பார்த்தேன் படித்தேன்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த மலையாளக் குறும்படமிது,

Meals Ready

http://youtu.be/9gZCwY9qJL4

••

அஸீஸ் பே சம்பவம்

அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம்,  கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று,

துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத இசையின் துயரநிலையும் நாவல் விவரிக்கிறது

மிலன் குந்தேராவின் நாவல் போல கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள உறவையும் ஆழமான மனஉணர்ச்சிகளையும் நாவல் முதன்மைபடுத்துகிறது, அய்ஃபர் டுன்ஷ் நாவல் இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் தான் வெளியாகியிருக்கிறது,

சுகுமாரனின் மொழிபெயர்ப்பு மிகச்சிறப்பானது, இசையும் கவித்துவமும் நிரம்பிய நாவலை நுட்பமாக மொழியாக்கம் செய்திருக்கிறார், துருக்கிய இசை மற்றும் இலக்கியங்களின் ஆழ்ந்த அனுபவம் இன்றி  இது போன்ற மொழியாக்கத்தைச் செய்வது சாத்தியமானதில்லை, சுகுமாரன் துருக்கிய இசை மற்றும் இலக்கியத்தை ஆழ்ந்து அறிந்தே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை மொழிபெயர்ப்பின் சரளம் மற்றும் சொற்பிரேயோகங்கள்,  கதையின் ஆதாரத்தொனியின் வழியே நன்றாக அறிய முடிகிறது,

அவசியம் வாசிக்க வேண்டிய நாவலிது

••

ஒவியனின் ஒளிப்பயணங்கள்

ந, செல்வன் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞர், இவரது புகைப்படங்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறது, அடிப்படையில் இவர் ஒரு ஒவியரும் கூட,  குடந்தை அரசு நுண்கலைக்கல்லூரியில் பயின்றவர், ஏழு ஆவணப்படங்களைஇயக்கியிருக்கிறார்,

இதில்  ஆசிரியைக்கு அன்புடன் என்ற ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறேன், தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க குறும்படமிது, நெய்வேலியில் பணியாற்றி வரும் செல்வன் தனது புகைப்படத்துறை அனுபவங்களை  ஒவியனின் ஒளிப்பயணங்கள் என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்,  16 கட்டுரைகள் இருக்கின்றன,

ஒவியத்தில் இருந்து புகைப்படக்கலைக்கு மாறிய அனுபவத்தையும் ,தான் புகைப்படம் எடுத்துள்ள கலையாளுமைகள் பற்றியும் , புகைப்படக்கலையின் நுட்பங்களையும் மிக அழகாக எழுதியிருக்கிறார், புகைப்படங்களைப் போலவே இவரது எழுத்தும் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கிறது,

இந்த நூலை பெஸ்ட் போட்டோகிராபி  டுடே வெளியிட்டிருக்கிறது, தொடர்பு எண், 9442470721

••

துணைநலம்

எழுத்தாளர் கி, ராஜநாராயணன் அவர்களின் துணைவியார் கணபதி குறித்து துணைநலம் என்ற நூலை அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, இதனைத் தொகுத்து எழுதியிருப்பவர் சாந்தி, எழுத்தாளரின் மனைவியாக இருப்பது வரமும் சாபமுமான ஒரு நிலை, அவரது நெருக்கடிகள். சந்தோஷங்கள். ஏமாற்றங்கள் எப்படியிருக்கும் என்று அகபுறஉலகினை துல்லியமாகக் காட்டியிருக்கிறது இந்தப் புத்தகம்

கிரா அவர்களின் துணைவியார் கணபதி விருந்து உபசரிப்பிற்குப் பெயர் போனவர், நானே அதை அனுபவித்திருக்கிறேன், அந்த நல்ல உள்ளத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது இந்த நூல்.

கணபதியம்மாளின் பால்ய வயதில் துவங்கி, கிராவோடு எப்படித் திருமணம் நடைபெற்றது, எப்படி பிள்ளைகளை வளர்க்கவும் கணவரின் இலக்கியப்பணிகளுக்கு துணை செய்யும் தான் பாடுபட்டேன் என்பதை மிக இயல்பாக. உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்,

அந்த வகையில் தமிழில் இது ஒரு முன்னோடிப்புத்தகம், இதனை மிகுந்த அக்கறையோடு பதிவு செய்த சாந்திக்கு என் பாராட்டுகள்

••

Archives
Calendar
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Subscribe

Enter your email address: