எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு மாலைகள்

அய்யப்ப மாதவன்

புயல்தோன்றிய சென்னை நகரத்தில் எங்கு பார்த்தாலும் நீர். நீரைத் தவிர ஒன்றுமில்லையென்று நினைத்திருந்த வேளை, ரஷ்ய கலாச்சார மையத்தையும் சூழ்ந்திருந்த வெள்ளம். சுவர்கள் நாற்புறமும் தடுக்கப்பட்ட சதுர அரங்கில் காலியற்ற இருக்கைகள். நாற்காலிகளெங்கும் மனித வெள்ளம். எஸ்.ரா கருமேகங்களென பொழிந்துகொண்டிருந்தார்.

இலக்கியமென்பது நலிந்து மெலிந்து போய்க்கொண்டிருக்கிற காலத்தில் இலக்கியத்தை மேம்படுத்தும் காரியத்திலிருந்தார் எஸ்.ரா. அரங்கு சற்றுத் தள்ளியிருந்த கடலிலும் பேரலைகள். இவ்வரங்கத்தை நோக்கியும் மனித அலைகள். ஒரு நாள் இரண்டு நாள்களில்லை. ஒரு வாரகாலம் உலகின் மகோன்னத படைப்பாளிகளை மக்களிடையே உயிர்ப்பித்தார்.பார்வையாளர்களிடையே சொற்களைப் பிம்பங்களாய் மாற்றி எஸ்.ரா உலவவிட்டாரென்றால் அது மிகையில்லை.

சும்மாவே இலக்கியக் கூட்டமென்றால் நம்ம ஊரில் நாற்காலிகள்தான் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு நாற்காலிகள் நிரம்பி வழிந்தன. இருக்கையில்லாதவர்கள் கூச்சங்கள் தவிர்ந்து விரிப்புகளை நாற்காலிகளாக்கி அமர்ந்துகொண்டனர். இதைவிடவும் மேம்படுத்தப்பட்ட இலக்கிய நிகழ்வை உயிர்மையைத் தவிர யாரும் ஏற்படுத்தியிருக்க முடியாதென்று சொல்லத் தோன்றுகிறது.

ரஷ்ய இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய்,எஸ்.ரா. பேச்சில் மரணத்திலிருந்து ஒரு பட்டாம்பூச்சியைப்போன்று விழித்து அரங்கிடையே பறந்தார். நிகழ்ந்த சிறகசைப்பில் டால்ஸ்டாயின் காதல் மனைவி சோபியா தோன்றினாள். அவர் அவளுக்கு எழுதிய காதல் கடிதங்கள் அவர்களுக்கிடையே வாழ்வில் நிகழ்ந்த போராட்டங்கள் தோன்றின. அவர் எழுதிய உன்னத காவியமான அன்னா கரீனினா திரைப்படம்போல் கூட்டத்தினிடையே டால்ஸ்டாய் என்ற உலகின் மாபெரும் இலக்கிய வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாக உதிர்த்தார் எஸ்.ரா.இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அன்னாவின் இரண்டாவது காதலை சொற்களில் வர்ணிக்க முடியாதிருந்தபோது எஸ்.ரா அதை ஆர்வலர்களிடையே மிக எளிதாக நிகழ்த்திய வண்ணமிருந்தார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்ற புதினத்தை இரண்டு மணி நேர பேச்சாற்றலில் முழு புதினத்தையும் படித்துவிட்ட திருப்தியை வாசகர்களிடையே அநாவசியமாக இடைவெளியின்றி சுவைப்பட சொல்லி முடித்தார். அன்றைய இரவில் தூங்கச் சென்றவர்களெல்லாம் அன்னாவின் மகத்தான காதலில் மூழ்கித் தவித்திருப்பார்கள். நானும் இது மாதிரியான ஒரு காதலை இவ்வாறு இதுவரை பேசிக் கேட்டதில்லை. ரஷ்ய சமூகத்தின் பிரதிபலிப்பை டால்ஸ்டாய் மிகப்பெரிய கண்ணாடியாகயிருந்து செய்துகாட்டியதை எஸ்.ரா தன் உரையாடல் என்கிற கண்ணாடி வழியே பிம்பங்களை விதைத்துச் சென்றார். இவ்வளவு பக்கங்களைக்கொண்ட இந்நாவலை படித்திராத நான் இனிமேல் எளிதில் இதைப் படித்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் விழாவின் முடிவில் பெற்றுக்கொண்டேன்.என்னைப்போலவே படிக்காதவர்களும் இதுபோன்ற உணர்வினை அடைந்திருக்க முடியும் என அதீதமாக நம்புகிறேன்.

இரண்டாம் நாள் ஃபியதோர் தாஸ்தவஸ்கியின் குற்றமும் தண்டனையும்.ஒருவன் குற்றம் புரிவதற்கு முன்னர் இச்சமூகம் கண்டுகொள்வதில்லை.குற்றம் புரிந்தபின்னர் தலைமறைவாகிவிடும் குற்றவாளிகளை வலைபோட்டுத் தேடும் சமூகத்தை குற்றம் புரிந்தவனின் வாயிலாகவே நாவலில் புனைந்திருப்பதை மிக அழகாக எஸ்.ரா சொற்பழிவாற்றினார்.பணமில்லாமல் ஒருவன் கஷ்டப்படுகிறபோது பணத்தைத் திருட ஒருவன் திட்டம்போடுகிறான். அத்திட்டத்தை நிறைவேற்றும் நாளில் அங்கிருக்கும் பெண்ணை கொலை செய்கிறான். அதை எதேச்சையாக பார்த்துவிடும் பெண்ணையும் சாட்சிகள் இருந்துவிடக்கூடாதென்று என்று அவளையும் கொன்றுவிட்டு அங்கிருந்து தனக்கு வேண்டியவற்றை அள்ளிக்கொண்டு தப்பித்துவிடுகிறான். ஒருவன் குற்றம் செய்கிறவேளையில் இச்சமூகம் அமைதியாய் அவரவர் பணியிலிருக்கின்றதே ஒழிய குற்றம் புரிபவனுக்கு குற்றம் செய்வது எளிதாகிவிடுகிறதென்பதையும் தன் படிமங்கள் நிறைந்த உரையாடல் வழியே எஸ்.ரா அழகாக நிகழ்த்திக்காட்டினார்.

மூன்றாம் நாள் பாஷோ என்ற ஜப்பானிய ஜென் கவிஞர் பற்றிய உரையாடல். நான் மனுஷ்ய புத்திரன் அமீர் அப்பாஸ் மூவரும் மகிழ்வுந்தில் பயணித்துக்கொண்டிருந்தோம் விழாவிற்கு. அப்போது மனுஷ்யபுத்திரன் இன்றைக்கு அரங்கு நிறையுமா என்று கேட்டார். நானும் அப்பாஸூம் நிச்சயமாக வழமைபோலவே நிரம்பும் எவ்வளவு பந்தயம் கட்டுகிறீர்கள் என்று கேட்டோம். அவரும் ஆயிரம் ரூபாய் என்றார்.அரங்குகிற்குள் போனால் நாற்காலிகள் நிரம்பி நிறையப்பேர் நின்றுகொண்டுமிருந்தனர். மனுஷ்யபுத்திரனுக்கோ வியப்போ வியப்பு.பொதுவாக கவிதை நிகழ்வென்றால் தமிழகத்தில் கூட்டம் வரவே வராதென்பது அவருடைய தகர்க்கமுடியாத நம்பிக்கை. ஆனால் அன்றோ அவர் நம்பிக்கை தகர்ந்து தூள் துளாய்ப்போனதுதான் உண்மை.எங்களுக்கோ ஆயிரம் ரூபாய் பழுத்ததென்னவோ உண்மைதான்.இதற்கான நன்றியை எஸ்.ராவிற்கு நான் மேடையில் வரவேற்புரை நிகழ்த்த வேண்டிவந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டேன். ஜென் என்றால் என்ன எனவும் இருப்பும் இன்மையும் பற்றியும் மிகத் தெளிவாகப் பகிர்ந்தார். நான் உனக்காகக் காத்திருந்தேன் அங்கு என்று சொல்கிறபோது நான் அங்கிருந்திருக்கிறேன் ஆனால் இப்போது இல்லை. அக்கணத்தில் இருந்த இருப்பு இல்லாதுபோகும்வேளையில் இன்மையிலும் இருந்ததாகப் பொருள் வருகிறதென்று சொல்லி ஜென் பற்றிய பார்வைகளை விவரித்துச் சொன்னார். பாஷோவின் நிறைய கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசி பாஷோவை பார்வையாளர்களிடையே வியப்பில் ஆழ்த்தினார். அவர் குறிப்பிட்ட பாஷோவின் ஒரு கவிதை

அவ்வீட்டில்

திருடன் விட்டுச்சென்றது

பால்கனி நிலவு மட்டுமே.

ஒன்றுமில்லாத பாஷோவின் வீட்டில் எதைத் திருட திருடன் வந்தான் என்று தெரியவில்லை. இடிந்துபோன பாஷோவின் வீட்டில் திருட முடியாத நிலவு மட்டுமே இருக்கிறது. ஒன்றும் கிடைக்காத திருடன் பாஷோவிடம் திருட முடியாத நிலவு மட்டுமே உள்ளதைத் தெரிந்து நொந்துபோயிருப்பான் என்று இக்கவிதைகளின் சிந்தனைகளை பலவாறு பேசி கூட்டத்தை மகிழ்வித்தார்.

பாஷோவின் விழா முடிந்து இரவில் நானிருந்தபோது எனக்குள் ஹைகூ கவிதைகள் தோன்றத் தொடங்கியிருந்தன. அவருடைய பேச்சின் பாதிப்பில் அன்றிரவே ஒரு ஹைகூ ஒன்றை எழுதினேன். அப்படியே தூங்கிப்போய் நான்காம் நாள் இரவினுள் வந்தால் அங்கே உலகின் மாபெரும் நாடக ஆசிரியரான மெக்பத்தை கண் முன்னே நிறுத்தி நடமாடச் செய்துகொண்டிருந்தார் எஸ்.ரா.

ஸ்காட்லாண்ட் மன்னன் டன்கன்னை எப்படி மெக்பத்தும் லேடி மெக்பத்தும் கூட்டுச் சதிசெய்து கொல்வதையும் அதற்குபின் மன்னராகும் மெக்பத்தின் வாழ்வில் நடக்கும் துயர சம்பவங்களையும்

லேடி மெக்பத்தின் சொல்லவொண்ணா துயர்களையும் மிக விரிவாக காட்சிபடிமங்களாக எஸ்.ரா அரங்கிற்குள் நடமாடவிட்டிருந்தார்.துரோகத்தின் பலனாக லேடீ மெக்பத் பைத்தியம்போல் ஆகி தீர்க்க முடியாத விநோத நோய் வந்து இறப்பதையும் அவளின் மரணத்தில் நிலைகுலையும் மெக்பத்தின் மனவுறுதியையும் வீரனாக போரிட்டு மடிவதையும் எடுத்துரைத்தவிதம் ஒரு நாடகம் பார்ப்பதுபோலவே இருந்தது.

ஐந்தாம் நாள் இரவு அவ்வளவு சீக்கரம் வந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் மனுஷ்ய புத்திரனின் காரில்தான் பயணித்துக்கொண்டிருந்தேன்.காரைவிட்டு இறங்குவதும் எஸ்.ராவின் பேச்சைக் கேட்பதுமாய் அந்தப் பொழுதுகள் போனதே தெரியவில்லை. அன்று கிரேக்க காவியமான ஹோமரின் இலியட்டைப் பற்றி பேசினார். பேரழகியான ஹெலன் பற்றியும் அக்கிலிஸ் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இந்தியப் புராணங்கள் மகாபாரதத்தோடும் கம்பராமாயணத்தோடும் ஒப்பிட்டு பேசிய விதம் மிக அற்புதமாக இருந்தது. போரில் மகனைக் கொன்ற எக்கிலிஸீடமே வந்து தன் மகனின் உடலை கேட்கும் பகைவனாகிய மன்னனை எதுவும் செய்யாமல் உடலைத் தருவதற்கான ஒப்பந்தம் பேசி அம்மன்னனை அங்கே ஒரு இரவு தங்க வைத்து மறுநாள் வழியனுப்புதல் மூலம் எதிரியிடமும் நட்பு பாராட்டும் கதாபாத்திரத்தின் இயல்பை மிக நேர்த்தியாக விவரித்தார். டிராய் நகரின் விழ்ச்சியையும் அதனால் உயிரழக்கும் எக்கலிஸையும் அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே நான் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆறாம்நாள் இரவில் ஆயிரத்தொரு இரவுகள். கதைசொல்லி சொல்லித்தான் ஆயுளை நீடிக்க முடியும் மனித வாழ்வில் என்று தொடங்கிப் பேசினார் சிறந்த கதைசொல்லியான எஸ்.ரா. நாமெல்லாம் கதைகேட்டும் கதைசொல்லியுமே நாம் வளர்ந்திருக்கிறோம் என்றும் இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு கதைசொல்லுவதற்கு மனிதர்களே இல்லாமல்போனார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.தொலைக்காட்சி எந்திரத்தின் வழியாய் மனிதர்களும் அதன் முன் இயந்திரமாகிப்போய்விட்டார்கள். கதைக்கு ஏங்கும் குழந்தைகளோ அநாதைகளாகிவிட்டார்கள் என வேதனைப்பட்டார். ஆகையால் குழந்தைகளுக்கு பெற்றவர்கள் கதைசொல்லுங்கள் என்று பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அலிபாவும் நாற்பது பாக்தாத் திருடர்கள் பற்றி மிக சுவராஸ்யமாகச் சொன்னார். அது திரைப்படமாக இரு பெரும் நடிகர்களால் நடித்து வெளியான விவரங்களையும் பகிர்ந்தார். 1941 இல் என்.எஸ்.கிருஷ்ணன் அலிபாபாவாக நடித்து வெளிவந்ததையும் அதன்பின் 1957இல் எம்.ஜி.ஆர் அலிபாபாவாக நடித்து வெளிவந்ததையும் குறிப்பிட்டுச் சொன்னார். ஒரு பெண் மரணத்தை ஒத்திப்போட தண்டனையளித்த மன்னனுக்கு இரவுகளில் மட்டுமே கதை சொல்கிறாள். இப்படியே ஆயிரம் இரவுகள் வெறும் கதைகளாகச் சொல்லப்படுகிறது. அதில் வரும் கதைகள் தான் தினத்தந்தியில் சிந்துபாத் போன்ற கதைகள் மற்றும் அலாவுதீனுன் அற்புதவிளக்கும் போன்ற கதைகளும். அலாவுதீனின் விளக்கு கதையின் சுருக்கத்தை குழந்தைகளும் புரிந்துகொள்ளும்வண்ணம் மிகநேர்த்தியாக விவரித்தார்.

கடைசிநாளின் இரவு வந்துவிட்டது. புயல்வந்த நகரம் நீரில் மிதந்துகொண்டிருந்தது. சாலையெலலாம் மழைநீர். எல்லா இடர்களையும் தாண்டி கூட்டம் ஒவ்வொரு நாளும் குறையவே இல்லை என்ற உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவலான கடலும் கிழவனும் நாவலைப் பற்றியும் எழுத்தாளர் 127 முறை விபத்துக்குள்ளாகி உயிர்பிழைத்த அதிசயத்தைப்பற்றியும் ஆசிரியரின் அறிந்திராத பிற பக்கங்களையும் சொல்லிச் சென்றார். இரண்டு கதாபாத்திரங்களில் மட்டுமே வைத்து எழுதப்பட்ட நாவலென்றும். அவனுக்குத் தெரிந்த ஒரு சிறுவனை மீன் பிடிக்கச் செல்லாமல் கரையிலிருக்கும்போது பார்த்து பேசிக்க்கொண்டிருக்கும் காட்சிகளை விவரித்தார் அருமையாக்.

ஒரு சமயம் கடலுக்குள் அவர் தூண்டிலில் ஒரு ராட்சஸ் சுறா மாட்டிக்கொள்ள அதை கரை சேர்க்க அவர் படும்பாட்டைத்தான் புனைவாக எழுதியிருக்கிறாரென்பதை முழுநாவலின் பக்கங்களை தன் பேச்சின் வழியாக பார்வையாளர்களை ரசிக்க வைத்தார் எஸ்.ரா. நாம் அனைவ்ருமே வாழ்க்கையென்ற சுறாவிடம் மாட்டிக்கொண்டுதானிருக்கிறோம். நாம் எப்படி நம் வாழ்வு என்கிற சுறாவை வென்று கரை சேரப்போகிறோம் என்கிற போராட்டத்தை அதற்கான நம்பிக்கையைத்தான் ஹெமிங்வே இவ்வுலகிற்கு தெரிவித்திருக்கிறார் தன் புனைக்கதை மூலமாக என்று இன்னும் ஆழமான கருத்துக்களைச் சொல்லி ஒரு வராம் முழுவதும் இலக்கிய ஆர்வலர்களிடையே மேலும் புகழடைந்தார் எஸ்.ரா. ஒரு வாரம் இலக்கியவிழா முடிந்து வெளியேறிய மனுஷ்யபுத்திரனிடம் ஒரு பார்வையாளர் நாளையும் இந்த விழா இல்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தியபோது வெற்றியடைந்துவிட்டது இந்த இலக்கிய திருவிழா என்பதை உணர முடிந்தது.

நன்றி: உயிரோசை

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: