பறவைக்கோணம் 2

சொன்னது நீ தானா.

ஊடகக்கலை பயிலும் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்காகச் சென்றிருந்தேன், விவாதம் ஹிட்ச்காக்  திரைப்படங்களைப் பற்றித் திரும்பியது, ஏன் தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் வகை திரைப்படங்கள் அதிகம் வருவதில்லை என்று விவாதிக்கத் துவங்கிய போது, ஒரு மாணவர் தமிழில் உங்களுக்குப் பிடித்தமான திரில்லர் இயக்குனர் யார் என்று கேட்டார், எஸ் பாலச்சந்தர் என்று சொன்னேன்,

மாணவர்கள் உடனே கே.பாலச்சந்தரை நினைவில் கொண்டு அவர் என்ன திரில்லர் படங்கள் எடுத்திருக்கிறார் என்று மறுகேள்வி கேட்டார்கள்,

அந்த நாள், பொம்மை, நடு இரவில், கைதி போன்ற படங்களை இயக்கி நடித்த வீணை எஸ் பாலசந்தர் என்று சொன்னேன், ஒருவர் கூட அவரது படத்தை அறிந்திருக்கவில்லை, ஊடகக்கலையைப் பயிலும் மாணவர்கள் கூட அவரை அறிந்திருக்கவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது,

மௌனப்படங்களை பற்றி உங்களுக்கு தனிப்பாடம் இருக்கிறதா என்று கேட்டேன், இருக்கிறது சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், கிரிபித், என்று பலரையும் படிக்கிறோம், அந்தப் படங்களையும் பார்த்திருக்கிறோம் என்றார்கள், நூறு ஆண்டுகளுக்கு முந்திய அமெரிக்க சினிமாவின் சலனப்படங்களை அறிந்துள்ள நம் மாணவர்கள் ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்திய தமிழ்சினிமாவை அறிந்திருக்கவில்லை என்ற முரண் உறுத்திக் கொண்டேயிருந்தது,

நமது முன்னோடிகளை நாம் புறக்கணிக்கிறோம், அவர்களை உதறி தள்ளிவிட்டு எங்கிருந்தோ நமது அடையாளங்களை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம் என்பது தான் இன்றுள்ள நமது பிரச்சனை,

தமிழ்சினிமாவின் தனித்துவமான இயக்குனர்கள் குறித்து இன்றுவரை விரிவான ஆய்வுகளோ. முறையான கட்டுரைகளோ வெளியாகவேயில்லை, அந்தப் பட்டியலில் தனித்து ஒரு நூல் எழுதுமளவு முக்கியமானவர் இயக்குனர் எஸ் பாலசந்தர்,

அவர் ஒரு நடிகர். இயக்குனர். திரைக்கதை ஆசிரியர். எடிட்டர். இசையமைப்பாளர். தபேலா மற்றும் சிதார், ஷெனாய், வீணை வாசிக்க தெரிந்த கலைஞர், புகைப்படக்கலைஞர், பாடலாசிரியர், செஸ் விளையாட்டு வீரர், பாடகர், இப்படி பன்முகத்திறமைகள் கொண்ட அசலான திரைக்கலைஞர்,

சினிமா உலகை உதறிவிட்டு வீணை வாசிப்பில் உலகப்புகழ் பெற்று வீணை எஸ் பாலசந்தர் என்று அறியப்பட்டார், குழந்தை நட்சத்திரமாகத் துவங்கிய அவரது திரைப்பிரவேசம் தமிழ்சினிமாவில் பல்வேறு மாற்றங்களை. சாதனைகளை உருவாக்கியது, அவ்வகையில் அவர் ஒரு முன்னோடி தமிழ் இயக்குனர்,

இன்று அவரது திரைப்படங்களைப் பார்க்கும் போதும் அவரது கேமிரா கோணங்களும். கதை சொல்லும் முறையும், பாடல்களும், பின்ண்ணி இசையை கையாளும் விதமும், உதட்டில் சிகரெட் எப்போதும்  எரிந்து கொண்டிருக்க அழகான ஆங்கிலம் பேசும் ஸ்டைலான நடிப்பும் வியப்பளிக்கின்றன,

சினிமா என்றாலே பாடல்கள் தான் என்று மக்கள் கொண்டாடி வந்த காலத்தில் பாடல்களே இல்லாத அந்த நாள் படத்தை இயக்கியது அவரது சாதனை,

இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் வி.சாந்தாராம், 1936-ல் “சீதா கல்யாணம் என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதில் எஸ்.பாலசந்தரின் குடும்பமே நடித்திருக்கிறார்கள். தசரதர் நடித்தவர் பாலசந்தரின் அப்பா சுந்தரம் அய்யர் அவரது அண்ணன் எஸ்.ராஜம் ராமர் வேஷம். அக்கா ஜெயலட்சுமி சீதையாக நடித்திருக்கிறார், அப்படத்தின். ஒரு காட்சியில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக பாலசந்தர் நடித்துள்ளார்

1948 மார்ச் மாதத்தில் வெளிவந்த “இது நிஜமா” என்ற படத்தில், எஸ்.பாலசந்தர் கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்தார்.   தமிழில் இரட்டை வேடம் இடம் பெற்ற முதல் சமூகப்படம் இதுவே

அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பு, இசை, இயக்கம் என்று வளர்ந்து சிறப்பித்த காரணத்தால் அவருக்கான தனியிடம் கிடைத்தது, தனது சொந்தப்பட நிறுவனமான எஸ்.பி.கிரியேசன்ஸ்சைத் தொடங்கி, “அவனா இவன்”, “பொம்மை”, “நடு இரவில்” ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் “பொம்மை”, “நடுஇரவில்” ஆகிய திகில் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

அந்த நாள். பொம்மை நடுஇரவில் ஆகிய மூன்று படங்களையும் தமிழின் முன்னோடி முயற்சிகள் என்றே சொல்வேன், இதில் அந்த நாள் அகிரா குரசோவாவின் ரோஷமான் படத்தின் பாதிப்பில் உருவாக்கபட்டிருக்கிறது,

ரோஷமோன் போல ஒரு நிகழ்வின் மாறுபட்ட சாத்தியங்களைச் சொல்ல முயன்ற இயக்குனர் அதற்குப் பின்புலமாக யுத்த காலத்தை எடுத்துக் கொண்டது பாராட்டிற்கு உரியது,

இந்தியாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், அந்நிய நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள் என்ற கதையை ரோஷமானின் கதைக்கு இணையாகத் தேர்வு செய்து படமாக்கியிருக்கிறார்கள், கதை முன்பின்னாக சென்று அவிழும் முறையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது

குறிப்பாக இந்த படத்தில் வரும் சிவாஜியின் எதிர்மறை கதாபாத்திரமான ரேடியோ என்ஜினியர் யாரும் நடிக்காத கதாபாத்திரம், அதன் இருண்ட மனநிலையும் கோபமும் மனக்கொதிப்பும் நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது, அது போன்ற கதாபாத்திரம் எதையும் பின்னாளில் சிவாஜி நடிக்கவேயில்லை,

படத்தில் பாடல்களே இல்லை, ரோஷமானின் படத்தொகுப்பை போலவே இதிலும் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டருக்கிறது, இப்படத்தை இயக்கும் போது எஸ் பாலச்சந்தருக்கு வயது 27, சம்பிரதாயமாக நம்பிக் கொண்டிருந்த திரைப்படத்தின் விதிகளை தூற எறிந்துவிட்டு மாறுபட்ட அழகியலோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் பாலச்சந்தர்

இந்த படத்தை விடவும் பொம்மை மற்றும் நடுஇரவில் படத்தில் அவரது இயக்கமும் பரிசோதனை முயற்சிகளும் கூடுதல் வியப்பளிக்கின்றன,

ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான்  பொம்மை படம், 1964-ல் வெளி வந்த இப்படத்தில் ஒரு பொம்மைக்குள் வெடிகுண்டை வைத்து ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள், அந்த பொம்மை கைமாறிப்போய்விடுகிறது, அதைத் தேடியலைகிறார்கள் என்ற எளிய கதையை தனது திரைக்கதையின் வழியே மிக சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் பாலச்சந்தர்,

படத்தின் துவக்கத்தில் ஒரு மவுத் ஆர்கன் வாசிக்கும் காட்சி அறிமுகமாகிறது, அந்த இசை சிலிர்ப்பூட்டக்கூடியது,  படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக பாலச்சந்தரே நடித்திருக்கிறார், அவரது நடிப்பு அலாதியான ஒன்று, முகபாவங்களை வெளிப்படுத்தும் முறையும். நடையில் அவர் காட்டும் நளினமும். பேசும் போது ஸ்டைலான ஆங்கிலம் கலந்து பேசும் முறையும், உடையமைப்பும் யார் சாயலும் அற்ற தனிவகை நடிப்பாகவே இருக்கிறது, பொம்மை படத்தின் ஆரம்பக் காட்சியில் அவர் நடந்து வந்து  தனது சிங்கப்பூர் பயணத்தை பற்றி பேசும்போதே படம் வித்யாசமான ஒன்று என்று பார்வையாளர்களுக்குப் புரிந்துவிடுகிறது,

படத்தின் பின்ணணி இசை சிறப்பானது, எந்த இடத்தில் இசையே இல்லாமல் நிசப்தமாக விட வேண்டும் என்பதை அவர் சரியாக உணர்ந்திருக்கிறார், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய படஙகளில் காணப்படுவது போல  செயற்கையான பின்னணி இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசைக்கோர்பு அவருடையது,

பொம்மை படத்தில் எனக்கு மிகவும் விருப்பமான நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஜேசுதாசின் பாடல் உள்ளது, ஜேசுதாசின் முதல்பாடலது சாலையோரப் பிச்சைக்காரன் பாடும் பாடலது, , பாடலின் வரிகள் கதையோடு இணைந்து செல்லும் அதே வேளையில் ஆழ்ந்த துயரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது, அப்பாடலை ஜேசுதாஸ் பாடும் முறை கேட்பவரை மெய்மறக்க செய்யக்கூடியது

பொம்மை படத்தில் ஐம்பது வருசத்தின் முந்தைய சென்னை நகரின் காட்சிகளை காண்பது வேடிக்கையாக இருக்கிறது, கூட்டமேயில்லாத விமானநிலையத்தில் பயணிகளை மலர்கொத்து தந்து வழியனுப்ப வந்தவர்கள், அன்றைய டாக்சிகள். பரபரப்பில்லாத சாலைகள்,  அக்கால பேஷன் உடைகள், உணவகங்கள். சாலையோர மனிதர்கள், சென்னையின் கடந்தகாலத்தை காண்பது உவப்பாகவே இருக்கிறது

வழக்கமான டுயட்பாடல்காட்சிகளை ஒருபோதும் பாலச்சந்தர் பயன்படுத்தவேயில்லை, பி.சுசிலா பாடி விஜயலட்சுமி நடனமாடியுள்ள  எங்கோ பிறந்தவராம் பாடலும், தத்தி தத்தி நடந்து செல்லும் தங்கபாப்பா பாடலையும் எஸ்பாலச்சந்தர்  படமாக்கிய விதம்  மாறுபட்டதாகவே இருக்கிறது, அப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஒபன் சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்த்து, பார்வையாளர்களுக்கு பொம்மையில் வெடிகுண்டு இருப்பது தெரிந்துவிட்டது, ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது, எந்த நிமிசம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற சரடை விறுவிறுப்பாக கையாளும் விதத்தில் திரைக்கதையமைப்பின் உச்சநிலையை உருவாக்கிகாட்டுகிறார்

பொம்மை படத்தின் இறுதி காட்சியில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு பாலசந்தர் தனது படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்துகிறார், இன்று வரை யாரும் மேற்கொள்ளாத புதிய முயற்சியது, அந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகிய ஜேசுதாஸ் வருகிறார், மெலிந்து போய் ஒரு மாணவனைப் போல நிற்கும்  ஜேசுதாஸின் உருவமும் அருகில் நிற்கும் சாந்தமான பி,சுசிலாவும், துடிப்பான எல் ஆர் ஈஸவரியும் காணக்கிடைக்காத காட்சியது.

பொம்மையை விடவும் நடுஇரவில் சஸ்பென்ஸ் படத்தின் அத்தனை அம்சங்களையும் கச்சிதமாக உள்ளடக்கியது, 1966 ஆண்டு வெளியான இப் படத்தில் இரண்டே பாடல்கள் இடம்பெற்றுள்ளன, பொதுவாக திகில் திரைப்படங்களில் கவர்ச்சிநடனம் அசட்டு நகைச்சுவை போன்ற திணிப்புகள் அதிகமிருக்கும், அது போன்ற எதுவும் இப்படத்தில் கிடையாது, பிளாக் ஹயூமர் எனப்படும்  அபத்தம் கலந்த நகைச்சுவை சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது

உறவுகளை வெறுத்து தனித்தீவு ஒன்றில் வசித்துக் கொண்டிருக்கும், தயானந்தம் (மேஜர் சுந்தர்ராஜன்), மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பொன்னியுடன் (பண்டரிபாய்) வாழ்ந்து வருகிறார், தயானந்தத்தின் மருத்துவரும் நண்பருமான சரவணன் (எஸ்.பாலசந்தர்) இன்னும் சில வாரங்களில் தயானந்த்ம் ரத்தப் புற்றுநோயால்  இறந்துவிடுவார் எனச்சொல்லுவதுடன் படம் துவங்குகிறது.

கோடிகோடியாக பணம் நகை, பகட்டான மாளிகை எனச் சொத்துகள் கொண்ட அவருக்கு வாரிசு இல்லை, அத்துடன், பொன்னியை எதிர்காலத்தில் கவனிக்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவும் தயானந்தம் வெறுக்கும் உறவுகளை, டாக்டர் தீவிற்கு  வரவழைக்கின்றார்.

வந்தவர்களில் ஒவ்வொருவராக எதிர்பாராதவிதமாக கொலைசெய்யப்படுகிறார்கள், யார் கொலை செய்வது என்ற சஸ்பென்ஸை கடைசிவரை யூகிக்கமுடியாமல் செய்வதே திரைக்கதையின் தனிப்பலம்,

ஹிட்ச்காக் பாணியில் கொலைகள் நடைபெறுகின்றன, திகிலிட்டும் காட்சிகளை படாக்கியுள்ள விதம் ஆச்சரியமூட்டுகிறது, குறிப்பாக நடுஇரவில் யாருமே இல்லாமல் பியானாவில் தானாகவே இசை வாசிக்கப்படுதல், காற்றடித்து திரைச்சீலைகள் நகர்ந்து நிழலுருவங்கள் தெரிவது, சாப்பாட்டு மேஜையின் அடியிலேயே கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டு கிடைப்பது, நகைகள் இருக்கும் பீரோவில் எஸ்.என் லட்சுமியை பிணமாக கிடப்பது என்று காட்சிக்கோணங்களின் வழியே பார்வையாளர்களை நன்றாகவே பயமுறுத்துகிறார்

பின்ணணி இசையின்றி கேமிராவின் நகர்வு நிசப்தமாக செல்லும் போது பார்வையாளன் பதைபதைப்பு கொள்ள துவங்குகிறான், தொங்கு விளக்கின் கோணத்தில் உச்சியில் இருந்து சகாதேவன் பிணத்தை சுற்றி யாவரும் அனைவரும் அழுது கொண்டிருக்கும் காட்சி  படத்தின் ஆதாரப்புள்ளி காட்சிக்கோணங்களே என்பதை சுட்டிக்காட்டுகின்றன, படம் வெளியாகி 45 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று பார்க்கும் போதும் ஒரு காட்சி கூட சலிக்கவேயில்லை என்பதே இதன் தனிச்சிறப்பு,

••

ரோஷமானின் பாதிப்பு தமிழ்சினிமாவில் அந்த நாள் திரைப்படம் வரை வந்திருக்கிறது, ஷோலே உள்ளிட்ட பல முக்கிய இந்திய திரைப்படங்களில் அகிரா குரசோவாவின் பாதிப்பும் நகலெடுத்தலும் வெளிப்படையாகவே காணமுடிகிறது

அகிரா குரசோவாவின் படங்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது, அது அவரைப்பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த டொனால்டு ரிச்சியின் (Donald Richie) பங்களிப்பு, ஜப்பானிய சினிமாவை உலக அரங்கில் கவனம் பெறச் செய்ததற்கு டொனால்டு ரிச்சியே முக்கிய காரணம்,

அகிரா குரசோவாவின் படங்களை அறிந்து கொள்வதற்கு உலகம் முழுவதும் சிபாரிசு செய்யப்படும் ஒரே புத்தகம் டொனால்டு ரிச்சி எழுதிய The Films of Akira Kurosawa.

குரசோவாவின் சினிமாவை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை கதை திரைக்கதை ஒளிப்பதிவு படத்தொகுப்பு, நடிப்பு, இசை, படமாக்கபட்ட போது எதிர்கொண்ட சவால், படத்தின் பின்புலத்தில் உள்ள வரலாறு மற்றும் தத்துவம். படத்தின் ஊடாக வெளிப்படும் சங்கேதங்கள் குறியீடுகள், படம் குறித்து இயக்குனரின் எண்ணம் மற்றும் கனவுகள் என யாவையும் ஒருங்கிணைத்து விரிவாக எழுதப்பட்ட புத்தகமிது, உலக சினிமாவை விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது, இதை வாசிப்பதன் வழியே சினிமா ரசனையை மேம்படுத்திக் கொள்வதுடன் சினிமா எவ்வளவு வலிமையான ஒரு கலைவடிவம் என்பதையும் அடையாளம் காணமுடியும்,

இந்த ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக பல ஆண்டுகாலம் டொனால்டு ரிச்சி குரசோவாவோடு கூடவே வாழ்ந்திருக்கிறார், தொடர்ந்த உரையாடல்கள, நேரடி கள அனுபவம், விமர்சகர்களின் பங்களிப்பு என்று மூன்று தளங்களில் இருந்தும் இந்த புத்தகம் உருவாகியிருக்கிறது, இன்று உலகின் பல்வேறு திரைப்படக்கல்லூரிகளில் இந்நூல் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது

1947ல் ஜப்பானிற்கு வேலைதேடி வந்த அமெரிக்கரான டொனால்டு ரிச்சி ஜப்பானிய கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதை முழுமையாக கற்றுக் கொள்ளத்துவங்கினார், குறிப்பாக ஜப்பானிய சினிமா மீது அவருக்கு உருவான ஈர்ப்பின் காரணமான பத்திரிக்கைகளுக்கு திரைவிமர்சனம் எழுதுபவராக செயல்படத்துவங்கினார். புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனரான ஒசுவின் நட்பால் திரையுலகோடு நெருக்கமான டொனால்டு ரிச்சி அகிரா குரசோவா. மிஷோகுஷி என்று பலரோடும்  நெருக்கமாக பழகினார், குரசோவாவின் சில படங்களுக்கு ஆங்கில சப்டைட்டில்களை இவரே உருவாக்கியிருக்கிறார், தனது வாழ்க்கையை ஜப்பானியசினிமாவை நீக்கிவிட்டு பார்த்தால் மிஞ்சுவது பூஜ்யமே என்கிறார்

சினிமா ரசனையாளராக துவங்கி இன்று ஜப்பானிய சினிமாவின் தனிப்பெரும் விற்பன்னராக உயர்ந்திருக்கும் டொனால்டு ரிச்சியினைப் போன்று ஒருவர் இல்லாத வெறுமையே தரமான தமிழ்சினிமாக்களைக் கூட உலக சினிமா அரங்கம் கண்டுகொள்ளாமல் போவதற்கு முக்கியகாரணமாக உள்ளது

••

ஹிந்திப் படமொன்றில் ஒரு பாடல்காட்சியை படமாக்க ஆறுகோடி செலவிடப்பட்டதாக ஒரு நாளிதழ் செய்தியைப் படித்தேன், தமிழ் சினிமாவிலும் ஒரு பாடலை படமாக்க ஐம்பது, அறுபது லட்சம் சாதாரணமாகச் செலவிடப்படுகிறது, அரங்க அமைப்புகள், கவர்ச்சிகரமான உடைகள், சேர்ந்தாடும் இளம்பெண்கள் என்று கவர்ச்சியைப் பிரதானப்படுத்தி உருவாக்கப்படும் அந்தப் பாடல்கள் படம் வெளியான ஒரு மாத காலத்திற்குள் பார்வையாளன் மனதில் இருந்து முற்றிலும் மறைந்து போய்விடுகிறது

ஆனால் எந்த பரபரப்பும். கவர்ச்சியும். மின்னல்வெட்டுகளும் இல்லாமல் உருவாக்கபட்ட சில பாடல்கள் சினிமா ரசிகனின் மனதில் என்றும் இருந்து கொண்டேயிருக்கிறது, அப் பாடலை ரேடியோவில் கேட்கும்போது கூட பார்வையாளன் மனதில் படத்தின் காட்சிகள் தானே நிழலாடத்துவங்குகின்றன, அப்படியான பாடல்களில் ஒன்று தான் சொன்னது நீதானா,

ஸ்ரீதரின் இயக்கதில் வெளியான நெஞ்சில் ஒர் ஆலயம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப் பாடலுக்கு இசையமைத்தவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடலை எழுதியவர் கண்ணதாசன், பாடியிருப்பவர் பி, சுசிலா, இந்தக் கூட்டணியில் உருவான பல பாடல்கள் வெற்றிகரமானவை, ,

பாடல்களை படமாக்குவதில் ஸ்ரீதரின் பாணி தனித்துவமானது, அவர் எடுத்த ஒரு பாடல்காட்சி கூட சோடைபோனதேயில்லை, மேற்கத்திய இசை மற்றும் நடனங்களில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீதர் அதை தமிழ் சினிமாவிற்கு ஏற்ப உருமாற்றித் தந்திருக்கிறார், துரித இசையும் நடனமும் அவரது விருப்பங்கள், விஸ்வநாதன் வேலை வேண்டும் என்ற காதலிக்க நேரமில்லை படத்தின் பாடலை பாருங்கள், அதில் மேற்கத்திய நடனமும் இசையும் அழகாக ஒன்று கலந்திருக்கின்றன,

துரித நடனத்தை விருப்பமாக கொண்ட ஸ்ரீதர் தான் சொன்னது நீதானா போன்ற அமைதியான பாடலை, எந்த நடன அசைவுமின்றி,  நாலுக்கு எட்டு அளவுள்ள மருத்துவமனையின் அறைக்குள்ளாகவே எடுத்திருக்கிறார், ஒரு பாடல்காட்சி முழுவதும் பாடலின் கதாநாயகனும் நாயகியும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இதுவே முதன்முறை, வின்சென்டின் கேமிரா தான் சுழல்கிறது, நெருங்கிச் செல்கிறது, விலகி நின்று துக்கத்தையும் விம்மலையும் அடையாளம் காட்டுகிறது,

இப்பாடலின் உண்மையான நாயகன் கேமிராவே, அது தான் பாடலின் ஆதார உணர்ச்சியை வெளிப்படுத்தும் கருவியாக உள்ளது, பாடலின் வரிகளுக்கு ஏற்ப கேமிராவின் கோணங்கள் மாறுபடுகின்றன, கேமிரா நகர்வதற்குக் கூட போதுமான இடமில்லாத அவ்வளவு சிறிய அறையில் எத்தனை ஷாட்டுகள் எடுத்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது, வின்சென்ட் மாஸ்டரது சாதனையது,

ஒருவேளை தான் இறந்து போய்விட்டால் மறுமணம் செய்து கொள் என்று சொன்ன கணவனைப் பார்த்து பாடும் இந்த பாடலின் வரிகள் கதாபாத்திரத்தின் மனப்போராட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன, பாடலைப் பாடும் சுசிலா உள்ளார்ந்த வேதனையை தனது குரலில் அழகாக வெளிப்படுத்துகிறார், தேவிகாவும் முத்துராமனும் நடிகர்கள் என்பது மறந்து போய் யதார்த்தமான இருவரைபோலிருக்கிறார்கள், ஒரே குறை தேவிகாவின் ஒப்பனை, அது கூட படத்தின் முந்திய காட்சியில் நியாயப்படுத்தபடுகிறது,

கேமிராவின் நகர்வுகளால் மட்டுமே பாடலின் ஜீவனைக் கொண்டுவந்துவிட முடியும் என்பதற்கு இப்பாடலே ஒரு முன்னுதாரணம், எத்தனை மாறுபட்ட கோணங்கள், கேமிரா உயர்ந்து மேல்நின்று பார்க்கிறது, கட்டிலுக்கு அடியில் பயணிக்கிறது, குறுக்கு கம்பிகளின் வழியே பாடும் தேவிகாவை நோக்குகிறது, திறந்து கிடந்த ஜன்னலுக்கு வெளியே நின்று பார்க்கிறது, கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தைக் காட்டி கடந்து போகிறது, துயரமிக்க தேவிகாவின் முகத்திற்கு மிக அண்மைக்கு போகிறது, கட்டிலின் மீது அமர்ந்துள்ள முத்துராமனின் நோயுற்ற நிலையைச் சொல்வது போல மெதுவாக அவரை நோக்கித் தளர்வாக நகர்கிறது, படத்தொகுப்பும் கேமிராகோணங்களுமே பாடலைக் கச்சிதமாக்கியிருக்கின்றன,

ஏ,வின்சென்ட் தமிழ்சினிமாவின் சாதனை ஒளிப்பதிவாளர், அவரும் ஸ்ரீதரும் இணைந்து பணியாற்றி படங்கள் சிறப்பானவை,  வின்சென்ட் துலாபாரம் என்ற திரைப்படத்தை இயக்கினார், அப் படம் தேசிய விருது பெற்றது, மலையாள சினிமாவில் வின்சென்ட் புகழ்பெற்றஇயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருந்தவர்,

இப்பாடல் அவரது ஒளிப்பதிவின் ஒப்பில்லாத சாதனை, படப்பிடிப்பு அரங்கில் தான் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது, ஒளி பாடலின் ஆதார உணர்ச்சியை எடுத்துக்காட்டுவது போல சற்று கலக்கமாகவும் சில நேரங்களில் தெளிவாகவும் மாறிமாறி பிரதிபலிக்கிறது, எந்தத் தொழில்நுட்ப வசதிகளும் இன்றி மிக குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பாடலது, பாடலின் வரிகளும் படமாக்கபட்ட முறையும் அதைத் தமிழ் சினிமாவின் என்றும் மறக்கமுடியாத பாடலாக்கியிருக்கிறது

சினிமா  என்றாலே பக்கம் பக்கமான முழுநீள வசனங்கள் என்று இருந்த நிலையை மாற்றி அதை காட்சிவடிவமாக்கியவர் ஸ்ரீதர், இயக்குனருக்கான படம் ஒடத்துவங்கியது அவரால் தான்,

பாடல் காட்சி என்பது கதைக்குள் பொருந்தி வரவேண்டும், பாடல் வரிகள் கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்த வேண்டும், அந்த மனநிலையை அடையாளம் காட்டும்படியான இசையமைப்பும் பாடும் குரலும் வேண்டும், அது தான்  பாடலை உருவாக்குவதில் முக்கியம், பத்து கோடி செலவழித்து ஒரு பாடலை எடுத்தாலும் இது போன்ற எளிமையும் உணர்ச்சிகரமும் இல்லாத காரணத்தால் அது தூர எறியப்பட்டுவிடும் என்பதே உண்மை.

இன்றைய சினிமா இயக்குனர்கள் பலரும் மறந்து போன இந்த நிஜத்தை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதாலே இப்பாடல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

••

(உயிர்மையில் வெளியாகி வரும் பத்தி)

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: