விகடன் ஒவியக்கண்காட்சி

தானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக விகடன் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து நிதிவுதவி பெற்று மறுசீரமைப்புப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது,

இதன் மூலம் தானொரு சமூகப்பொறுப்புமிக்க ஊடகம் என்பதை விகடன்  நிரூபணம் செய்திருக்கிறது, அதற்காக விகடன் நிறுவனத்திற்கும், துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானே புயலின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு நிதி திரட்ட ஒரு மாபெரும் ஒவியக்கண்காட்சி ஒன்றினை சென்னை லலித்கலா அகாதமியில் விகடன் நடத்திவருகிறது,

மார்ச் 5 முதல் நடைபெற்றுவருகின்ற இந்த ஒவியக்கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம்.

கண்காட்சியில் விற்பனையாகும் ஒவியங்களின் தொகை முழுவதும் தானே புயல் மறுசீரமைப்பு நிதிக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நற்காரியத்திற்காக தங்களது ஒவியங்களைத் தந்துதவிய ஒவியர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகள்.

புதன்கிழமை மாலை இந்த ஒவியக்கண்காட்சிக்குச் சென்றிருந்தேன், முழுமையாகப் பார்ப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது,

தோட்டாதரணி, ஆர்.பி.பாஸ்கரன், அச்சுதன் கூடலூர், மருது, ஆர்.எம்.பழனியப்பன், வீரசந்தானம், பி. பெருமாள், விஸ்வம், அல்போன்சா,டக்ளஸ், மனோகர், அரஸ், நடனம், மணியம் செல்வம், பி.எஸ்.நந்தன், நெடுஞ்செழியன் அபராஜிதன், ஸ்வேதா, இளையராஜா, மணிவண்ணன், ராஜன். பி. வெங்கடேசன், என பல முக்கியமான ஒவியர்களின் படைப்புகளைக் காணமுடிந்தது.

தானே புயலில் மரங்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளதைக் குறிக்கும் விதமாக மரத்தின் வடிவத்திற்குள் கைவிரல்களிருப்பது போன்று வரையப்பட்டுள்ள இதன் லோகோ ஒவியம் அற்புதமாக உள்ளது, ஒவியத்தை வரைந்தவர் சம்யுக்தா என்றார்கள், அவருக்கு என் அன்பான பாராட்டுகள்.

275 ஒவியர்களின் 325 ஒவியங்கள் ஒரே அரங்கில் காட்சிக்கு வைக்கபடுவது இதுவே முதல்முறை. அத்துடன் சமூகக்காரணம் கருதி நடத்தப்படும் மிகப்பெரிய ஒவிய நிகழ்வு இதுவே.

முன்னதாக ஈழப்போராட்டத்திற்கும், போபால் விஷவாயு சம்பவத்தினைக் கண்டித்தும் இது போன்று ஒவியக்கண்காட்சிகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, ஆனால் அந்த முயற்சிகளின் உச்சநிலையைப் போல் இதில் 275 ஒவியர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள், ஒவியர்கள் தங்களின் தூரிகையால் மக்களின் கண்ணீரைத் துடைக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.

தமிழகத்தை சுனாமி தாக்கிய போது ஏற்பட்ட பாதிப்பிற்கு பன்னாட்டு உதவிகளும், உடனடியான மறுசீரமைப்புப் பணிகளும் அதிவேகமாக நடைபெற்றன, ஆனால் கடலூரைப் பாதித்த தானேப் புயலின் சீற்றம் அதை விட மோசமானது, இந்த மாவட்டம் முழுமையாக இதிலிருந்து மீண்டுவர இருபது ஆண்டுகள் தேவைப்படும், அவ்வளவு மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது, அதை சென்னையோ, பிறமாவட்டங்களோ உணரவேயில்லை,

மறுசீரமைப்புப் பணிகள் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன, ஆனாலும் முறிந்து விழுந்த மரங்களையோ, தகர்ந்து போன இயற்கை ஆதாரங்களையோ உடனடியாக மீண்டும் உண்டாக்கிவிட முடியாது, தானே புயல் ஒரு கொடுங்கனவைப் போல அந்த மக்களின் நினைவில் நெடுங்காலம் நிலைத்தேயிருக்கும்.

இயக்குனர் தங்கர்பச்சான் தானே புயலால் பாதிக்கபட்ட மக்கள் குறித்து ஒரு ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார், அது புயல்சேதம் குறித்து விரிவாகப்பேசுகிறது.

புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கான மறுசீரமைப்பிற்காக விகடன் நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிகள் ஒரு முன்னோடி களச் செயல்பாடாகும், அதற்கு ஆதரவு அளிப்பதற்காக ஒவ்வொருவரும் அவசியம் இந்த ஒவியக்கண்காட்சியை தனது குடும்பத்தோடு பார்வையிட வேண்டும்,

முடிந்தால் இந்த ஒவியங்களை விலைக்கு வாங்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

துயருற்ற மக்களுக்காக அக்கறை கொள்வதும் ஆதரவு அளிப்பதுமே மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பதன் அடையாளம், அதைத் தான் இந்த ஒவியக்கண்காட்சி அடையாளப்படுத்துகிறது

•••

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: