சாக்லேட் கனவுகள்

I am only 8 years old, I told myself. No little boy of 8 has ever murdered anyone. It’s not possible. Roald Dahl

உலக அளவிலான சிறுவர்களுக்கான இலக்கியம் குறித்து தமிழில் அதிகம் பேசப்படுவதேயில்லை, அப்படி பேசப்பட வேண்டிய முக்கியமானவர்களில் ஒருவர் ரொவால்ட் டால் (Roald Dahl).

சிறுவர்களுக்கான அவரது புனைகதைகள் உலகப்புகழ் பெற்றவை, அதே அளவிற்கு அவரது சிறுகதைகளும் முக்கியமானவை, திகில் ஊட்டும் சம்பவங்களைக் குடும்பச் சூழலின் பின்புலத்தில் அவர் சித்தரிக்கும் விதம் அலாதியானது, எட்கர் ஆலன் போ விருது பெற்றுள்ள இவரது சிறுகதைகள் தொலைக்காட்சி நாடகங்களாக உருமாற்றபட்டிருக்கின்றன, ரொவால்ட் டாலின் சிறுகதைகள் என்ற தேர்வுசெய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு வெளியாகி உள்ளது, அதில் Man from south போன்ற மிகச்சிறந்த கதைகள் உள்ளன

இவரது பல கதைகள் சிறுவர்களுக்கான முழுநீள மற்றும் அனிமேஷன் படமாக எடுக்கபட்டிருக்கின்றன, அதில்  முக்கியமானது Charlie and the chocolate factory , இது ஒரு சுவாரஸ்யமான சிறுவர் நாவல்,

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக பிரபலமான சாக்லெட் நிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களின் தொழிற்சாலைக்குள் உளவாளிகளை அனுப்பி தொழில்ரகசியத்தை தெரிந்து கொண்டுவர முயற்சித்த செய்திகள் உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்டன, அதை அடிப்படையாகக் கொண்டே இந்த நாவலை டால் எழுதியிருக்கிறார்.

சாக்லெட் பேக்டரி என்றாலே சிறுவர்கள் அங்கே எல்லாமும் சாக்லெட்டால் செய்யப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்வார்கள், அதை நிஜமாக்குவது போலவே இக்கதையில் ஒரு சாக்லெட் தோட்டம் உள்ளது, அதனுள் பெரிய சாக்லெட் ஏரியே காணப்படுகிறது, பாளம் பாளமாக சாக்லெட்டுகள் குவிந்து கிடக்கின்றன, அவ்வளவு பெரிய நிறுவனத்தில் இயந்திரங்களே அத்தனை வேலைகளையும் செய்கின்றன, வேறு பணியாட்களையே காணவில்லை, ஒரேயொரு குள்ளன் மட்டுமே வேலைக்கு இருக்கிறான், கொட்டைகளை உடைப்பதற்காக ஒரு அணில் வேலை செய்கிறது, மற்றபடி வோங்காவின் சாக்லெட் பேக்டரி ஒரு விந்தையான மாயஉலகம்,

வில்லி வோங்கா பிரபலமான சாக்லேட் நிறுவனம் ஒன்றினை நடத்திவருகிறார், ஒருமுறை அவர் தனது நிறுவனத்தின் சார்பாக ஒரு பரிசுப்போட்டி அறிவிக்கிறார், அதன்படி ஐந்து பாக்கெட்டுகளில் ஐந்து தங்க டிக்கெட்டுகள் வைக்கப்படுகின்றன, அந்தத் தங்கச் சீட்டு கிடைக்கப்பெற்ற அதிர்ஷடசாலி சிறுவர்கள் வோங்காவின் சாக்லெட் தொழிற்சாலைக்குள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்,

இதில் என்ன அதியசம் என்கிறீர்களா, அந்த நாள் வரை வோங்காவின் சாக்லெட் தொழிற்சாலைக்குள் யாரும் போனதே கிடையாது எப்படி சுவையான சாக்லெட் தயாரிக்கப்படுகிறது என்ற மர்மம் யாருக்கும் தெரியாமலே இருந்து வந்தது, அதை அறிந்து கொள்ள பல சூழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கின்றன.

இதில் நான்கு தங்கடிக்கெட்டுகள் நான்கு பணக்கார சிறுவர்களுக்குகிடைக்கிறது,பரிசுப்போட்டி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சார்லி என்ற ஏழைச்சிறுவன்  தங்க டிக்கெட்டை அடைய ஆசைப்படுகிறான், ஆனால் சாக்லெட் வாங்க அவனிடம் பணமில்லை, நாலு பணக்காரப் பையன்கள் தங்க டிக்கெட்டை வென்றுவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் ஐந்தாவது டிக்கெட் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று ஆதங்கத்துடன் சார்லி காத்திருக்கிறான், அது ஒரு பணக்காரப் பையனுக்கு கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகிறது, சார்லி மனம் உடைந்து போகிறான், ஆனால் அது வெறும் வதந்தி ,உண்மையில் யாருக்கும் கிடைக்கவில்லை என்று அறிந்ததும் ஒடிப்போய் ஒரு சாக்லெட் வாங்குகிறான், அதில் தங்க டிக்கெட் அவனுக்குப் பரிசாக கிடைக்கிறது

சார்லி மிகவும் ஏழை, வீடு வீடாகப்போய் நியூஸ் பேப்பர் போடுகின்றவன், மிகவும் சிறிய வீட்டில் வசிக்கிறான், ஆனால் மிகவும் நல்லவன், பரிசு பெற்ற ஐந்து பேரும் தொழிற்சாலைக்குள் நுழையும் போது சில விதிகள் அறிவிக்கப்படுகின்றன, அவற்றை நால்வர் மீறிவிடுகிறார்கள், பொறுமையாக, அமைதியாக, இடர்பாடுகளைத் தாண்டி சார்லி ஒருவன் மட்டுமே தொழிற்சாலையைச் சுற்றிபார்க்கிறான், அது ஒரு ஆச்சரியமூட்டும் உலகம், அங்கே, வோங்கா ஒருவரே அத்தனை முக்கிய வேலைகளையும் செய்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருக்கிறது,

முடிவில் வோங்கா சார்லி போன்று நேர்மையும் எளிமையும் பொறாமையற்ற மனதும் கொண்ட ஒருவனைத் தேடியே இந்தப் பரிசுப்போட்டி அறிவித்ததாகச் சொல்லி அவனையே பேக்டரியின் வாரிசாக அறிவிக்கிறார்,

சாக்லெட் பேக்டரி என்பது வாழ்வின் குறியீடு, பேராசை, பொறாமை, அடுத்தவரைக் கெடுப்பது போன்ற எண்ணங்கள் இன்றி அமைதியாக. சுய உழைப்பை நம்பும் ஒருவன் வெற்றி பெறுவான் என்பதை அழகான கதை மூலம் ரொவால்ட் டால் விவரிக்கிறார்

1971ம் ஆண்டு இந்த நாவல் படமாக வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது, ஆனால் படத்தை ரொவால்ட் டாலுக்குப் பிடிக்கவில்லை, அது வில்லிவோங்காவை அதிகம் முக்கியத்துவப்படுத்தியிருக்கிறது என்ற குறை அவருக்கு,

நார்வேஜியரான ரொவால்ட் டால் இரண்டாவது உலகப்போரின் போது ராணுவத்தில் பணியாற்றியவர், ஆறடிக்கும் மேலான உயரமானவர் என்பதால் அவர் தனி ஆளாகவே எப்போதும் அடையாளப்படுத்தபட்டார்

ராணுவ வாழ்வை பற்றி எழுத்த் துவங்கிய ரொவால்ட் டால் அதிலிருந்து சிறுவர்கதைகளுக்கு உருமாறினார், இவரது Matilda.  Fantastic Mr. fox. The witches. George`s Marvellous Medicine போன்றவை பிரபலமான புத்தகங்கள், இவை திரைப்படமாகவும் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன

டாலின் நகைச்சுவை மற்ற எழுத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, அபத்தமான நிகழ்வுகளை கூட அவர் பரிகாசத்தின் வழியே கடந்து போய்விடுகிறார், விமர்சனமும் பகடியும் கலந்த நகைச்சுவையே அவரது பலம். உலகெங்கும் உள்ள சிறுவர்களை சந்தோஷப்படுத்திய ரொவால்ட் டாலின் சொந்த வாழ்க்கைத் துயரங்கள் நிரம்பியது, அவரது மகள் ஒலிவியா ஏழு வயதில் இறந்து போனாள், பையன் விபத்தில் துர்மரணம் அடைந்தான், மனைவியோ ரத்தக்கசிவு நோயால் அவதிப்பட்டார், டாலுக்கும் எட்டுக்கும் மேற்பட்ட அறுவை சிகிட்சைகள் நடைபெற்றிருக்கின்றன, இத்தனை நெருக்கடிகளுக்கும் கூட அவர் குழந்தைகளை சந்தோஷப்படுத்த தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டேயிருந்தார்

மடில்டா நாவலை நடிகரும் இயக்குனருமான டேனி டிவிட்டோ படமாக எடுத்திருக்கிறார், அது நகைச்சுவையும் உணர்ச்சிப்பூர்வமும் இணைந்த ஒரு திரைப்படம், அது போலவே பென்டாஸ்டிக் மிஸ்டர் பாக்ஸ் என்ற புனைகதையில் கோழிகளைத் திருடும் ஒரு நரியை மூன்று பண்ணை விவசாயிகள் எப்படி ஒழிக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதே கதை,

திருடி துரத்தப்பட்ட நரியை அதன் வளையோடு சேர்த்து வைத்து தீவைக்கிறார்கள், அதில் பெண் நரியின் வால் மட்டுமே கருகிப்போய்விடுகிறது, நரிக்குடும்பம் தப்பிவிடுகிறது, விவசாயிகளிடம் இருந்து தப்பிக்க நரி  பலவழிகளில் முயற்சிக்கிறது, ஆனால் அவர்களோ துப்பாக்கியோடு சுடத் தயாராகக் காத்துகிடக்கிறார்கள்,

முடிவில் பூமிக்குள் ஒரு தோண்டி உள்ளேயே ஒரு மாயநகரில் வாழ ஆரம்பிக்கிறது, ஒளிந்து வாழும் நரிக்குடும்பத்தின் நெருக்கடிகளும் சந்தோஷமுமே படமாக விரிகிறது, இப்படியாக ஒரு நரியின் சாகசப்பயணத்தை முழுமையாக விவரிக்கிறது இந்தநாவல்

ரொவால்ட் டாலின் புத்தகங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்று, தற்போது டாலின் புத்தகங்கள் சித்திரக்கதைகளாகவும் கிடைக்கின்றன, ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பும் சிறுவர்களுக்கு ரொவால்ட் டாலை அறிமுகப்படுத்தினால் உயர்வான கற்பனையும் மனிதாபிமான எண்ணங்களும் நிச்சயமாக அறிமுகமாகும்.

***

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: