சிட்னி சாப்ளின்

சாப்ளினைத் தெரிந்த பலருக்கும் அவரது சகோதரன் சிட்னி சாப்ளினைத் தெரியாது, ஒரு நிழலைப்போல சாப்ளின் கூடவே இருந்து அவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சிட்னி,

சாப்ளினுக்குக் கிடைத்த  திரைப்பட வாய்ப்புகள், மற்றும் அவரது பொருளாதார வளர்ச்சி யாவும் சிட்னி உருவாக்கிக் கொடுத்ததே,

சார்லி சாப்ளினை விட நான்கு வயது மூத்தவர் சிட்னி, அவரது அப்பா யார் எனத்தெரியவில்லை, அம்மா ஹானா தனது பதினாறாவது வயதில் ஹவாக்ஸ் என்ற இளைஞரோடு பழகித்  திருமணம் செய்து கொள்ளாமலே அவரைப் பெற்று எடுத்ததாக கூறுகிறார்கள்,

ஹானா தனது 19 வயது வயதில் சார்லஸ் சாப்ளின் என்ற பாடகரைத் திருமணம் செய்து கொண்டார், அவர்களது முதல் பையன் தான் சார்லி சாப்ளின், தனது அப்பா யார் எனத்தெரியாமல் வளர்க்கபட்ட சிட்னி  குடும்ப வறுமை காரணமாக தனது பனிரெண்டாவது வயதிலே கப்பலில் வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கபட்டார், கடினமான வேலை, அதிகமான குளிர், இவற்றால் உடல் நலிவுற்று நோயுற்ற போதும் அவர் வேலை செய்து சம்பாதித்து தனது குடும்பத்திற்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்தார்

1891ல் ஹானா தனது கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனித்து வாழ முற்பட்டார், அதனால் குடும்பம் நிலை குலையத்துவங்கியது, குடிப்பழக்கம் ஹானாவைப் பற்றிக் கொண்டது, கூடுதலாக மனப்பிறழ்விற்குள் உள்ளானார். 1901ல் சார்லஸ் இறந்துவிடவே அந்தக் குடும்பம் நிர்கதியாகியது,

சிட்னியின் வருமானம் தான் குடும்பத்தின் ஒரே ஆதரவு,  தனது தம்பி சார்லி சாப்ளினை சிட்னி மிகவும் நேசித்தார், சாப்ளினின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவருக்காக நாடகக் கம்பெனிகளில் வாய்ப்பு கேட்டு அலைந்தார் சிட்னி, லண்டனில் இருந்த கர்னோ நாடகக்குழுவில் நடிப்பதற்கு சிட்னிக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது, அதன் முக்கிய நடிகராக விளங்கினார்,

இதைப்பயன்படுத்திக் கொண்டு அவர் சார்லி சாப்ளினைத் தன்னோடு நடிப்பதற்கு அழைத்துக் கொண்டார், பள்ளி சென்று முறையாகப் படிக்காத சார்லி சாப்ளினுக்கு நாடக வசனங்களை மனப்பாடம் செய்வது சிரமமாக இருந்தது,

சிட்னி தான் அவருக்கு வசனங்களை சொல்லி தந்து அவரை நடிக்க வைத்தவர், ஆனால் சாப்ளின் செய்யும் வேடிக்கைகளும், அவரது இயல்பான நகைச்சுவையும் சிட்னியை விட அவருக்கு பெயர் வாங்கி தந்தது,

அமெரிக்கா சென்று சாப்ளின் திரைப்படங்களில் நடிக்க துவங்கியதும் சிட்னி அவரது படங்களில் துணைகதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க ஆரம்பித்தார், தன்னால் ஒரு போதும் சார்லி சாப்ளின் போல புகழ் பெறமுடியாது என்று உணர்ந்து கொண்ட சிட்னி, தன்னால் அடையமுடியாத வெற்றிகளை தனது சகோதரன் அடையட்டும் என்று சார்லியின் வளர்ச்சிக்குப் பாடுபடத் துவங்கினார்

அவரது இடைவிடாத முயற்சி தான் சாப்ளினுக்கு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகளை பெற்று தந்தது. ஸ்டுடியோக்களிடம் சாப்ளின் சார்பாக அவரது மேனேஜராக பேசி அவருக்கான வருவாயை உயர்த்தியவர் சிட்னி, அதில் ஒரு சாதனை போல அன்றைய திரையுலக வரலாற்றில் ஒரு நடிகருக்கு தரப்பட்ட அதிக பட்ச பணமாக ஒரு ஆண்டிற்கு 6,70000 ஆயிரம் டாலர் வருவாய் என்ற ஒப்பந்தத்தை வாங்கி தந்தவர் சிட்னியே, அவரது விடா முயற்சியின் விளைவே சாப்ளின் அடைந்த வெற்றிகள்,

ஆனால் பிரபலத்தின் நிழல் அவருக்கான எல்லா அடையாளங்களையும்  மறையச்செய்துவிட்டது, தன்னைச் சந்திக்கின்ற ஒவ்வொருவரும் தான் சாபளின் சகோதரன் என்று மட்டுமே தன்னை நடத்துவது  அவருக்குள் வருத்தத்தை உருவாக்கியது, இதற்காக விமான கம்பெனி முதல் பல்வேறு சிறிய பெரிய தொழில்கள் துவங்கி அதில் வெற்றி பெற முடியாமல் போனார் சிட்னி

சிட்னியின் குடும்ப வாழ்வும் வெற்றிகரமானதாகயில்லை, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், குழந்தைகள் இல்லை, மனைவி நோயாளி, ஆனால் தனது சொந்தத் துயரங்களை அவர் ஒரு போதும் பெரிது படுத்திக் கொள்ளவேயில்லை

சாப்ளின் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தனது சகல வெற்றிகளுக்கும் சிட்னி ஒருவரே காரணம் என்று கூறுகிறார்,

சாப்ளினின் திரையுலக வளர்ச்சிக்கு உதவியதோடு மட்டுமல்லாது, சாப்ளினின் தனிப்பட்ட வாழ்வினையும் சிட்னியே நெறிப்படுத்தியிருக்கிறார், தீராக்காதலனைப் போல நான்கு  முறை திருமணம், பனிரெண்டு பெண்களுடன் காதல் என்று உல்லாசமாக இருந்தவர் சாப்ளின், இதனால் உருவான சிக்கல்கள், சண்டைகள், நீதிமன்ற வழக்குகள், நஷ்ட ஈடுகள் அத்தனையும் சமாளித்து சாப்ளினுக்குத் திரைப்படத்துறையில் அவப்பெயர் வந்துவிடாமல் காத்தவர் சிட்னி

ஒருவேளை சிட்னி என்ற ஒருவரே இல்லாமல் போயிருந்தால் தான் லண்டனின் சேரிப்பகுதியில் ஒரு குற்றவாளியாக தான் ஆகியிருப்பேன் என்று ஒரு முறை சாப்ளின் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.

பிரபலத்தின் சகோதரனாக இருப்பது வெளிப்படுத்த முடியாத ஒரு வேதனை, நிச்சயம் சிட்னி அதை அனுபவித்திருப்பார், எது தன்னை விட தனது சகோதரனைப் புகழ்பெறச்  செய்தது என்ற கேள்வி அவருக்குள் எழுந்திருக்கும், தனது தோல்வியின் கசப்பை ஒவ்வொரு நாளும் அவர் உணர்ந்திருப்பார், ஆனால் அந்தக் கசப்பை ஒரு போதும் வெறுப்பாக மாற்றவில்லை, தனது வாழ்வை தனது சகோதரனின வெற்றிக்காக உருமாற்றிக் கொண்டார், அந்த நிலைப்பாட்டில் இருந்து கடைசிவரை சிட்னி மாறவேயில்லை, சாப்ளின் இறந்த பிறகும் அவரது புகழ் பாடுவதில் சிட்னியே முன்னோடியாக இருந்தார்,

சிட்னி, சாப்ளின் இருவருக்குமிடையில் பலமுறை கருத்துவேறுபாடுகள், சச்சரவுகள் தோன்றியிருக்கின்றன, தனது ஸ்டுடியோ நிர்வாகத்தை சிட்னி கவனிக்க கூடாது என்று சாப்ளின் கோபத்தில் கத்தியிருக்கிறார், ஆனாலும் தனது சகோதரனின் கோபத்தை சிட்னி ஒரு போதும் பெரிதுபடுத்தவேயில்லை,

சார்லி சாப்ளின் தனது புகழ்பெற்ற தி கிரேட் டிக்டேடர் படத்தின் சில காட்சிகளைக் கலரில் படமாக்கி பார்த்திருக்கிறார், அவற்றைப் படப்பிடிப்பு முடிந்தவுடன் அழித்துவிடச் சொல்லியிருந்தார் சாப்ளின், ஆனால் சிட்னி அவற்றை அழிக்க மனமின்றி படச்சுருள்களை முறையாகப் பாதுகாத்து வந்திருக்கிறார், தற்போது அந்தக் காட்சிகள் வெளியாகி உள்ள்ன

கிரேட் டிக்டேடர் போன்ற ஒரு படத்தை கலரில் காண்பது அற்புதமான அனுபவம், முழுப்படமும் இன்றுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு வண்ணமயமாக வெளியானால் பெரிய வசூலைப்பெறும் என்றே தோன்றுகிறது

சிட்னி பாதுகாத்து வைத்திருந்த அந்தக் காட்சிகள் ‘The Tramp and the Dictator’ என்ற டாகுமெண்டரியில் இடம்பெற்றுள்ளன, இப்படம்  சாப்ளினுக்கும் ஹிட்லருக்குமான சில விசித்திர ஒற்றுமைகளை அடையாளம் காட்டுகிறது,

சிட்னி சாப்ளினைப் பற்றி நினைக்கும் போது எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணி, சிவாஜியின் சகோதரர் சண்முகம் இருவரும் நினைவில் வந்து போகிறார்கள்,

சாப்ளினிடம் இயல்பாகவே  திறமைகள் இருந்தன, ஆனால் அந்த்த் திறமைகளை பணமாக மாற்றும வித்தை சிட்னிக்கு மட்டுமே தெரிந்திருந்தது என்கிறார் கீஸ்டோன் ஸ்டுடியோ நிர்வாகி ஜான்பீல்டு,  உண்மையது, வெற்றி பெற்ற பலருக்கும் அவரது திறமைகளை அடையாளம் கண்டு அதைப் பணமாக, புகழாக மாற்றிக்காட்டியவர் இன்னொருவரே,

தனது வெற்றியில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டார் என்று சாப்ளினிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்

Brothers are important.

***

இணைப்பு

‘The Tramp and the Dictator’

http://youtu.be/vhp5PGsDp-A

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: