ஒளிரும் மௌனம்

மௌனப்படமாக முற்றிலும் கறுப்புவெள்ளையில் உருவாக்கபட்ட The Artist படத்தை நேற்றிரவு பார்த்தேன், மிகுந்த மனஎழுச்சியை உருவாக்கிய அற்புதமான திரைப்படமது, உலகெங்கும் டைட்டானிக் திரைப்படம் வெளியான போது உருவான உற்சாக அலையை மீண்டும் ஒரு முறை இப்படம் உருவாக்கியிருக்கிறது

மௌனப்பட யுகம், கறுப்பு வெள்ளையுகம், இரண்டுமே மறைந்து போய் சினிமா வண்ணத்திலும் தொழில்நுட்ப வசதியில் அதிக பட்ச  சாத்தியங்களை உருவாக்கிவரும் இன்றைய சூழலில், மீண்டும் முழுமையாக ஒரு கறுப்புவெள்ளைப் படத்தை உருவாக்கி பார்வையாளர்களை கட்டிப்போட்டு பிரமிக்க வைத்திருப்பதே இதன் முதல்சிறப்பு

ஆங்கில சப்டைட்டில்களுடன் பிரெஞ்சில் உருவாக்கபட்ட இப்படம் கேன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறது, மேலும் Golden Globe, BAFTA, போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் தொடர்ச்சியாக விருதுகளைப் பெற்று வருகிறது

Michel Hazanavicius  இயக்கியுள்ள இப்படம் கறுப்புவெள்ளை படங்களின் அத்தனை சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது, அதற்காக 22 பிரேமில் பிரத்யேகமாகப் படமாக்கபட்டிருக்கிறார்கள்.  மௌனப்படயுகத்தில் நடக்கும் கதைக்களம், உணர்ச்சிபூர்வமான கதைசொல்லும் முறை, பொருத்தமான நடிகர்கள், நேர்த்தியான ஒளிப்பதிவு, 1927 காலகட்டத்தை கண்முன்னே கொண்டுவரும் கலையமைப்பு, வலிமையான பின்னணி இசை, தேர்ந்த படத்தொகுப்பு,  என்று ஒன்றிணைந்த சிறந்த கலைப்படைப்பாக விளங்குகிறது The Artist .

கறுப்பு வெள்ளை சினிமாவின் அழகியல் இன்றுள்ள சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, அது நிகழ்வுகளின் நுட்பத்தை விட உணர்ச்சிப்போக்கை வெளிப்படுத்துவதிலே முதன்மையானது, இன்று அதை மெலோடிராமா என்று நாம் கருதக்கூடும், ஆனால் அது தான் அன்றிருந்த சிறப்பான கதைசொல்லும் முறை.

மௌனப்படங்களில் நடிகர்களின் முகம் தான் அதன் ஆடுகளம், ஆகவே குளோசப் காட்சிகள் முக்கியமானவை, குறைவான கதாபாத்திரங்கள், வேடிக்கையும் நெகிழ்ச்சியும் ஒன்று கலந்து தாவித்தாவி செல்லும் கதை சொல்லும் முறை, இசையின் வழியே கதாபாத்திரங்களின் மனஇயல்புகள்  வெளிப்படும்  தனித்துவம் என சிறந்த அம்சங்களை இப்படம் தனதாக்கிக் கொண்டிருக்கிறது

ஹிட்ச்காக் திரைப்படங்களையும் சார்லி சாப்ளின் படங்களையும் இந்த இரண்டு யுகங்களின் இரு பெரும் அடையாளச் சின்னங்கள் என்பேன்,  இரண்டிற்கும் இன்றும தனித்த பார்வையாளர்களிருக்கிறார்கள், மௌனப்படங்களில் சாப்ளின் மட்டுமே இன்றைய தலைமுறையினருக்கும் விருப்பமானவராக இருக்கிறார்,

அந்த நினைவுகளை மீள்உருவாக்கம் செய்வதில் துவங்குகிறது இப்படம், 1927ம் ஆண்டு ஜார்ஜ் வாலேன்டின் என்ற மௌனப்படத்தின் புகழ்பெற்ற நடிகர் தனது புதிய திரைப்படமான A Russian Affair  படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்வையிட வருகிறார், அரங்கில் ஆரவாரத்துடன் மக்கள் படம் பார்க்கிறார்கள், பத்திரிக்கையாளர்களுக்காக வெளியில் புகைப்படப் போஸ் கொடுக்கும் ஜார்ஜிடம் கூட்டத்திற்குள் இருந்து ஆட்டோகிராப் வாங்குவதற்கு முயற்சிக்கும் பெப்பி மில்லர் என்ற இளம் பெண் தனது ஆட்டோகிராப் புத்தகம் கிழே விழுந்துவிடவே அதைக் குனிந்து எடுக்கும்போது ஜார்ஜை இடித்துத் தள்ளிவிடுகிறாள், வேடிக்கை செய்வதற்காக அவளைத் தூக்கி கட்டிக் கொள்கிறான் ஜார்ஜ், அதை மறுநாள் பத்திரிக்கைகள் முதல்பக்கத்தில் யார் இந்தப் பெண் என்று செய்தி வெளியிடுகிறது,

அந்தச் செய்தியை ஜார்ஜ் பெரிது படுத்தவில்லை, ஆனால்  பெப்பி மில்லரின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டுவிடுகிறது, அவள் கனவு காணத்துவங்குகிறாள், அந்த நாளிதழைக் கையில் வைத்துக் கொண்டு  பலரிடமும் காட்டிச் சந்தோஷப்படுகிறாள்,  அந்தப் புகைப்படத்தைக் காட்டி கினோகிராப் ஸ்டுடியோவில் துணைநடிகையாவதற்கு சந்தர்ப்பம் தேடிக் கொள்கிறாள்,

நடனமாடுவதற்காக அழைத்து வரப்பட்ட பெப்பியின் மீது ஜார்ஜின் கவனம் விழுகிறது, அவளது வேடிக்கைகளை ரசிக்க ஆரம்பிக்கிறான், படத்திலிருந்து அவளை நீக்கிவிட முயற்சி  நடக்கும்போது அவள் நடிக்கட்டும் என்று சிபாரிசு செய்கிறான், அதற்கு நன்றி தெரிவிக்க ஜார்ஜின் மேக்கப் ரூமிற்குள் வருகிறாள் பெப்பி, படத்தின் மிக்சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று,

ஜார்ஜின் கோட்டிற்குள் ஒரு கையை மாட்டிக் கொண்டு அவள் செய்யும் காதல் வேடிக்கையானது, ஜார்ஜ் அவளிடம் நீ ஒரு நடிகையாக வேண்டும் என்றால் மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்துவம் வேண்டும் என்று சொல்லி அவளது மேல்உதட்டில் சிறிய மச்சம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகிறான், அவள் உள்ளுற ஜார்ஜை நேசிக்க துவங்குகிறாள்

மௌனப்பட யுகம் முடிந்து பேசும்படத்தின் வருகை ஆரம்பமாகிறது, ஜார்ஜ் பேசும்படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, மக்கள் திரையில் தனது முகத்தை பார்ப்பதற்காக மட்டும் தான் வருகிறார்கள், தான் பேச வேண்டும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை என்று பேசும்படங்களைக் கேலி செய்கிறான், இது சார்லி சாப்ளின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது, சாப்ளின் பேசும்படங்களின் வருகையால் குழப்பமடைந்தார், அதற்கு எதிராக விமர்சனம் செய்தார், முடிவில் பேசும்படங்களைத் தவிர்க்க முடியாது என்ற போது கோல்ட் ரஷ் படத்தின் பின்னணி குரல் வழியே அதை ஏற்றுக் கொண்டார், பின்னாளில் அவர் பேசும்படங்களின் வழியே புதிய சாதனைகளை செய்தது தனிவிஷயம்,

பேசும்படத்தின் வருகை மௌனப்பட நாயகனான ஜார்ஜை சிக்கலுக்கு உள்ளாக்கியது. கினோகிராப் ஸ்டுடியோ இனி மௌனப்படங்களைத் தயாரிப்பதில்லை என்று முடிவு செய்து பேசும்படத்திற்கான ஆயுத்த வேலைகளைத் துவங்குகிறது, அதை தாங்கிக் கொள்ள முடியாத ஜார்ஜ் அவர்களுடன் சண்டையிட்டு தானே தயாரித்து இயக்கி ஒரு மௌனப்படத்தை வெளியிடப்போவதாக அறிவிக்கிறான், அதன்படியே புதிய திரைப்படம் ஒன்றையும் உருவாக்குகிறான்,

இதே வேளையில் பெப்பி மில்லர் பேசும்படத்தின் புதிய கதாநாயகி ஆகிறாள், இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகின்றன, மக்கள் பேசும்படத்தை ஆதரிக்கிறார்கள்,  ஜார்ஜ் பெரிய தோல்வியை அடைகிறார்,

படத்தின் தோல்வியால் அவரது சொத்து கைவிட்டுப்போகிறது, மிச்சமிருந்த பொருட்களை அடமானம் வைக்கிறார், தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தொடர்ந்து குடிக்கிறார், பெப்பியோ மிகுந்த புகழ்பெறத் துவங்குகிறாள்,

ஜார்ஜ் தனது மௌனப்படம் திரையிடப்படும் அரங்கினைப் பார்வையிடும் காட்சி  படத்தின் ஆகச்சிறந்த ஒன்று, எத்தனையோ புகழ்பெற்ற நடிகர்களுக்கு இயக்குனர்களுக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது, தனது கனவுப்படம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கபடுவதை நேரில் காணும் ஜார்ஜின் முக்த்தில் எவ்வளவு வேதனை, வருத்தம், தனது நிராகரிப்பை தன் கண்முன்னே காணுவது மகத்தான சோகமில்லையா, அதை ஜார்ஜ் உணரும்போது அதே அரங்கின் ஒரு மூலையில் அமர்ந்து பெப்பி அந்தப் படத்தை மிகவும் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறாள், மறுநாள் அவரைத் தேடிச்சென்று படத்தைப் பாராட்டுகிறாள், ஆனால்  ஜார்ஜ் அது தன்னைக் கேலி செய்வதாகவே நினைத்துக் கொள்கிறான்,

பெப்பியின் ஏறுமுகமும் ஜார்ஜின் இறங்குமுகமும் அவர்களை வேறு வேறு உயரத்திற்குக் கொண்டு  போகிறது, ஜார்ஜின் ஒரே துணை ,அவனது நாய் மட்டுமே, அந்த நாய்குட்டிக்கும் ஜார்ஜிற்குமான உறவு மீண்டும் சாப்ளினையே நினைவுபடுத்துகிறது,

நிராகரிப்பின் உச்சத்தில் தனது பழைய படங்களின் பிலிம்ரோல்களை உருவிப்போட்டு தீவைத்து எரிக்கிறான் ஜார்ஜ், தனது கடந்தகால வெற்றிகள் அத்தனையும் கண்முன்னே எரிந்து போவதைக் காணும் ஜார்ஜின் முகத்தில் தென்படும் வெறித்தனமும் சோகமும் மிக உயர்வான ஒன்று, பெப்பியோடு நடித்த படத்தின் பிரதியை மட்டும் காப்பாற்றி தன்னோடு வைத்துக் கொள்கிறான், புகைமூட்டத்தில் சிக்கி கொண்டவனை நாய்குட்டி காப்பாற்றுகிறது, பெப்பியே அவனை தன்வீட்டில் வைத்து சிகிட்சை தருகிறாள், அவர்கள் உறவு மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கிறது

ஜார்ஜிற்கு மீண்டும் ஒருமுறை சினிமாவில் நடிப்பதற்கு புதிய வாய்ப்பு உருவாக்கிட முனைகிறாள் பெப்பி, அது சாத்தியமாகிறது, படத்தின் கடைசிக் காட்சியில் கட் என்று சொல்லப்படுவதன் மூலமே படம் பேசத்துவங்குகிறது, With pleasure என்ற தனது குரலின் வழியே  ஜார்ஜின் திரைவாழ்க்கை மீண்டும் துவங்குகிறது

இப்படம் இரண்டு புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்தியது, ஒன்று 1950 களில் வெளியான பில்லி வைல்டர் இயக்கிய Sunset Boulevard . இப்படம் மௌனப்படங்களின் புகழ்பெற்ற கதாநாயகியின் வீழ்ச்சியைப் பேசுகிறது, இரண்டாவது படம் சாப்ளின் நடித்து 1952ல் வெளியான Limelight , இப்படத்தில் பஸ்டர் கீட்டனும்  நடித்திருப்பார், புகழ்பெற்ற நாடகமேடைக் கோமாளி ஒருவனின் தோல்வியுற்ற காலத்தை பற்றிய படமிது.  இரண்டுமே புறக்கணிக்கப்பட்ட கலைஞனின் மனநிலையைப் பேசுகின்றன, இரண்டிலுமே அவர்கள் தங்களது கடந்தகாலத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் சிரமப்படுகிறார்கள், எதையாவது செய்து மீண்டும் தனக்கான பார்வையாளர்களை உருவாக்கிவிட முடியும் என்று எத்தனிக்கிறார்கள், தோல்வியின் கசப்பு அவர்களைத் துன்புறுத்துகிறது.

பொருளாதாரத் தோல்விகளை விடவும் கலையில் ஏற்படும் தோல்விகளே கலைஞனை அதிகம் பாதிக்ககூடியது, புதிய தொழில்நுட்பத்தின் வருகை இப்படி எத்தனையோ மகத்தான கலைஞர்களை முடக்கிப்போட்டிருக்கிறது, வெளியே தெரியாமல் பழத்திற்குள் உள்ள வண்டு கொஞ்சம் கொஞ்சமாக பழத்தை அரித்துதின்று கொண்டிருப்பதை போன்றதே கைவிடப்பட்ட கலைஞனின் மனநிலை.

ஒரு காட்சியில் பெப்பியின் பேசும்படம் ஒன்றினை பார்த்துவிட்டு வெளியே வரும் ஜார்ஜை அடையாளம் கண்டு கொண்டு  வியந்து பேசுகிறாள் ஒரு ரசிகை, அப்போது தன்னைப் போலவே தனது நாயிற்கும் பேசத்தெரியாது என்று சொல்லிப் போகிறான் ஜார்ஜ், அது தான் வேதனையின் உச்சநிலை

சன்செட் பொலிவார்ட் படத்தில் வீட்டில் தனது படங்களைத் தானே திரையிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் நடிகையின் காட்சியிருக்கிறது, அது போல ஒரு காட்சி ஆர்ட்டிஸ்ட் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது,  இரண்டும் ஒரே மனநிலையின் இரண்டு மாறுபட்ட காட்சிப்பதிவுகள், சன்செட் பொலிவார்ட் படத்தில் வரும் நடிகையின் கார் டிரைவர், படப்பிடிப்பு அரங்கிற்கு அவள் மறுமுறை செல்லும் காட்சி போன்றவை ஆர்ட்டிஸ்ட் படத்திலும் இடம்பெற்றிருக்கின்றன, ஒருவகையில் இது பார்வையாளனுக்குள் புதையுண்டு போயிருந்த பழைய சினிமா நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது,

மௌனப்படங்களில் ஒளிப்பதிவும் இசையும் தான் இரண்டு ஆதார அம்சங்கள், குறிப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இசையே அதிகம் பங்களிக்க கூடியது, Ludovic Bource படத்தின் இசையமைப்பாளர்,  இப்படத்தில் ஹிட்ச்காக்கின் வெர்டிகோ படத்தின் முக்கிய இசைக்கோர்வை ஒன்று அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது, இது போலவே பழைய திரைப்படங்களின் இசைக்கோர்வைகள் சில உரிமைபெற்று மீண்டும் பயன்படுத்தபட்டிருக்கின்றன, அது பார்வையாளனுக்கு அந்தக் காலகட்டத்தின் இசையை அப்படியே கேட்பது போன்ற நெருக்கத்தைத் தருகிறது

Jean Dujardin ஜார்ஜாக நடித்திருக்கிறார், பிரெஞ்ச் திரைப்பட  உலகின் முக்கிய நடிகர் இவர்,  மௌனப்பட நாயகர்களின் உடல்மொழியை அப்படியே தனதாக்கி கொண்டிருக்கிறார், அவரது தோற்றம் பழைய எரால் பிலினை சற்று நினைவுபடுத்துகிறது, அது போல அர்ஜென்டினாவின் Bérénice Bejo பெப்பி மில்லராக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார், மழையோடு ஜார்ஜைத் தேடிவந்து பார்க்கும் காட்சி, சாலையில் புறக்கணிக்கபடும் ஜார்ஜை காரின் உள்ளேயிருந்து காணுவது, பத்திரிக்கையாளர்களுக்கு நேர்காணல் தரும்போது ஒரக்கண்ணால் ஜார்ஜை கவனிப்பது, ஜார்ஜ் தனது படத்தின் ரீலை அணைத்தபடியே நெருப்பின் நடுவே விழுந்துகிடப்பதை காணும்போது ஏற்படும் உணர்ச்சி பெருக்கு என்று தனது நுட்பமான நடிப்பால் தனிச்சிறப்பு பெறுகிறார் Bérénice Bejo.

இயக்குனர் Michel Hazanavicius பிரெஞ்சு இளம்தலைமுறை இயக்குனர், மௌனப்படங்கள் பார்வையாளர்களிடம் உருவாக்கிய பாதிப்பு போல இன்றைய திரைப்படங்கள் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்குவதில்லை, அதை மறுமுறை சாத்தியப்படுத்தவே தான் இப்படத்தை உருவாக்கியதாக சொல்கிறார்.

Guillaume Schiffman. படத்தின் ஒளிப்பதிவாளர், கறுப்பு வெள்ளை படம் என்ற போதும் கலரில் தான் படமாக்கபட்டிருக்கிறார், DI மூலம் நிற மாற்றம் செய்திருக்கிறார்கள், மொத்தம் 35 நாட்களில் முழுப்படம் உருவாக்கபட்டிருக்கிறது, ஸ்டுடியோ அரங்கிற்குள்ளாகவே மௌனப்படங்கள் எடுக்கபட்டன என்பதால் ஒளியை பயன்படுத்துவதில் அவர்களுக்கென விசேச பாணியிருந்தது, அதை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் ஷிப்மென்.

The Artist என்றோ ஹாலிவுட்டில் வாழ்ந்து மறைந்த ஒரு மௌனப்பட நாயகனின் கதைமட்டுமில்லை, தமிழின் மௌனப்பட, கறுப்புவெள்ளையுக நாயகர்கள் பலரது வாழ்க்கையும் இது போலதானிருந்திருக்கிறது, ஆனால் அவை பற்றிய பதிவுகள் நம்மிடையே இல்லை, அந்த நினைவுகளை இன்றைய தலைமுறையினருக்கு வலிமையாக அடையாளம் காட்டுவதே இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

**

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: