வெரியர் எல்வின்

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஒரிசாவின் கோரபுட்டின் அருகில் உள்ள பழங்குடியினரின் வாரச்சந்தையில் சுற்றிக் கொண்டிருந்தேன்,  அந்த இடத்திற்கு வந்ததில் இருந்து வெரியர் எல்வினே (Verrier Elwin ) நினைவில் வந்து கொண்டிருந்தார், எல்வின் அந்தச் சந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார்.

பழங்குடி மக்கள் ஒன்று கூடும் கிராமசந்தையது, ஒரு பக்கம் கூடை கூடையாக குவித்து வைக்கபட்டுள்ள விதவிதமான கருவாடுகள், குச்சியில் குத்தி வைக்கபட்டுள்ள உலர்ந்த மாமிசம், மலிவான உடைகள், காய்கறிகள், பழங்கள், பலசரக்கு பொருட்கள், நகரங்களில் இருந்து விற்பனைக்கு வந்து குவிந்துள்ள பிளாஸ்டிக் சாமான்கள், சோப்பு, பவுடர், பாசிமணிகள், ஸ்டிக்கர் பொட்டுகள், ரப்பர் செருப்புகள், அலுமினியப்பாத்திரங்கள், இன்னொரு பக்கம் போதை தரும் சுண்டக்கஞ்சி போன்ற ரைஸ்பியர் விற்கும் பெண்கள், தமுக்கு செய்து விற்கும் ஒரு குடும்பம், மாடுகளுக்கு லாடம் அடிக்கும் ஆள், குடை,  டார்ச் லைட் விற்பவர்கள், என நிறைய கடைகள்,  நமது சந்தைகளைப் போல உரத்த சப்தம், கூக்குரல் எதுவுமில்லை, தள்ளுமுள்ளு கிடையாது,

இரண்டு மாறுபட்ட உலகின் நடுவில் இருப்பது போலவே உணர்ந்தேன், நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்லாப்பொருட்களும் டூப்ளிகேட், அதே நேரம் பழங்குடி மக்கள் விற்பனைக்காக வைத்திருப்பவை அத்தனையும் இயற்கையாக விளைந்தவை, தங்களின் உழைப்பால் உருவான அந்தப் பொருட்களை விற்று டூப்ளிகேட் பொருள்களை பழங்குடிகள் வாங்கிப்போகின்ற காட்சியைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்,  மலிவான பிளாஸ்டிக் கலாச்சாரத்தைப் பழங்குடிவரை கொண்டு சேர்த்திருப்பது வருத்தமாக இருந்தது

நிறைய மரங்கள் அடர்ந்த சாலையை ஒட்டிய மேட்டுநிலத்தில் சந்தை நடந்து கொண்டிருந்த்து, அதிகமும் பெண்களே ஒடியாடி விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்,  இது போன்ற வாரச்சந்தைகள் தான் பல்வேறு விதமான பழங்குடி மக்கள் ஒன்று கூடுமிடம், இங்கே தான் அவர்கள் சந்தித்துக் கொள்வதும் பொதுப்பிரச்சனைகள் பற்றிப் பேசிக் கொள்வது நடக்கிறது,

அருகாமையில் உள்ள தேநீர்கடை ஒன்றின் வாசலில் அது போன்ற சிறிய கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது, அமெரிக்கப் பல்கலைகழகம் ஒன்றில் மானுடவியல் ஆய்வு செய்யும் வெள்ளைகாரர் அவர்களைத் தனது நிக்கான் கேமிராவில் படம் எடுத்துக் கொண்டிருந்தார், அவரோடு துணைக்கு வந்திருந்த இன்னொரு வெள்ளைகாரர் தனது பைக்கில் ஒரு காட்டுகோழியை வாங்கிக் கட்டி வைத்திருப்பது தெரிந்தது,

வெரியர் எல்வின் பழங்குடி மக்களோடு இணைந்து வாழ்ந்தவர், பழங்குடி மக்கள் குறித்து பொதுபுத்தியில் உருவான எண்ணங்களை அகற்றி, பழங்குடி பண்பாடு குறித்த மாற்றுமதிப்பீட்டினை உருவாக்கியவர்,

வெரியர் எல்வினை உலகம் குழந்தையாக இருந்த போது என்ற அவரது புத்தகத்தின் வழியாகவே அறிந்து கொண்டேன், பதினைந்து வருசங்களுக்கு முன்னால் அந்தப் புத்தகத்தை ஒரு நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படித்தேன், பழங்குடிமக்களின் தொன்மங்களும், கதைகளையும் கொண்ட தொகுப்பது, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருந்தார்கள், எல்வின் அந்தக் கதைகளைச் சுவைபட எழுதியிருந்தார், அழகான சித்தரங்களும் அதிலிருந்தன

அதன்பிறகு வெரியர் எல்வின் புத்தகம் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன், ஆங்கிலத்தில் அவரது The Muria and their ghotul, Myths of Middle India ஆகிய இரண்டு நூல்களும் கிடைத்தன, அதை வாசித்த போதே எல்வின் தனித்துவமான மானுடவியல் ஆய்வாளர் என்பதைக் கண்டு கொண்டுவிட்டேன், அதன்பிறகு  எல்வினைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன்

சத்தீஷ்கர் பகுதியில் உள்ள கோண்டு பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக இருபது வருசங்களுக்கும் மேலாக பாடுபட்டவர் எல்வின், இங்கிலாந்தின்  டோவரில் 1902ல் பிறந்த இவரது முழுப்பெயர் ஹேரி வெரியர் ஹோல்மன் எல்வின்,  ஆக்ஸ்போர்டில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம்  பெற்ற இவர் சமயத்துறை படிப்பில் தேர்ச்சி பெற்று கத்தோலிக சமயப் பரப்பாளராக பணியாற்றுவதற்கு இந்தியா வந்து சேர்ந்தார்,

பூனாவில் உள்ள கத்தோலிக சமயநிறுவனத்தில் சில மாதங்கள்  சேவை செய்த இவர், காந்தியக்கோட்பாடுகளால் கவரப்பட்டு காந்தியை சந்தித்து உரையாடி சபர்மதி ஆசிரமத்திலேதங்கிக் கொள்ள ஆரம்பித்தார், காந்திய கோட்பாடுகளின் படி வாழவேண்டும் என்று காலில் செருப்பு அணியாமல் வெறும்தரையில் படுத்து உறங்கினார், எளிமையான தினசரி வாழ்க்கையை கைக்கொண்டார்

1932ல் காந்தி கைது செய்யப்பட்ட நேரத்தில் எல்வின் உடனிருந்தார்,  காலனிய ஆட்சியை எல்வின் எதிர்க்கிறார் என்பதால் அவரை மதசபை விசாரணைக்கு உட்படுத்தியது, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு உள்ளது என்று கூறிய எல்வினை மதசங்கம் விலக்கி வைக்க முடிவு செய்த்து, அவராகவே அதிலிருந்து விலகி வெளியே வந்து பழங்குடி மக்களோடு வாழ்ந்து சேவை செய்வது என முடிவு செய்து கொண்டு கோண்டு இனமக்கள் வாழும் கரான்ஜியா என்ற மலைகிராமத்தில் சிறிய குடில் அமைத்து சேவை செய்ய ஆரம்பித்தார், பின்பு அதே மாவட்டத்தில் சான்ரவாச்சாபர் ,  பஸ்தர் பழங்குடி மக்கள் வாழும் சித்ரகோட், போன்ற இடங்களில் வாழ்ந்து பழங்குடி மக்களோடு ஒன்று கலந்தார்.

1940ம் ஆண்டு தனது 37 வயதில் கோண்டு பழங்குடி இனப்பெண்ணான கோசியை திருமணம் செய்து கொண்டு கோண்டு மக்களில் தானும் ஒருவராகிப் போனார் எல்வின், அவருக்கு இரண்டு பிள்ளைகள்,  முதல்பையனுக்கு ஜவர்கர்லால் என்று பெயரிட்டார், காரணம் கோண்டுகளின் மன்னன் ஜவகர்சிங்கின் நினைவாகவும் தனது நெருக்கமான நண்பர் ஜவஹர்லால் நேருவின் நினைவாகவும் இணைத்து  பெயரிட்டதாக குறிப்பிடுகிறார், இவரோடு இறுதிவரை களப்பணியில் உடனிருந்தவர் ஷாம்ராவ் ஹிவாலே, இவரும் காந்தியவாதியே, ஒன்பது வருசங்களுக்கு பிறகு கோசியை விட்டு விலகி லீலா என்ற பர்தான் இனப்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் எல்வின்.

பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்து நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார், மத்தியபிரதேசம், ஒரிசா ,பீகார் என்று சுற்றியலைந்து பழங்குடியினருக்கான நலத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறார், ஆதிவாசிகளின் பண்பாட்டினை புரிந்து கொள்ளாமல் காட்டிலாகா அவர்களை கட்டாய இடமாற்றம் செய்தபோதும், இலை ஆடைகளுக்கு பதிலாக துணி ஆடைகளை உடுத்தும்படி கட்டாயப்படுத்திய போதும், காரணமில்லாமல் பழங்குடிகளைக் குற்றவாளிகளாக கைது செய்து கொண்டு போவதையும் கண்டித்து எதிரான போராட்டங்களை மேற்கொண்டிருக்கிறார் எல்வின், இந்திய மானுடவியல் நிறுவனத்தின் துணை இயக்குனராக சில ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார் , இவர் துவங்கிய கோண்டு சேவா மண்டலம் இன்றும செயல்பட்டு வருகிறது

எல்வின் பழங்குடிகளை மேற்கத்திய மனநிலையில் இருந்து ஒருபோதும் அணுகுவதில்லை, அவர்களைப் புரிந்து கொள்ள பழங்குடி பண்பாட்டின் வேர்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று கருதினார், அதற்காக அவர்களின் தொன்மங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகளை அறியத்துவங்கினார், பூமி பிளந்து உருவானவர்கள் என்று நம்பும் பழங்குடிகள் தங்களுக்கு பூமியின் மீதுள்ள உரிமை பிறப்பிலே உருவானது, அதை எவராலும் பறிக்கமுடியாது என்ற எண்ணத்தில் இருப்பதை அடையாளம் காட்டுகிறார்,

இன்று ஒரிசா மற்றும் மத்தியபிரதேசத்திலுள்ள பழங்குடியினரின் நிலப்பகுதியில் அலுமினிய சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனங்கள் அவர்களை கட்டாய வெளியேற்றம் செய்து கொண்டிருக்கிறது, பழங்குடிப் பகுதியில் பயணம் செய்யும் போது அவர்கள் அதிகாரத்தால் எவ்வளவு புறக்கணிக்கபட்டிருக்கிறார்கள், ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக உணர முடிகிறது, அந்த புறக்கணிப்பின் அரசியல் வடிவமே தற்போதுள்ள பழங்குடிகளின் எழுச்சி.

பிரபஞ்சம் உருவான விதம், மற்றும் மனிதனுக்கு உடல் உறுப்புகள் எப்படி உருவானது, முதன்முறையாக ஆடை நெய்வது எப்படி அறிமுகமானது, நெல் விளைந்தது எவ்வாறு, பறவைகள் ஏன் சப்தமிடுகின்றன என்று பல்வேறு தளங்களை சார்ந்த நம்பிக்கைகளை, கதைகளை தொகுத்திருக்கிறார் எல்வின், இந்தக் கதைகளின் ஊடாக பழங்குடி மக்களின் இயற்கை குறித்த விசேசமான புரிதல்களை அறிந்து கொள்ள முடிகிறது,

குறிப்பாக போண்டா இனமக்கள் பெயர்களுக்கு தனியே ஆன்மா இருப்பதாகக் கருதுகிறார்கள், ஒருவருக்குப் பெயரிடுவது என்பதன் வழியே அந்த ஆன்மா தனக்கான உடலைத் தேர்வு செய்து கொள்கிறது என நம்புகிறார்கள், இது போலவே பழங்குடிகளின் பயிடும் பழக்கம்  மேம்பாடு கொண்ட ஒரு விவசாய முறை, தாங்கள் பூமியில்  இருந்து உண்டானவர்கள் என்பதால் பூமியை ஏர் கொண்டு உழுவது என்பது தாயின் மார்பை அறுப்பது போன்றது, ஆகவே பூமியை உழுது விதைப்பதில்லை என்கிறார்கள் பைகா பழங்குடிகள்

காற்றுக்கு கண் இல்லை என்பதால் தான் அது எதன்மீதும் மோதுகிறது, குயிலுக்கு நிறைய பாடல்களை பாட வேண்டும் என்ற பேராசை அதனால் தான் சின்னஞ்சிறு பாடல்களாக எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறது என்பது போன்ற பழங்குடியினரின் எண்ணங்கள் மிகுந்த கவித்துவமானவை.

பழங்குடிகள் என்றாலே நாகரீகமற்றவர்கள் என்று ஐரோப்பியர்கள் உருவாக்கி வைத்த சித்திரத்தை மாற்றி அவர்கள் நாகரீகத்தில் மிகவும் உயர்ந்தவர்கள், அவர்களின் பண்பாட்டு கூறுகள் வளர்ச்சியடைந்த சமூகத்தில் கூட கிடையாது என்று எல்வின் நிறைய உதாரணங்களைக் காட்டுகிறார்

குறிப்பாகப் பழங்குடி மக்கள் காசு  கிடைக்கும் என்பதற்காக எந்த வேலையும் செய்ய மாட்டார்கள், ஒருவனைக் காசு கொடுத்து மீன்பிடித்து வரச்சொல்வது மிகவும் கடினமான செயல், எந்தப் பழங்குடியும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள், அது போலவே முரியா பழங்குடி இனத்தில் கோட்டுல் என்ற சமுதாயக்கூடம் உள்ளது, இது பதின்வயதினருக்கான சமுதாயக்கூடம், இங்கே ஆண் பெண் அனைவரும் ஒரே கூரையில் தனித்து வாழ அனுமதிக்கபடுகிறார்கள், விளையாட்டு, பாலின்பம், சேர்ந்து வேலை செய்தல், யாவும் இங்கே அனுமதிக்கபடுகின்றன, இதனால் பதின்வயதில் ஆண் பெண் உடல் பற்றி நன்றாக அறிந்து கொண்டுவிடுகிறார்கள், பாலுறவு குறித்த மனத்தடைகள், தவறான புரிதல்கள் கிடையாது என்று குறிப்பிடுகிறார்,

பழங்குடி மக்களை நகரவாசிகளே அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்று கூறும் எல்வின் நீதிமன்ற வழக்குகளாக வரும் ஆதிவாசி மக்களிடம் நீதிமன்ற எழுத்தர்கள் நான்கு விதமான பேனாக்களைக் காட்டி எந்த பேனாவில் எழுத வேண்டும் என்று கேட்பார்கள், ஒவ்வொரு பேனாவில் எழுதுவதற்கும் ஒரு ரேட், இப்படி பழங்குடியினரின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகம் ஏமாற்றிது நகரவாசிகளே,

பழங்குடியினரின் கேளிக்கைகளில் அடிப்படையானது கூட்டு நடனம், நடனமாடும் பெண் தன்னைக் காற்றில் அசைந்தாடும் செடியைப் போல நினைத்துக் கொள்வாள்,  ஆகவே அவர்களது நடத்தில் காற்று செடியை அசைப்பது போல முன்பின்னாக உடல் வளைந்து குனிந்து திரும்பும்,  அழகான மரத்தில் ஒரு பறவையிருக்கிறது, மரத்தை அசைத்தால் பறவை விழிப்பு அடைந்துவிடும் என்றொரு விடுகதையிருக்கிறது, அதன் அர்த்தம் பெண்ணின் காலில் உள்ள சலங்கை சப்தமிடுவதேயாகும்

எல்வின் தனது வாழ்க்கை வரலாற்றை The Tribal world of Verrier Elwin: an autobiography. என தனியான நூலாக எழுதியிருக்கிறார், இதை Oxford University Press ல் வெளியிட்டிருக்கிறது, எல்வின் கண்ட பழங்குடி மக்கள் என்று இந்த நூலின் தமிழாக்கத்தை சிட்டி செய்திருக்கிறார், 2003ல் விழுதுகள் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது, இந்த நூலிற்காக எல்வின் சாகித்ய அகாதமி விருதுபெற்றிருக்கிறார்

பழங்குடியினரின் பாலியல் வழக்குகளைப் பற்றி தனியாக ஒரு நூல் எழுதி தரும்படி ஒரு பதிப்பகம் கேட்டுக் கொண்ட போது, அதை மறுத்த எல்வின் பழங்குடிகளைப் பற்றிய மிகைகதைகளையும், மோசமான சித்தரிப்புகளையும் நாம் பொது ஊடகங்களில் அனுமதிக்கவே கூடாது, பழங்குடிகளை நாம் புரிந்து கொள்ள தவறும்போது இயற்கையின் ஒரு பகுதியை தவறாக அடையாளப்படுத்துகிறோம் என்று தான் பொருள் என்கிறார்

எல்வின் தொகுத்த புத்தகங்களில் உள்ள மரபுக்கதைகள் உலகம் பற்றிய பழங்குடி மக்களின் கற்பனைத்திறனுக்கும் உலகப்பார்வைக்கும் சாட்சியாக இருக்கின்றன, இந்த தொன்மங்களின் வழியே மனிதனின் கதை சொல்லும் ஆற்றல் எவ்வளவு ஆண்டுகாலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது

பழங்குடி மக்களின் நிலம் அவர்களிடமிருந்து ஒரு போதும் பறிக்கபடக்கூடாது, காட்டில் அவர்களது உரிமை பாதுகாக்கபடவேண்டும், காட்டிலாக அதிகாரிகள் அவர்களை தங்களது வேலையாட்கள் போல நடத்தகூடாது,  பழங்குடியினர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்து சிறப்புத் திட்டங்கள் உருவாக்கபட வேண்டும், பணம்படைத்த வணிகர்கள் பழங்குடியினரை ஏமாற்றி வணிகம் செய்வதை அனுமதிக்க கூடாது, நகரவாசிகள் அவர்களைக் காட்சிப்பொருள் போல கருதும் மனநிலை அகற்றப்பட வேண்டும் என்பது போன்ற எல்வின் முன்வைத்த பழங்குடிமேம்பாட்டிற்காக திட்டங்கள் இன்றளவும் நடைமுறைப்படுத்தபடவேயில்லை

எல்வினின் மற்ற நூல்கள் தமிழில் வெளியாகி உள்ளதா எனத்தெரியவில்லை, அவர் தொகுத்த பழங்குடி மக்களின் கதைகள் ஒரே தொகுதியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம்

எல்வின் வாழ்க்கை வரலாற்றை அவரது கடிதங்கள் மற்றும் குறிப்புகள், வழியே ராமச்சந்திர குகா விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார், அது மிக சுவாரஸ்யமான புத்தகம்.

Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India / Ramachandra Guha

எல்வின் குறித்த காணொளி

Angel of the Aboriginals: Dr. Verrier Elwin

http://youtu.be/QnSMMKLGbmE

••

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: