உளவாளிகளின் உலகம்

நேற்று சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் Tinker Tailor Soldier Spy என்ற பிரிட்டீஷ் திரில்லர் படம் திரையிடப்பட்டது, அத்திரைப்படம் பற்றி நான் ஒரு விரிவுரை நிகழ்த்தினேன், ப்யூஜி பிலிம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது

என்னோடு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினார், முன்னதாக மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்த ஏழு நிமிஷக் குறும்படம் ஒன்று ஒளிபரப்பபட்டது,

சர்க்கஸ் என்ற பிரிட்டீஷ் உளவுத்துறையின் தலைவராக இருக்கிறார் கண்ட்ரோல், இவர் ஹங்கேரியில் இருந்து  ஒரு ரகசியத் தகவலைப் பெறுவதற்காக ஒரு ஏஜென்டை அனுப்பி வைக்கிறார், அங்கே எதிர்பாராத விதமாக ஏஜென்ட் கொல்லப்படவே கண்ட்ரோல் மீது குற்றம் சுமத்தப்பட்டு பதவி விலகுகிறார், கண்ட்ரோலின் வலது கையாக இருப்பவர் ஜார்ஜ் ஸ்மைலி, கண்ட்ரோலுடன் சேர்ந்து பதவி விலகிய இவர் உளவுத்துறைக்குள் ஒரு ஐந்தாம்படை இருப்பதாக உணர்கிறார், அது யார் என்பதை ஸ்மைலி எப்படிக் கண்டறிகிறார் என்பதே படத்தின் மையக்கதை,

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மறுபதிப்பு போன்ற கதை, ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிரிட்டீஷ் உளவுத்துறையின் சார்பில் பாண்ட் துப்பறிவார்,  அதிலிருந்து மாறுபட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் டைப் துப்பறியும் கதையிது, வயதான ஸ்மைலி தான் இதன் ஷெர்லாக் ஹோம்ஸ்

அதிரடித் திருப்பங்கள், துப்பாக்கிச் சண்டைகள், பரபரபரப்பு என எதுவும் இல்லாமல், அதிகம் உரையாடல்களுடன் நகரும் திரைக்கதை, படத்தின் இருண்மையைப் பிரதிபலிக்கும் ஒளிப்பதிவு, சீரான எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக உள்ளது, ஆனால் கதை வழக்கமான பிரிட்டீஷ் பார்முலா.

ஹாலிவுட் திரில்லருக்கும் இப்படத்திற்குமான வித்தியாசம், ஹிட்ச்காக்கின்  திரைக்கதை அமைப்பிற்கும் இதற்குமான ஒப்பீடு, பிரிட்டீஷ் திரில்லருக்கும் பிரெஞ்சு திரில்லருக்குமான வேறுபாடு, சிட்பீல்ட் வகைத் திரைக்கதை அமைப்பில் இருந்து இத் திரைக்கதை எவ்வாறு வேறுபட்டிருக்கிறது, நாவலில் இருந்து எப்படி படம் உருவாக்கபட்டிருக்கிறது, கேரி ஒல்ட்மெனின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவின் தனித்துவம் என்பதைப் பற்றிப் பேசினேன், மாணவர்கள் நிறைய கேள்விகள் கேட்டார்கள், ஒரு மணி நேரக்கலந்துரையாடல் நடைபெற்றது

மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவு செய்த ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நண்பன் ஆகிய படங்கள் குறித்தும் Tinker Tailor Soldier Spy படத்தின் தொழில்நுட்பம் பற்றி விரிவாகப் பகிர்ந்து கொண்டார்

சென்னை திரைப்படக்கல்லூரி பராம்பரிய மிக்கது, அதன் உள்கட்டுமான வசதிகள் முறையாக மேம்படுத்தப்பட்டால் அது இந்தியாவின் மிக முக்கியமான கல்லூரியாக விளங்கும்,

பூனாவில் நடைபெறுவது போல சென்னைத் திரைப்படக்கல்லூரியில் கோடை விடுமுறையில் சினிமா ரசனையை மேம்படுத்தும் விதமாக ஒருமாதகால ரசனை வகுப்புகள் நடத்தலாம்,

இதில் உலகின் சிறந்த படங்களைத் திரையிடுவது, ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை எழுதுவது மற்றும் பிறதொழில்நுட்பங்கள் சார்ந்து தனி வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படலாம்,

இதனால் சினிமாவின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் பயனடைவார்கள்,

அது குறித்து அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசினேன், அவர்களும் ஆர்வத்துடன் தானிருக்கிறார்கள், ஆனால் அரசின் அனுமதியும், போதுமான ஊக்கத்தொகையும் தேவை,

இதற்கு மாற்றாக அரசுகல்லூரி இடம் மட்டும் தந்தால் போதும் திரைத்துறையில் உள்ள நண்பர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்த முகாமை வெற்றிகரமாக நடத்திவிடலாம் என்றேன்,

சாத்தியமாகக்கூடிய கனவு என்றே தோன்றுகிறது

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: