நாடக கம்பெனிகள்

சினிமாவின் வருகை மரபான தமிழ்நாடக கம்பெனிகளை எப்படி எல்லாம் பாதிப்படைய செய்தது என்பதைப் பற்றி எழுதுவதற்காக நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன்,

பம்மல் சம்பந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு, பேசும்பட அநுபவங்கள், மற்றும் அவ்வை தி.க.சண்முகம் எழுதிய நாடக வாழ்க்கை அனுபவங்கள், நாடகக்கலை நூல், மற்றும பழைய நாடக கம்பெனியின் சிறுவெளியீடுகள், என வாசிக்க வாசிக்க  வியப்பான தகவல்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன

பம்மல் சம்பந்த முதலியாரின் என் சுயசரிதை நூறு வருஷங்களுக்கு முந்திய சென்னை வாழ்க்கையை விவரிக்கிறது, குறிப்பாக அன்று எப்படி பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தார்கள், எந்த பள்ளி எங்கே நடைபெற்றது, அன்றே தனியார் பள்ளிகள் எப்படிப் புகழ்பெற்றிருந்தன என்பது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது, அத்துடன் பம்மல் சம்பந்த முதலியாரின் நட்புவட்டத்தினையும், நாடக உலகில் அவரது சாதனைகளையும் அவரது வாழ்க்கை வரலாறு விவரிக்கிறது,

பேசும்படத்தின் வருகையால் அவர் கல்கத்தாவிற்கு சென்று நாடகங்களை திரைப்படமாக்க முயன்ற நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் நிறைய பேசும்படங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, குறிப்பாக வடலூர் இராமலிங்க சுவாமிகள் பற்றி ஒரு பேசும்படத்திற்காக தான் நேரடியாகத் திரைக்கதை எழுதித் தந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார், அது நாடகமாக நிகழ்த்தபடவில்லை, படத்திற்காகவே எழுதப்பட்டிருக்கிறது,  இது போல பல  அரிய படங்கள் இன்று காண கிடைக்காமல் அழிந்து போய்விட்டன  என்பது வேதனையான விஷயம்,

நாடகங்களை அச்சிடுவதற்கு காகிதத் தட்டுபாடு வந்த காலத்தில்  அரசு அதிகாரியான காகித கண்ட்ரோலருக்கு கடிதம் எழுதி விண்ணப்பம் செய்து காகிதம் பெற்று எவ்வாறு புத்தகங்களை அச்சிட்டார்கள் என்று நாடக நூல்கள் வெளியிட  ஏற்பட்ட சிக்கல்களைப் பற்றி அரியப்படாத தகவல்களும் காணப்படுகின்றன

வெலிங்டன் தியேட்டரில் சினிமா கேளிக்கை வரியை உயர்த்தியதை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தையும், 71 வயதில் 17 வயது சபாபதியைக நடித்த அனுபவத்தையும், சென்னையில் இயங்கிய பல்வேறு நாடக கம்பெனிகளை பற்றியும் பம்மல் சம்பந்தம் விரிவாக எழுதியிருக்கிறார்

அதில் குறிப்பிட வேண்டியது, சினிமாவிற்காகவே கதைகள் எழுதப்பட்ட காலத்தில் அவை அவசர அவசரமாகவும், எவ்விதமாக ரிகர்சலும் இன்றி படமாக்கபட்டதாக ஆதங்கப்படுகிறார், மேலும் நாடகத்தில் உள்ளது போல திரைக்கதை எழுதுவதற்கு பயிற்சி பெற்ற எழுத்தாளர்கள் இல்லை என்று அவர் குறிப்பிடுவது கவனிக்கதக்க ஒன்று

பம்மல் சம்பந்த முதலியாரைப்போலவே டி கே சண்முகம் நூலிலும் நாடக வாழ்க்கை அனுபவங்கள்  கொட்டிக்கிடக்கின்றன

ஒருமுறை மேடையில் நரசிம்மராக நடிப்பவர் இரணியன் மார்பில் ஏறி நெஞ்சைப் பிளக்கும் காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு நரசிம்ம நடிகர் ஆவேசமாகி தனது  பொய் நகத்தை கொண்டு நிஜமாக இரணியன் நடிகரின் மார்பினைக் கிழித்து கொல்ல முற்படவே அய்யோ கொல்றானே , கொல்றானே என்று கத்தியபடியே இரணியன் மேடையில் ஒடியிருக்கிறார்,

அதைக்கண்டு மக்கள் சிறப்பான நடிப்பு என கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள், உண்மை நிலையை உணர்ந்து நரசிம்ம நடிகரிடம் இருந்து இரணியனை உயிரோடு காப்பாற்றிய சம்பவத்தை அழகாக விவரிக்கிறார் அவ்வை தி க சண்முகம்

1930களில் உருவான மதுவிலங்கு சங்கம், ஆங்கில நாடகக்கம்பெனிகள், இசைத்தட்டுகளின் வருகை, அதற்கு குரல் பதிவு செய்தவற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நாடக நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகள் என்று காலத்தில் கண்ணில் இருந்து மறைந்துபோன வாழ்வியல் காட்சிகள் இந்த நூல்களை வாசிக்க வாசிக்க மனதில் ஒளிர்கின்றன

•••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: