காந்தியைப் பின்தொடர்வது

இந்த ஆண்டு மகாத்மா காந்தி குறித்து நான்கு விரிவான உரைகளை நிகழ்த்தியிருக்கிறேன்,  மதுரை, திருச்சி, கடலூர், சென்னை ஆகிய நான்கு இடங்களிலும் நான்கு வேறு விதமான தலைப்புகள், அதில் மூன்று கூட்டங்கள் மாணவர்கள் மத்தியில், ஒன்று எனது புத்தக வெளியீட்டுவிழாவில்.

ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் காந்தியின் குரலை இரண்டு நிமிஷம் ஒலிக்கவிடுவேன், காந்தியை ஒரு புகைப்படமாக, சிலையாக, பிம்பமாகத் தான் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம், அவரது குரலை இந்த தலைமுறையினர் கேட்கவேயில்லை, அதற்காக இரண்டு நிமிஷங்கள் காந்தியின் சொற்பொழிவில் இருந்து சிறிய பகுதியை ஒலிபரப்பு செய்வேன்

பெரும்பான்மையினர் அப்போது தான் காந்தியின் குரலை முதன்முறையாக கேட்கிறார்கள், அவர்களது முதல் எதிர்வினை, காந்தி குரல் என்ன இப்படியிருக்கிறது என்பதே.

எளிமையான ஆங்கிலத்தில், மெதுவான குரலில், உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்தும் அவரது குரல் அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

காந்தி வீராவேசமாகப் பேசுவார் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்தக் குரலை கேட்டதும் அவர்கள் காந்தி லண்டனில் போய் படித்திருந்த போதும் வெள்ளைகாரனைப் போல ஆங்கிலம் பேசவில்லை, அதே நேரம் கருத்துகளை அழுத்தமாக, தெளிவாகச் சொல்வதில் உள்ள உறுதி குரலில் முழுமையாக வெளிப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்

மாணவர்களிடம் காந்தியைப் பற்றி பேசும் போது அவர்களின் மனநிலையை , அறியாமையைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள முடிகிறது,

பெரும்பான்மை மாணவர்கள் காந்தி குறித்து எதையும் வாசித்து அறியாமலே அவர் குறித்த எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கேட்கும் கேள்விகள் எதுவும் அவர்களாக யோசித்து உருவானதில்லை, ஊடகங்களில் யாரோ சொன்னது, எங்கோ மேடைப்பேச்சுகளில், பட்டிமன்றங்களில் கேட்டது, காந்தி பற்றிய எண்ணிக்கையற்ற வதந்திகளை நம்பும் போக்கே அதிகமாக உள்ளது

காந்தி ஒளிர்கிறார் என்ற  தலைப்பில் திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் ஒரு மணி நேர உரை நிகழ்த்தினேன், அன்றைய உரையின் பின்னால் நூறு மாணவிகள் என்னோடு இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பள்ளி மாணவி என்னிடம் சத்தியசோதனை ஒரு மோசமான புத்தகம், அதைப் படிக்க கூடாது என்று தோழி சொல்கிறாள், அது உண்மையா என்று கேட்டார்,

உங்கள் தோழி யார் எனக் கேட்டேன்,

உடனே அவளது தோழி தன்னை மறைத்துக் கொண்டாள்,

நான் அவளைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னதும் அந்தப் பெண் முன்னால் வந்து நான் தான் சொன்னேன், அந்தப் புத்தகத்தில் காந்தி ரொம்ப அசிங்கமா எழுதியிருக்கிறார் என்றாள்,

நீ சத்தியசோதனை படித்திருக்கிறாயா எனக்கேட்டேன்,

இல்லை, என்னோட பிரண்டு அப்படி எழுதியிருப்பதாகச் சொன்னாள் என்று  பதில் சொன்னாள்,

உன் பிரண்ட் எதற்காக அப்படி சொன்னாள், நீ காரணம் கேட்கவில்லையா என்றதும்,

அவள் காந்தியைப் போல ஒழுக்கமாக இருந்தால் வாழமுடியாது சார் என்று பதில் சொன்னாள்

எனக்கு சிரிப்பாக வந்தது,

நீ ஒழுக்கமில்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புகிறாயா எனக்கேட்டேன்

இல்லை, காந்தி அளவுக்கு ஒழுக்கம் வேண்டாம் என்று பதில் சொன்னாள்

காந்தி அளவுக்கு என்றால் எப்படி, எனக்கு விளக்கமாகச் சொல்லு என்றேன்

அது எனக்குத் தெரியலை, ஆனா காந்தியைப் பிடிக்காது, என்று பிடிவாதமான குரலில் சொன்னாள்

சரி உனக்குப் பிடித்த தலைவர் யார் என்று கேட்டேன்

யாரையும் பிடிக்காது என்று சொன்னாள்

உடனே அவளது பிற தோழிகள் அவளுக்குப் பிடித்தமான சினிமா நடிகரின் பெயரைச் சொல்லி அவரைப் பிடிக்கும் என்றார்கள்,

அது அவளது தனிப்பட்ட விருப்பம், காந்தியை நீ வெறுப்பதைப் பற்றி மட்டும் நாம் பேசுவோம், வேறு என்ன காரணங்கள் வைத்திருக்கிறாய் என்று கேட்டேன்

மிடில் ஸ்கூல்ல படிக்கிறப்போ இருந்தே எனக்குக் காந்தியைப் பிடிக்காது, அவரை பத்தி சொல்ற எல்லாமே ஒவரா இருக்கு, நம்பமுடியலை, அவர் ரொம்ப நடிக்கிறார் என்றாள்

ஏதாவது ஒரு உதாரணம் சொல்லு என்று கேட்டேன்

காந்தி எப்பவும் ஆட்டுபால் தான் குடிப்பார், வேர்கடலை மட்டும் தான் சாப்பிடுவார், காந்தி எங்கே போனாலும் நடந்து மட்டும் தான் போவார், கழிப்பறையை கூட தானே சுத்தம் செய்யணும்னு சொல்றார், இது எல்லாம் எனக்குப் பிடிக்கலை என்றாள்

இதை எல்லாம் எங்கே படித்தாய் என்று கேட்டேன்

ஸ்கூல்ல டீச்சர்ஸ் சொன்னது என்றாள்

சத்திய சோதனை புத்தகம் மலிவுவிலையில் இருபது ரூபாய்க்கு விற்கபடுகிறதே, அதை வாங்கி இவ்வளவு தான் காந்தியா என நீயே படித்துப் பார்க்கலாமே என்று கேட்டேன்

எனக்குப் பிடிக்காத ஒருவரைப் பற்றி நான் ஏன் படிக்கணும் என்றாள்

காந்தி ஏன் பிடிக்காமல் போனார் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டாமா என்று கேட்டேன்

காந்தியை எல்லாம் படிச்சா நம்மாலே பிழைக்கமுடியாது, அமெரிக்காவுக்கு போயி சம்பாதிக்க முடியாது என்றாள்

உடனே மற்ற மாணவிகள் காந்திக்கு அமெரிக்கா பிடிக்காது, சயின்ஸ் பிடிக்காது சார் என்று ஒரே குரலில் சொன்னார்கள்

இதுவும் உங்கள் யூகம் தானா எனக்கேட்டேன்

யுஎஸ்ல இருக்கிற எங்க அக்கா சொன்னாள் என்று அந்த  மாணவி சொன்னாள், மற்ற மாணவிகளும் தாங்களும் அப்படி கேள்விபட்டிருப்பதாக சொன்னார்கள்

இரண்டுமணி உரையாடலில் காந்தி பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறுகள், வதந்திகள், பொய்தகவல்களை கேட்டது வருத்தமாக இருந்தது, இது தான் மாணவர்களின் நிலை, பெரும்பான்மை தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் இதே குரலைக் கேட்டிருக்கிறேன்.

காந்தி பற்றிய எதிர்மறையான கருத்துகள், வதந்திகள் வேகமாக பரவிவிடுகின்றன, காந்தியின் வாழ்வும், காந்தியச் சிந்தனைகளும் இன்றுள்ள கல்விநிலையங்களுக்குள் முறையாக அறிமுகமாகவேயில்லை என்பது வருத்தபட வேண்டிய நிஜம்

ஒரு மாணவி என்னிடம் காந்தியை ஏன் கோட்ஸே கொன்றான் என்று கேட்டாள்

உங்களில் யாராவது பதில் சொல்லுங்கள் என்று மற்ற மாணவிகளிடம் சொன்னேன்

உடனே ஒரு மாணவி கோட்ஸேயின் தம்பியை காந்தியின் ஆட்கள் கொன்றுவிட்டார்கள், அதற்குப் பழிவாங்குவதற்கு என்று சொன்னாள்

நீ எந்த வகுப்பில் படிக்கிறாய் என்று கேட்டேன்

பத்து என்று சொன்னாள்

இதை எங்கிருந்து தெரிந்து கொண்டாய் என்றதும்,

அப்படிதான் சொல்றாங்க என்றாள்

அவள் சொன்னது சரியா என்று மற்ற மாணவர்களிடம் கேட்டபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சரி என்று கையை உயர்த்தினார்கள்,

இதைக் காண்கையில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, அவர்கள் காந்தியைப் பற்றிய  தவறான கருத்துகளை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள்

1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது, அன்று காந்தி எங்கேயிருந்தார், சுதந்திரவிழாவில் ஏன் காந்தி கலந்து கொள்ளவில்லை என்று மாணவிகளிடம் கேட்டேன், ஒருவருக்குக் கூடப் பதில் தெரியவில்லை

ஒரு மாணவி மட்டும் காந்திக்கு உடல் நலமில்லை, அதனால் மருத்துவமனையில் இருந்தார் என்று பதில் சொன்னாள்,

இந்த மாணவர்கள் அனைவரும் படிப்பதில் கெட்டிக்காரர்கள், நன்றாக ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்தவர்கள், பெரும்பான்மை மாணவர்கள் உலக அரசியலில் இருந்து ஒலிம்பிக் போட்டி வரை அத்தனை துறை சார்ந்தும் விரிவாகப் பேசுகிறார்கள், தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் காந்தி பற்றிய அவர்களின் பொதுவான புரிதல் என்பது எண்பது விழுக்காடு தவறான செய்திகளே

இதன் மறுபக்கம் போல இன்னொரு கூட்டத்தில் ஆசிரியர்களில் எத்தனை பேர் காந்திய நூல்களை வாசித்திருக்கிறார்கள் என்று கேட்டேன்

ஒருவர் கூட படித்திருக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளமுடிந்த்து

இது ஏதோ காந்தி விஷயத்தில் மட்டும் நடைபெற்ற ஒன்றில்லை, அம்பேத்கார், பெரியார் பற்றி காந்தி அளவு கூட தெரிந்திருக்கவில்லை என்பது இதைவிட அதிர்ச்சியானது

ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் தனது பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களுக்கு வெளியே ஒன்றையும் அறிந்து கொள்வதில்லை, கற்றுத்தருவதில்லை, இணையம் உலகையே தனது உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறது, ஆனாலும் அவற்றை கல்விநிலையங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேயில்லை

காந்தி குறித்த திரைப்படங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகள்,புத்தகங்கள்,  இந்திய சுதந்திர தினம் பற்றிய பிபிசி ஆவணக்காட்சிகள், என எத்தனையோ இன்று கிடைக்கின்றன, இவற்றை வகுப்பறைக்குள் கொண்டுவந்து மாணவர்களிடம் அறிமுகம் செய்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,

கோடைகாலத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு பயிற்சிமுகாமில் சிவகங்கை சீமை, கப்பல்ஒட்டிய தமிழன், பெரியார், பாரதியார், அம்பேத்கார், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன், காந்தி, போன்ற படங்களை திரையிட்டு இதில் எந்த அளவு வரலாறு இருக்கிறது, எவ்வளவு தூரம் உண்மையைப் பிரதிபலித்திருக்கிறது, இது தொடர்பாக நாம் மேலும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் யாவை என்பதை பற்றி ஒரு பயிலரங்கு நடத்தினேன்,

இந்தப் பயிலரங்கின் பின்பும் இதை ஏன் தொடர்ச்சியான வகுப்பறை நிகழ்ச்சியாக மாற்றக்கூடாது என்று மாணவர்களும் ஆசிரியர்களும் ஆதங்கப்பட்டார்கள். கல்விபுலங்களில் வாரம் ஏதாவது ஒரு வகுப்பு இது போன்ற முயற்சிகளுக்கு ஒதுக்கபட வேண்டியது அவசியம்

காந்தி பற்றிய வெறுப்பு முன் எப்போதையும் விட இன்று வேகமாக வளர்ந்துவருகிறது, அந்த வெறுப்பில் பெரும்பகுதி அறியாமையில் உருவானது,

மாணவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி அவர்களின் அறியாமையை, தவறான புரிதல்களைக் களைய வேண்டியது  எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய பணி.

எனது உரையை கேட்ட ஒரு மாணவி விடுமுறையில் வீட்டிற்குப் போயிருந்த போது தந்தையிடம் சொல்லி சத்தியசோதனை புத்தகத்தை வாங்கி தரச்சொல்லி படித்திருக்கிறாள், அந்த பெண்ணின் தந்தை என்னிடம் தொலைபேசியில் பேசினார்

என் மகள் காந்தியைப் படித்துவிட்டு இரவெல்லாம் அழுகிறாள், அவளால் நம்பவேமுடியவில்லை, சத்தியசோதனையில் எழுதப்பட்டது அத்தனையும் உண்மையா என்று  கேட்கிறாள், அவளுடன் சேர்ந்து நாங்களும் காந்தியை பயில்கிறோம் என்றார், கேட்கும் போது மனது மிகவும் சந்தோஷமாக இருந்தது

காந்தியின் வாழ்க்கை ஒளிவுமறைவற்ற உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் போனவர்களே அவர்மீது அவதூறுகளை பரப்புகிறார்கள், அவர் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் காலம் காலமாக பதில் சொல்லப்பட்டுக் கொண்டேவருகின்றன, ஆனாலும் வசைகள் ஒயவேயில்லை

காந்தியவாதிகள் உரத்துச்சப்தமிடுவதில்லை, ஆவேசமாக தங்கள் பக்க நியாயங்களுக்காக சண்டையிடுவதில்லை, அவர்கள் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள், நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள், மௌனமாக நிலத்தை உழுவதைப் போன்ற பணியது, விளைய விரும்பும் தானியம் அந்த மண்ணில் வேர் ஊன்றி நிச்சயம் வளரும்.

நம்பிக்கைகள் பொய்த்துப்போன காலத்தில் வாழும் நமக்கு காந்தி எனும் தூயவெளிச்சம் மட்டும் துணையாக இருக்கிறது

காந்தியின் குரலைக் கேட்க

http://www.harappa.com/gandhi.html

காணொளி

Mahatma Gandhi Talks

http://youtu.be/2GgK_Nq9NLw

***

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: