புரூகேலின் வேட்டைக்காரர்கள்

பீட்டர் புரூகேலின் (Pieter  Bruegel)  The Hunters in the Snow ஒவியத்தின் பிரதி ஒன்றை என் அறையில் மாட்டி வைத்திருக்கிறேன், ஒவ்வொரு நாளும் காலையில் அதைச் சில நிமிஷங்கள் பார்த்துக் கொண்டேயிருப்பது எனது வழக்கம். அது தான் எனது தியானம்

மெல்ல அந்த ஒவியம் என் மனம் முழுவதும் நிரம்பும் வரை அதைப்பார்த்தபடியே இருப்பேன், ஒவியத்திலிருந்து கிடைத்த குளிர்ச்சியும், சில்லிடலும் மனதை மலர்ச்சி கொள்ளச் செய்யும், பின்பு அன்றாடப் பணிகளை நோக்கித் திரும்பிவிடுவேன், அந்த ஒவியம் ஐநூறு வருசஷங்களுக்கு முன்பு வரையப்பட்டது, ஆனால் அதில் பழமை என்று ஒரு துளியும் இல்லை என்றே எப்போதும் உணர்க்கிறேன்.

ஒவியத்தின் பனிபடர்ந்த வெளி, உறைந்து போன வீடுகள், பாதி பறந்த நிலையில் உள்ள காகம், வேட்டை முடித்து திரும்பும் மனிதர்களின் நிழல் உருவம், பனிபடர்ந்த பள்ளதாக்கினுள் விளையாடும் சிறார்கள், உயர்ந்த பனிசிகரம், முற்றிலும் இலைகள் உதிர்ந்த மரம் என இந்த ஒவியம் எதைஎதையோ நினைவுபடுத்தியபடியும், மகத்தான கனவின் உதிர்ந்த சிறகு ஒன்றை போலவும் இருக்கிறது.

புரூகேலின் இரண்டு ஒவியங்கள் என்னிடமிருக்கின்றன, அவை மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் மௌனமாக உலகை வேடிக்கை பார்ப்பதைப் போல எனது அறையைப் பார்த்தபடியே இருக்கின்றன, என்னைப் பார்க்க வந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் அரிதாக அந்த ஒவியத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள், மற்றவர்களுக்கு அது வெறும் சுவர் அலங்காரம் மட்டுமே.

முதன்முறையாக புரூகேலின் இந்த ஒவியத்தை கல்லூரி நூலகத்தில் இருந்த ஒவியத்தொகுப்பு நூல் ஒன்றில் கண்ட போது ஏற்பட்ட பரவசம் இன்றுமிருக்கிறது, இது போன்ற பனிபிரதேசத்தையோ,  வேட்டையில் இருந்து திரும்பும் நாய்களையோ நான் நேரில் கண்டதேயில்லை, ஆனால் ஒவியத்தின் வழியே அந்த உலகத்தினுள் நானும் ஒரு வீடு திரும்பும் மனிதனாகி விட்டதாகவே உணர்கிறேன்,

பனி மலையின் சரிவில் உள்ள ஊரும், சறுக்கி விளையாடும் சிறார்களின் உற்சாகமும், புகைப்போக்கிகளும், மரக்கிளையில் அமர்ந்துள்ள காகமும் மிகுந்த உயிரோட்டத்துடன் இருக்கின்றன, இவ்வளவு அகன்று விரிந்த காட்சியை வெறும் கண்களால் காண முடியாது, கேமிரா வழியாகப் பார்த்தால் கூட முன்வரிசையில் உள்ள துல்லியம் போல கடைக்கோடியில் உள்ள மரங்களின் அசைவைக் காணமுடியாது, அதற்கு விசேசமான லென்ஸின் உதவி தேவை, ஆனால் புரூகேல் இந்த நிலக்காட்சியைத் தனது தூரிகையால் சாத்தியப்படுத்தியிருக்கிறார், அது தான் கலையின் வெற்றி

ஒவியத்தினுள் உள்ள மரங்களின் பிரம்மாண்டம் மலையை விடவும் பெரியதாக உள்ளது, அதனை ஒட்டி வீடு திரும்பும் அந்த வேட்டைகாரர்களின் தளர்ச்சியான நடை, அவர்களோடு திரும்பி வரும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள், அவற்றின் வில் போன்ற உடல்வாகு, ஒரு நாய் போல இன்னொரு நாய் வரையப்படவில்லை என்பது முக்கியமானது

இந்த ஒவியத்தை பார்க்கும் போதெல்லாம் மனது மிகுந்த உவகை கொள்கிறது, அந்த காகங்களில் ஒன்றைப் போல நானும் பனியின் மீது பறந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்,

பீட்டர் புரூகேல் ஒரு ஒவிய மேதை, அவரது ஒவியங்களின் மூலத்தை நான் கண்டதில்லை, ஆனால் அதன் பிரதிகள் கொண்ட மிகப்பெரிய ஒவியப்புத்தகம் என்னிடமிருக்கிறது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப்புரட்டி பார்ப்பேன், கலையின் உன்னதங்கள் என்று அவற்றை தான் சொல்ல வேண்டும்,

புரூகேலின் ஒவியங்களுக்குள் இசை படிந்திருக்கிறது, என்னால் அந்த ஒவியத்திலிருந்து வரும் சங்கீதத்தை கேட்க முடிகிறது, புரூகேல் என்ற மகத்தான கலைஞன் இயற்கையின் விந்தைகளைத் தனது தூரிகையால் என்று அழியாத உயிரோவியமாக்கிப் போயிருக்கிறான்,

பனியினுள் வேட்டைக்காரர்கள் என்ற இந்த ஒவியத்தின் இடதுபக்க கீழ்புறத்தில் நாய்களும் வேட்டைக்காரர்களும் இருக்கிறார்கள், வலதுபக்கத்தின் மேல்புறத்தில் பெரிய பனிசிகரங்கள் உள்ளது, ஒன்று இயக்கம், மற்றது சலனமின்மை, இரண்டுக்கும் நடுவில் சிறார்களும், வீடுகளும், தேவாலயமும், பணியாட்களும், சுமை தூக்கிப் போகும் பெண்களும் காணப்படுகிறார்கள், ஏதோவொரு வகையில் இயற்கையோடு மனிதன் பொருந்திப் போக ஆசைப்படுவதையே ஒவியம் சித்தரிக்கிறது

எல்லா நேரங்களிலும் மனிதர்கள் இயற்கை குறித்து சந்தோஷம் கொள்வதில்லை , குறிப்பாக பனி காலத்தில் இயற்கை மனிதர்கள் மீது கருணை காட்டுவதில்லை என்ற எண்ணமே மனிதனுக்கு எப்போதும் இருக்கிறது, அப்போது இயற்கை அனுமதித்த அளவில் தான் வாழ்வின் வட்டம் அமைகிறது,

அந்தப் போராட்ட காலத்தில் மனிதன் இயற்கையின் முன்பாக சரணாகதி அடைந்துவிடுகிறான், உருகும் பனியை வேடிக்கை பார்ப்பது வெறும் ரசனை மட்டுமில்லை, அது ஒரு விதமான விடுதலை உணர்வு, அந்த பரவசத்தை பனிமூடிய உலகில் வாழும்போது தான் அறிந்து கொள்ள முடியும், ஒவியம் அந்த வாழ்வியல் அனுபவத்தை கலையின் வழியே அனைவருக்கும் சாத்தியமாக்கி காட்டுகிறது,

பனியில் பதிந்துள்ள நாய்களின் காலடி தடங்களும் வேட்டைகாரர்களின் கால்தடங்களும் கூட கவனமாக ஒவியத்தில் பதிவாகி உள்ளன, இது போன்ற நுண்மை தான் படத்தின் தனிச்சிறப்பு

புரூகேலின் இந்த ஒவியத்தில் மனிதர்கள் நிழல் உருவங்கள் போல கறுத்துப் போயிருக்கிறார்கள், பனி மட்டுமே வெண்மையாக ஒளிர்கிறது, வெகுதொலைவில் ஒரு பாரவண்டி நிற்பதும், அதன் முன்பாக ஒரு மனிதன் எறும்பைப் போல கடப்பதும் ஆச்சரியமூட்டுகிறது

வேட்டைக்குப் போய் வீடு திரும்பும் மனிதர்கள் தோற்றத்தில் தான் எவ்வளவு அசதி, அவர்கள் நினைத்த வேட்டை கிடைக்கவில்லை போலும், அவர்களில் ஒருவன் ஒரு நரியை வேட்டையாடியிருக்கிறான், அது ஒரு குச்சியில்  தொங்கிக் கொண்டிருக்கிறது, என்ன வேட்டைக்குப் போனார்கள், ஏன் வெறும் ஆளாக திரும்பி வருகிறார்கள் என்ற கேள்வி ஒவ்வொரு முறையும் மனதில் எழுந்து அடங்குகிறது,

இயற்கையின் முன்பு மனிதன் வெறும் விளையாட்டு பொம்மையே என்பது போல தான் பனிமலையின் முன்பாக அந்த வேட்டைகாரர்களின் நிழல்தோற்றம் உள்ளது, அவர்கள் வருகையை அறியாதவர்களாக சிறுவர்கள் பனியில் சறுக்கிவிளையாடிக்  கொண்டிருக்கிறார்கள், சிறார்களின் வேடிக்கைச் சப்தம் ஒவியத்தினுள் புதையுண்டிருக்கிறது. பனியில் இருந்து பிறக்கும் காற்று ஒவியத்தினுள் அலைந்தபடி இருப்பதை ஒவியம் உணர்த்துகிறது , உறைந்த நிலையில் உள்ள காகத்தின் தோற்றம் ஒவியனின் மனம் லயத்துப் போயிருப்பதை காட்டுவது போலவேயிருக்கிறது,

பனிபடிந்த கூரையோடு உள்ள செம்மைநிற வீடுகள், அங்கே பனியின் ஊடேயும் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்கள், அவர்களின் முக்காடு இடப்பட்ட தலை, அடர்ந்த உடுப்புகள், புரூகேல் இந்த ஒவியத்தின் வழியே இயற்கையின் விசித்திரமான இயல்பைப் புரிந்து கொள்ள வைக்கிறார்

காண் உலகின் யதார்த்தத்திற்கும், கலையின் யதார்த்தத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது, காண்உலகில் நாம் பொருள்களின் புறத்தோற்றத்தையும் அதன் இயக்கம் இயக்கமின்மை இரண்டையும் மட்டுமே முதன்மைபடுத்துகிறோம், கலையோ அந்த இயக்கதின் பின்னுள்ள விசையை, உணர்ச்சிகளை, பொருள்களின் இயல்பு நிலையை, அதன் அரூபத்தை, பொருள்கள் சுட்டும் நினைவை, காணும் தோற்றத்தின் மாறுபட்ட கோணத்தை முன்வைக்கிறது, அந்த வகையில் கலையின் வழியே தான் காண் உலகின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது, அவ்வகையில் புருகேலீன் ஒவியத்தை நுட்பமாக ரசிக்கத் துவங்கிய ஒருவன் மெல்ல வெளியுலகின் காட்சிகளை  யாரோ ஒரு மகத்தான ஒவியன் வரைந்த ஒவியங்கள் என்பது போல நுட்பமாக ரசிக்க ஆரம்பிப்பான், கூடுதலாக காண் உலகின் மீது அவனுக்கு ஏற்பட்டிருந்த காரணமற்ற சலிப்பைப் போக்கி அதை தீராத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உணர்வான்.

புரூகேல் பிளெமிஷ் ஒவியர்,  விவசாயிகளின் அன்றாட உலகை ஒவியமாக்கியவர், குறிப்பாக கிராமத்து திருவிழாகள், அறுவடைகள், பழமொழிகள், நடனங்கள் என்று இவர் தீட்டிய ஒவியங்கள் பதினாறாம் நூற்றாண்டு குறித்த அரிய ஆவணப்பதிவுகளாகும், எளிய மக்களை அதிகம் ஒவியம் வரைந்த காரணத்திற்காக இவரை விவசாயக் கலைஞன் புரூகேல் என்று மக்கள் கொண்டாடினார்கள், செதுக்கோவியத்தில்  சிறந்த இவர் புனித நூலில் கூறப்பட்டுள்ள ஏழு பாவங்கள் குறித்து  அற்புதமான செதுக்கோவியங்களை உருவாக்கியிருக்கிறார், இவரது பேபல் ஒவியமும் குறிப்பிடத்தக்க ஒன்று

பருவகாலங்களைப் பற்றிய ஒவியங்களை வரைந்து தரும்படியாக நிகோலஸ் ஹெலின்ச் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புருகேல் வரைந்த ஒவியங்களில் ஐந்து தான் தற்போது காணக்கிடைக்கிறது

பனியினுள் வேட்டைகாரர்கள் என்ற இந்த ஒவியம் இயற்கையோடு இணைந்த வாழ்வின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு நாளும் உணர்த்தியபடியே உள்ளது,

புரூகேலின் ஒவியத்திலுள்ள காகத்திற்கு, நாய்களுக்கு நான் பெயர் வைத்திருக்கிறேன், அந்தப் பெயர்கள் மிக ரகசியமானவை, அவை நான் அழைப்பதற்காக உருவாக்கிக் கொண்டவை, என் வரையில் அவை நித்யமானதொரு உலகில் எப்போதும் இயங்கியபடியே இருக்கின்றன

•••

0Shares
0