வாசகர் கலந்துரையாடல்

இன்று புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற வாசகர் கலந்துரையாடலில் நான் பேசினேன், பாரதி புத்தகாலயத்தை சேர்ந்த நண்பர் நாகராஜன் அந்த நிகழ்வை ஒருங்கிணைவு செய்திருந்தார்.

நிறைய இளைஞர்கள், கூட்டம் நிரம்பி வெளியே  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டே கேட்டார்கள், இலக்கியம், புத்தகவாசிப்பு, சினிமா, பயணம், மகாபாரதம், கல்வி , ஏழு இலக்கியப்பேருரைகள், பௌத்தம் என்று பல்வேறு துறை சார்ந்த விஷயங்கள் குறித்துக்கேள்விகள் கேட்டார்கள்,

பத்திரிக்கையாளர் ஞாநி கலந்துரையாடலை ஒருங்கிணைப்பு செய்தார், ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பாக நடந்த கேள்வி பதில் 7.30 மணியோடு முடிந்து போனது, ஆனால் அதன் பிறகு ஒரு மணி நேரம் வாசகர்கள்  அருகில் உட்கார்ந்து நிறையக் கேட்டார்கள், மைக் இல்லாமல் நெருக்கமாக நண்பர்கள் வட்டம் போல அமர்ந்து பேசியது மிகுந்த உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது,  நிறைய வாசகர்கள் புதிய புத்தகங்களில் கையெழுத்து வாங்கினார்கள்

புத்தக கண்காட்சியில் என்ன புத்தகங்களை வாங்க வேண்டும், எந்த எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள் என்ற கேள்விதான் பலராலும் கேட்கப்பட்டது,

ஒரு நாளைக்கு இவ்வளவு வாசகர்கள், இணைய வலைப்பதிவர்கள்,  எழுத்தாளர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகிறார்கள், அவர்களில் பத்து பேர் தினமும் என்ன புத்தகம் வாங்கினார்கள், எந்த கடையில் என்ன புத்தகம் கிடைக்கிறது என்று ஒரு பதிவு போட்டால் பலருக்கும் உதவியாக இருக்கும்,

அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்று தொகுத்து வலையேற்றம் செய்யலாம்

••

இன்று என் பையனுக்காக சத்யஜித்ரேயின் பலுடா சீரியஸ் காமிக்ஸ் புத்தகத்தை தேடி வாங்கினேன். சனிஞாயிறு இரண்டு நாட்களுக்கும் நிறையக்கூட்டம், அதிலும் இன்று எந்த வழியில் வாகனங்களை உள்ளே அனுமதிப்பது என்று தெரியாமல் பெரிய சிக்கல், சுற்றியலைந்து தடுமாறி பெரும்பான்மையினர் கடுமையான அவஸ்தைப்பட்டார்கள், கார், பைக்கில் வந்தவர்களை பாதுகாவலர்கள் விரட்டி அடித்து உள்ளே வராதே சாலையில் எங்காவது வண்டியை நிறுத்திக் கொள் என்று துரத்தியது மிக மோசமானதாகயிருந்தது.

வாகனங்களை அனுமதிப்பதில் இவ்வளவு குளறுபடிகளை எந்த வருசத்திலும் நான் கண்டதேயில்லை,

அது போலவே நடந்து நடந்து சுற்றியலைந்த வயதானவர்கள் பலர் உட்கார இடமின்றி தட்டளிவதையும் சிறுவர்கள் நெரிசலில் சிக்கி மூச்சுதிணறல் அடைவதையும் காண்பது வருத்தமாக இருக்கிறது

••

எனது இலக்கியப் பேருரைகளின் டிவிடி புத்தக கண்காட்சியில் உயிர்மை, பாரதி புத்தகாலயம், பரிசல், விஜயா, டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய கடைகளில் கிடைக்கிறது, ஏழு டிவிடிகள் மொத்தமாக வாங்கினால் ரூ600, தனி டிவிடி விலை ரூ100.

••

கடந்த இரண்டு நாட்களில் புத்தக கண்காட்சியில்  நான் தேர்வு செய்த சில முக்கியமான புத்தகங்கள்

1)      ஆன்டன் செகோவ் சிறுகதைகள், தமிழில் எம். எஸ், பாதரசம் பதிப்பகம்

2)      உப்பு நாய்கள் / லட்சுமி சரவணக்குமார் /நாவல்/ உயிரெழுத்து பதிப்பகம்

3)      கறுப்பின மந்திரவாதி /கூகி வா தியாங்கோ / தமிழில் பழனிச்சாமி,/ பாரதி புத்தகாலயம்

4)      லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல், / அழகான வண்ணத்தில் லக்கிலுக் இரும்புக் கை மாயாவி கதைகள் ஒன்று சேர்ந்த புதிய பதிப்பு, /தென்னிந்திய பதிப்பகம் ஸ்டால்

5)      பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் /, இரா.சுந்தர வந்தியத்தேவன் /சந்தியா பதிப்பகம்

6)      விலங்குபண்ணை /- ஜார்ஜ் ஆர்வெல் – பி.வி.ராமஸ்வாமி/ ,கிழக்கு பதிப்பகம்

7)      மணிமகேஷ் – வங்காளப்பிரயாண நூல்-  உமா பிரசாத் முகோபாத்தியாய், சாகித்திய அகாதெமி

8)     கலீல் ஜிப்ரானின் காதல் கடிதங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

9)      உமா வரதராஜன் கதைகள், /காலச்சுவடு பதிப்பகம்

10)   புகழ்பெற்ற Train to Pakistan நூலின் தமிழாக்கம் ,பாகிஸ்தான் போகும் ரயில்/ குஷ்வந்த சிங் ./கிழக்கு பதிப்பகம்

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: