கிளிம்டின் முத்தம்

கஸ்டவ் கிளிம்ட் (Gustav Klimt) எனது விருப்பமான ஒவியர்களில் ஒருவர், இவரது முக்கிய ஒவியங்கள் பலவற்றை நேரில் கண்டிருக்கிறேன், வியன்னாவைச் சேர்ந்த கிளிம்ட்டின் ஒவியங்கள் தனித்துவமிக்கவை, அவரது காலத்தில் இவ்வோவியங்கள் ஆபாசமானவை என்று கண்டிக்கபட்டதுடன் ஒவியங்களின் முன்னால் திரைச்சீலை அணிவிக்கபட்டு பதின்வயதினர் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது,

கிளிம்ட் பாலின்பத்தை வெளிப்படையாக, ஆபாசமாக வரைகிறார், ஆகவே அவரை முக்கிய ஒவியராக அங்கீகரிக்ககூடாது என்று கலைவிமர்சகர் பலர் கூக்குரலிட்டார்கள், கிளிம்ட் அவற்றைக் கண்டுகொள்ளவேயில்லை, காலம் அந்த எதிர்ப்புகுரல்கள் யாவைற்றையும் இன்று அர்த்தமற்றதாகிவிட்டது,

கிளிம்ட்டின் ஒவியங்களையும் இகான் சீலேயின் (Egon Schiele,) ஒவியங்களையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும், இருவரும் நெருக்கமான நண்பர்கள், கிளிம்டை விட சீலே இளையவர், சீடரைப்போன்றவர், கிளிம்ட்டின் பாதிப்பு சீலேவிடம் அதிகமிருக்கிறது, இருவரும் பெண் உடல்களின் நெகிழ்வுற்ற நிலையை சித்தரமாக்கிய முறையில் நிறைய ஒப்புமை கொண்டிருக்கிறார்கள்

புகழ்பெற்ற சிற்பி ரோடின் ஒரு முறை கிளிம்ட்டை நேரில் சந்தித்து, உனது ஒவியங்களில் காணப்படும் பெண்கள் எப்படி இவ்வளவு உயிர்ப்போடிருக்கிறார்கள், என்ன ரகசியம் என்று கேட்டார்

அதற்கு கிளிம்ட், எனது மாடல்களை நான் உள்ளுறக் காதலிக்கிறேன், அந்த பெண்ணுடல்களின் அரூபவடிவங்களை உள்வாங்கிக் கொள்கிறேன், எனது ஒவியத்தில் தனது உருவத்தைக் காணும் பெண்கள் தங்களின் அந்தரங்கமான உணர்ச்சிகளை நான் துல்லியமாக வரைந்திருப்பதாகவே சொல்கிறார்கள், நான் வரைவது பெண்களின் வெளிப்புற அழகையில்லை, அவர்களின் மனத்தவிப்பை, மறைக்கும் உணர்ச்சிகளை, உடல் வழியாகப் பீறிடும் காமத்தை தான் ஒவியமாக வரைகிறேன் என்றார்,

இதைத் தானே நானும் சிற்பங்களில் வடிக்கிறேன், ஆனால் எனது சிற்பங்களை விடவும் உனது ஒவியம் மிகவும் அற்புதமாக இருப்பதாக உணர்கிறேன், கூடுதலாக ஏதோவொரு காரணம் இருக்கிறது, அதை மறைக்காமல் சொல் என்றார் ரோடின்,

கிளிம்ட் சிரித்தபடியே நான் ஒரு ஆஸ்திரியன் என்பது தான் அக்காரணம், ஆஸ்திரியர்களிடம் கலையின் மீதான கிறுக்குதனம் அதிகமிருக்கும், அது காதலில்  உருவாவது என்றார் கிளிம்ட்

கிளிம்ட்டின் ஒவியங்கள் காமம் , மரணம் என்ற இரண்டு மையங்களை பிரதானமாகக் கொண்டவை, ஒவியத்தில் பெண் உடல்களின் வனப்பையும் பாலின்ப நாட்டத்தில் பீறிடும் உணர்ச்சி கொந்தளிப்புகளை பிரதிபலிக்கும் போது கூட மரண அச்சமும், தனிமைத் துயரும் கிளிம்டிடம் சேர்ந்தே பதிவாகியிருக்கிறது

திருமணம்செய்து கொள்ளாமல் அம்மா தங்கையுடன் வாழ்ந்து வந்த கிளிம்டிற்கு கள்ளஉறவில் மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தார்கள் என்கிறது அவரது வாழ்க்கை வரலாறு,

புகழ்பெற்ற எல்லா ஒவியர்களையும் போலவும் அவரும் வேலை வேலை என்று தனது படைப்பாற்றலுக்குள்ளாகவே மூழ்கிகிடந்தார், சுட்டெரிக்கும் மதிய வெயிலில் கறுப்பு அங்கியை அணிந்து கொண்டு அவர் ஒய்வேயில்லாமல் தனது ஸ்டுடியோவிற்குள் ஒவியம் வரைந்து கொண்டிருப்பார்,

மாலை நேரம் நெருக்கமான ஒன்றிரண்டு நண்பர்களைச் சந்தித்து விடியும் வரை குடிப்பது மட்டுமே அவரது பொழுதுபோக்கு, மற்றநேரங்களில் ஒவியம் வரைவது மட்டுமே  அவரது உலகம்,

கிளிம்டின் குடும்பம் கலையில் ஈடுபாடு கொண்டது, அவரது அப்பா ஒரு நகை வணிகர், அத்தோடு நகைகளில் அலங்கார வேலைப்பாடுகள் செய்பவர்,ஆகவே நுணுக்கமான வேலைத்திறன் கிளிம்டிற்கும் இயல்பாகவே கூடி வந்திருந்தது,  அத்துடன் தங்கம் குறித்த விசித்திர மனப்பிம்பம் ஒன்று கிளிம்ட் மனதில் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது,

கஸ்தவ் கிளிம்ட் ஆரம்ப காலங்களில் யதார்த்த பாணி ஒவியங்களையே அதிகம் வரைந்திருக்கிறார், மாளிகைகளை, அருங்காட்சியகங்களை தனது வண்ண ஒவியத்தால் அலங்காரம் செய்வதை முழுநேரப்பணியாக எடுத்து செய்துவந்தார் கிளிம்ட்.

பின்பு அதில் சலிப்படைந்து விலகி தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டார் , தனது காதலியான எமிலியை மாடலாகக் கொண்டு நிறைய ஒவியங்களை வரையத் துவங்கினார். குறியீட்டு தன்மை கொண்ட இந்த ஒவியங்கள் தனித்த அகவுலகை கொண்டிருந்தன, கனவுக்காட்சிகள் போன்ற  விசித்திரமும், வண்ணங்களையும் கோடுகளையும் முற்றிலும் புதிய முறையில் பயன்படுத்தியதும் கிளிம்டின் சிறப்பு இயல்புகள்

அவரது புகழ்பெற்ற ஒவியங்களில் ஒன்றான முத்தம் (The Kiss ) அற்புதமான ஒன்று,  1907ல் வரையப்பட்ட இவ்வோவியத்தை ஆஸ்திரிய அரசே விலைக்கு வாங்கி கொண்டது, இதை வரைந்த போது கிளிம்ட்டின் வயது 45,  ஒவியத்தில் மாடலாக இருப்பவர் அவரது காதலி எமிலி எனக் கூறுகிறார்கள், சிலரோ அது அவரது இன்னொரு காதலி ஹில்டா என்கிறார்கள்,

கிளிம்ட் தனது காதலிகளைப் பற்றிய குறிப்புகளை விரிவாக தனது நாட்குறிப்பில் பதிவு செய்து வைத்திருந்தார், ஆனால் கிளிம்ட் இறந்து போனதும் எமிலி அந்தக் குறிப்பேட்டினை அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள்

முத்தம் என்ற ஒவியம் ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருக்கத்தை, தன்னைக் கரைத்து கொள்ளும் தவிப்பை வெளிப்படுத்துகிறது, முத்தம் என்பது ஒரு நெருப்பு, அது ஒரு உதட்டில் பிறந்து இன்னொரு உதடைத் தீண்டி உடல்களை எரிக்கத் துவங்குகிறது, முத்தம் என்பது ஒரு ரகசிய மொழி, அது சப்தம் இல்லாமல் பேசிக் கொள்ளப்படுகிறது, கிளிம்டின் முத்தக்காட்சியில் நம்மை வசீகரிப்பது அந்த ஒவியமெங்கும் காணப்படும் பூக்களும், அதனூடாக தன்னை மறந்து முயங்கி நிற்கும் ஆண் பெண்ணையும்,

படத்தில் காணப்படும் பெண் வண்ணமயமான பூக்கள் கொண்ட உடையை அணிந்திருக்கிறாள், ஆணின் உடையும் பகட்டாகவே உள்ளது, அது கறுப்பு வெள்ளை வடிவத்திலும், பெண்ணுடை நிறைய வண்ணப்பூக்களைக் கொண்டதுமாக இருப்பது அவர்களின் மன இயல்பைக் காட்டுவதற்காகவே வரையப்பட்டிருக்கிறது

முத்தமிட முயலும் ஆண் தனது முழுக்கட்டுபாடிற்குள் பெண்ணைக் கொண்டுவர முயற்சிக்கிறான், அவளது கைகளோ அவனைத் தழுவிக் கொண்ட போதும் தளர்ச்சியுற்ற நிலையிலே இருக்கின்றன, ஆண் பெண் இரண்டு முகங்களிலும் வெளிப்படும் தவிப்பு அற்புதமாக ஒவியத்தில் பதிவாகியுள்ளது,

பெண்ணின் முகத்தில் காமத்தை நுகரும் ஈர்ப்பை விட கரைந்து போன வேதனையுணர்ச்சியே தூக்கலாகத் தெரிகிறது, ஒவியத்தை அதிக ஈர்ப்புடையதாக்குவது உருவங்களின் பின்புலமாக உள்ள தங்கவேலைப்பாடு, மற்றும் பூக்களின் கம்பளம்,

பெண்ணின் பாதங்கள் மட்டுமே அவள் காம வசப்பட்டிருப்பதன் சாட்சி போல மடங்கிக் காணப்படுகின்றன, இயற்கையின் வண்ணமும் அவர்கள் உடுத்திய உடைகளும் ஒன்று போலவே வரையப்ப்பட்டுள்ளன, இயற்கையினுள் தன்னை கரைத்துக் கொள்வதைப் போன்றதே காமம் என்று கிளிம்ட் சொல்ல முற்படுகிறாரோ எனும்படியாக இவ்வோவியம் காணப்படுகிறது,

ஒவியத்தின் சமநிலையை பூக்களின் கம்பளமே ஈடுசெய்கிறது, நீலமும் சிவப்பும் வெளிர்மஞ்சளுமாக எத்தனைவிதமான பூக்கள், நீரில் ஊறிய காகிதம் போல இருவரது உடலும் நெகிழ்வுற்றிருக்கின்றன, பெண்ணின் கேசத்தை விடவும் ஆணின் கேசம் அடர்ந்து கறுத்து காணப்படுகிறது

ஒவியத்தின் லயம் என்பது இருவரது நெருக்கம் மற்றும் இச்சையில் அடங்கியிருக்கிறது, தங்கத்தை கிளிம்ட் பயன்படுத்தியிருப்பது காமம் மாயத்தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே என்கிறார்கள்,

ஒவியத்தில் உள்ள ஆணின் உடையில் சதுரமும் செவ்வக வடிவமும் காணப்படுகிறது,பெண்உடையிலோ வட்டங்களும் வளையங்களும் உள்ளன, இவை ஆண் பெண்ணின் இயல்புகளைச் சுட்டிக்காட்டவே பயன்படுத்தபட்டுள்ளதாக கூறுகிறார்கள், காம இச்சையில் திளைத்த ஆண் முறுக்கேறி நின்று கொண்டிருக்கிறான், பெண்ணோ காலை மடித்து சரிந்து நிற்கிறாள், இந்த எதிர்நிலை காமம் குறித்த  ஆணின் பார்வையை வெளிப்படுத்தவே உருவாக்கபட்டிருக்கிறது

கிளிம்ட்டின் மஞ்சள் என்று தனித்து அடையாளம் காட்டப்படுமளவு  மஞ்சள் மற்றும் நீல நிறங்களை கிளிம்ட் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்,

இந்த ஒவியத்தில் மறைமுகமாக காணப்படும் இன்னொரு பாதிப்பு ஜப்பானிய உடைகளின் பூவேலைப்பாடுகள், குறிப்பாக பெண்ணின் உடை ஜப்பானிய கிமோனோவின் மாறுபட்ட வடிவம் போன்றேயிருக்கிறது, அந்தக் காலத்தில் ஆஸ்திரிய உயர்குடிப் பெண்களிட்ம் ஜப்பானிய உடைகள் பிரபலமாக விளங்கின, அதன் பாதிப்பில் கிளிம்ட் இதை வரைந்திருக்க கூடும்

ஒவியங்களில்  சந்தோஷத்திற்கான தேடுதலை அடையாளப்படுத்துவதற்காகவே மிதந்த நிலையில் உடல்கள் வரையப்படுகின்றன, அதையே கிளிம்டின் இந்த ஒவியத்திலும் நாம் காணமுடிகிறது

ஒரு மனிதன் தரும் கடைசி முத்தம் எவ்வளவு வலிமையாக இருக்கும் என்பதற்கு சாட்சி போல தான் இந்த ஒவியம் அமைந்திருக்கிறது ஆகவே இது  பிரிவுத்துயரைச் சொல்கிறது என்று கூறுகிறார்கள் சில விமர்சகர்கள், அதுவும் ஒரு கோணமே.

கிளிம்ட் தனது சுய ஒவியம் எதையும் வரையவில்லை, இது பற்றி கேட்டபோது கிளிம்ட் சொன்ன பதில்

I never did a self protrait. I am not intersted in myself as a subject-rather I am interested in other people, women most of all. I am convinced that as a person I am not particularly noteworthy. There is nothing special to be seen in me. I am a painter who paints day in and day out from morning to night: Figure paintings and landscapes, sometimes portraits”

தனது ஒவியங்கள் தன்காலத்தைய இளம் ஒவியர்களுக்கும் ,இளைஞர்களுக்கும் பிடித்தமானதாகயில்லையே என்ற ஆதங்கம் கிளிம்டிடம் இருந்தது, அது பற்றிய தனது மனவருத்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்

“The young no longer understand me. They go elsewhere. I don’t even know if they appreciate my work any more

ஆனால் இந்த நூறு வருஷங்களில் ஒவிய உலகை அதிகம் பாதித்த ஆளுமைகளில் கிளிம்ட் முக்கியமானவர் என்று இளம் ஒவியர்களும், ஒவிய ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள், இன்று புதிதாக வரைய முற்படும் ஒவியனுக்கு மஞ்சள் என்பது வான்கோ மஞ்சளாக, கிளிம்ட்டின் மஞசளாக  தனித்துவமிக்க அடையாளமாகவே தெரிகிறது.

கிளிம்ட்டின் முத்தம் ஒரு மறக்கமுடியாத கனவைப்போல எனக்குள்ளாக தங்கியிருக்கிறது, பார்க்கப் பார்க்க உன்மத்தம் பெருகுவது தான் அதன் உயர்சிறப்பு.

•••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: