வெறும்கால்வாசிகள்

மின்தட்டுபாடு தமிழகத்தை இருட்டிற்குள் தள்ளியுள்ள சூழலில் ராஜஸ்தானில் ஒரு கிராமம் முழுமையாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறது, இதற்கான உபகரணங்களைத் தயாரிப்பவர்களும், பயன்படுத்துவர்களும் கிராமத்துப் பெண்கள், அவர்களில் எவரும் முறையான கல்வியறிவு பெற்றவர்களில்லை, ஆனால் அவர்களால் எளிதாக சோலார் உபகரணங்களைத் தயாரிக்க முடிகிறது, கூடுதலாக இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் ஆப்ரிக்காவில் உள்ள கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலை ஒரு மின்னஞ்சல் வழியாக அறிந்த போது வியப்பாக இருந்தது,

எப்படி இது சாத்தியமானது என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் தேடி வாசித்த போது தான் திலோனாவில் உள்ள வெறும்கால் கல்லூரி (Barefoot College) பற்றி அறிந்து கொண்டேன்

ராஜஸ்தானில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதி திலோனா, இங்கே குடிநீர், சாலை, மருத்துவம், கல்வி, உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் பல காலமாக போராடியிருக்கிறார்கள்,

1972ல் டெல்லியைச் சேர்ந்த சஞ்சித் பங்கர் ராய் என்ற கல்வியாளர் கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் மரபான அறிவும், தனித்திறனும் தொழில்நுட்பங்களும் அடையாளம் காணப்பட்டு வாழ்வோடு இணைந்த கற்றுத்தருதல் அவசியம் என்று உணர்ந்திருக்கிறார், அதன் விளைவாக உருவாக்கபட்டதே இந்த வெறும்கால் கல்லூரி, எட்டு ஏக்கரில் இந்த கல்வி நிலையம் அமைந்துள்ளது, இது ஒரு ஒருங்கிணைந்த கல்விமுறை, இரவுப்பள்ளி, தொழில்பள்ளி, உயர்கல்வி என்று மூன்று தளங்களில் செயல்படுகிறது

இங்கே அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கல்வியே முதன்மையாக கற்பிக்கபடுகிறது,

வெறும்கால் மருத்துவர்கள் என்று கிராமப்புற மருத்துவர்களை அரசே அங்கீகரித்து அவர்களைப் படித்த மருத்துவர்களுடன் இணைந்து சேவை செய்ய வழி அமைத்து தந்தது மக்கள் சீனா, அதன் விளைவாக ஆரம்ப சுகாதாரம், மற்றும் கிராமப்புற மருத்துவ சிகிட்சைகள் மேம்பாடு அடைந்தன, அதே பாணியில் கிராமவாசிகளைக் கொண்டே அடிப்படைக் கல்வி கற்றுதரும் முயற்சியே வெறும்கால் கல்வி இயக்கம், இதை பங்கர் ராய் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்திய போது பலத்த எதிர்ப்பு இருந்தது, இன்று அது அங்கீகரிக்கபட்ட கல்விமுறையாக பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

படித்தவர்கள் தங்களது திறமையை விட சான்றிதழைத் தான் முக்கியமானதாக நினைக்கிறார்கள், படிக்காத கிராமவாசிகளோ எந்தச் சான்றிதழையும் வேண்டுவதில்லை, அவர்கள் சிறப்பாக, தனித்திறனுடன் உழைக்ககூடியவர் எவராக இருந்தாலும் அவருக்கு மரியாதை தருகிறார்கள், இணைந்து வேலை செய்ய முன்வருகிறார்கள், அந்த முறையைத் தான் இந்தக் கல்வி இயக்கம் முன்னெடுக்கிறது,

இக்கல்லூரியில் படித்த எவருக்கும் சான்றிதழ் வழங்கபடுவதில்லை, எம்டெக், எம்பிஏ படித்த எவருக்கும் இக்கல்லூரியில் வேலை கிடையாது, வருசத்திற்கு பல ஆயிரம் பக்கங்கள்  வெளியாகும் உலகவங்கியின் நிதிநிலை அறிக்கைகளை காகிதக்கூழ் ஆக்கி அதிலிருந்து பல்வேறு மாற்றுபொருட்களை செய்து கொள்வதாக பங்கர் ராய் கேலியாகக் கூறுகிறார்,

இங்கே அன்றாட வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு விவசாய முறைகள், அடிகுழாய் சரி செய்வது, நெசவு நெய்வது, குழந்தை பராமரிப்பு, வரவு செலவு கணக்கு எழுதுவது, பல்வைத்தியம், கட்டுமான வேலைகள், தச்சு வேலை, கிணறு தோண்டுதல், குடிநீரை சுத்தப்படுத்தும் முறை, ஆடுமாடுகளுக்கான வைத்தியம் செய்வது, மழை நீரை சேமிப்பது, கலைப்பொருட்கள் தயாரிப்பது, போன்றவற்றை எளிய முறையில் கற்றுதருகிறார்கள்.

இந்த கல்லூரியில், ஆசிரியர்களாக பணியாற்றுகின்றவர்கள் அத்தனை பேரும் கிராமவாசிகள், குறிப்பாக தனித்திறன் படைத்த தச்சர்கள், மேஸ்திரிகள், நெசவாளர்கள், நாட்டுபுற மருத்துவர்கள், விவசாயிகள், மற்றும் நுண்கலை கலைஞர்கள் தங்கள் அனுபவத்தைப் பாடமாக நடத்துகிறார்கள், வகுப்பில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது,

பள்ளி படிப்பைத் தொடர முடியாத சிறுவர்களுக்காகவும், வேலைக்கு செல்லும் பதின்வயது சிறார்களுக்காகவும் இரவுப் பள்ளியும் நடத்துகிறார்கள், இந்த பள்ளியும் முறைசாராதது,

இங்கே மாணவர்கள் ஒரு மாதிரி பாராளுமன்றத்தை நடத்துகிறார்கள், அவர்களுக்காகவே ஒரு பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார், துறை வாரியாக மந்திரிகள் நியமிக்கபடுகிறார்கள், அவர்கள் தான் இந்தக் கல்வி நிறுவனத்தை நிர்வாகம் செய்கிறார்கள்,

இதில் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட சிறுமி ஆடுமேய்கின்றவள், பகலில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்லும் இவள், இரவில் பள்ளியின் பிரதமர், இவளது ஆலோசனைப் படியே பள்ளி நடைபெறுகிறது, சிறந்த முன்மாதிரி பள்ளிக்கான பன்னாட்டு விருது பெறுவதற்காக இந்தச் சிறுமி ஸ்வீடன் சென்றிருந்தாள்,

விருதைப் பாராட்டும் விதமாக நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட ஸ்வீடனின் ராணி, அந்த சிறுமியின் தைரியத்தை கண்டு வியந்து பனிரெண்டுவயது சிறுமிக்குள் எப்படி இவ்வளவு ஆற்றல் வந்தது என்று பங்கர் ராயிடம் கேட்டிருக்கிறார்,

அதற்கு அந்தச் சிறுமி, தான் ஒன்றும் வெறும் ஆள் இல்லை, தானும் ஒரு பிரதமர் தான் என்று ராணியிடம் எடுத்துச் சொல்லும்படியாக சொல்லியிருக்கிறாள், அந்த நம்பிக்கையும் உறுதியும் தான் பள்ளியை உலக அளவில் புகழ்பெறச் செய்திருக்கிறது என்கிறார் பங்கர் ராய்

கிராமவாசிகள் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ள வீணாகும் மழைநீரை ஒரு பெரிய கிணற்றில் சேகரம் செய்து அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், ஊரில் உள்ள பெரும்பான்மை பெண்களுக்கு சோலார் குக்கர் செய்வதும், சோலார் விளக்குகள் செய்வதும் அத்துபடியாக இருக்கிறது, அது போலவே கட்டுமானப் பணிகளிலும் இந்த கிராமவாசிகள் பல புதுமைகளை செய்திருக்கிறார்கள்,

சமையலுக்கும், விளக்கு எரிவதற்கும் பள்ளியில் உள்ள கணிப்பொறி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் இயங்குவதற்கும் சூரிய சக்தியே பயன்படுத்தபடுகிறது, இந்தியாவில் முழுமையாக சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி நடைபெறும் கல்வி நிறுவனம் இது ஒன்றே,

சூரிய சக்தியை சேமிப்பதிலும், அதன் பயன்பாட்டினை உலகறியச் செய்வதிலும் முன்னோடியாக செயல்படுவதால் இக்கல்லூரி  சிறப்பு விருது பெற்றிருக்கிறது

இக்கல்லூரியில் வீணாகப் தூக்கி எறியப்படுகின்ற காகிதங்களைக் கொண்டு புதிய வீட்டுஉபயோகப் பொருட்களை செய்வது, குறைந்த செலவில் வீடுகள் கட்டுவது, அறிவியலை மக்களிடையே பரப்புவதற்காக காகிதப்பொம்மைகள் செய்து பொம்மலாட்டம் நடத்துவது  என கிராமவாசிகள் பல்துறைகள் சார்ந்து புதிய  முனைப்புடன் செயல்படுகிறார்கள்,

காந்தியவாதியான பங்கர் ராய் கிராமப்புற கல்வியில் மாற்றம் நடைபெறாமல் இந்தியா வளர்ச்சியடைய முடியாது என்று தீவிரமாக நம்புகின்றவர், ஆகவே ராஜஸ்தானில் துவங்கிய இந்த வெறும்கால் கல்விமுறையை லடாக்கின் கிராமப்புறங்களுக்கு அறிமுகம் செய்து வெற்றி பெற்றதோடு, 13 நாடுகளில் தங்களது சூரிய சக்தியை சேமிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்,

திலோனாவில் கிராமவாசிகள் அமைத்த கட்டிடத்திற்கு Aga Khan Award for Architecture விருது கிடைத்திருக்கிறது. கல்வி முற்றிலும் வணிகமயமாகி வரும் சூழலில் இது போன்ற மாற்றுமுயற்சிகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன

knowledge, skills and wisdom found in villages should be used for its development before getting skills from outside. என்பதே இக்கல்வி இயக்கத்தின் அடிப்படை

தான் காந்தியச் சிந்தனையை முன்னெடுப்பதாகச் சொல்லும் பங்கர் ராய், காந்தியின் மேற்கோள் ஒன்றினை சுட்டிக்காட்டுகிறார்

Gandhi once said that there is a difference between Literacy and Education. The Barefoot College believes that ‘literacy’ is what one acquires in school, but ‘education’ is what one gains from family, traditions, culture, environment and personal experiences. Both are important for individual growth. At the College, everyone is considered an education resource, the teacher as well as the student and the literate as well as illiterate. Therefore, the Barefoot College is a radical departure from the traditional concept of a ‘college’.

பங்கர் ராயின் உரை இந்த இணைப்பில் உள்ளது

http://www.ted.com/talks/bunker_roy.html

•••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: