்னம் போலவும் கவிதைகளில் அறிமுகமாகிறான், அவனுக்கு வயது கிடையாது, உருத்தோற்ற அடையாளங்கள் இல்லை, அவன் சொல்லில் பிறந்த திருடன்.

ஒருவேளை காலம் தான் திருடன் என்ற பெயரில் சுட்டப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது

காரணம் காலம் நாம் ஆசையாகச் சேர்த்துவைத்த பொருட்களை  அள்ளிக் கொண்டு போகிறது, அதன் நடமாட்டத்தை நாம் கண்டறிய முடியாது, ஆனால் அது வந்து போன தடயங்களை நாம் உணரமுடியும், காலத்திற்குத் துறவி என்றோ பணம்படைத்தவன் என்றோ பேதமில்லை, அதனால் யாவர் வீட்டிற்குள்ளும் புகுந்து விரும்பியதை எடுத்துப் போகிறது, காலத்தின் விரல் படாத பொருட்கள் இந்த உலகில் இல்லை, ஆனால் காலத்தால் அழிக்கமுடியாத நித்யமான சில பொருட்களும் உலகில் இருக்கின்றன, அதற்கு வயதாவதில்லை, பழமையடைவதில்லை. நிலா தேய்வதும் வளர்வதுமாக இருந்தாலும் அதன் நித்யதன்மை அப்படியே இருக்கிறது,

ஒருவேளை இந்தப் பாடலில் வரும் திருடனும் காலம் தானோ,

துறவியாக வாழும் ரியோகானின் வீட்டில் என்ன இருந்திருக்கப் போகிறது.

யாசகம் செய்யும் ஒடும். துவராடைகளும். கைத்தடியும். சித்திர எழுத்துகளை வரையும் தூரிகைகளையும்  தவிர வேறு ஒன்றுமிருந்திருக்காது, அதை அறியாதவனா திருடன், நிச்சயம் திருடன் ரியோகானை நோட்டம் விட்டிருப்பான், ஆள் அடையாளம் அறிந்திருப்பான், என்றால் அவன் ரியோகானிடம் என்ன திருட முயற்சி செய்தான்ன்,  எதையெல்லாம் களவு செய்து கொண்டு போனான்

அவன் விட்டுப் போனது நிலவு என்றால் கொண்டு போனது எவையெவை,

திருடனால் நிச்சயம் ரியோகானின் தனிமையைத் திருடிப்போக முடியாது,

அவரது வீடெங்கும் சிதறக்கிடக்கும் கவித்துவமான வார்த்தைகளைத் திருடிப்போக முடியாது,

அவரது வீட்டின் அருகாமையில் உள்ள குளத்தை, அதில் வளரும் தாமரைகளை,

வீட்டின் முன் உள்ள வாழைமரத்தை, அதில் விளையாடும் காற்றை,

மின்மினிப்பூச்சிகளை

அவரோடு எப்போதுமிருக்கும் சிரிப்பைத் திருடிப்போகவே முடியாது,

என்றால் திருடிப்போக முடியாது என்று நிலவை விட்டுப்போய்விட்டானா,

அல்லது அவன் திருடிப்போன பிறகும் ஒரு நிலவு ரியோகான் வீட்டுஜன்னலில் இருந்து கொண்டேயிருக்கிறதா

சிறுவயதில் தெருவில் விளையாடும் சிறுவர்கள் நிலவைத் தன்னோடு கூட்டிக் கொண்டு ஒடும்போது ஒவ்வொரு சிறுவனும் தன்னோடு ஒரு நிலா இருப்பதாகத் தானே நம்பிக் கொண்டிருந்தான், அது போன்றது தான் இதுவுமா

கவிதையில் வரும் நிலவு உண்மையில் புறஉலகில் நாம் காணும் அதே நிலவு தானா,

ஜென் பௌத்தம் நிலவை ஒளிரும் ஞானநிலையாக அடையாளப்படுத்துகிறது, அறிதலின் உன்னதநிலையே நிலவு,

பௌத்த சாரத்தை அறிந்தவர்கள் அது தொடர்ந்து நிலவை ஒரு குறியீடாக பயன்படுத்தி வருவதை அறிவார்கள்

குறிப்பாக நிலவைச்சுட்டிக்காட்டும் விரல் என்ற மேற்கோள் பௌத்த அறிதலில் முக்கியமான ஒன்று

நிலவைச் சுட்டிக்காட்டும் விரல் போன்றது தான் உண்மையை அறிவது, உண்மை என்பது நிலவு. சுட்டிக்காட்டப்படும் விரல் போன்றது தான் சொற்கள், அதன் துணையால் உண்மையை அடையாளம் காட்ட முடியுமேயன்றி அறிந்து கொள்ள முடியாது, ஆகவே உண்மையை அறிவதற்கு சொற்களைக் கடந்து போக வேண்டும், நிலவைக் காணும் போது சுட்டுவிரல் முக்கியமாகத் தெரிவதில்லை.சுட்டுவிரல் முக்கியமாகத் தெரிகின்றவருக்கு நிலவு முதன்மையாவதில்லை என்று பேதநிலையை பௌத்தம் அடையாளம் காட்டுகிறது

இந்த குறியீட்டு விளக்கத்தை பல்வேறு நிலைகளில் பலரும் விளக்கவுரை தந்திருக்கிறார்கள், அநேகமாக ஒவ்வொரு பௌத்த குருவும் இந்த வாசகத்திற்கான தனது புரிதலை நீண்ட உரையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்,

ரியோகானும் இதே சுட்டுவிரலும் நிலவைப்பற்றி தனது கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்

நிலவு தோன்றுகின்ற வரைக்கும் சுட்டிக்காட்டும் விரல் குருடு தானா என்பதே அவரது முக்கிய கேள்வி, உண்மையில் நிலவும் விரலும் ஒரே நேரத்தில் ஒன்றுபட்டும் விலகியுமான இருநிலைகளில் இருப்பதையே அவர் அடையாளம் காட்டுகிறார்,

உள்ளதை உள்ளபடியே அறிந்து கொள்ள

முடிந்தவனுக்கு

சுட்டுவிரல் என்பதுமில்லை

நிலவு என்பதுமில்லை,

என்பதே ரியோகானின் கவிதை,

இக்கவிதையில் வரும் அதே நிலவு தான் திருடன் விட்டுச் சென்ற நிலவும்,

அந்த நிலவு உண்மையில் யாருடையது, அது ரியோகானுக்கும் சொந்தமானதில்லை, அதை அவர் நன்கு அறிந்தவர், திருடன் ஏன் அற்பப்பொருட்களுக்கே ஆசைப்படுகிறான், காரணம் பொருள்வழி இன்பங்களே உலகின் விந்தை என்று நம்புகிறான், விலைமதிப்பில்லாத ஞானமோ. இயற்கையோ அவனுக்கு முக்கியமானதாகயில்லை, ஆகவே அவன் அதன் மெய்மையை அறியாமலே இருக்கிறான், ஒருவேளை அப்படி இருப்பதால் தான் திருடனாக இருக்கிறானா,

கேள்விகள் இசைதூணில் தட்டி எழுப்படும் ஒசையைப் போல அதிர்ந்து கொண்டேயிருக்கிறது, ஜென் கவிதைகள் தரும் தரிசனம் உள்ளார்ந்த ஒன்று, அது நீந்தும்போது விலகி இடைவெளியிடும் தண்ணீர் நிமிசத்தில் தானே ஒன்றாகிவிடுவது போன்ற விந்தை, ஜென் கவிதைகளை அணுகுவதற்கு முன்பு நாம் செய்யவேண்டியது நமது முன்முடிவுகளைக் கைவிடுவதுதான், இயற்கையைப் பற்றி நாம் அறிந்துவைத்துள்ள அறிவை ஜென் கவிதைகள் சுலபமாகக் கடந்துபோகின்றன, ஒருவகையில் இவை அதன் உள்ளார்ந்த இயல்பை, உண்மையை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன

கவிதையின் வழியே நிலவு உருமாறிக் கொண்டேயிருக்கிறது

ஒருவேளை ரியோகான் அந்த திருடனுக்கு நிலவை வழங்க விரும்பினால் என்ன செய்திருப்பார்

ரியோகானால் நிலவை திருடனுக்குப் பரிசாக தந்துவிட முடியுமா, திருடனுக்கு நிலவின் முக்கியத்துவம் தெரியவில்லை, ரியோகானுக்கு தெரிந்திருக்கிறது, என்பது எதிரெதிர் நிலைகள் தானா.

இந்தக் கவிதை சங்கின் உள்ளே சப்தம் சுழன்று கொண்டேயிருப்பதை போல தனக்குத்தானே சுழன்று கொண்டேயிருக்கிறது, கவிதையை ஆழ்ந்து வாசிக்கையில் உலகம் திடீரென சிறிய வீடு போலாகி அதன் ஜன்னலில் ஒரெயொரு திருடன் விட்டுப் போன நிலவு மட்டுமே ஒளிர்வது போல தோன்றுகிறது, அப்போது மற்ற எல்லாப்பொருட்களையும் விட நிலவு விந்தையான ஒன்றாகிவிடுகிறது, அந்த தருணத்தில் நான் முதன்முறையாக நிலவைப் பார்ப்பது போலிருக்கிறது,

தேவதச்சன் தனது கவிதையில் இதை எப்போதுமிருக்கும் நிலவு என்று அடையாளப்படுத்துகிறார்

வியப்பு உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் எப்போதுமே ஜென் கவிதை முக்கியப்பங்காற்றுகிறது, பாஷோவின் ஒருகவிதையிருக்கிறது

மட்சுஷிமா …

ஆ மட்சுஷிமா

மட்சுஷிமா!

இந்தக்கவிதை மட்சுஷிமா என்ற மலையைப் பற்றியது, முதல் வரியில் மலை தோன்றுகிறது, கண்கொள்ளாத அதன் தோற்றம் ஒரு சொல்லாக உருமாறுகிறது, மட்சுஷிமா என்ற சொல்லில் மலையின் பிரம்மாண்டம் ஒளிந்து கொள்கிறது, அடுத்த வரியில் அதன் மீதான வியப்பு பீறிடுகிறது, வியப்பு மலை சார்ந்த ஒன்றில்லை, பார்வையாளன் சார்ந்த ஒன்று, அவன் மலையை நெருங்க முயற்சிக்கிறான், மலையைப் பற்றிய தனது புரிதலின் சிறு முணுமுணுப்பு தான் அந்த வியப்பு,  அந்த வியப்பு மனநிலையில் அவன் மனம் விம்முகிறது

பிரம்மாண்டத்தின் முன்பு இயல்பாகவே நமது மனது எப்போதுமே நெகிழ்வடைந்துவிடுகிறது, அதனால் தான் முடிவற்ற மணல்வெளியை. பொங்கி வழியும் அருவியை. கண்கொள்ளமுடியாத கடலை. பள்ளத்தாக்கினைக் காணும் போது மனம் நழுவிப்போய்விடுகிறது

இங்கும் அது தான் நடக்கிறது, கவிஞன்  சொற்களின் வழியே மூன்று ஒவியங்களை வரைகிறான், அதில் இந்த இரண்டாம் ஒவியத்தில் அதே மலை வியப்பால் ஒளிரத் துவங்குகிறது, அதன்மீதான அவனது லயப்பு அவனை மெல்ல சாந்தம் கொள்ள வைக்கிறது, வியப்பு கலையவில்லை, ஆனால் மனம் சாந்தம் கொண்டு சொல்லற்ற மௌனத்திற்கு கொண்டு செல்கிறது

அது தான் மூன்றாவது வரி, அது ஒரு விசித்திரம், ஆனால் மௌனமான சித்திரம், அதிலும் வியப்பு அடங்கவில்லை, இது தான் ஜென் தரும் அனுபவம்,

பொதுவாக ஜென் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஒவியத்துடன் இணைத்தே எழுதுவார்கள், காஞ்சி எனப்படும் ஜப்பானிய எழுத்துமுறை ஒவிய வடிவிலானது, ஆகவே பிறமொழிகளில் ஒலி வடிவத்தில் நாம் அறியும் கவிதையை அவர்கள் காட்சிவடிவத்தில் அறிகிறார்கள், அதனால் ஜப்பானியர்கள் ஹைக்கூவை ரசிக்கும் விதம் வேறு எவருக்கும் இயலாதது, சாக்கே என்ற மதுவை ரசித்தபடியே இயற்கையை அவதானிப்பது அவர்களின் மரபு, ஆகவே ஜென் கவிதை என்பது ஒரு ஏரியின் முன்னால் அமைக்கப்பட்ட நுழைவாயில் போன்றது, அது ஒரு காட்சியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது, அதன் வழியே இயற்கையை உள்வாங்கிக் கொள்வது நமது புலனறிதல் வழியாக மட்டுமே சாத்தியம்

தனிமை உணர்வு என்பதை ஜென் கவிதைகள் எப்போதுமே பாடுகின்றன, அதன் ஒரு நிலையாகவே இரவை அறிதலும் இருக்கிறது, அதில் தான்  நிலவு குறித்த கவிதைகள் முக்கியமாகின்றன

தமிழில் திருடர்களைப் பற்றி நிறைய சிறுகதைகள் இருக்கின்றன, நானே பத்துக்கும் மேற்பட்ட கதைகள் எழுதியிருக்கிறேன், புதுமைப்பித்தன் துவங்கி இன்றுவரை அத்தனை முக்கிய எழுத்தாளர்களும் ஆளுக்கு ஒரு கதையாவது திருடனைப்பற்றி எழுதியிருப்பார்கள், ஆனால் நவீன கவிதைகளில் திருடனைப்பற்றி கவிதைகள் குறைவாகவே இருக்கின்றன, கள்வன் என்ற உருவகம் தமிழ்கவிதைக்கு மிகப்பழமையானது, ஆனால் அது பெரும்பாலும் காதல் உணர்வோடு தொடர்பு கொண்டே உருவகப்படுத்தபட்டிருக்கிறது,

ஜென் கவிதைகளில் வரும் திருடன் அடையாளமற்றவன், அவன் எதற்காகத் திருடன் ஆனான், ஏன் துறவிகளின் வீட்டிற்குத் திருடப்போகிறான் என்பது என்பதெல்லாம் சுட்டிக்காட்டப்படுவதில்லை, அதற்கு காரணம் தவளை போல. நாரை போல. தாமரை போல அவனும் ஒரு குறியீடு, அந்தக்குறியீடு பன்முகத்தன்மை கொண்டது,  இயற்கையின் ஒரு பகுதியைப் போலவே திருடனும் இருக்கிறான்,

ரியோகானின் கவிதையில் வரும் திருடன் நம்மை அச்சுறுத்துவதில்லை. மாறாக அவன் மீது நமக்கு மெல்லிய புன்னகையே உருவாகிறது, பயத்திலிருந்து சிரிப்பிற்கு உருமாற்றும் இந்த விந்தையைச் செய்வதே இக்கவிதையின் சிறப்பு,

திருடன் விட்டுச் சென்ற நிலவை கவிதையில் யார் யாரிடம் சுட்டிக்காட்டுகிறார்கள், யோசிக்கையில் ஒரு குழந்தையிடம் வயதானவர் சொல்வது போன்ற இருக்கிறது.

ரியோகான் குழந்தைகளை அதிகம் நேசித்தவர் . யாசகம் கேட்பதற்காக செல்லும் வீதிகளில் குழந்தைகளைக் கண்டால் உடனே விளையாடத்துவங்கிவிடுவார், அதனால் அவரைக் கண்டதும் குழந்தைகள் உற்சாகமாகிவிடுவார்கள், பலநேரங்களில் பசியைக்கூட மறந்து விளையாடிக் கொண்டேயிருப்பார், அவருக்குப் பிடித்தமான விளையாட்டு ஒளிந்து பிடித்து விளையாடுவது,

தன்னை எப்போதும் குழந்தைகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று சந்தோஷமாக குறிப்பிடும் ரியோகான், தனக்கு எலி என்றால் பயம், அதை வைத்து பிள்ளைகள் என்னை அடிக்கடி பயமுறுத்துவார்கள், நானும் பயந்து போய் கத்துவேன், சிலவேளை நான் செத்துப்போய்விட்டதை போல கண்களை மூடி விழுந்துகிடப்பேன், பிள்ளைகள் என்னை தட்டி எழுப்பமுயற்சி செய்வார்கள், அது ஒரு விளையாட்டு, முடிவில் கண்ணைத் திறக்கும் போது நானும் குழந்தைகளின் வயதிலே தோன்றுவதாக உணர்வேன் என்கிறான் என்கிறார் ரியோகான், அந்த மனநிலையை இந்தக் கவிதையினுள்ளும் காண முடிகிறது

தனதுகவிதைகள் புரிவதில்லை என்று சொல்பவர்களுக்கும் ரியோகான்  சொல்லும் பதில், குழந்தைகள் மனதுடன் படித்துப் பாருங்கள் என் கவிதைகள் புரியக்கூடும், கவிதைக்குள் இருக்கும் என்னை குழந்தைகளால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும் என்கிறார்.

ரியோகானின் இன்னொரு கவிதையில் அவரது வீட்டிற்குள் ஒரு மழைநாளின் இரவில் திருடன் வந்துவிடுகிறான், அவனுக்காக உறக்கமில்லாமல் இரவெல்லாம் விழித்திருக்கும்போது வெளியே மழையின் தெறிப்புசப்தத்தையும்  தவளைகுரல்களையும் ரசிக்க முடிந்தது என்கிறார்

ரியோகானின் கவிதைகளில் மின்மினிப்பூச்சிகளும் பீச் மலர்களும், காளான்களும் மலையில் இருந்து சப்தமிடும் குரங்குகளும், மழை பெய்யும் இரவும்.  உதிர்ந்த இலைகளும், குளிர்ச்சியான காற்றும், சிறுவர்களின் விளையாட்டு மணியும். தனிமையான மரவீடும் அடிக்கடி இடம்பெறுகின்றன, இலைகள் உதிர்வதை போல தன் வயதை அவர் உதிர்த்துக் கொண்டேயிருப்பதாகச் சொல்கிறார்,

பழமையான மடாலயம் ஒன்றினை போல தனது வீடு புராதனமானது, எளிமையானது, தூய்மையானது என்று குறிப்பிடும் ரியோகான் தனது இருப்பை பற்றி ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்

எதற்கும் ஆசைப்படாமல் சோம்பலுற்றிருக்கிறேன்

உலகம் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டுமென

விட்டுவிட்டேன்

என் பையில் பத்துநாளுக்கான அரிசியிருக்கிறது

கணப்பு அடுப்பருகே ஒரு கட்டுச் சுள்ளியிருக்கிறது

எதற்கினி மாயத்தையும் ஞானத்தையும் பற்றிய

புலம்பல்,

கூரையில் பெய்யும்

இரவு மழையைக் கேட்டபடி

சாவகாசமாக அமர்ந்திருக்கிறேன்

கால்இரண்டையும் வசதியாக நீட்டிக் கொண்டு,

என்ற கவிதையை வாசித்த போது வாசித்த உடனே மனதில் தேவதச்சனின் இன்னொரு கவிதை தோன்றியது

கவிதையின் தலைப்பு வேலை.

••

என்

நட்சத்திரங்களை வானில் வைத்தேன

என்

ஜலத்தை ஆற்றில் விட்டேன்

என் மனனியைச் சரித்திரத்தில் நிறுத்தினேன்

இனி

தன் இலைகளைத் தாம் வியக்கும் மரநிழலில்

ஊஞ்சலாடுவேன் என்

வேலைதான் முடிந்ததே

இந்த தேவதச்சனின் கவிதை கூறுவதும் ரியோகான் கூறுவதும் ஒன்றே, ரியோகானுக்கும் தேவதச்சனுக்குமான காலஇடைவெளி இக்கவிதையின் வழியே ஒன்றுமில்லாமல் போகிறது, பௌத்த சாரத்தை உள்வாங்கிக் கொண்ட தனித்துவமானவர் கவிஞர் தேவதச்சன் என்பதை இக்கவிதை மிகச்சரியாக அடையாளம் காட்டுகிறது

ஜென் கவிதையின் உன்னதங்களை அடையாளம் கண்டு கொள்ள  ரியோகான் காட்டும் வழி இதுவே,

If your heart is pure, then all things in your world are pure.

இது கவிதையை அறிவதற்கான வழிமட்டுமில்லை, வாழ்வின் எளிய உண்மையும் இதுவே.

•••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: