தியான நடனம்

ருஷ்ய மெய்ஞானியான  குர்ஜீப்பின்(Gurdjieff) இளமைக்காலம் குறித்த Meetings with Remarkable Men படத்தை மூன்று நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன், 1979ம் ஆண்டு வெளியான இப்படத்தை பீட்டர்புரூக் இயக்கியிருக்கிறார், இவர் மகாபாரதத்தை நாடகமாகவும் திரைப்படமாகவும் இயக்கியவர், நவீன நாடக உலகில் தனிப்பெரும் ஆளுமை,  குர்ஜீப்பின் தத்துவச் செறிவான நினைவலைகளை பீட்டர்புரூக் ஆழ்ந்து புரிந்து கொண்டு சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

குர்ஜீப்பை எனது கல்லூரி நாட்களிலே படித்திருக்கிறேன், கவிஞர் தேவதச்சன் அறிமுகம் செய்து வைத்து Meetings with Remarkable Men நூலை அவசியம் படிக்க வேண்டும் என்றார், அதைத் தேடிப் படித்த பிறகு தொடர்ச்சியாக உஸ்பென்ஸ்கியையும் வாசித்தேன், இருவருமே அசலான மெய்தேடலாளர்கள்,

தனிமையும், தொடர்ச்சியான எனது பயணமும் குர்ஜீப்பின் மீது அதிக ஈடுபாடு கொள்ளச் செய்திருந்தது, அவரிடமிருந்து என்னை மீட்டது ருஷ்ய படைப்பிலக்கியவாதிகளே, ஏதோவொரு புள்ளியில் தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும், துர்கனேவும் குப்ரினும் எனக்குள் ஆவேசமாக இறங்கி ஆக்ரமித்துக் கொண்ட பிறகு குர்ஜீப்பிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தேன், பின்பு அவரை அதிகம் வாசிக்கவில்லை,

சமீபமாக அவரது  Meetings with Remarkable Men படத்தின் டிவிடி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்த போது உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றவேயில்லை, ஆனால் பத்து நாட்களுக்கு மேலாக டெல்லியில் சுற்றியலைந்து வீடு திரும்பிய இரவில் உடனே அதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது, படம் முடிந்தபோது மீண்டும் குர்ஜீப்பின் அருகாமையை நெகிழ்வாக உணர்ந்தேன்,

குர்ஜீப்பை அறிவது, நெருங்குவது என்பது ஒரு தனித்த அனுபவம், அது சந்தேகம் கேட்டு பதில் பெறும் வாதப்பிரதிவாதங்களுக்குள் அடங்காது, அவர் கூறுவதை உள்வாங்கி அனுபவிக்கும் நேரத்தில் மட்டுமே  குர்ஜீப்பின் மேதமையை ஒருவர் உணர முடியும், அதற்கு கட்டுபாடுகள் அற்ற பயணமும், வாழ்வை அதன் தீவிரத் தளத்தில் அனுபவிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

அன்றாட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு கட்டுக்குள் உழலும் மனிதனை தூக்கத்தில் நடப்பவன் என்று குர்ஜீப் கேலி செய்வார், அது மறுக்கமுடியாத உண்மை,

இயேசு, புத்தருக்கு இணையாக நம் காலத்தின் ஞானவழிகாட்டியாக குர்ஜீப்பை குறிப்பிடுகிறார் ஒஷோ,

குர்ஜீப்பின் மெய்தேடல் மற்ற ஞானிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது, இந்த வழிகாட்டுதலில் உடல் மற்றும் மனம் சார்ந்த கட்டுபாடுகள், ஒழுக்கவரம்புகள் கிடையாது,

வாழ்க்கையை ஆழ்ந்து ரசித்து கொண்டாடுவதன் வழியாக நமக்குள் ஆன்ம விழிப்புணர்வை ஏற்படுத்தி மெய்ஞானத்தை அடைய முடியும் என்ற நான்காவது வழியை குர்ஜீப் காட்டுகிறார்,

நாடோடி போல சுற்றியலைந்து தான் அறிந்த ஞானத்தை. மரபான ஆன்மீக கோட்பாடுகள் மற்றும் ஞானமார்க்கங்களின் உயர்கருத்துகளோடு ஒன்றிணைத்து அவர் தனது பாதையை உருவாக்கியிருக்கிறார்,

உண்மையைத் தேடுபவர்கள் என்ற ஒரு குழுவை அமைத்துக் கொண்டு இவர் மேற்கொண்ட பயணங்களும், அதில் வெளிப்படுத்திய ஞானமும் இவரை உலகின் முக்கிய மெய்ஞானியாக அடையாளம் காட்டின,

குர்ஜீப் ஒரு மோசடிப் பேர்வழி, பிளாக் மெஜிசன், போகத்திற்காக அலைபவர் என்று குற்றம்சாட்டுபவர்கள் ஒரு பக்கம் இருந்தார்கள், மறுபக்கம் இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என்று அவரைச்சுற்றி பெரிய நட்பு வட்டம் உருவானது.

ஆர்மீனியத் தாய்க்கும் கிரேக்கத் தந்தைக்கும் பிறந்தவர் குர்ஜீப், இசை நடனம், இலக்கியம், நுண்கலை என்று கலைகளின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த குர்ஜீப் மாஸ்கோவில் தனது ஆன்மீக விழிப்புணர்வு இயக்கத்தைத் துவக்கினார், இவரது மாணவர்களில் ஒருவரான உஸ்பென்ஸ்கி பின்னாளில் பெரிய தத்துவவாதியானார், உஸ்பென்ஸ்கி வழியாகவே குர்ஜீப்பின் ஞானம் உலக அளவில் கவனிக்கபட்டது, தனது பயணங்களை அறிவியலின் வழியே உண்மையை தேடும் யாத்திரையாக கூறிக் கொண்ட குர்ஜீப், கட்டுபாடுகள் அற்ற, சவாலும் சாகசமும், கேளிக்கைகளும் நிரம்பிய வாழ்க்கையைத்  தேடி வாழ்ந்திருக்கிறார்,

மனிதன் தனது முழுமையான சக்தியைக் கண்டறிய வேண்டும், அந்த பூரண நிலையில் தான் அவனது விழிப்புணர்வு சாத்தியமாகும் எனக் கூறும குர்ஜீப் நடைபாதை வியாபாரி, இசைக்கலைஞர், மோட்டார் மெக்கானிக், பனியன்வியாபாரி, பரிசாரகன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்திருக்கிறார்,

இயற்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு வாழ்வின் உண்மையான அர்த்தம் புரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதை நிவர்த்தி செய்ய வேண்டிய மதம் கூடுதலாகக் கட்டுப்பாடுகளை விதித்து மனிதனை ஒடுக்குகிறது,

உடல், மனம், மற்றும் உணர்ச்சிகள் ஆகிய மூன்று தளங்களில் மனிதன் தொடர்ந்து ஒடுக்கபடுகிறான், அவற்றிலிருந்து விடுபட்டு மனிதன் தன்னியல்பாக தனது முழுமையைக் கண்டறிய வேண்டும், அதற்காக குர்ஜீப் எளிய செயல்வழிகளை உருவாக்கினார்

அதில் ஒன்று இசையோடு கூடிய நடனம், குர்ஜீப்பின் நடனம் என்று சொல்லப்படும் அந்நடனம் உடலை அதன் கட்டிற்குள் இருந்து விடுவிக்கும் புதுவகை இசையோடு கூடிய ஆடல்முறையாக உருக்கொண்டது, இன்றும் அந்நடனம் ஆன்மீக விழிப்புணர்விற்கான தியான வழியாக  கொண்டாடப்படுகிறது

குர்ஜீப்பின் மெய்தேடுதல் இசையை முக்கியச் சாதனமாக முன்வைக்கிறது, அவரே ஒரு சிறந்த இசைக்கலைஞர், இப்படமும்  அப்படியான ஒரு இசை சங்கமத்தில் தான் துவங்குகிறது, குர்ஜீப்பின் அப்பா ஒரு பாணர், ஊர் ஊராகப் போய் கதைகளையும் பாடல்களையும் கவிபாடுவது அவரது வழக்கம், அவரைப்போல உள்ள பாணர்கள் ஆண்டுதோறும் சில இடங்களில் ஒன்று கூடி கவி பாடும் போட்டியை நடத்துவார்கள், அந்தப் போட்டியில் தனது பாடல் மற்றும் இசையால் யார் கல்லையும் உருக வைத்து தன்னோடு சேர்ந்து எதிரொலிக்க வைக்கிறார்களோ அவரே சிறந்த பாணர் என்று பரிசளிக்கப்படுவார், அந்தப் போட்டியை காண்பதற்காக சிறுவயதில் அப்பாவோடு போகிறார் குர்ஜீப், மரபு இசையும் கவிதையுமாக போட்டி நடைபெறுவதில் படம் துவங்குகிறது,

குர்ஜீப்பின் தந்தை அவரை ஒரு துறவியாக்க ஆசைப்படுகிறார், அவருக்கோ  மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது, இரண்டுமே உடலின் வழியே ஆன்மீக அனுபவத்தை அறிந்து கொள்ளும் வழிகள் தான் என்கிறார் தந்தை,

அப்பாவிற்கும் அவருக்குமான உறவு படத்தில் அழகாக சித்தரிக்கபட்டுள்ளது, சிறுவயதில் ஒருநாள் குர்ஜீப் தனது தந்தையிடம் அப்பா இப்போது கடவுள் எங்கேயிருப்பார், என்ன செய்து கொண்டிருப்பார் என்று கேட்கிறார்,

அப்பா ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் அவர் ஷாரிகாமிஷ் காட்டில் இருப்பார், மனிதர்கள் சந்தோஷத்தை அடைய வேண்டும் என்பதற்காக வானலோகம் போவதற்கு ஒரு ஏணியை செய்து கொண்டிருப்பார் என்று கூறுகிறார், அந்தப் பதிலில் அப்பா கடவுளை எப்படிப் புரிந்து வைத்திருந்தார் என்பதை தன்னால் உணர முடிந்ததாக குர்ஜீப் கூறுகிறார்,

அப்பா சொன்ன கதைகள், கவிதைகள் வழியாக அப்பாவை ஒரு மூத்த சகோதரனைப் போலவே உணர்ந்ததாகவே குர்ஜீப் நினைவு கொள்கிறார். குர்ஜீப் மேற்கொண்ட இடையுறாத பயணங்கள், சந்தித்த விசித்திரமான மனிதர்கள், அவரது காதல் மற்றும் கேளிக்கைகளைப் படம் விவரிக்கிறது

வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் போலின்றி இப்படம் அதிகமான துணைகதாபாத்திரங்கள், சிறிய நிகழ்வுகளின் மீது கட்டமைக்கபட்டிருக்கிறது,  இசையே படத்தின் ஆதாரம், மத்திய ஆசியாவினுள் குர்ஜீப் மேற்கொண்ட முடிவில்லாத பயணத்தின் வழியே நிகழ்வுகள் கடந்து போகின்றன,

Dragan Maksimovic குர்ஜீப்பாக நடித்திருக்கிறார், அதே கேலியான பார்வை, உணர்ச்சிகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் முகபாவம், உடல்மொழி என குர்ஜீப்பே நேரடியாக நடித்துள்ளது போல சிறப்பாக பங்களித்திருக்கிறார்

Prince Lubovedsky என்ற இளவரசனின் நட்பும் அவனது ஞானத்தேடுதலும் படத்தின் மையப்பகுதியாக உள்ளது, பாலைவனப்புயலை குர்ஜீப் காலில் உயரமான ஏணியை கட்டிக் கொண்டு கடக்கும் காட்சி மிக அருமையாகப் படமாக்கபட்டுள்ளது, நெருக்கடியின் போது மனிதமனம் விழிப்புணர்வு கொள்கிறது என்பதற்கு இக்காட்சியே சாட்சி

குர்ஜீப் அதிரடியாக தனது கருத்துக்களைச் சொல்லக்கூடியவர், குறிப்பாக இன்றைய மனிதன் ஏன் பணத்தாசை பிடித்து அலைகிறான் என்றதற்கு அவர் முக்கியமாக எதைக் குற்றம் சாட்டுகிறார் தெரியுமா, மனிதனை வழிநடத்தும் சிறந்த இலக்கியங்கள் இல்லாமல் போனதே பிரதான காரணம் என்கிறார்,

மானுட நாகரீகத்தின் வளர்ச்சியில் இலக்கியம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது, ஆனால் இருபதாம் நூற்றாண்டு நாகரீகம் இலக்கியத்தை சீரழிவு செய்திருக்கிறதேயின்றி அதை முறையாக வளர்த்தெடுக்கவில்லை, இந்த சீரழிவுப்போக்கினை வார்த்தை விபச்சாரம் என்றே அழைக்க வேண்டும்,

அனுபவத் தரித்திரம் கொண்ட எழுத்தாளர்கள், தங்களின் படைப்புகளை வெற்று அழகியல் வடிவத்துடன், பொய்யான கலகக்குரலுடன், சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள், சிந்தனையில் தெளிவில்லாமல் இருப்பதும், வாழ்பவனுபவங்களைக் கலையாக மாற்றத் தெரியாத தடுமாற்றமும், வணிக காரணங்களுக்கான ஏமாற்றுத்தனமும் இந்த சீரழிவிற்கான அடிப்படை காரணங்கள் என்கிறார் குர்ஜீப்

இவரது Beelzebub’s Tales to His Grandson, Life Is Real Only Then, When ‘I Am’ போன்றவை முக்கியமான நூல்கள்,

குர்ஜீப்பின் மெய்தேடல் பற்றி மார்க்ரெட் ஆன்டர்சன் குறிப்பிடும் இந்த வரிகளை குர்ஜீப் குறித்த எளிமையான விளக்கம் என்று கொள்ளலாம்

The first steps toward freedom are self-observation and ‘to know oneself’: the system of Gurdjieff begins with the scientific and neutral observation if oneself -with the examination of one’s own body in a scientific way: first, basing oneself on the physical center; later, making observations on the intellectual center and on the emotional center. The body is the only instrument with which to work. Make of it a good instrument. Do not allow it to control you. Our bodies are ‘fertilizer’ for the soul.

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: