பியர் பூர்தியு

பியர் பூர்தியு (Pierre Bourdieu) பிரெஞ்சின் முக்கியமான சமூகவியல் சிந்தனையாளர்,  தொலைக்காட்சியின் செயல்பாட்டின் பின்னுள்ள அரசியலை, பார்வையாளனின் உளவியலை, பொறுப்புணர்வைக் குறித்து எழுதியுள்ள  தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் என்ற புத்தகம் மிக முக்கியமான ஒன்று, இந்திய மொழிகளில் தமிழில் மட்டும் தான் இந்த நூல் வெளியாகி உள்ளது, பிரெஞ்சில் இருந்து நேரடியாக இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம் 2004ல் வெளியிட்டுள்ளது,

சராசரியாக ஒரு பார்வையாளன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது தொலைக்காட்சி பார்க்கிறான் என்கிறது புள்ளிவிபரம்,

எண்ணிக்கையற்ற சேனல்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விவாதங்கள், இருபத்திநாலு மணி நேர செய்திகள்,  கலந்துரையாடல்கள், விளையாட்டு, ரியாலிட்டி ஷோ, சங்கீதப்போட்டிகள், சினிமா, பக்தி, மருத்துவம், நகைச்சுவை, வணிகம் என்று தொலைக்காட்சி பலகூறுகளை ஒருங்கே கொண்ட அசுரஊடகமாக வளர்ந்து நிற்கும் சூழலில் அது குறித்து ஆழ்ந்த விவாதங்களோ, விமர்சனங்களோ, தொலைக்காட்சியின் தாக்கம் குறித்த உளவியல் ஆய்வுகளோ தமிழில் வெளியாவதில்லை,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து தனியே விவாதிக்கக்கூடிய இதழ்களோ, இணைய தளங்களோ கூட இன்றுவரையில்லை.

ஆனால் சமூகசிந்தனைகளை உருவாக்குவதில் தொலைக்காட்சியே முக்கிய பங்கினை ஆற்றிவருகிறது, மார்ஷல் மெக்கலன்  தொலைக்காட்சி குறித்து எழுதிய understanding Media: The Extensions of Man மிக முக்கியமான ஒன்று, அதன்பிறகு பியர் பூர்தியுவின் இந்த நூலே ஊடகத்தின் பின்னுள்ள மறைமுகக் காரணிகளை துல்லியமாக ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது.

வேடிக்கையான முரண் என்னவென்றால் தொலைக்காட்சியின் அதிகார அரசியல் பற்றி அவர் தொலைக்காட்சியின் வழியே தான் பேசியிருக்கிறார், இந்நூல் அவரது புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாகும்.

பியர் பூர்தியுவை அறிமுகப்படுத்தும் ரோலன் லார்தின்வா தொலைக்காட்சி குறித்து சுட்டிக்காட்டும் உண்மை இப்படிதானிருக்கிறது,

மக்களில் பெரும்பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தை தொலைக்காட்சி தானாகவே அபகரித்துக் கொண்டுவிட்டது, அதற்கு முன்பெல்லாம் கல்விபோதிக்கும் இச் செயல்பாடானது மரபுபடி குடும்பங்களின் கட்டுபாடில் இருந்தது, பின்பு இது கல்விநிறுவனங்களின் கட்டுபாடிற்கு வந்த்து, இன்று அதிலிருந்து மாறி தொலைக்காட்சியின் கைக்கு போயிருக்கிறது,

இது தான் ஆராயப்பட வேண்டிய முக்கிய அம்சம், தொலைக்காட்சி மறைமுகமாகப் பார்வையாளனுக்கு நிறையக் கற்றுத்தந்தபடியே இருக்கிறது, என்ன கற்றுத்தருகிறது, ஏன் கற்றுத்தருகிறது, கற்றுத் தருவது சரியானது தானா என்பதையே நாம் ஆராய வேண்டியிருக்கிறது என்கிறார் பியர் பூர்தியு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கருத்துச்  சொல்வதன் வழியே எவரும் ஒரு எழுத்தாளராகவோ, சமூகவியல் சிந்தனையாளராகவே, அரசியல் விமர்சகராகவோ மாறிவிடமுடிகிறது,

இதற்கு முந்தைய காலங்களில் இப்படியொரு அடையாளத்தை ஒருவர் அடைவதற்கு அவர் துறை சார்ந்து தொடர்ச்சியாகச் செயல்பட்டு அதன் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும், தொலைக்காட்சி அதை தூக்கி எறிந்துவிட்டு எவரையும் எந்த முகாந்தரமும் இன்றி ஒரு அறிஞராக முன்னிறுத்தி அங்கீகாரம் பெற்று தந்துவிடுகிறது,  இதனால் பல பெயரளவிலான எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தொலைக்காட்சியின் வழியே உலவத் துவங்குகிறார்கள், இந்த போலி சிந்தனையாளர்கள்  தொலைக்காட்சியில் தோன்றுவதன் ஒரே நோக்கம் தன்னைத் திரையில் காட்டிக் கொள்வது மட்டும் தான், மற்றவர்களால் தான் பார்க்கபட வேண்டும் என்பதற்காக, கலந்து கொள்ளும் இந்த தொலைக்காட்சிஜீவராசிகள் எதுகுறித்தும் ஆழமான பார்வையோ, அறிவோ கொண்டிருப்பதில்லை என்பது தான் நிஜம் என்கிறார் பியர் பூர்தியு.

இப்படிச் செயல்படுவதன் காரணமாக இதன் முந்தைய காலங்களில் இலக்கியம், இதழியல், சமூக ஆய்வுகள் போன்றவை தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்த அதன் பண்புகள் மற்றும் அறம் முற்றிலும் புறக்கணிக்கபடுவதுடன் அறிஞர்களை உருவாக்கும் பாப்கார்ன் இயந்திரமாக மாறிவிடுகிறது தொலைக்காட்சி,

அதைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்வதில்லை,  திரையில் தோன்றி ஒருவர் கருத்து  சொல்வது நாளிதழ்களில், கலைஇலக்கிய இதழ்களில் எழுதப்படும் ஆழமான கட்டுரைகளை விட முக்கியமானது என்று பார்வையாளர்கள் நம்ப ஆரம்பிக்கிறார்கள், இது ஒரு மறைமுகமான மோசடி என்கிறார் பியர் பூர்தியு.

நிகழ்ச்சிகளின் உருவாக்கம், அதன் பின்னுள்ள உளவியலை சொல்லும் போது, செய்தி ஒளிபரப்பின் பின்னே சில செய்திகள் எவ்வாறு முதன்மைபடுத்தபடுகின்றன என்பதை சொல்கிறார் , அதேநேரம் பல செய்திகள் எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பதையும் விவரிக்கிறார், உண்மையில் நமது தொலைக்காட்சி செய்திகள் அன்றாட உலகின் பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவே முனைகின்றன, அவை உண்மையான பிரச்சனைகளை மக்கள் அறிந்து கொண்டுவிடக்கூடாது என்பதில் முக்கிய கவனம் கொள்கின்றன,

மக்களின் போராட்ட முறைகளை, அதன் வீச்சை தொலைக்காட்சிகளே தீர்மானிக்கின்றன,டிவி கேமிராவின் கருணை இல்லாமல் நடைபெறும் ஊர்வலம் தோற்றுப்போவது குறிப்பிடத்தக்கது, என்றால் பிரச்சனைகளை முதன்மைபடுத்துவதில் தங்களது அதிகாரத்தை தொலைக்காட்சிகள் கையில் வைத்துள்ளன, அவை எதை தர விரும்புகிறதோ அது முக்கியப்பிரச்சனையாகிவிடுகிறது என்று சொல்கிறார் பியர் பூர்தியு

தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகளில் கண்ணுக்குப் புலப்படாத தணிக்கை முறையொன்று இருக்கிறது, அது என்னவென்றால் ஒரு கருத்தை எப்படிச் சொல்ல வேண்டும், எதை முதன்மைபடுத்த வேண்டும், எதை சொல்லக்கூடாது, எவ்வளவு நிமிசத்திற்குள் சொல்ல வேண்டும் என்பதை நிகழ்ச்சி தயாரிப்பாளரே முடிவு செய்கிறார், பல நிகழ்ச்சிகளில் இது ஒரு மறைமுக திரைக்கதை போல எழுதப்படுகிறது, அவர்கள் முன்னிறுத்த விரும்புகின்றன செய்திகள் அறிஞர்களின் உதடுகள் வழியாக வெளிப்படுகின்றன, இது ஒரு விதமான அடையாள வன்முறை என்று பியர் பூர்தியு குறிப்பிடுவதோடு தான் ஒரு சாவி கொடுக்கபட்ட பொம்மை போல செயல்படுவதை பல நேரங்களில் விவாத அரங்கில் பங்கேற்கும் அறிஞர்கள் அறிந்தே செய்கிறார்கள் எனவும் கூறுகிறார்,

தொலைக்காட்சியின் இயல்பிலே அது மிகையை நாடும் வடிவம் என்றும் அதன் இயக்கத்தின் பின்னால் எல்லோருக்கும் முந்தி தருவது என்ற அவசரம் தொற்றிக் கொண்டு இருப்பதையும் சுட்டிக்காட்டும் பியர் பூர்தியு திரையில் ஒன்றைக்காட்டுவதன் வழியே அது உண்மையானது என்று நம்ப வைக்கும் திறன் தொலைக்காட்சியிடம் உள்ளது, ஆகவே பார்வையாளனின் சிந்தனைகளை அது எளிதாக தன்வசப்படுத்திவிடுகிறது,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சினிமா போல கூட்டுதயாரிப்பாக இருந்தாலும் அதில் எதை யார் செய்கிறார் என்று பார்வையாளர் பிரித்து அறிந்து பார்ப்பதில்லை, ஒரு விவாத நிகழ்வில் அதை யார் தேர்வு செய்த்து, யார் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது, நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்து பேசுகின்றவர் சொல்லும் சொற்கள் அவருடையது தானா, அவரை யாராவது இயக்குகிறார்களா என்பதை பார்வையாளர் ஆராய்வதில்லை, ஆகவே அது ஒன்றிணைந்த ஒட்டுமொத்தக் கருத்துருவமாக மாறிவிடுகிறது, இதனால் பசிக்கான துரித உணவைப் பல பண்பாட்டிற்கான துரித உணவை தயாரித்து தரும் இடமாக தொலைக்காட்சி மாறிவிடுகிறது,  பல்வேறு துறைகள் சார்ந்து கருத்து சொல்லும் பாஸ்ட்புட் சிந்தனையாளர்களை தொலைக்காட்சியே உருவாக்கிவிடுகிறது,

தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் முதன்முறையாக பங்கேற்கும் ஒரு அறிஞரோ, பார்வையாளனோ கூச்சமும் தயக்கமும் கொண்டிருப்பான், அவனிடமிருந்து சரியான எண்ணத்தை, அல்லது கருத்தை வெளிக்கொண்டுவருவதற்கு அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் பரிவோடு முயற்சிக்க வேண்டும், அது ஒரு பெண் பிரவசம் பார்ப்பதற்கு உதவி செய்வது போன்று இருக்க வேண்டும், அப்படியில்லாமல் அவசரமான ஐந்து நிமிசத்திற்குள் ஒருவரின் வாயில் இருந்து கருத்துகளைப் பிடுங்கப்பட முயன்றால் அது தோல்வியாகவே முடிந்துவிடும் என்று சொல்கிறார் பியர் பூர்தியு.

யோசித்து பார்த்தால் விவாத நிகழ்வுகளின் தந்திரமே அவசரம் என்று சொல்லி ஒருவரது கருத்தைத் தாண்டி செல்வதேயாகும், அவசரம், அவசரம் என்று அது கேள்விகள் பதில்களை சட்சட்டென தாண்டி போவதே அதன் உள்ளார்ந்த தந்திரம், இது அறிந்து மேற்கொள்ளப்படுகின்ற ஒன்று என்று பியர் பூர்தியு உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுகிறார்,

சந்தைக்கான போட்டி தான் நிகழ்ச்சிகளை தீர்மானிக்கிறது, அது போலவே தொலைக்காட்சி மற்ற ஊடகங்களில் இருந்து தன்னைப் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக முந்திக் கொண்டு ஒட வேண்டியிருக்கிறது,

எதையும் சாதாரணமாக்குதல், அல்லது மிகைப்படுத்துதல், அரசியலற்ற சிந்தனைகளை ஏற்படுத்துவது, ஊருடன் ஒத்துப்போ என்று சொல்வது, வணிக கலாச்சார கூறுகளை முதன்மைபடுத்துவது என்பது போன்றவை உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளால் ஒன்று போலவே முன்னிறுத்தப்படுகின்றன,

இன்று எந்த ஒரு விஷயம் குறித்தும் பொதுக்கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சிகளே முக்கிய இடம் பிடித்திருக்கின்றன, ஆனால் அப்படி உருவாக்கபடும் கருத்து சரியானது தானா, அது யாருடைய விருப்பங்களை பிரதிபலிக்கிறது என்பதை ஆராய வேண்டியது சமூகவியலாளர்களின் கடமை என்கிறார் பியர் பூர்தியு,

பிரெஞ்சு தொலைக்காட்சிகள் ஏற்படுத்தும் சாதகபாதகங்கள் குறித்து பூர்தியு எழுதியவை நமது சூழலுக்கும் பொருந்தக்கூடியதாகவே உள்ளது,

இந்தநூலை நேரடியாக தமிழில் எளிதப்பட்டது போல சரளமாக, நுட்பமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் வெ. ஸ்ரீராம், இவர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு பணிக்காக செவாலியே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது,

அதிகம் கவனம் கொள்ளாமல் போய்விட்ட ஆனால் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான நூலிது, இன்றுள்ள சூழலில் இதன் தேவை மிகவும் அதிகமாகவே உள்ளது,

••••

தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்

பியர் பூர்தியு

க்ரியா பதிப்பகம் 2004  விலை ரூ100.

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: