சிறியதே அழகு

Man is small, and, therefore, small is beautiful.

டாக்டர் ஈ.எப்.ஷுமாஸர் எழுதிய Small is Beautiful உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்று, தற்போது அந்நூல் சிறியதே அழகு எனத் தமிழில் எதிர்வெளியிடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, யூசுப் ராஜா  மொழியாக்கம் செய்திருக்கிறார்

சரளமான மொழிபெயர்ப்பு, அச்சில் தான் ஏகப்பட்ட குளறுபடிகள், பக்கம்மாறியிருப்பதும்,  ஒரு பக்கம் அச்சிட்டது மறுபக்கம் தெரிவதுமாக உள்ளது, இதற்காகவே முதல்தடவை வாங்கிய பிரதியை கடையில் கொடுத்து வேறு பிரதி மாற்றி வாங்கினேன், அதிலும் அப்படிதானிருக்கிறது, எனது நண்பர் வாங்கிய புத்தகத்தில் இருபது பக்கங்கள் இல்லவேயில்லை, இந்தக் குறைபாடுகளைத் தாண்டி முக்கியமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமிது

நவீனயுகத்தின் மனிதன் தனது பொருளாதார நிலையை வைத்தே தனது அடையாளத்தை முடிவு செய்பவனாகயிருக்கிறான், இன்றைய வணிகக் கலாச்சாரம் மனிதனைச் சூறாவளிக்குள் சிக்கிக் கொண்ட நெருக்கடியான மனநிலைக்கு தள்ளியிருக்கிறது, தனக்கு என்ன தேவை, எதற்காகத் தேவை, ஏன் எல்லா மதிப்பீடுகளையும் பொருளாதாரம் சார்ந்தே தீர்மானிக்கிறோம் என்பதில் இன்று பலருக்கும் குழப்பமான மனநிலையே நிலவுகிறது

பொருளாதாரத்தின் ஆதாரவளங்களை பற்றியும் சந்தை கலாச்சாரம் சார்ந்து உருவான சீர்கேடுகளையும் பற்றியும், பௌத்தப் பொருளாதாரக் கோட்பாட்டினை முன்வைத்து எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகமிது,

ஷுமாஸர் ஜெர்மனியில் பிறந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதரம் படித்தவர், நியூயார்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார், பின்பு பிரிட்டீஷ் தேசிய நிலக்கரிக் கழகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், பிரிட்டனின் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான சாயில் அசோஷியேசன் அமைப்பின் தலைவராகவும், ஸ்காட் பேடர் நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர்

1973ம் ஆண்டு சிறியதே அழகு புத்தகத்தை ஷுமாஸர் வெளியிட்ட போது அது கவனம் பெறவில்லை, ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்புத்தகம் மாற்றுப்பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கு பைபிள் போன்றாகியது, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல் மிக எளிமையாக, பொருளாதாரச் சீர்கேட்டின் ஆதாரக் காரணிகளைக் கண்டறிந்து அதற்கான மாற்றை முன்வைக்கிறது

அணுஆயுதத்தை எரிபொருளாகப் பயன்படுத்தலாமா, கூடாதா என்ற சர்சை மேலோங்கி வரும் இன்றைய சூழலில் சிறியதன் அழகு மிகத் தேவையான நூலாக உள்ளது,

நான்கு பகுதிகளாக உள்ள இப் புத்தகத்தின் மையக்கருத்து, மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள நினைத்து எவ்வாறு இயற்கையைச் சீரழிக்கிறான், அவனது பேராசைகள் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது, இதிலிருந்து விடுபட காந்தியப் பொருளாதார வழி எவ்வாறு உதவி செய்கிறது, பௌத்த பொருளாதாரச் சிந்தனைகளை ஏன் நாம் கைக்கொள்ளக்கூடாது என்பதே,

நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை எரிபொருள், இதற்காகவே யுத்தமும் ஆக்ரமிப்புகளும், படுகொலைகளும் நடைபெற்று வருகின்றன, இயற்கையின் மூலதனமான எரிபொருள்கள் பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வாறு உறிஞ்சி எடுக்கபட்டு மிகப்பெரிய வணிகமோசடி நடைபெற்று வருகிறது என்பதை உணர்ச்சிபூர்வமாக  விளக்கி அதன் பாதிப்புகளை அடையாளம் காட்டுகிறார் ஷுமாஸர்

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற புத்தகத்தை வாசித்தவர்களுக்கு எரிபொருளை பெறுவதற்காக அமெரிக்கா எவ்வளவு தந்திரங்களை மேற்கொள்கிறது என்பது துல்லியமாகப் புரியும்,

எரிபொருள் தேவைக்காக இயற்கை நூற்றாண்டுகாலமாக எவ்வாறு பயன்படுத்தபடுகிறது, அதனால் என்ன பொருளாதார மாறுபாடுகள் உருவாகின்றன,  என்பதை விரிவாக ஷுமாஸர் விளக்கிகாட்டுகிறார்

மனிதனின் பெரும்பான்மை மூலதனங்கள் இயற்கை தந்ததே, அதை இன்றைய நவீன மனிதன் உணர்வதேயில்லை, இயற்கையிடமிருந்து தனக்குத் தேவையானதைப் பிடுங்கி கொண்டு அதை முற்றிலுமாக அழித்தொழிக்கவே முற்படுகிறான், அதன் காரணமாகவே பெரும் இயந்திரங்களால் இயற்கை வளங்கள் அசுரவேகத்தில் உறிஞ்சி எடுக்கபடுகிறது, இதனால் நாட்டின் உற்பத்தி உயரும் என்ற பொய்யான பிம்பத்தை காட்டி இம்மோசடியை மறைத்துக் கொண்டு வருகிறார்கள்,

எரிபொருள் பயன்பாட்டில், ஏழைகளுக்கான சராசரி எரிபொருள் பயன்பாடு, பணக்காரர்களின் பயன்பாட்டில் பதினான்கில் ஒரு பங்கு மட்டுமே, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலே அடித்தட்டிலும் வறுமையிலும் தான் வசிக்கிறார்கள், ஆகவே இயற்கை வளத்தை சேதமுண்டாக்குவதிலும் சுயலாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதிலும் பணக்காரர்களே அதிகப் பங்கு வகிக்கிறார்கள்,

அவர்களின் நலன்களை மேம்படுத்தவே புதிய பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படுகிறது, எரிபொருளின் தேவையில் சாமான்ய மனிதன் மிகச் சொற்பமாகவே எதிர்பார்க்கிறான், அது கூட அவனுக்கு முறையாகக் கிடைப்பதில்லை என்பது தான் இன்றைய சூழல்,

இப்படி பணக்காரர்களின் நலனிற்காக எரிபொருட்கள் அதிகம் உறிஞ்சி எடுக்கபட்டு சந்தைப் பொருளாக பயன்படுத்தபட்டால் சுற்றுசூழல்சீர்கேடு அதிகமாகும், அதனால் அதிகம் பாதிக்கபடப் போவது ஏழை மக்களே, ஆகவே எரிபொருள் விற்பனை சந்தையில் அடிநிலை ஏழைகளே இருவிதத்திலும் பலியாகிறார்கள்.

மாற்று எரிபொருள் பற்றி சிந்திக்கும் அதே வேளையில் இயற்கையை  வணிக நிறுவனங்கள் நாசம் செய்வதை ஏன் பொருளாதார நிபுணர்கள் கண்டுகொள்வதேயில்லை என்பதே ஷுமாஸரின் முக்கியக் கேள்வி

அணுசக்தியைப் பயன்படுத்துவது என்பது மாற்று எரிபொருளுக்கான தீர்வில்லை, அது ஒரு எளிய ஏமாற்று, இதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதிப்புகளே அதிகம், படிமஎரிபொருள்களை எப்படிக் கையாளுவது என்று முறையான பங்கீடு மற்றும் சுயவரம்புகள், கட்டுபாடுகள் ஏற்படுத்தபடாதவரை எரிபொருள் சந்தை பன்னாட்டு வணிக கம்பெனிகளின் ஏகபோகச் சொத்தாகவே இருக்கும் என்கிறார் ஷுமாஸர்

வழக்கமான பொருளாதாரப் புத்தகங்களைப் போல புள்ளிவிபரங்கள், அதன் அடிப்படையிலான வரைபடங்கள், விளக்கங்களை முன்னிறுத்தாமல், மனிதனை அவன் வாழும் சூழல், மற்றும் அகபுற வளர்ச்சியோடு இணைத்து ஆராய்வதே இந்நூலின் தனித்துவம்,

இந்தியப்பொருளாதாரம் குறித்த காந்தியின் குரலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது ஷுமாஸரின் குரல், அவர் காந்தியை சமகாலத்தின் முக்கியமான பொருளாதாரச் சிந்தனையாளராக முன்வைக்கிறார்

அதிக அளவிலான உற்பத்தி (Mass production) என்பதை விட அதிக மக்களால் உருவாக்கபட்ட உற்பத்தி ( Production from Mass ) என்பது மேலானது என்ற காந்தியக் கோட்பாட்டினை வலியுறுத்தும் ஷுமாஸர் முழுமையாக நாம் இயந்திரங்களை கைவிட வேண்டிய அவசியமில்லை, மனிதனை மேம்படுத்தும் அளவிற்கு  தொழில்நுட்பத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும், அதற்கு இடைத்தரமான தொழில்நுட்பத்தின் தேவை அவசியம்,  அத்தகைய சூழல் மனிதனை இயந்திரங்களுக்கு அடிமையாக்கிவிடாது, அதே நேரம் மனிதஉழைப்பை மேம்படுத்தும் விதமாகவும் அமையும் என்கிறார்

பொருளாதாரம் எப்போதுமே வருங்காலம் என்ற சொல்லைக் காட்டி சாமான்யர்களைப் பயமுறுத்தி வருகிறது,  வருங்காலமோ, நிகழ்காலமோ எதுவாகயிருப்பினும் அங்கு வாழும் மனிதனின் அகம் மற்றும் புறச் சூழலே அவனது வாழ்வுமுறையைத் தீர்மானிக்கிறது, நம் காலத்தில் மனிதன் சீரழிந்துபோன அகத்தை கொண்டிருக்கிறான், அவனது சிந்தனையில் தெளிவில்லை, உள்ளத்தில் தூய்மையில்லை, மனதில் நேர்மையும் வாய்மையும் இல்லை, நீதியுணர்வு என்பது வணிகத்தோடு தொடர்பற்றது என்று நம்புகிறான், அது தான் இன்றையப் பொருளாதார சீர்கேட்டிற்கு முக்கியக் காரணம்,

ஒரு சமுதாயத்தில் நிலம் எப்படி பயன்படுத்தபடுகிறது என்பதை  வைத்தே அதன் எதிர்காலம் அமைகிறது, இன்று நிலம் வணிகக் காரணங்களால் பெரிதும் நாசமடைந்து வருகிறது, மனிதன் தனக்குக் கிடைத்துள்ள தொழில்நுட்பத்தின் வழியே இயற்கையின் எஜமானன் போலத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான், இது தற்காலிகமான ஒன்றே,

மனிதன் எந்த அளவு தொழில்நுட்பத்தில் மேம்பட்டாலும் அவன் இயற்கையின் குழந்தையே, ஒரு போதும் அவனால் இயற்கையின் எஜமானன் ஆக முடியாது, இயற்கைவிதிகளை மீறும் போது அது திருப்பி அடிக்கும், அந்தச் சீர்கேடு மனிதனை நிலைகுலையச் செய்துவிடும்,

இயற்கையைப் புரிந்து கொண்டு ஒன்றிணையாதவரை மனிதநாகரீகம் குறைபாடு கொண்ட ஒன்றே,

உணவுக்காக நிலத்தைச் சார்ந்திருப்பது ஒன்று தான் அதை முற்றிலும் கைவிடாமல் இருப்பதற்கான காரணம், ஒருவேளை மாற்று உணவுப்பொருள்கள் கிடைக்கும் பட்சத்தில் மனிதனின் பேராசை நிலத்தை முற்றிலும் நாசமடையச் செய்துவிடக்கூடும்

நிலத்தின் முறையான பயன்பாடு என்பது வெறும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தை சார்ந்த ஒன்றில்லை, மாறாக அது ஒரு மெய்விளக்க இயலைச் சார்ந்த ஒன்று என்கிறார் ஷுமாஸர்,

பகிர்ந்து தருதல், உடனிருந்து காத்தல், கைமாறு கருதாமல் உழைப்பது என்பது உயர்ந்த மனநிலையின் வெளிப்பாடு, அது விவசாயத்தின் அடிப்படையாக இருந்தது, நிலத்திடமிருந்து விவசாயி பொறுமையையும், விடாமுயற்சியையும், சமாதானத்தையும், மௌனத்தையும், தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் கற்றிருக்கிறான், அதை தான் இன்றைய தொழில்நுட்பம் சிதறடிக்கிறது, விவசாய நிலம் வணிகநிலமாக மாற்றப்படும் போது அதனோடு இணைந்த இந்த எளிய வாழ்க்கை முறை கைவிடப்பட நேர்கிறது, அது வருத்தப்பட வேண்டிய ஒன்று

உத்யோகத்தை போல விவசாயி வாரம் இரண்டுநாள் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாது, அது ஐந்து நாள் வேலையில்லை, ஆகவே விவசாயவேலை என்பதும், உத்யோகம் என்பதும் ஒன்றானதில்லை, வாரம் முழுக்க வேலை செய்பவன் குறைவாகச் சம்பாதிப்பதும், ஐந்து நாள் உத்யோகம் செய்பவன் அதிகம் சம்பாதிப்பதுமான முரணையே ஷுமாஸர் கேள்விகேட்கிறார்,

ஐந்து நாட்கள் மட்டுமே பால் தரும் பசு கண்டுபிடிக்காதவரை மனிதன் தன்னுடைய உழைப்பை உணர்ந்தே தீர வேண்டும்,என்பதே அவரது வாதம்

ஷுமாஸர் கருத்தின்படி தொழில்துறை இல்லாமல் மனிதவாழ்வு தொடரக்கூடியது, அப்படிதான் பல நூற்றாண்டுகள் மனிதன் வாழ்ந்திருந்தான், ஆனால் விவசாயம் இல்லாமல் போனால் மனித வாழ்வு பூமியில் இருந்து மறைந்து போய்விடும், ஆகவே விவசாயத்தைக் காத்தல் என்பது பூமியின் அடிப்படையான விதி, நிலத்தை நிர்வகிப்பதும் பராமரிப்பதும் மனிதனின் பெரும்பணி, அதை கைவிடும் போது மனிதன் மிகப்பெரிய சூழல்சார்ந்த பிரச்சனையைச் சந்திக்க நேரிடும்

இயற்கையுடன் இணைந்து மனிதன் வாழ வேண்டும் என்பது  விருப்பம் என்பதைத் தாண்டி கட்டாயமான தேவை என்ற நிலை வந்துவிட்டது, அதற்கு விவசாயம் சார்ந்த மாற்று வழிகள் முக்கியமானது. இயற்கையான விவசாய முறைகளே அதற்கான  உண்மையான மாற்றுவழிகள்,

பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் வாழ்க்கை முறையில் இருந்து மாறி தனது சுயதேவைகளை வரையறை செய்து கொள்வதுடன். போதுமானது என்று உணரும் மனதுடன், எளிய, உண்மையான, நீதியுணர்வுடன் உள்ள வாழ்க்கையை மனிதன் மேற்கொள்வதே எதிர்காலத்திற்கான வழி என்கிறார் ஷுமாஸர்

இன்றுள்ள பன்னாட்டு வணிகச்சூழலில் மனிதனின் அகத்தூய்மையைப் பொருளாதார வளர்ச்சியோடு இணைத்துப்பேசும் இப்புத்தகம் நிறைய யோசிக்கவும் மாற்றிக் கொள்ளவும் தூண்டுகிறது,

Buddhist sees the essence of civilisation not in a multiplication of wants but in the purification of human character. Character, at the same time, is formed primarily by a man’s work. And work, properly conducted in conditions of human dignity and freedom, blesses those who do it and equally their products.

என்ற ஷுமாஸரின் வரிகள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்றாகவே உள்ளது

••

0Shares
0