ஹிட்லரின் பலூன்

தி கிரேட் டிக்டேடர் படத்தில் ஹிட்லராக நடித்துள்ள சாப்ளின், காற்று அடைத்த பலூனாக உள்ள உலக உருண்டை ஒன்றை வைத்துக் கொண்டு விளையாடும் காட்சியிருக்கிறது, இரண்டரை நிமிஷக்காட்சியது, இதற்கு நிகராக பகடி செய்யும் காட்சி இதுவரை எடுக்கப்படவில்லை

தனிமையில் இருக்கவிரும்புவதாகச் சொல்லி ஹிட்லர் திரைச்சீலை ஒன்றிலிருந்து சரிந்து இறங்குகிறான், அறையில் உள்ள உலக உருண்டையின் அருகில் சென்று வியப்போடு, அதிசயமான பொருளைக் காண்பது போலப் பார்க்கிறான், ஆசையாகத் தொடுகிறான், இடது கையில் எடுத்துப் பறக்கவிடுகிறான்,

பறந்து வரும் உலகை வலது கையில் பிடிக்கிறான், இளம் பெண்ணோடு கைகோர்த்து நடனமாடுவது போல ஒயிலாக விளையாடுகிறான், பந்து மேலும் கீழுமாகப் பறக்கிறது

பிறகு அலட்சியமாக தனது இடது காலில் உதைத்துப் பறக்கவிடுகிறான் ஹிட்லர், அது சாப்ளினின் வழக்கமான உதை,  உலக உருண்டை ஒரு குமிழ்  போல லகுவாகப் பறக்கிறது,  தலையில் முட்டி அதை மீண்டும் உயர அனுப்புகிறான், அவனது செய்கையில் தான் எவ்வளவு பெருமிதம், ஆணவம், அதிகாரத்தின் முன்பு உலகம் வெறும் விளையாட்டுப் பொருள் தான் என்பது போலிருக்கிறது

உலக உருண்டை காற்றில் பறந்து கிழே இறங்குகிறது, மேஜையில் படுத்துக் கொண்டு தனது பிருஷ்டத்தால் இடித்து உலகை மீண்டும் பறக்கவிடுகிறான், அது மேலே செல்கிறது,

சர்வாதிகாரிக்கு எல்லா தேசங்களும் வெறும் நீர்குமிழ்களே என்ற அவனது எண்ணம் முகத்தில் பரிகாசமாகப் பீறிடுகிறது,

கையில் கிடைத்த பொம்மை ஒன்றை குழந்தை ஆசை தீர விளையாடுவது போல உலக உருண்டையை பந்தாடுகிறான் ஹிட்லர், காட்சியும் இசையும் ஒன்று கலந்து அந்த வேடிக்கையை ரசிக்க வைக்கின்றன

முடிவில் சட்டென பலூன் வெடித்துச் சிதறுகிறது,  இதுவரை அவன் விளையாடியது வெறும் காற்றடைத்த பலூன் என்ற உண்மையை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏமாற்றம், வருத்தம், கோபம், இயலாமை என யாவும் ஒன்று சேர  கிழிந்து போன பலூனைப் பார்க்கிறான், பிறகு மேஜையில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்,

ஹிட்லரின் கனவுகள், பேராசை அத்தனையும் வெறும் காற்றடைத்த பலூன் மட்டுமே என்பதை  சாப்ளின் அந்த ஒரே காட்சியில் பார்வையாளனுக்கு  அழுத்தமாகப் புரியச் செய்து விடுகிறார், அது தான் கலைஞனின் வெற்றி.

: The Great Dictator- Globe Scene

http://youtu.be/IJOuoyoMhj8

Archives
Calendar
February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  
Subscribe

Enter your email address: