லெபனான்

சமீபத்தில் பார்த்த இஸ்ரேலியத்திரைப்படம் லெபனான், முழுப்படமும் ஒரு பீரங்கி வண்டிக்குள்ளாகவே எடுக்கப்பட்டிருப்பது இதன் முதற்சிறப்பு, பீரங்கிவண்டியை ஒரு வலிமையான போர்கருவியாக மட்டுமே அறிந்து வைத்திருந்த நமது பொதுப்புத்தியை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது,

யுத்த முனையில் பீரங்கிகள் கடந்து போவதையும் அவை இலக்குகளைத் தாக்கி அழிப்பதையும் பல படங்களில் பார்த்திருக்கிறோம்,  ஆனால் பீரங்கி வண்டி என்பது ஒரு தனியுலகம், அந்த வாகனத்தினுள் நாலு போர்வீரர்கள் பகலிரவாகத் தங்கியிருக்கிறார்கள், இலக்கைக் குறிவைத்துத் தாக்க ஒருவர், வண்டியை இயக்க மற்றவர், யாரைத் தாக்குவது என்று உத்திரவிட ஒரு கமாண்டர், தொலைத்தொடர்பை கவனிக்க இன்னொரு போர்வீரன் என்று மாறுபட்ட நாலு பேர் அச் சிறிய இடத்திற்குள் உண்டு உறங்கி கட்டளையிடப்பட்ட இலக்குகளை அழித்து, மூச்சு முட்டும் நெருக்கடிக்குள்ளாக வாழ்கிறார்கள் என்பதைப் படம் விரிவாக எடுத்துக்காட்டுகிறது,

ராணுவ வீரர்கள் யாவரும் சாகசநாயகர்களில்லை, அவர்களும் சாமான்ய மனிதர்களே, இயல்பான குழப்பங்களும், பயமும், நெருக்கடியை எதிர்கொள்ளும துணிச்சலும் அவர்களுக்குள் எப்படி உருவாகின்றன என்பதை படம் துல்லியமாக விளக்குகிறது, இந்தப் படத்தின் வெற்றியே மையக்களமாக பீரங்கிவண்டியை தேர்வு செய்தது தான்,

Samuel Maoz  இயக்கிய இப்படம்  66வது வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக விருது பெற்றிருக்கிறது, அது போலவே சிறந்த திரைப்படத்திற்கான சத்யஜித்ரே விருதையும் பெற்றிருக்கிறது, சாமுல் போர்வீரராக யுத்தமுனையில் ஒரு பீரங்கி வண்டியில் பணியாற்றியவர், தனது சுய அனுபவத்தைக் களமாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்

1982ம் ஆண்டு லெபனானின் யுத்தம் துவங்கிய தினத்தில் இருந்து படம் துவங்குகிறது, சூரியகாந்திப் பூக்கள் அடர்ந்த தோட்டம் ஒன்றில் பீரங்கி வண்டி நின்று கொண்டிருக்கிறது, மெல்ல அது நகர்ந்து சாலையை வந்தடைந்து அங்கே கடந்து செல்லும் வாகனம் ஒன்றினை குண்டுவீசித் தாக்குகிறது, அந்த தாக்குதலில் கோழிகளை ஏற்றிக் கொண்டு போன ஒருவன் ரத்தவெள்ளத்தில் சிதறி வீழ்கிறான், கோழி ரோமங்கள் காற்றில் பறக்கின்றன, பீரங்கி வண்டிக்குள் உள்ள போர்வீரர்களின் உலகம் மெல்ல கவனம் பெறத்துவங்குகிறது

பீரங்கிவண்டியில் இருந்து வெளியுலகைக் காணும் தொலைநோக்கியின் கண் தான் படத்தின் மையப்புள்ளி, அதன் வழியே தான் புறஉலகம் அவர்களுக்குத் தெரிகிறது, பீரங்கிவண்டியை அவர்கள் காண்டாமிருகம் என்று அழைக்கிறார்கள்,  நகரும் வசிப்பிடமான பீரங்கி ஒரு ஆயுதம் என்பதை அவர்கள் படத்தின் இறுதியில் தான் உணருகிறார்கள், வலிமையான அந்தப் போர்கருவி தடைகளை அழித்து முன்னேறி போய்க் கொண்டேயிருக்கிறது,

குறைவான பகல்வெளிச்சமும், காற்றில்லாத இறுக்கமான சிறிய இடமும், மூத்திரம் பெய்வதற்குக் கூட வெளியே போக முடியாத நெருக்கடியும், வெடிமருந்துகளும், தொலைதொடர்பு அழைப்புகளும் உள்ள பீரங்கி வண்டிக்குள்ளாகவே கேமிரா முன்பின்னாக நகர்ந்து இயங்குகிறது, பலநேரங்களில் நாமும் அந்த வண்டிக்குள் ஒரு மனிதராக இருப்பது போன்ற நெருக்கத்தை உருவாக்கியிருப்பதே படத்தின் வெற்றி,

பீரங்கி வண்டியில் நான்கு மாறுபட்ட பின்புலத்தை, மனநிலையைக் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவன் முதன்முறையாக யுத்தமுனைக்கு வந்திருக்கிறான், தனது அம்மாவிடம் தான் நலமாக இருப்பதாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறான், இவர்களை வழிநடத்தும் கமாண்டர் தனக்கு இடப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே கறாராக இருக்கிறான்,

இலக்கைச் சுடுவதற்காக நியமிக்கப்பட்ட ஒருவனுக்கோ சாமான்ய மக்களை ஏன் தாக்க வேண்டும், மனித உயிர் என்பது இவ்வளவு அல்பமானதா என்ற கேள்விகள் எழுகின்றன, அவனால் சுடுகருவியை இயக்கி உயிர்களைக் கொல்ல இயலவில்லை, மனத்தடுமாற்றம், குழப்பம், பயம் ஆகியவற்றால் பீடிக்கப்படுகிறான்,

அவனது கவனக்குறைவால் அவர்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் அழிந்து போய்விட நேரிடும், டாங்கு பற்றி எரிந்தால் எலும்பு கூட கிடைக்காது என்று கமாண்டர் மிரட்டுகிறான், ஒருவருக்கொருவ்ர் அறிமுகமில்லாத போதும் அந்த உலகிற்குள் அவர்கள் பரஸ்பரம் சார்ந்து இயங்க வேண்டிய அவசியம் உருவாகிறது.

யுத்தம் என்பது ஒரு நரகம், அது மனித  உறவுகளை அறுத்தெறிகிறது, அடிப்படை உணர்ச்சிகளைக் கூட அலட்சியம்  செய்கிறது, அதிகாரத்தின் பொருட்டு நடைபெறும் மிருகவேட்டை தான் யுத்தம், ராணுவ வீரனாக இருப்பது மனசாட்சியை அடகு வைக்கும் செயல், இப்படிப் படம் முழுவதும் யுத்தம் குறித்து உரத்த சிந்தனையைப் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்,

பீரங்கி வண்டி ஒரு சிறைச்சாலை போலவே இருக்கிறது, அதை உணரும் தருணங்களில் அவர்கள் குற்றவுணர்ச்சியை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள், உயிரிழப்புகளின் வேதனையைச் சகித்துக் கொள்ளமுடியாத ஒருவன் அவசரத்துடன் புகைபிடிக்கிறான், புகைபிடிப்பது வண்டிக்குள் அனுமதிக்கபடுவதில்லை என்று கட்டளை நினைவுறுத்தப்படுகிறது. அவர்களுக்குள் தங்களுக்குள் மனம்விட்டு ஆறுதலாகப் பேசிக் கொள்ள முடியவில்லை, கட்டளைக்கு கீழ்படிவது மட்டுமே வேலையாக இருக்கிறது

இந்த சூழ்நிலையில் ஒரு தாக்குதலில் இறந்து போன போர்வீரன் உடலைப் பீரங்கியில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலை உருவாகிறது, இறந்த மனிதனின் உடல் அவர்களுக்கு வாழ்வின் மகத்துவத்தைப் புரிய வைக்கிறது, தாங்களும் நடமாடும் பிணங்களே என்பதை அவர்கள் உணருகிறார்கள், அந்த உடலைக் கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர் வருகிறது, பீரங்கியின் கதவு திறக்கபட்டு உடல் கொண்டு செல்லப்படுகிறது,

படம் முழுவதும் பீரங்கிவண்டியின் வாசல் திறக்கப்படும் போது உள்ளிருப்பவர்களுக்கு ஆகாசம் கண்ணில் படுகிறது, வெளிறிய, அடர்ந்த நீலமான  ஆகாசத்தை அவர்கள் பெருமூச்சுடன் பார்க்கிறார்கள்,

இறந்த உடல் கொண்டு செல்லப்பட்ட பிறகு அவர்கள் தங்களைச் சுயபரிசீலனை  செய்து கொள்ளத்துவங்குகிறார்கள், எப்படியாவது இந்தப் போர்கருவியில் இருந்து விடுபட வேண்டும் என்று ஏங்குகிறார்கள், இறுக்கமான இரும்புக்கரங்கள் அவர்களை பிடித்துக் கொண்டிருப்பதாகவே உணருகிறார்கள், ஆனால் அதிலிருந்து விடுபட முடியாதபடி கட்டளைகள் அவர்களை வழிநடத்துகின்றன

நகரவீதிகளுக்குள் பீரங்கி வண்டி நுழைகிறது, பொதுமக்கள் மீது அபாயகரமான ஆயுதங்களைப் பிரயோகிக்கும்படி கட்டளை வருகிறது, தீவிரவாதிகள் ஒளிந்துள்ள ஒரு கட்டிடத்தைப் பீரங்கிவண்டி தாக்குகிறது ,வீட்டில் பிணையக் கைதிகளாக இருந்த பெண்கள் குழந்தைகள் குண்டுவீச்சில் சிக்கி உடல் பிய்த்து எறியப்பட்டு சிதறடிக்கப்படுகிறார்கள், தனது குழந்தைக்கு என்னவானது என்று அலறியபடியே ஒரு இளம்பெண் வெளியே ஒடிவருகிறாள், அவளது கிழிந்த உடையை ஒரு வீரன் இழுக்கவே அது அவிழ்ந்துவிழுகிறது, அவள் முழுநிர்வாணமாக நின்றபடியே கதறுகிறாள், போர்வீரர்களின் முன்னால் அவளது அழுகை அர்த்தமற்றுப் போகிறது

தாங்க முடியாத வெக்கை, துர்மரணம், தொடர்ச்சியான ஆயுததாக்குதல், , தொலைத்தொடர்புக் கருவியின் துண்டிப்பு, பரஸ்பர கருத்துவேற்றுமை என்று  அந்த சிறிய உலகிற்குள் நடக்கும் போராட்டங்கள், அவஸ்தைகள் பார்வையாளனை  உலுக்கி எடுக்கின்றன, படம் முடியும் போது யுத்தம் என்பது திட்டமிடப்பட்ட வேட்டை என்பதை பார்வையாளன் முழுமையாக உணருகிறான்,

படத்தின் சிறப்பிற்கு முக்கிய காரணம் அதன் நேர்த்தியான ஒளிப்பதிவு, வெக்கையை, இருளையும், பீரங்கிவண்டியின் தொலைநோக்கி வழியாக மட்டும் புறஉலகை காட்சிபடுத்தியதில் படம் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறது,  ஒளிப்பதிவாளர் Giora Bejach வின் ஒளிப்பதிவு அபாரமானது

நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள் இனம், மொழி, சிந்தனை, விடுதலையுணர்வு எல்லாவற்றிலும் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கிறது என்பதை இயக்குனர் துல்லியமாக சித்தரித்துக் காட்டியிருக்கிறார், யுத்தமுனையில் கூட அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள், எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை படம் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது

பீரங்கி வண்டியின் நகர்விற்கு இணையாக படத்தின் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, நிறைய நேரம் நாம் முழுமையாகக் காட்சிகளை காண்பதில்லை, துண்டித்தலும் வேறுகாட்சிகளை இடைவெட்டி ஊடாடுவதும் அவ்வளவு அழகாக ஒன்று சேர்ந்துள்ளன

இஸ்ரேலிய சினிமா உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்றுவருகிறது, குறிப்பாக Waltz With Bashir போன்ற படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து லெபனான் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது

தேர்ந்த கலைநேர்த்தியும், பிரச்சாரத் தொனியில்லாத ஆழமான உணர்ச்சிப் பகிர்வும்,  புதிய காட்சிப்படுத்துதலை முன்வைத்து இயங்கிய அழகியலும் இப்படத்தை தீவிரமான யுத்த எதிர்ப்பு படமாக்குகின்றன

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: