ஜேகே

நேற்று ஜெயகாந்தனின் 78வது பிறந்த நாள், காலையில் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன், வாசகர்கள், நண்பர்கள், இடதுசாரித்தோழர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள்.

எப்போதுமே ஜெயகாந்தனோடு பேசிக் கொண்டிருப்பது மிகுந்த உத்வேகம் தரக்கூடியது, நேற்றும் அப்படியே இருந்தது, முதுமையின் தளர்ச்சியிருந்த போதும் அவரது தீர்க்கமான பதில்களும், கேலியும் அனைவரையும் உற்சாகமூட்டியது,

ஜேகேயின் வீட்டில் அவரது இளையமகள் தீபாவைச் சந்தித்து பேசியது சந்தோஷம் தருவதாக இருந்தது, அவர் வலைப்பதிவுகளில் சிறப்பாக எழுதி வருபவர், ஜெயகாந்தனோடு மதிய உணவு அருந்தும் போது எழுத்தாளர் மாதவராஜின் மகளைச் சந்தித்தேன், ஊடகத்துறையில் படித்துக் கொண்டிருக்கிறார், புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வமிக்கவர் என்பதை அவர் புகைப்படம் எடுக்கும் தனித்துவத்திலே தெரிந்தது.

மாலை ரஷ்யக் கலாச்சார மையத்தில் ஜெயகாந்தனைப் பற்றி கனடா மூர்த்தி உருவாக்கியுள்ள ஜெயகாந்தன் உலகப்பொதுமனிதன் என்ற  டாகுமெண்டரி படத்தின் வெளியீட்டுவிழா நடைபெற்றது, ஜெயகாந்தனின் பல்வேறு மேடைப்பேச்சுகள், மற்றும் உரத்த சிந்தனைகளையும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் ஜெயகாந்தன் படைப்புலகம் குறித்த விரிவான ஆய்வுரையும் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இந்த ஆணவப்படத்தின் சிறப்பு.

நான் அந்த டாகுமெண்டரியை வெளியிட்டுப் பேசினேன், பேச்சின் போது ஜேகேயை எனக்கு அறிமுகம் செய்துவைத்து படிக்கும்படி தூண்டிய எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி பற்றி நினைவு கூர்ந்தேன், தனுஷ்கோடியின் பேச்சும், மீசை முறுக்கலும், சிந்தனையும் ஜேகேயின் பாதிப்பில் உருவானவை,

தனுஷ்கோடி ராமசாமி ஒரு அற்புதமான மனிதர், சிறந்த பேச்சாளர், குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர்,  பள்ளியில் எனது அண்ணனின் தமிழ் ஆசிரியர், அவர் ஜெயகாந்தனின் படைப்புகள் பற்றிப் பேசும் போது எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டு விடுவார், விடுமுறை நாட்களில்  அவரது வீட்டிற்குக் காலையில் சென்று மாலை வரை பேசிக் கொண்டிருப்போம், விருந்தோம்பலில் அவரைப் போன்ற ஒருவரைக்காண முடியாது,

இன்றும் சாத்தூர் நகரெங்கும் தனுஷ்கோடியின் நினைவுகள் மிதந்தபடியே இருக்கின்றன, அவர் மறைந்த போதும் அவரது கம்பீரமான குரல் மனதில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

ஜேகே இப்படி தமிழகமெங்கும் எத்தனையோ எழுத்தாளர்களுக்கு, இலக்கிய வாசகர்களுக்கு, ஆசிரியர்களுக்கு பேராசானாக இருந்திருக்கிறார் என்பது தான் தனிச்சிறப்பு.

ஜெயகாந்தன் டாகுமெண்டரியைப் ரஷ்யத் தூதுவர்  பெற்றுக் கொண்டார், நிகழ்வை ருஷ்யக் கலாச்சார மையத்தைச் சேர்ந்த தங்கப்பன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார், விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா, எடிட்டர் லெனின், இலக்கிய விமர்சகர் சிவத்தம்பியின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

***

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: