கலைஞனின் நாட்கள்

எனது கர்ணமோட்சம் குறும்படம் குறித்து பத்திரிக்கையாளர் கிராபியன் பிளாக் எழுதிய கட்டுரை.

***

கலைஞனின் நாட்கள் – கிராபியன் பிளாக்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை, வசனத்தில் உருவான “கர்ண மோட்சம்’ தமிழ் குறும்படச் சூழலில் மிக முக்கிய பதிவு. அதற்கு இக்குறும்படம் பெற்றிருக்கும் எண்ணற்ற விருதுகளே சான்று! லகமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பொருளாதரமற்ற கலைஞனின் நாட்கள், போரின் நாட்களை விடவும் மோசமானவை. அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும்பாடாய் போன இச்சமூகத்தில் கலைஞனின் இருப்பு அரிய பொக்கிஷம்தான்.

ஒவ்வொரு கலைஞனின் கனவும் தான் பிறந்த தேசம் தன் படைப்பை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாட வேண்டுமென்பது இல்லை. தன்னை அங்கீகரிக்க வேண்டுமென்பதுதான். ஆனால், மாற்றாக சமூகம் அவன் உயிரோடிருக்கும்போது அவனை பட்டினி போட்டு, அகண்ட தெருக்களின் ப்ளாட்பாரங்களில் தங்கவைத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவனை நிர்மூலபடுத்தி சமூகத்தின் விளிம்பு நிலையில் தள்ளி, அவன் வாழ்வை சூறையாடி விடுகிறது. மரணத்திற்குப் பிறகான நாட்களில்தான் அவனது படைப்பை சமூகம் கண்டு கொள்கிறது அல்லது ஒவ்வொரு படைப்பும், படைப்பாளியின் இறப்பிற்குப் பிறகே அடையாளப்படுத்தப்படுகிறது. படைப்பாளி இல்லாத சூழலில் படைப்பை போற்றி, புகழ்வதால் கிடைக்கும் சந்தோஷங்கள் அற்பமானவை. நிறந்தரமற்றவை.

நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் தன்னுடைய கூத்துக் கலையை நிகழ்த்திக் காட்டி அதன் மூலம் பணம் பெறுவதற்காக, கூத்துக் கலைஞர் ஒருவர் கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்திற்கு தன் மகனோடு வருகிறார். உடன் வரும் மகன், தெருவில் கிடக்கும் கோக் டப்பாவை கையில் எடுத்து ஆச்சர்யத்துடன் பார்த்து, அதை தன் வாயில் வைத்து குடிக்கப் பார்க்கிறான். அதைப் பார்க்கும் அந்த கூத்துக் கலைஞர், பையனை அதை கீழேப் போடச் சொல்லிவிட்டு உடன் அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்.

பள்ளி யாருமற்று, அமைதியாக இருக்கிறது. அவர் பள்ளியின் விழா அரங்கித்திற்குள் சென்று அது இருண்டு கிடக்கிறது. பள்ளியில் யாருமில்லாததைக் கண்டு குழப்பமடையும் அவர், அங்கே வேலை செய்யும் வாட்ச்மேனிடம் விசாரிக்கிறார். எதிர்பாரதவிதமாக பள்ளியின் ஆசிரியர்களில் ஒருவர் இறந்து போய்விட்டதால், பள்ளிக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்தான் யாருமில்லையென்றும் அவர் கூறுகிறார். கையில் சொற்ப காசோடு அவர் கிளம்பி வந்து விட்டதால், திரும்பி ஊர்ப்போய்ச் சேர காசு வேண்டும் அதற்கு என்ன செய்வது? என்று அந்த கூத்துக் கலைஞர் யோசிக்க… வாட்ச்மேன், “”பிரின்சிபல் மேடத்தைப் போய்ப் பாருங்க! அவங்க உங்களுக்கு ஏதாவது உதவலாம்” என்று கூறி, அவருடைய தொலைபேசி எண்ணை கொடுக்கிறான்.

பள்ளியின் தலைமையாசிரியைக்கு, ஒரு ரூபாய் தொலைபேசியில் அவர் அழைக்க, எதிர்முனையில், “”நாங்க முட்டுக்காட்டுக்கு பிக்னிக் வந்திருக்கோம். வீட்டிற்கு வர, இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும். அதுவரை உங்களால் காத்திருக்க முடியுமா? வீட்டிற்கு வந்ததும், நான் உதவுகிறேன்” என்கிறார் தலைமையாசிரியை! நம்பிக்கை தளர்ந்தவராய் அந்த கூத்துக் கலைஞர் போட்ட வேடத்துடன் செய்வதறியாது திகைக்கிறார். அவரது மகனோ பசிக்கிறது, எதையாவது வாங்கிக் கொடு என்று நச்சரிக்கிறான்.

அவர் அருகிலிருக்கும் சாலையோர டீக்கடையில் அவனுக்கு டீயும், வடையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர் ஒரு டம்பளர் தண்ணீர் மட்டும் குடிக்கிறார். மறுபடியும் ஒரு டம்பளர் தண்ணீர் கடைக்காரனிடம் கேட்கும்போது அவன் அவரை, “”ஒரு வடை, டீயை வாங்கிட்டு ஒன்பது முறை தண்ணீர் கேட்கிறீயே…வேண்டும்னா காசு கொடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கிக் குடி” என்று திட்டுகிறான். உடன் இருக்கும் மகனோ, தனக்கு கிரிக்கெட் பேட் உட்பட இன்னும் பிற விளையாட்டு பொருட்கள் வாங்கித் தர முடியுமா? முடியாதா? என்று கேள்வி கேட்கிறான். அவர் கோபத்தில் அவனைத் திட்ட, அவனும் அவரைத் திட்டுகிறான். பிறகு, கோபித்துக்கொண்டு செல்கிறான். மனம் நொந்தவராக, அந்த கூத்துக் கலைஞர் அருகிலிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமருகிறார்.

அப்போது அங்கே வரும் டீக்கடைச் சிறுமி அவருடைய வேடத்தைப் பார்த்து சிரிக்கிறாள். அவரும் அந்த சிறுமியைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த கூத்துக் கலைஞர் அந்த சிறுமியின் பெயரைக் கேட்க, அவள் தரையில் தன் பெயரை “ஜானகி’ என்று எழுதிக்காட்டுகிறாள். கூத்துக் கலைஞர் தன்னுடைய கூத்தை உனக்குச் சொல்லித்தரவா? என்று கூறி கூத்தின் அடிப்படை பாடல் ஒன்றை பாடி, ஆடியபடியே தன் பின்னாலேயே அவளையும் ஆடச் சொல்லுகிறார். அவள் உற்சாகத்துடன் ஆடத் துவங்கும்போது, அவளது முகத்தில் வெந்நீரை ஊற்றுகிறான் டீக்கடைக்காரன். அவளை அறைந்து, “”உனக்கு சோறு போடறதே தண்டத்துக்கு! இதில் கூத்து வேறு கத்துக்கப் போறியா?” என்று கூறி அவளை தரதரவென இழுத்துச் செல்லுகிறான். கூத்துக் கலைஞர் அதர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார். ஒரு தனியறையில் அவர் ஆடும் கூத்து காட்டப்படுகிறது. பிறகு, அவர் தன் மகனை அழைத்துக்கொண்டு தெருவில் இறங்கி, தனது கிராமம் நோக்கி நடக்கத் துவங்குகிறார். வழியில் தனது தலையில் இருக்கும் கூத்துப் பாகையை கழற்றி தெருவில் வீசிவிட்டு ஆசுவாசமாய் நடக்கத் துவங்குவதோடு படம் நிறைவடைகிறது.

இன்றைய சூழலில் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை எவ்வளவு நெருக்கடிகளுக்குள்ளும், அவலங்களுக்குள்ளும் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை யதார்த்தத்தின் தளத்தில் நின்று சொல்லும் படம்தான் “கர்ண மோட்சம்’. இதில் கூத்துக் கலைஞராக தோன்றி நடித்திருக்கிறார் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த ஜார்ஜ். மிகச் சரியான பாத்திரத் தேர்வு. அவரின் முக பாவங்களும், இயல்பான வசன உச்சரிப்பும் படத்தின் அழுத்தத்தை மேலும் செறிவு படுத்துகிறது.

தன் வீட்டிற்கு தண்ணீர் கேட்டு வந்தால், குளிர்ந்த மோர் கொடுத்து, உபசரித்த தமிழ்ச் சமூகம் இன்று தண்ணீரை வியாபார கண்ணோட்டத்தோடு பார்க்கும் அவல வாழ்க்கையையும் அதனோடு தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கெடுத்ததற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பொருளாதரமயத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது (டீக்கடையில் தண்ணீர் கேட்டு கூத்துக் கலைஞர் அவமானப்படும் காட்சி) “கர்ண மோட்சம்’ குறும்படம்.

உலகமயத்தால் ஏற்பட்டிருக்கும் பல்வேறு தாக்கங்களில் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் ஒன்று. கிராமங்களில் நிகழ்த்தப்படும் கூத்துக் கலைகள், நாடகங்கள் போன்றவை மேற்கத்திய நடனங்களுக்கும், ஆடியோ வீடியோக்களும் மாறியிருப்பதை, இதனால் அவர்கள் நகரம் நோக்கி இடம் பெயர்ந்து பிச்சைக்காரர்களாய் பிழைப்பு நடத்த நேர்ந்ததை மிகுந்த வலியுடன் சொல்லிச் செல்வதோடு, தலைமுறை இடைவெளியையும் படம் தனது உள்ளுறை) யாக வைத்திருக்கிறது. மனதில் கறை படியாத மழலைப்பருவத்தின் நடு இரவுகளில், உறக்கத்தை கலைத்து அம்மா கூத்துப்பார்க்க அழைத்துச் செல்லுவாள். பாதி இரவில் தூக்கம் கலைந்தும், கலையாததுமாக கண்ணைப் பறிக்கும் விளக்குகளின் முன்னணியில் அப்பா பெண் வேடமிட்டு நடித்த காட்சியும், கம்பீரமும் ஒருகணம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.

அந்த கம்பீரம் அவர் காலையில் பழைய சாதத்தையும், பச்சை மிளகாயையும் கடித்து உண்டு கொண்டிருக்கும்போது காணாமல் போயிருக்கிறது. இந்த முரண்பாட்டின் வலியை பலநாள் பார்த்து, பழகியதால்தான் என்னவோ? படம் மனதின் பெரும் பாதிப்பிலிருந்து விலக மறுக்கிறது. கும்பகோணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இயக்குனர் முரளி மனோகர், சென்னை – தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்குனர் பிரிவில் மூன்றாண்டுகள் பயின்றவர்.

கல்லூரியில் பயின்றபோது இவர் எடுத்த இறுதியாண்டு படமான “கர்ண மோட்சம்’ 2008-ம் ஆண்டிற்கான கலை மற்றும் பண்பாட்டை பறை சாற்றும் சிறந்த குறும்படம் என்ற பிரிவில், தேசிய விருதைப் பெற்றுள்ளது. மேலும், இப்படத்திற்கு மூன்று மாநில அரசு விருதுகளும், இரண்டு தேசிய அளவிலான விருதுகளும், கனடா சர்வதேச தமிழ் குறும்பட விழாவில் நான்கு விருதுகளும் என இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த குறும்படத்திற்கான விருதும் கிடைத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : கிராபியன் பிளாக்,

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: