சென்னை திரும்பல்

அமெரிக்கா மற்றும் கனடா பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இரண்டு மணிக்கு சென்னை திரும்பினேன், விமானத் தாமதம் காரணமாக 26 மணி நேர தொடர் பயணம் அலுப்பாகி விட்டது, பகலிரவாக பறப்பது சலிப்பூட்டும் அனுபவம்

அமெரிக்கப்பயணத்தினை எனது நண்பர் திருமூர்த்தியுடன் இணைந்து நண்பர் பாலாஜி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்,   பயணத்தின் ஊடே திண்ணை இணைய இதழின் ஆசிரியரும் எனது விருப்பத்திற்குரிய நண்பருமான கோ. ராஜாராம், மற்றும் நண்பர்கள்சொர்ணவேல், வார்த்தை பி.கே. சிவக்குமார்,டைனோ, நிர்மல்,  கார்த்திகேயன், மயிலாடுதுறை சிவா, நிர்மல், மெய்யப்பன், பழமைபேசி,  டேலாவரைச் சேர்ந்த ரமா, கணித பேராசிரியர் பாஸ்கர்,   என பலரையும் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி தருவதாக அமைந்தது

பயணத்தின் இனிய அனுபவமாக கனடாவில் சந்தித்து உரையாடிய நண்பர்கள் சிவதாசன், கந்தசாமி மாஸ்டர், வின்சென்ட்,  சிவம் மாஸ்டர், நாடக இயக்குனர் செல்வன், எழுத்தாளர் செழியன், எழுத்தாளர் மகாலிங்கம், எழுத்தாளர் மெலிஞசி முத்தன், எனது விருப்பத்திற்குரிய வலைப்பதிவர் டிசே தமிழன், மொழிபெயர்ப்பாளர் மணிவேலுப்பிள்ளை, எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் டேனியல் ஜீவா, பேராசிரியர் செல்வா கனகநாயகம், சட்டத் தரணி யேசுதாசன், திரை இயக்குனர் ரதன், ராஜா மகேந்திரன், வருண், என பலரது அன்பும்  மனம்விட்டு பழகும் நட்பும் மறக்கமுடியாத சந்தோஷமாக அமைந்தது

இந்த பயணத்திற்கு எழுத்தாளர் முத்துலிங்கத்தின் அன்பும் அக்கறையுமே முதற்காரணம், அவரை சந்தித்து பேசியதும் இணைந்து பயணம் செய்ததும் என் வாழ்வின் கிடைக்க முடியாத பேறு,

அது போலவே கனடா செல்வம் மிகுந்த அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்,  பயணத்தில் அவரது வீட்டில் தான் தங்கிக் கொண்டிருந்தேன், வீட்டோரின் அன்பும் உபசரிப்பும்  அற்புதமானது,  காலம் இதழின் ஆசிரியரான செல்வம் ஒரு நாளில் இருபது மணி நேரம் இலக்கியம் சமூக அக்கறைஎன ஒய்வில்லாமல் சுற்றி அலைகிறார், அவரது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது,

இது போலவே இப்பயணம் முழுவதும் என்னோடு கூடவே இருந்த என் நெருக்கத்திற்குரிய நண்பர் கனடா மூர்த்தியின் உற்சாகமே பயணத்தை இனிமையாக்கியது,

ஒரு பெட்டி நிறையப் புத்தகங்கள், மனமெங்கும் கனடா மற்றும் அமெரிக்காவின் இயற்கை காட்சிகள் என சென்னை வந்து இறங்கியிருக்கிறேன்,

இந்த பயணம் நான் செய்ய வேண்டிய வேலைகளையும், எழுத்தாளனின் பொறுப்புணர்ச்சியையும் தெளிவாக உணர்த்தியிருக்கிறது,

தொடர்ந்து எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன,  எழுத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முதற்புள்ளியாக இந்தப் பயணத்தை உணர்கிறேன், இதனைச் சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

•••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: