அந்தக் காலத்திலே

லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் விருப்பமான கதையிது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, எளிய கதை போல வெளிப்படையாக தோன்றினாலும் அது சுட்டிக்காட்டும் உண்மை மிகவும் ஆழமானது

•••

அந்தக் காலத்திலே : லியோ டால்ஸ்டாய்

முன்பு ஒருநாள், பள்ளத்தாக்கு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் முட்டை போல் பெரியதாக உருண்டு திரண்டிருந்த பொருள் ஒன்றைக் கண்டெடுத்தனர்.

இதன் நடுவில் வடுப்போல் பள்ளமாயிருந்ததால், தானிய மணி போலிருந்தது. குழந்தைகளிடம் இதைக் கண்ட ஓர் வழிப்போக்கன் காசு கொடுத்து விலைக்கு வாங்கிப்போய், ஜார் மன்னனிடம் அரும் பொருளாக விற்றுவிட்டான்.

மன்னன், தனது சபையில் உள்ள அறிஞர்களை அழைப்பித்து, இது முட்டையா அல்லது தான்ய மணியா என்பதினைக் கண்டறிந்து சொல்லுமாறு ஏவினான்.

அறிஞர்கள் பலவிதங்களில் பரிசோதனை செய்து பார்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. இது பயனற்றது என்று கைவிட்டுவிட்டனர்,

ஒருநாள் அங்கு பறந்து வந்த பறவையொன்று அதை தனது அலகால் குத்தித் துளை பண்ணிவிட்டது. இப்போது, இது தானியமென்பது என்பது அறிஞர்களுக்குத் தெரிய வந்தது.

வியப்போடு தானியத்தை ஜார் மன்னனிடம் கொண்டு சேர்த்தனர் .

ஆச்சரியமடைந்த மன்னன், இது எங்கே, எப்பொழுது பயிரிடப்பட்டது என்று தெரிந்து சொல்லச் சொன்னான். அறிஞர் யோசித்தனர்; புத்தகங்களைப் புரட்டினர்; பயனில்லை. “எங்கள் புத்தகங்களில் இதைப் பற்றி ஒன்றுங்காணோம். எங்கட்குத் தெரியாது. விவசாயிகளிடம் வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம். ஒருவேளை அவர்கள் மூதாதைகளிடமிருந்து யாராவது இதைப் பற்றித் தெரிந்திருக்கலாம். விசாரிக்க உத்தரவிடுங்கள்” என்றார்கள்

ஜார் மன்னன் கட்டளைப்படி, விவசாயிகளில் மிகவும் வயதான கிழவன் ஒருவன் அரசசபைக்கு கொண்டுவரப்பட்டான். இக்கிழவன், சோகை பிடித்துப் பல்லில்லாமலிருந்தான். இரண்டு கோல்களில் சாய்ந்த வண்ணம் வருந்தி நடந்தான்.

மணியைச் சரியாய்க் கூடப் பார்க்க முடியாதபடி கிழவனது பார்வை மங்கிப் போயிருந்தது. பாதி கண்ணாலும், பாதி கை உணர்ச்சியாலும் அவன் தடவிப் பார்த்தபிறகு, ஜார் அவனைப் பார்த்து,-

“பெரியவரே, இது எங்கே பயிரானது, தெரியுமா உனக்கு? உமது வயலில் இப்படி தானிய மணிகளை நீர் விதைத்த துண்டா? இல்லை, உமது காலத்தில் இவை போன்றவைகளை விலைக்கு வாங்கியதாவது உண்டா?”என்று கேட்டான்.

கிழவன் செவிடு. நிரம்பச் சிரமப்பட்டுத்தான் புரிந்து கொண்டான். பதிலும், தட்டுத் தடுமாறித்தான் சொன்னான்: “இந்த மாதிரித் தானியங்களை நான் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை, வாங்கவுமில்லை. நாங்கள் வாங்குவது எல்லாம் சிறியதாய், மெருகோடிருக்கும். என் தகப்பனாரைக் கேட்டுப் பார்க்கலாம்; அவருக்கு ஒருவேளை தெரிந்திருக்கும்.”

அவனது தகப்பனை அனுப்பிவைக்கும்படி ஜார் பணித்ததும், தகப்பனும், ஒரு கோல் மட்டும் ஊன்றிக் கொண்டு வந்து சேர்ந்தான். இவனுக்குக் கண் நன்றாயிருந்ததால், நன்றாய்ப் பார்க்க முடிந்தது. இவனிடமும் முன்போல் கேட்டான் அரசன். இவன் காதும் மந்தந்தான். ஆனால், மகனைக் காட்டிலும் தெளிவாய்க் கேட்டது

“இந்த மாதிரி தானியமணிகளை நான் விதைத்ததுமில்லை, அறுத்ததுமில்லை, வாங்கினதுங்கூட இல்லை. ஏனென்றால், எங்கள் காலத்திலெல்லாம் பணம் புழங்கத் தொடங்கிவிடவில்லை. தனக்கு வேண்டிய ரொட்டிக்கான கோதுமையை மட்டும் தான் பயிரிட்டுக் கொண்டோம். மற்ற தேவைகட்கு ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டோம். ஆகவே இது எங்கே பயிராகி இருக்கக் கூடுமென்பது எனக்குத் தெரியவில்லை. எங்கள் காலத்துக் கதிர் மணிகள் இப்போதையைக் காட்டிலும் பெரியவைதான். மாவு நிறையத் தரும். ஆனாலும், இதுமாதிரி நான் கண்டதில்லை. தமது காலத்தில் தானிய அறுவடை நல்லபடியாயிருக்குமென்று என் தகப்பனார் சொல்லிக் கொள்வார். அது இன்னும் பெரிதாம். நிறைய மாவு தருமாம். அவரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்”என்று இவன் கூறினான்.

அப்படியே, இவனுடைய அப்பன் அழைத்து வரப்பட்டான். கைக்கோல் எதுவும் இல்லாமலேயே அரசன்முன் சரளமாய் நடந்து வந்து சேர்ந்தான். கண்கள் இன்னும் ஒளி வீசின. பேச்சுத் தெளிவாயிருந்தது. அரசன் காட்டிய தான்யத்தைக் கிழவன் புரட்டிப், புரட்டிப் பார்த்தான்.

“இப்படி தானிய மணியை நான் பார்த்து நிரம்ப நாளாச்சே”என்று கூறிவிட்டு,தானிய மணியைச் சிறிது பல்லாற் கடித்துச் சுவைத்தான். அப்புறம், “அதேதான்!”என்று வியந்துரைத்தான்.

“எங்கே, எப்பொழுது இத்தகைய மணிகள் பயிராயின, பெரியவரே? நீர் உமது வயலில் இப்படி விதைப்பதுண்டோ? இல்லை, வேறு யாரிடமாவது விலைக்கு வாங்குவதுண்டோ?”என்று மன்னன் வினவினான். அதற்கு முதியவன் பதில் சொன்னான்: “என் காலத்திலே இந்த மாதிரி தான்யம் நாடெங்ககும் அறுவடையாயிற்று. இந்த தானியங்களைக்  சாப்பிட்டு தான் நாங்கள் பிழைத்து வந்தோம். இவற்றையே நான் விதைத்து, அறுவடை செய்து, அரைத்துமிருக்கிறேன்.”மீண்டும் மன்னன் கேட்டான் “இவற்றை நீர் எப்போதாவது, எங்காகிலும் விலைக்கு வாங்கும் வழக்கம் உண்டா? இல்லை, உமது சொந்த நிலத்திலே, எப்போதும் நீரே விதைப்பீரா?”

கிழவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “தான்யத்தை விற்பது வாங்குவது போன்ற பாபத்தைச் செய்ய எவனும் என்னுடைய காலத்தில் ஒருவனும் எண்ணமாட்டான். பணத்தைப் பற்றி நாங்கள் கேள்விபட்டதே கிடையாது. எல்லாரிடமும் வேண்டிய தானியமிருந்தது இல்லாதவர்களுக்கு எங்களுடையதை பகிர்ந்து தருவோம்”என்று பதில் கூறினான் கிழவன்.

ஜார் மன்னர் மறுபடியும் கேள்வி கிளப்பினார்

“நீர் விதைப்பு நட்ட இடமெங்கே? உமது வயல் இருப்பதுதான் எங்கே?”

கிழவன் சொன்னான்:

“என் வயல் கடவுள் அருளிய எங்களுர் மண்ணே . நான் உழுத இடமே எனது வயல்வெளி.  அப்போது பூமி செழிப்பானதாகயிருந்தது,  யாவரும் ஒன்று கூடி பாடுபட்டோம்,

“இன்னும் இரண்டே விஷயங்கள் நீர் எனக்குச் சோல்ல வேண்டும். முதலாவது, -முன்பு விளைந்தது போல இப்போது ஏன் பயிர்கள் விளைவதில்லை? இரண்டாவது உமது பேரன் இரு தடி தாங்கி நொண்டுகிறான்; உம்முடைய மகன் ஒரே கோலூன்றி நகர்கிறான்; நீரோ கோலெதுவுமின்றிச் சுலபமாய் நடக்கிறதோடு மட்டுமின்றி, உமது கண்களில் இன்னும் ஒளிவீசுகிறது; பற்கள் வலுவாயிருக்கின்றன; பேச்சும் தெளிவாய், அன்போடிருக்கிறது. இது ஏன்? இவை இரண்டுக்கும் காரணம் என்ன?”

முதுகிழவன் மொழிந்தவை:

“இவை இரண்டுக்கும் காரணம், மனிதர் தங்கள் உழைப்பால் மட்டும் வாழ்வதை நிறுத்திவிட்டுத், தம் அண்டையிலிருப்பவரது பொருட்களின் மீது ஆசைப்பட்டு குறுக்குவழியில் பிழைப்பதும், சத்தேயில்லாத உணவை உண்பதுமே காரணம் . அந்தக் காலத்தில் மக்கள் உண்மைக்கு பயந்து நடந்தனர், கடவுள் சொற்படி நடந்தனர். தமது உடைமைக்கு எஜமானராயிருந்தனர். பிறர்க்குச் சொந்தமானவற்றை இச்சிக்கவில்லை. அக்காலத்தில் ஒருவரும்  தனது சுயநலத்திற்காக இயற்கையை அழித்ததில்லை , நாங்கள் பூமியை நேசித்தோம், அது தான் காரணம் என்றார் ”

தமிழாக்கம்: சுப நாராயணன்

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: