மறுக்கப்படும் பிரார்த்தனைகள்

அமெரிக்காவில் வாழும் சீனர்களைப்பற்றி நிறைய நல்ல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன, ஒருவகையில் அமெரிக்க சினிமாவின் தனி வகைமையாகவே இந்தத் திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன, சமீபத்தில் வயானே வாங் Wayne Wang இயக்கிய A Thousand Years of Good Prayers என்ற திரைப்படத்தைப் பார்த்தேன், கலங்க வைக்கும் உணர்ச்சிப்பூர்வமான திரைப்படமிது, படம் மெதுவாகவே துவங்குகிறது, காட்சிபடுத்தும் முறையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடும் ஜப்பானிய திரைமேதை யசுஜிரோ ஒசுவின் திரைப்படம் ஒன்றைக் காண்பதைப் போல உணரச்செய்தது, அதனாலே அந்தப் படம் மீது கூடுதல் ஆர்வமானது,

கதாபாத்திரத்தின் அகஉலகினை மெல்ல மெல்ல படம் நமக்கு அறிமுகம் செய்கிறது, காட்சிகள் இயல்பாக வளரத்துவங்குவதை உள்வாங்கும் போது நாமும் படத்தின் மௌனசாட்சியாகி விடுகிறோம்,

நல்ல சினிமா எப்போதுமே உரையாடல்களை விடவும் காட்சியை அதிகம் நம்புகிறது, காட்சியின் நுண்மையில் அது சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுகிறது, ஒரு மௌனத்தை உருவாக்கி பார்வையாளனுக்கு கதாபாத்திரத்தின் அகத்துயரை வலியை எளிதாகப் புரிய வைத்துவிடுகிறது

நடிகர்களின் உடல்மொழியின் வழியே உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படச் செய்வது தான் சினிமாவின் தனித்துவம், உரையாடல்கள் இல்லாமல் கதாபாத்திரங்களின் மனஉணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தருணங்களில் தான் நல்ல சினிமா பெரிதும் வெற்றிபெறுகிறது, குறிப்பாக ஒரு பெருமூச்சு. ஒரு தலையாட்டல். அல்லது ஒரு பதற்றமான நடையின் மூலம் கதாபாத்திரத்தின் அகஉணர்ச்சியை அழகாக வெளிப்படுத்திய திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன்,

டால்ஸ்டாயின் அன்னா கரீனனா திரைப்படத்தில் அன்னா பிரசவத்தின் போது தான் இறந்துவிடுவோம் என்று பயந்து தன் கணவனிடம் மன்றாடி தன் ரகசியக்காதலனை அழைக்குமாறு சொல்கிறாள்,  கணவன் தனக்கு விருப்பமில்லாத போதும் ஜன்னிகண்டு பிதற்றும் மனைவியைச் சாந்தம் செய்வதற்காக காதலனை அழைக்கிறான்,

காதலன் விரான்ஸ்கிக்கோ  அன்னாவை அவள் கணவன் முன்னால் எப்படிச் சந்திப்பது என்ற தயக்கம், இந்தக் குழப்பமான மனநிலையைக் காட்சிப்படுத்தும் போது ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் காதலன் என்று இருவரும் படுக்கை அறைக்குள் நிற்கிறார்கள், அன்னாவின் முகம் சந்தோஷமடைகிறது, பிறகு சட்டென கலக்கமடைகிறது, விரான்ஸ்கி தயங்கித் தயங்கி அவள் அருகில் உட்காருகிறான், அன்னாவைத் தொடுவதா வேண்டாமா என குழப்பமாக இருக்கிறது, அவன் கண்கள் ரகசியமாக அன்னாவின் கணவனை நோக்குகின்றன, அன்னாவின் கணவன் அவர்களைத் தனிமையில் விட்டு வெளியேறிப் போகிறான்,

அன்னாவும் அவள் காதலனும் ஒருவரையொருவர் ஒரு நிமிசம் பார்த்துக் கொள்கிறார்கள், அந்தக் கண்களில் ஆசையும் குற்றவுணர்ச்சியும் ஒரே நேரத்தில் பீறிடுகின்றன, சட்டென  ஒருவரையொருவர் கட்டிக் கொள்கிறார்கள் , அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் கணவன் தன் மனக்கொதிப்பை கட்டுப்படுத்தமுடியாமல் விரலை சொடுக்கியபடியே நடக்கிறான், அந்த விரல் சொடுக்கில் தன்மனைவி கண்முன்பாகவே இன்னொருவனைக் கட்டிபிடித்துக் கொண்டிருக்கிறாள் என்ற வலி அழகாக காட்டப்படுகிறது,

இந்தக் காட்சியில் இரண்டே உரையாடல்கள், மற்ற மூன்று நிமிசங்கள் இசையும் நடிகர்களின் உடல்மொழியுமே காட்சியின் ஆதார உணர்ச்சியை  வெளிப்படுத்துகின்றன, அது தான் சினிமாவின் பலம்.

குறைவான கதாபாத்திரங்களின் வழியே ஒரு முழுநீளத் திரைப்படத்தை உருவாக்குவது ஒரு சவால், அதில் இரண்டுவகையிருக்கிறது, ஒன்று ஆறு கதாபாத்திரங்களின் வழியே பரபரப்பான  திரைக்கதையை  கொண்ட ரோஷமான் பாணி, அது அகிரா குரசோவா உருவாக்கியது, இடைவெட்டாக கதை முன்பின்னாக நகர்ந்து ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறது, அதிலிருந்து முடிவை நோக்கி கதை நகர்த்தப்படுகிறது,

பார்வையாளன் தானும் படத்தின் ஒரு கதாபாத்திரம் ஆகிவிட முயற்சிக்கிறான், அந்த அளவு பதைபதைப்பை உருவாக்குவதில் குரசோவா வெற்றி பெறுகிறார்

இன்னொரு தளமிருக்கிறது, அதில் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு நிதானமாக. படிப்படியாக வளர்ந்து செல்லும் மனவெழுச்சியை மையமாகக் கொண்ட கதை சொல்லப்படுகிறது, உதாரணத்திற்கு டோக்கியோ ஸ்டோரி, அது யசுஜிரோ ஒசுவின் பாணி, (Yasujirō Ozu), இருவருமே ஜப்பானிய சினிமாவின் முக்கிய ஆளுமைகள், உலகசினிமாவின் முன்னோடிகள்

அகிரா குரசோவாவைப்  போல ஒசு இந்தியாவில் கொண்டாடப்படவில்லை, உண்மையில் ஒசு தான் இந்திய மனநிலைக்கு மிக நெருக்கமான இயக்குனர், அவரது கதைகள் யாவும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டவை, குறிப்பாக வறுமையால் பிரிந்த குடும்பங்கள். கைவிடப்பட்ட முதியவர்கள், மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோர் படும் கஷ்டங்கள். ஊர்விட்டு இடம் மாறிப்போவதில் பெண்கள் அடையும் துயரம், குடும்பத்தில் உருவாகும் பொறாமை, வம்புச் சண்டைகள். உறவுகள் கசந்து போகும் சிக்கல்கள், இவையே ஒசுவின் கதைக்களன்கள்,

ஒரு பெண்ணிற்குத் திருமணம் நடைபெறுவதற்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன, திருமணத்திற்குப் பிறகான ஆண் பெண் உறவு சார்ந்த சிக்கல்கள் எவை என்பதை இவரைப் போல விஸ்தாரமாகப் பேசிய இயக்குனரேயில்லை, ஒசுவின் திரைப்படங்களில் பரபரப்பு கிடையாது, துரித சாகசங்கள் எதுவும் கிடையாது

படம் ஒரு நீரோட்டம் போல அதற்கான இயல்போடு அழகோடு மெதுவாகவே செல்கிறது, அவரது கதாபாத்திரங்கள் யாவரும் சாதாரண மனிதர்கள்,  ஜப்பானிய வாழ்வில் அன்றாடம் இடம்பெறும் நிகழ்வுகளே இவரது கதையின் முக்கியச் சம்பவங்கள்,  குளிப்பது முதல் உறங்குவது வரை அத்தனையிலும் ஜப்பானியர்களுக்கான தனித்துவம் எப்படியிருக்கிறது  என்பதைக் காட்சிபடுத்தியவர்,

குறிப்பாக ஜப்பானியர்கள் மண்டியிட்டு அமர்ந்து சாப்பிடுகிறார்கள் என்பதால் காட்சியின் கோணத்தையே நான்கு அடிகளுக்குள்ளாகவே ஒசு வைத்துக் கொள்கிறார், பக்கவாட்டு நகர்வு கொண்டு கதவுகளே ஜப்பானில் அதிகமிருக்கின்றன, ஆகவே அவரது கேமிரா பக்கவாட்டு நகர்வையே அதிகம் தொடருகிறது, இப்படி ஜப்பானிய கலாச்சாரத்தினுள் வேர்விட்ட திரைப்படங்களையே ஒசு இயக்கியிருக்கிறார், அவரது படங்களில் பெண்களே முதன்மையான கதாபாத்திரங்கள், படத்தின் ஊடாகப் பௌத்த அறம் கசிவதைப் பார்வையாளர்கள் நன்றாகவே உணர முடிகிறது

போதை மற்றும் மாபியா உலகின் நிழல்உலகச்சண்டைகள். மாங்கா காமிக்ஸ். பாலின்ப வேட்கை அதிகம் கொண்ட பிங்க் படங்கள் என்று ஜப்பானியர்களின் இன்றைய ரசனை உருமாறியுள்ள போதும் ஒசுவின் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் திரையிடப்படும்போது அதை பெருமளவு இளைஞர்கள் ரசித்து பார்க்கிறார்கள், கொண்டாடுகிறார்கள், காலம்தோறும் ஒசு வளர்ந்து கொண்டே வருகிறார் என்பதே அவரது கலையின் வெற்றி, அதனால் தான் ஹாவல் கருத்துக்கணிப்பில் இந்த நூற்றாண்டின் சிறந்த பத்து படங்களில் ஒசுவின் டோக்கியோ ஸ்டோரி (Tokyo Story )முதலிடம் பெற்றிருக்கிறது,

குடும்ப உறவுகளின் விரிசல் எப்படி மனிதர்களைப் பாதிக்கிறது என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தவர் ஒசு, அவரது படங்களின் எளிமை அசாத்தியமான ஒன்று, கூழாங்கல்லின் எளிமையைப் போன்றது, ஒரு ஜென் குருவிடம் நாம் பாடம் கேட்பது போன்ற அனுபவத்தை தான் அவரது படங்கள் தருகின்றன, ஒசுவின் கதாபாத்திரங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது கூட சப்தமில்லாமலே இருக்கிறது,

குறிப்பாக அப்பா மகள் உறவைப்பற்றி ஒசு அதிகம் கவனம் கொண்டிருக்கிறார், அதிலும்  திருமணமாகி கணவனை இழந்த அல்லது பிரிந்து வாழும் பெண்ணே அவரது அன்பிற்கும் அக்கறைக்கும் உரியவள், டோக்கியோ ஸ்டோரியில் வரும் மருமகள் கதாபாத்திரமாக ஒரு சிறந்த உதாரணம், தனித்துவாழும் பெண்களை அந்த பெண்ணின் அம்மாவை விடவும் அப்பாவே நன்றாகப் புரிந்து கொள்கிறார் என்று ஒரு வசனம் அவரது படத்தில் இடம்பெற்றிருக்கிறது, அது மிகவும் உண்மை,

தனது திருமணத்தைப் பற்றி அப்பா ஏன் அதிகம் கவலைப்படுகிறார் என்று மகள் கேட்பதற்கு அந்தக் கவலை நீ பிறந்த நாளிலே தோன்றிவிட்டது, இப்போது அதற்கு வயது இருபது என்று அப்பா சொல்லும் ஒரு வசனமும் அவரது படத்திலே இடம்பெற்றிருக்கிறது

ஆண் பெண் உறவின் முக்கியப் பிரச்சனை திருமணமே, அது சார்ந்தே சகலசிக்கல்களும் தோன்றுகின்றன, அதைச் சரிசெய்வதற்கும். புரிந்து கொள்ள வைப்பதற்குமே கலைகள் தேவைப்படுகின்றன, அந்த வேலையை மதம் பிரார்த்தனைகளின் வழியே செய்து கொண்டிருக்கிறது, கலை பிரார்த்தனையின் மௌனத்தை உள்வாங்கிக் கொண்டு தனது இயல்பில் தனியாகச் செயல்படுகிறது, இதுவும் ஒருவிதமான பிரார்த்தனையே என்கிறார் ஒசு. சினிமாவை ஒரு ஆன்மீக வெளிப்பாட்டு வடிவமாக்கியவர் என்று அவரைக் கொண்டாடுவது இதன் காரணமாகவே,  பல்வேறு பட்ட பருவநிலைகளை தனது கதையின் தலைப்புகளாக்கி அதை ஒரு குறியீட்டு வடிவமாக்கியவர் ஒசு,

குழந்தைகள் வறுமையாலும். குடும்ப நெருக்கடியாலும் விரும்பியதை அடையமுடியாமல் ஆதங்கப்படுகிறார்கள், பரஸ்பர அன்பு இல்லாமல் போன உறவு போலியானது என்பதை அவரது படங்கள் ஆழமாக வலியுறுத்துகின்றன. நகர்மயமாவதும், அதற்காக குடும்பம் பிரிந்து போய் நகரில் சொந்த அடையாளங்களை தொலைத்து வாழ்வதையும் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் ஒசு. அவரது சினிமாவை கவித்துவ யதார்த்தம் என்று வகைப்படுத்தலாம், அன்றாட வாழ்வின் காட்சிகளை ஈர்ப்புமிக்க விந்தையாக்குகிறார் என்பதே அவரது விசேசம்.

இன்று அவரது பாணியில் ஒருசில இயக்குனர்களே திரைப்படங்களை உருவாக்கிவருகிறார்கள், ஆனால் அகிரா குரசோவாவின் பாதிப்போ உலகம் முழுவதும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற  இயக்குனர்களிடம் நேரடியாகவே காணப்படுகிறது, ஒசுவைப் பின்தொடர்வதற்கு திரைநுணக்கம் அறிந்தால் மட்டும் போதாது, மாறாகப் புகார்கள் இல்லாமல் உலகை நேசிக்கக் கூடிய மனதும் தேவை, அவரது படங்களை வெறும் பொழுதுபோக்காக ஒரு போதும் கருத முடியாது, அவைத் திரையில் எழுதப்பட்ட அனுபவப் பாடங்கள்,

ஒசுவின் பாணியில் குடும்ப உறவுகளின் விரிசலையும் பிரிவையும் முதன்மைப்படுத்தி திரைப்படங்களை உருவாக்கி வருபவர்   வயானே வாங் Wayne Wang, ஹாலிவுட்டில்  பணியாற்றிவரும் இவர் ஹாங்காங்கைச் சேர்ந்தவர் ,  இவரது The Joy Luck Club திரைப்படவிழாக்களில் அதிகம் பேசப்பட்ட படமாகும், அமெரிக்காவில் வாழும் சீனர்களை பற்றிய சமகாலச்சிறுகதைகளையும் நாவல்களையும் தனது படத்திற்கான கதைகளாக தேர்வு செய்து படமாக்கிவருகிறார்,

இவரது இயக்கத்தில் வெளியான A Thousand Years of Good Prayers கதை ஒசுவின் கதையின் தொடர்ச்சி என்றே சொல்வேன்

ஆயிரம் ஆண்டுகளின் நல்ல பிரார்த்தனை என்பது எதுவென்பதையே படம் ஆதார தொனியாக கொண்டிருக்கிறது, அமெரிக்காவிற்கு படிக்க சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டு மணவிலக்காகி தனித்து வாழும் மகளைக் காண்பதற்காக சீனாவில் இருந்து அவளது வயதான தந்தை வந்து சேர்வதில் படம் துவங்குகிறது,  அவர் அமெரிக்காவை வியப்போடு காண்கிறார்,  புதிய ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார், மகள் வேலைக்குப் போய்விட்டபிறகு பகல்பொழுதை வீட்டில் தனியாக கழிக்கிறார், மொழி தெரியாத ஊரில் ஒரு வயதானவர் தனிமையை எப்படி அனுபவிப்பார் என்பதற்கு இது ஒரு உதாரணக்காட்சி,

மகளுக்காக சமையல் செய்கிறாள், அதற்காகத் தேவைப்படும் பொருட்களைத் தானே கடைக்குப் போய் வாங்கிவருகிறார், மகளோ சாப்பிடுவதில் அக்கறை காட்டுவதேயில்லை, அப்பா அவளை இன்றும் ஒரு சிறுமி போலவே நினைக்கிறார், நன்றாகச் சாப்பிடவேண்டும் என்று வற்புறுத்துகிறார், விவாகரத்து பெற்று தனித்து வாழும் மகளிடம் அவள் திருமணம் முறிந்து போனதற்கு என்ன காரணம் என்று கேட்கிறார், காரணம் தேவையற்றது, அது முடிந்து போன விஷயம் என்று கோபப்படுகிறாள் மகள், அப்பாவோ முடிந்து போன விஷயத்தை கட்டாயம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும், அப்போது தான் அதே தவற்றை மறுபடி செய்ய மாட்டோம் என்கிறார்,

அப்பாவிற்கும் மகளுக்குமான உறவு எவ்வளவோ படங்களில் எத்தனையோ விதங்களில் காட்டப்பட்டிருக்கிறது, ஆனால் இந்தப் படத்தில் அவர்கள் பேசிக் கொள்வதை விடவும் மௌனத்தில் வழியே இருவரது உறைந்து போன மனதும் அப்பாவின் அளவில்லாத பாசமும் கவித்துவமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது,

ஒருநாளிரவு மகள் வீடு திரும்பத் தாதமாகிறது. சாலையில் வந்து அப்பா நெடுநேரம்  காத்திருக்கிறார், அவள் யாரோ ஒரு ரஷ்யனோடு வந்து இறங்குவதைக் கண்டு மனம் கலங்குகிறார், இரவில் மகள் பார்டிக்குப் போவதாக பொய் சொல்லி ஊர் சுற்றுவதை கண்டு அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை, இந்த மனத்துயரை பகிர்ந்து கொள்ள அவரது வயதில் உள்ள ஒரு பெண்ணைப் பூங்காவில் சந்திக்கிறார், அவள் ஈரானைச் சேர்ந்தவள்,  அமெரிக்காவில் மகன் மருத்துவராக இருப்பதால் வந்திருக்கிறாள், இரண்டு மொழிதெரியாத முதியவர்கள் ஒருவருக்கொருவர் நட்போடு பழகுகிறார்கள், அந்த உறவு அவருக்கு ஆறுதல் தருகிறது

ஒருநாள் அப்பாவிற்கும் மகளுக்கும் சண்டை நடக்கிறது, என் வீட்டில் இருந்து கொண்டு என்னை உளவு பார்க்காதீர்கள் அப்பா என்று மகள் கத்துகிறாள், நான் வளர்த்த பெண்ணின் மீது நான் அக்கறை கொள்வதற்கு பெயர் உளவு பார்ப்பதா என்று மிகவும் வருத்தபடுகிறார்,

அவள் தன்னை மீறிய உணர்ச்சிவேகத்தில் அப்பா நீங்கள் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள், அதற்கு நானும் அம்மாவும் பலிகடா என்று அவரது இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறாள், அப்பா மௌனமாக மகளின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார்,

மறுநாள் தனது தரப்பு நியாயத்தை வீட்டுச் சுவரிடம் சொல்லி வருந்துகிறார், மகள் அப்பாவின் அன்பை உணர்ந்து கொள்கிறாள், முடிவில் அப்பா சீனாவிற்கு திரும்பிச் செல்கிறார், பிரிவின் போது கைகாட்டி விடைபெறுவதில் தனக்கு நம்பிக்கையில்லை, அது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம், அந்த வலி பயணத்தைக் கசக்க செய்துவிடும் எனும் அப்பா தனியே ரயிலில் பயணம் செய்வதுடன் படம் முடிவடைகிறது,

பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் காட்டும் அன்பு ஏன் மறுக்கப்படுகிறது, ஏன் நாம் சுயநலத்துடன் தனித்துவாழ விரும்புகிறோம், நமது பொருளாதார வளர்ச்சி நம்மை அண்டை அயலாருடன், நண்பர்களுடன்  இணைத்துக் கொள்வதை தவிர்த்து தனிமைப்படுத்த அல்லவா செய்கிறது, பிள்ளைகள் பெற்றோர் மீது கோபம் கொள்வதும் பெற்றோர் பிள்ளைகளைக் குறை சொல்வதையும் தாண்டி எப்படி நிஜமாக அன்புகாட்ட முடியும் என்பதையே படம் விவரிக்கிறது

இப்படத்தின் ஒரு முக்கியக்காட்சியில் வசனமேயில்லை, அப்பா மகள் இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார்கள், அப்பா மகளைப்பார்த்து பெருமூச்சிடுகிறார், அதை கண்டு மகள் கலக்கத்துடன் தானும் பெருமூச்சிடுகிறாள், அப்பாவின் முகம் சாந்தமடைகிறது, மகள் முகத்தில் அழுகையை மறைத்துக் கொண்ட தந்திரம் தெரிகிறது, இருவரும் மௌனமாக இயற்கையை ரசித்தபடியே இருக்கிறார்கள், அந்த மௌனம் வலிமையானது என்று இருவருக்கும் தெரிந்தேயிருக்கிறது, அது படத்தின் உன்னதமான காட்சிகளில் ஒன்று

It takes 300 years

of prayers to cross a river

in a boat with someone.


It takes 3,000 years

of prayers to share a pillow

with someone.”

எனப்படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது, கணவன் மனைவி உறவு எவ்வளவு முக்கியமானது என்பதற்காகச் சொல்லப்பட்ட இந்த மேற்கோள் படத்தின் மைய இழையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, இந்தக்  குரல் ஒசுவால் உருவாக்கப்பட்டதே, அந்த வகையில் இப்படத்தை யசுஜிரோ ஒசுவிற்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்றே சொல்வேன்

**

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: