லாட்ரெக்கின் இரவுக்காட்சிகள்

மோலின் ரோஜ் எனப்படும் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஆஸ்கார் பரிசு வென்றது, அந்தப் படத்தில் ஒவியர் டாலெஸ் லாட்ரெக் ஒரு முக்கிய கதாபாத்திரமாகச் சித்தரிக்கபட்டிருப்பார், லாட்ரெக் கேபரே நடனமாடும் பெண்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர், வேசைகள், நடனக்காரிகள், சூதாட்டவிடுதிப்பெண்கள் இவர்களே அவரது உலகம்,

பாரீஸ் நகரின் இரவு வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர் லாட்ரெக், , அவரது ஒவியங்களை பாஸ்டன் ம்யூசியத்திலும் நியூயார்க் ம்யூசியத்திலும் பார்த்திருக்கிறேன், லாட்ரெக், டீகாஸ் இவரும் நடனப்பெண்களை அதிகம் வரைந்திருக்கிறார்கள், இதில் லாட்ரெக் கேன்கேன் நடனப்பெண்களையும், டீகாஸ் பாலே நடனமாடும் பெண்களையும் சிறப்பாக வரைந்திருக்கிறார்கள்,

1889ல் பாரீஸீன் மான்ட்மார்த்ரே பகுதியில் அமைந்திருந்த மோலின்ரோஜ் எனப்படும் நடன அரங்கு உலகப்புகழ்பெற்றது, அங்கு நடைபெற்ற கேன்கேன்  இசைநடன நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிந்தது, மோலின் ரோஜ் பற்றிய வண்ணப் போஸ்டர்களை உருவாக்கி அதை புகழ்பெறச் செய்தவர் லாட்ரெக்,

வான்கோ, ரென்வா போன்ற பிரபலமான ஒவியர்களின் நண்பராக இருந்த லாட்ரெக் மிதமிஞ்சிய குடியால் தனது 36 வயதில் இறந்து போனார், 19ம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு பெற்ற ஒவியராகக் கருதப்படும் லெட்ரெக் 1000 நவீன ஒவியங்கள், 5084 கோட்டோவியங்கள் வரைந்திருக்கிறார்.

இவரது முழுப்பெயர் ஹென்றி டி டாலெஸ் லாட்ரெக், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இரண்டு கால்களும் ஊனம் ஏற்பட்டது, மேலும் மரபணு கோளாறுகாரணமாக வளர்ச்சிக் குறைபாடு கொண்டவராக இருந்தார் லாட்ரெக், அவரை குள்ளன் என்று பலரும் ஏளனம் செய்யவே வீட்டிற்குள்ளாக ஒடுங்கி கிடந்து ஒவியம் வரைவதில் கவனம் செலுத்த துவங்கினார் ,

அவரது குடும்பம் பாரீஸின் மிகவும் வசதியான பிரபுக்களின் வம்சத்தை சேர்ந்தது பாரீஸின் தென் மேற்குப் பகுதியில் மிகப்பெரிய மாளிகையில் வாழ்ந்தார்கள் ஆகவே வறுமை என்பதே அறியாத மனிதராக லாட்ரெக் வளர்ந்தார்,  அவரது அப்பா அல்போன்சா மிகவும் மூர்க்கமானவர், ஒருமுறை அவரது பண்ணையில் வேலை செய்த ஒரு பெண் காலில் அடிபட்டு வலிக்கிறது என்று காயத்தை காட்டியதும் இந்த காயம் தானே வலியை உண்டாக்குகிறது என்று சொல்லி காலையே வெட்டி எறிந்த மனிதர் அவர், கௌபாய் போல பறவைகளை வேட்டையாடுவதிலும், ஊர்சுற்றுவதிலும், குடித்து வெறியாட்டம் போடுவதிலுமாக தனது நாட்களை கழித்துவந்தார் அல்போன்சா

அவருக்கு நேர் எதிரானவர் லாட்ரெக்கின் அம்மா அடேல், சாந்தமும் மதப்பற்றும் கொண்ட அவர் லாட்ரெக்கின் வளர்ச்சியின்மை கண்டு வருத்தப்பட்டு அவருக்காக பல்வேறு விதமான சிகிட்சைகளை மேற்கொண்டார், ஆனால் மரபணு கோளாறு காரணமாக உருவான வளர்ச்சியின்மை என்பதால் லாட்ரெக் குணமடையவேயில்லை, நாலரை அடிக்கும் குறைவான உயரத்திலே இருந்தார்,

தனது உடல்குறைபாடு பற்றி தாழ்வு மனப்பாங்கு கொண்ட லாட்ரெக் அதை மறப்பதற்காகவே ஒவியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள துவங்கினார், நான்கு வயதிலே காளை ஒன்றை வரைந்து காட்டி, அப்பாவின் நண்பரான ரேனி பிரின்ஸ்டௌவிடமிருந்து நிலக்காட்சி ஒவியம் வரைவதற்கு கற்றுக்  கொண்டார், ரேனியை போலவே இவரும் குதிரைகளை வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்

அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டு பிரிந்துவிடவே அம்மாவுடன் பாரீஸ் நகரினுள் வந்து குடியேறினார் லாட்ரெக், அங்கே ஒவியர் போனெட்டிடம் ஒவியம் பயின்றார், தனது இருபது வயதில் லாட்ரெக் முழுநேர ஒவியராக உருமாறினார், அவர் வரைந்த ஒவியங்கள் காட்சிக்கு வைக்கபட்டு புகழ் பெறத்துவங்கின,

அந்த நாட்களில் சர்க்கஸ் கோமாளிகளையும், கயிற்றில் நடக்கும் கலைஞர்களையும் விதவிதமாக படம் வரைந்து தள்ளினார் லாட்ரெக், அவரது ஒவியங்களை வான்கோவின் சகோதரன் தியோ விலைக்கு வாங்கி தனது கலைப்பொருட்விற்பனை மையத்தில் விற்பனை செய்திருக்கிறார், அந்த நாட்களில் தான் வான்கோவோடு லாட்ரெக்கிற்கு பழக்கம் ஏற்பட்டது,

Le Rire  என்ற பத்திரிக்கையில் இவரது கோட்டோவியங்கள் தொடர்ந்து இடம் பெற்றன, போனெட்டிடம் ஒவியம் பயின்ற போது இளம் ஒவியர்கள் அன்றாடம் தாங்கள் ஒவியம் வரைவதற்கான கருப்பொருளைத் தேர்வு செய்ய பாரிஸ் நகரைச் சுற்றிவர வேண்டியிருந்தது, அப்படி அலையும் போது கண்ட வேசையர் விடுதி ஒன்றை  லாட்ரெக் தனக்கான கருப்பொருளாக தேர்வு செய்து கொண்டார்,

அங்கிருந்த மரியா என்ற பெண்ணை விதவிதமாக ஒவியங்கள் வரைந்தார், லித்தோகிராபி முறையில் அவற்றை மிகப்பெரிய வண்ண போஸ்டர்களாக உருமாற்றினார், அந்த நாட்களில் பாரீஸ் நகரில் மட்டும் முப்பத்திநாலாயிரம் வேசைகள் பதிவு செய்து கொண்டு தொழில்நடத்திவந்தனர், இவர்கள் முறையான மருத்துவபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது அவசியம், அதற்காக வாரம் ஒருமுறை மருத்துவர் அவர்கள் விடுதிக்கு வருகை தருவார், அப்படி மருத்துவரிடம் இளம்பெண்கள் தங்களை சோதனை செய்துகொள்வதை கூட லாட்ரெக் படமாக வரைந்திருக்கிறார்

டீகாஸ் மோனே போன்ற ஒவியர்களின் பாதிப்பு லாட்ரெக்கிடமிருந்தது, அத்துடன் ஜப்பானிய மரச்செதுக்கு ஒவியங்களின் நுட்பங்களையும் அவர் தனதாக்கிக் கொண்டார், லாட்ரெக் ஒவியங்களின் முக்கிய அம்சம் அதன் துல்லியமான உணர்ச்சிவெளிப்பாடு, குறிப்பாக நடனவிடுதிக்கு வரும் ஆண்களின் பகட்டு, காமத்திற்கான காத்திருப்பு, அலட்சியம், மற்றும் குடிவெறியேறி முகங்கள் மீது படரும் வெளிச்சம் என  அவரது ஒவியங்கள் அற்புதமாக வரையப்பட்டுள்ளன,

Nude Standing before a Mirror  ஒவியத்தில் ஒரு நிர்வாணமான பெண் கண்ணாடியில் தனது உடலின் அங்கங்களை பார்த்துக் கொண்டிருக்கிறாள், நாம் அவளது நிர்வாண உடலைக் காணும் அதே வேளையில் அந்த பெண்ணின் வருத்தமான முகத்தையும் காண்கிறோம், அவளது உடைகள் பின்புறம் உள்ள இருக்கையில் கலைந்து கிடக்கின்றன, தான் வேசையாக இருப்பது தொழில்நிமித்தம் மட்டுமே என்பது அவளது தோற்றத்திலே தெரிகிறது,  துக்கத்தின் அடையாளம் போலவே நீல நிறம் பயன்படுத்தபட்டுள்ளது, அந்த  பெண்ணின் நிர்வாணக் கோலம் நம்மை கிளர்ச்சி கொள்ள செய்வதில்லை, மாறாக ஆழ்ந்து யோசிக்க செய்கிறது,

அவள் நிற்கும் நிலை ஏன் சோகைபடிந்து போயிருக்கிறது, அவள் ஏன் தன்னை இப்படி வெறித்து பார்த்துக் கொள்கிறாள் என்று சிந்திக்க வைக்கிறது, அவளது சிவப்புநிறக் கூந்தலும் தளர்ந்த உடல்கூறும் அவள் முதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாள் என்பதையே காட்டுகின்றன, தன்னிடமிருந்து விடுபடுகின்ற இளமையை தான் அவள் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று கூட தோன்றுகிறது

எழுத்தாளர் விக்டர் க்யூகோ வேசைகளை தீவிரமாக காதலித்து அவர்களைப் புகழ்ந்து எழுதியவர், குப்ரின் வேசையர்விடுதி பற்றி யாமா என்றொரு அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார், எமிலிஜோலா வேசைகளின் அன்றாட துயரங்களை தனது எழுத்தில் பிரதிபலித்தார், இந்த வரிசையில் வரும் கலைஞராகவே லாட்ரெக் மதிப்பிடப்படுகிறார்

நடனக்காரிகளை வரைவதற்காக லாட்ரெக் இரவு விடுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார், பணம் படைத்தவர் என்பதால் அவரை அந்த உலகம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடியது, விடியவிடிய குடித்து, நடனக்காரிகளுடன் உறங்கி எழுந்து, தனக்கென தனி வாழ்வை உருவாக்கிக் கொண்டார் லாட்ரெக்,

நடனப் பெண்களின் ஆசைக்காக அவர்களை ஒவியம் வரையத்துவங்கினார், அந்த வண்ண போஸடர்கள் உருவாக்கிய புகழ் காரணமாக லாட்ரெக்கிடம் ஒவியம் தீட்டிக் கொள்ள நடனக்காரிகள் போட்டியிட்டார்கள், ஜேன் என்ற இளம்நடனக்காரியை லாட்ரெக்  காதலித்தார், அவளை விதவிதமாக வரைந்து தள்ளியிருக்கிறார், இன்றும் அந்தப் போஸ்டர்களை காண்கையில் அதன் நிறத்தேர்வும் வடிவாக்கமும் வியப்பூட்டுகின்றன,

அம்மாவிடம் இருந்து பெற்ற பணத்தை கொண்டு தனக்கென ஒரு ஸ்டுடியோவை அமைத்துக் கொண்ட லாட்ரெக் அங்கே பகல்முழுவதும் ஒவியம் வரைவதும் இரவு முழுவதும் நடனக்காரிகளுடன் ஆடிபாடி மகிழ்வதுமான வாழ்வை மேற்கொள்ள துவங்கினார், அந்த நாட்களில் ஒரு நாளுக்கு அவர் ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்கினார், மற்ற நேரங்களில் குடி, நடனவிருந்து, மற்றும் ஒவியம் வரைவது அவரது இயல்பாகியிருந்தது

புகழ்பெற்ற ஓவியரான பின்பு  லாட்ரெக்கிற்கு என மோலின்ரோஜ் விடுதியில் தனி இருக்கை ஒதுக்கபட்டது, இரவு விடுதிக்கு நடனம் பார்க்க வரும் பெண்கள் அவருடன் ஒன்றாக சேர்ந்து குடிப்பார்கள், நடனம் முடிந்த பிறகு, விலைமகளிர்களுடன் பேசி சிரித்து அவர்களை படம் வரைவது லாட்ரெக்கின் வேலை, குறிப்பாக அந்த நடனவிடுதியில் இருந்த நரம்பு தளர்ச்சி கொண்ட பெண்ணான ஜேனை லாட்ரெக்கிற்கு மிகவும் பிடித்துப்போய்விடவே அவளை அழகான வண்ண போஸ்டராக வரைந்திருக்கிறார்,

வீட்டை விட்டு ஒடிவந்தவள், மெலிந்து  போய் கோணக்கால் கொண்டவள் என்று மற்றவர்களால் பரிகாசம்செய்யப்பட்ட ஜேனை அழகான பெண்ணாக, கவர்ச்சி ததும்ப லாட்ரெக் வரைந்த காரணத்தால் அவள் புகழ்பெறத்துவங்கினாள், மோலின்ரோஜில் ஜேனைக் காண்பதற்காகவே ரசிகர்கள் வந்து குவியத்துவங்கினார்கள், ஜேன் மீதான காதலில் அவரை வரைந்த வண்ண போஸ்டர் ஒன்றை ஒவியர் பிகாசோ விலை கொடுத்துவாங்கி தனது சேமிப்பில் பாதுகாத்து வைத்திருந்தார்

இரவுவிடுதியில் பூகம்பம் எனப்படும் காக்டெயில் மதுவகை ஒன்று அவருக்காகவே தயாரிக்கபட்டது, கோனியாக், அபிசந்த் இரண்டும கலந்த அந்த மதுவை குடித்தவுடன் போதை தலைக்கு ஏறிவிடும், காரணம் அதிகமான ஆல்கஹால் கொண்ட மதுவது, அதைக் குடித்துவிட்டு லாட்ரெக் நடனக்காரிகளுடன் ஒன்றாக உறங்கிகிடப்பார்கள்,

பாரீஸ் நகரின் இரவு வாழ்க்கையை விவரிக்கும் அவரது ஒவியங்களில் At the Moulin Rouge  ஒவிய வரிசை எனக்கு மிகவும் விருப்பமானது, அந்த ஒவியங்களில் ஒளியே பிரதானமாக கவனம் கொள்ளபடுகிறது, குறிப்பாக வண்ணமயமான உடைகளுடன் நடனமாடும் முகங்களில் காணப்படும் சந்தோஷமும், காமத்தின் கொந்தளிப்பும், பரவசமூட்டக்கூடியவை, சிவப்பு நீலம் மஞ்சள் ஆகிய நிறங்களை இவரைப்போல தனித்தன்மையுடன் பயன்படுத்தியவர்களில்லை,

மோலின் ரோஜிற்காக இவர் வரைந்த வண்ண போஸ்டர்கள் பாரீஸ் நகரில் மிகவும் பிரபலமானதை முன்னிட்டு பல்வேறு இசை நடன நிகழ்வுகளுக்கான ஆல்பங்கள், வண்ண போஸ்டர்களை உருவாக்க துவங்கினார்,

பிரபுக்களின் ஆசைநாயகியாக இருந்த விலைமகளிர் தங்களை ஒவியம் வரையும் படி அவருக்கு பெரும்பணம் கொடுத்தார்கள், இந்தப் பழக்கம் நாளடைவில் அவரை வேசையர் விடுதிக்குள்ளாகவே ஒரு ஸ்டுடியோவை அமைத்துக் கொள்ள வைத்தது, பெண்கள் நிர்வாணமாக அவர் முன்னே சுதந்திரமாக நடனமாடினார்கள், ஒரு குழந்தையை போலவே அவரை உணர்ந்ததாகவே ஒரு  நடனக்காரி கூறியிருக்கிறார்

வேசைகளுடன் பழகியதால் அவருக்கு பால்வினை  நோயான சிபிலிஸ் உண்டானது, அந்த வேதனையில் விடுபட அதிகம் குடிக்க ஆரம்பித்தார், அதன்விளைவு அவரால் கைதடியில்லாமல் நடக்க கூட முடியாமல் போனது

பல பெண்களுடன் பழகிய போதும் லாட்ரெக் எவரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை, சூசனா என்ற பெண் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முயன்றார், அந்த திருமணம் தோல்வியில் தான் முடியும் என்று உணர்ந்த லாட்ரெக் அதை தவிர்த்துவிட்டார்

பாரீஸில் இருந்தால் அதிகம் குடிக்கிறார் என்று அவரை லண்டனுக்கு இடம் மாற்றம் செய்தார் லாட்ரெக்கின் மாமா, ஆனால் அங்கும் அவரால் குடியில் இருந்து விடுபடமுடியவில்லை. லண்டனில் வசித்த நாட்களில் எழுத்தாளர் ஆஸ்கார் ஒயிலுடன் நட்பு ஏற்பட்டது, குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்த ஒயில்டிற்காக லாட்ரெக் வெளிப்படையாக ஆதரவுக் குரல் கொடுத்தார், லண்டனில் விளம்ப ஒவியங்கள் வரைந்த போது அவரால் அங்கேயே தங்கியிருக்க முடியவில்லை

சில காலத்தில் மீண்டும் பாரீஸ திரும்பி  பகலிரவாக குடித்துக் கொண்டிருக்க் துவங்கினார். இதனால் அவரது அம்மாவை லாட்ரெக்கை விட்டு விலகி தனியே வசிக்க துவங்கினார், லாட்ரெக்கின் வீட்டு வேலையாள் எழுதிய கடிதங்கள் மூலம் அவருக்கு ஏற்பட்டுவரும் உடல்நலக்கோளாறுகளை கண்டு வருந்திய அம்மா, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிட்சை பெற வைக்க முயற்சித்தார்

தொடர்ந்த போதையின் காரணமாக தீவிரமான மனச்சோர்வும் பேதலிப்பும், ஏற்பட்டது, அவரை உடனடியாக மனநலமருத்துவமனையில் சேர்ந்து சிகிட்சை பெறச்செய்தார் லாட்ரெக்கின் அம்மா, மருத்துவம் பெற்று வெளியே வந்து சில காலம் ஒய்வில் இருந்தார் லாட்ரெக், ஆனால் 1901ம் ஆண்டு எதிர்பாராத முறையில் தவறிவிழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிட்சை பலன் இன்றி செப்டம்பர் 9ல் இறந்து போனார்

லாட்ரெக் ஒவியங்களின் தனித்தன்மைகளாக நான் கருதுவது ஒவியம் வரையப்பட்டிருக்கும் கோணம், மற்றும் உருவங்களின் தோற்றநிலை, ஒளியை பயன்படுத்தியுள்ள விதம், தேவையற்ற உருவங்களை துண்டித்து தேவையான அளவு மட்டுமே காட்சிக்குள் இடம்பெறச்செய்யும் உத்தி, அழுத்தமான உணர்ச்சிவெளிப்பாடுகள் இவையே,

விளம்பரம் செய்வதற்கு டெலிவிஷன் போன்ற ஊடகங்கள் இல்லாத அந்தகாலத்தில் லாட்ரெக்கின் வண்ணப் போஸ்டர்களே உதவியிருக்கின்றன, இன்று அச்சிடப்படும் பலவண்ண போஸ்டர்களுக்கு லாட்ரெக்கே முன்னோடி, லாட்ரெக் வாழ்ந்த காலத்தில் அவரது ஒவியங்கள் மிகவும் ஆபாசமானவை என்று கருதி லூவர் ம்யூசியம் அதை வாங்குவதற்கு மறுத்துவிட்டது,

லாட்ரெக் வரைந்த வான்கோ  ஒவியம் மிகவும் வசீகரமான ஒன்று, அதில் வான்கோவின் முகத்தில் காணப்படும் உணர்ச்சிவேகமும் அவரை வரைவதற்காக தேர்வு செய்யப்பட்ட நிறங்களின் கச்சிதமும் அந்த ஒவியத்தை அழகுறச் செய்கின்றன

இரவில் ஒளிரும் மின்மினிப்பூச்சி ஒன்றைப் போல லாட்ரெக் வாழ்க்கை முப்பத்தியாறு வருஷங்கள் ஒளிர்விட்டு அணைந்துவிட்டது, ஆனால் அவரது ஒவியங்கள் இன்றும் அவர் காலத்தைய இரவுகளின் அழியாத சாட்சியாகவே இருக்கின்றன, உலகின் பேரதிசயங்களை கலை தன்வசப்படுத்தி அழிந்து போய்விடாமல் பாதுகாக்கிறது என்பார்கள், அப்படியான ஒரு பணியை தான் லாட்ரெக் செய்திருக்கிறார், அவரது ஒவியங்களின் வழியே பாரீஸ் நகரின் இரவுவாழ்க்கை என்றும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.

••

(பிகாசோவின் கோடுகள் என்ற நவீன ஒவியங்கள் குறித்த எனது நூலில் இருந்து )

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: