தேநீர்கலை

ஒககூரா எழுதிய ஜப்பானிய நூலான The Book of tea யை வாசித்துக் கொண்டிருந்தேன், தேநீரைப்பற்றி எவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக, அற்புதமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை, கவிதை நூல்களை வாசிப்பதைப் போல சொல் சொல்லாக ருசித்து வாசிக்க வேண்டிய புத்தகமிது

புத்தகத்தை வாசிக்க வாசிக்க உடனே டீக்குடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது, ஜப்பானியர்கள் டீக்குடிப்பதை மகத்தான தியானம் என்கிறார்கள், டீ தயாரிப்பதும், பரிமாறப்படுவதும் கலைவெளிப்பாடாகும்,

எனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜப்பானிய தேநீர்கடைகளில் தேநீர் குடித்திருக்கிறேன், உண்மையில் அது ஒரு சிறப்பான அனுபவமாகும்

தேநீர் வைக்கபடும் அழகிய மரமேஜை, அதன் மீது விரிக்கபட்டுள்ள பூ வேலைப்பாடு கொண்ட விரிப்பு, சூடும்,மணமும் உள்ள தேநீர், அதைப் பருவதற்காக நீலம் மற்றும் வெளிர்நீலப் பீங்கான் கோப்பைகள், டீக்குடித்தபடி கேட்க மெலிதான சங்கீதம், கண்களைக் குளிர்ச்சியடைய செய்யும் இயற்கையான சூழல்,  அவுன்ஸ் கப் போன்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக தேநீரை அருந்தும் முறை, தேநீர் தந்தவருக்கு நன்றி சொல்லும் முறை என்று ஜப்பானியரின் ஆன்மா தேநீர்கலையில் தானிருக்கிறது

ஜப்பானில் மலர்களை அழகாக அடுக்கி வைப்பார்கள், அது தாவரங்களுக்கு தாங்கள் செய்யும் நன்றிக்கடன் என்று ஜப்பானியர்கள் கருதுகிறார்கள், அது போலவே தேநீர் தயாரிப்பதையும், அதைப் பரிமாறுவதையும் தங்களின் மரபுக்கலையின் தொடர்ச்சியாகவே கருதுகிறார்கள்

அவசரத்திற்காக தேநீர் தயாரிப்பது, தேநீர் குடிப்பது என்ற பழக்கமே அவர்களிடம் கிடையாது, ஒரு மனிதன் ஆரோக்கியமானவன் என்பதற்கு அவனுக்குள் போதுமான தேநீர் இருக்கிறது என்று தான் ஜப்பானியர்கள் சொல்கிறார்கள், கோபக்காரனைப் பார்த்து இவனது தேநீர் கொதித்து கொண்டிருக்கிறது என்கிறார்கள், அந்த அளவு ஆன்மாவின் குறியீட்டினைப் போலவே தேநீர் அடையாளப்படுத்தபடுகிறது

டீக்குடிப்பது என்ற சொல் வெறும் வார்த்தையில்லை, அது ஒரு அனுபவம், வெறும் அனுபவம் என்று கூட சொல்லமாட்டேன், கூட்டு அனுபவம், யாருடன், எப்போது, எங்கே வைத்து தேநீர் குடித்தேன் என்பது பெரும்பாலும் பசுமையாக நினைவில் இருக்கிறது,

ஒரு டீக்கடையில் தேநீர் குடித்துவிட்டு அடுத்த கடைக்குப் போய் அங்கே ஒரு தேநீர் குடிப்பது என்று அலைந்து கொண்டிருப்பது வாலிப வயதின் விளைவு , அதை நிச்சயம் ஒரு மத்திய வயதுள்ள மனிதனால் செய்ய முடியாது, அல்லது செய்ய விருப்பமிருக்காது,

தேநீர் ஒன்று தான், ஆனால் ஒவ்வொரு வயதிலும் ஒரு காரணம் கருதி அதைக் குடிக்கிறோம், முதியவர்களில் சிலர் சூட்டிற்காக மட்டுமே தேநீர் குடிக்கிறார்கள், சுவை அவர்களுக்கு முக்கியமில்லை, சென்னையில் உள்ள அடித்தட்டு மக்கள் அதிகாலையில் பிஸ்கட் இல்லாமல் தேநீர் குடிப்பதில்லை, பொறை டீ, பிஸ்கட் டீ, போன்விடா டீ என்று பல்வேறு ரகங்களிருக்கின்றன.

எனது கல்லூரி நாட்களில் காலை ஆறரை மணிக்குத் தேநீர் குடிக்க டீக்கடைக்குப் போனால் நான் திரும்பி வருவதற்கு எட்டரை மணிக்கு மேலாகிவிடும், அதற்குள் எப்படியும் மூன்று டீ குடித்திருப்பேன், வேலையில்லாத நாட்களில் தேநீர் கடைகள் தான் எங்களின் புகலிடம், டீக்கடையில் கணக்கு வைத்துக் கொண்டு குடிப்பதால் எத்தனை டீக்குடித்தோம் என்ற எண்ணிக்கையே தெரியாது, சில வேளைகளில் இரவு கடை மூடும்வரை உட்கார்ந்து தேநீர் குடித்துக் கொண்டுதானிருப்போம்,

எதிர்காலம் குறித்த கற்பனை அல்லது பயம், சினிமா, பெண்கள், அரசியல், இலக்கியம், உள்ளுர் வம்புதும்புகள் என நீளும் பேச்சின் ஊடே தேநீர் தான் பேசும் பொருளை மாற்ற வைக்கும், வாக்குவாதத்தை உற்சாகப்படுத்தும்.

சாதாரணமாக ஒருவருக்கு ஒரு தேநீரை குடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும், என்னைப்போன்ற சூடுவிரும்பிகளுக்கு இரண்டு நிமிசம் போதும், ஆனால் எனது நண்பர்களில் ஒருவன் ஒரு தேநீரை குடித்துமுடிக்க குறைந்த பட்சம் முக்கால் மணி நேரமாகும், அவன் தேன் சாப்பிடுவதைப் போல துளித்துளியாகத் தேநீரைக் குடிப்பான், இவனைப்போலவே பசியை மறக்க தேநீர் குடிக்கும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் சிகரெட் மற்றும் டீயின் வழியே தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஸ்நேகம் துவங்குவதற்கு ஒரு கோப்பை தேநீர் போதுமானது, அப்படி துவங்கிய நட்பு தானே நீட்சி அடைந்துவிடுகிறது.

தேநீரோடு தான் கல்லூரி வயதின் அத்தனை நினைவுகளும் கரைந்து போயிருக்கின்றன, டீக்கடையில் நிற்கிறவர்கள் என்று ஒரு தனிப்பிரிவினர் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள், அவர்களின் உலகம் தேநீர்கடைகள் தான், நிற்பவர்களில் சிலர் காணாமல் போகும்போது புதிய சிலர் அதில் ஒன்று கலந்துவிடுகிறார்கள்,

டீமாஸ்டர்களில் அரிதாகவே பொறுமைசாலிகளைக் காணமுடிகிறது, பெரும்பான்மை மாஸ்டர்கள் எரிச்சலும் கோபமும் கொண்டவர்கள், அவர்கள் தேநீர் கோப்பையை கையாளும் விதத்தை வைத்தே கோபத்தை அறிந்து கொண்டுவிடலாம். ஆனால்  ஞானிகளை போல நிதானமும் சாந்தமும் கொண்ட சிலர் டீ மாஸ்டர்களாக ஆகிறார்கள், அவர்கள் முகத்தில் ஒவ்வொரு டீப்போடும் போது ஒரு ஆனந்தம் தோன்றுவதைக் கண்டிருக்கிறேன், புதியதாக வரைந்த ஒவியத்தை எட்டி நின்று பார்ப்பதைப் போல கண்ணாடி டம்ளரில் டீயை நிரப்பி அதன் மீது பாலின் வெண்மையான நுரையைக் கொண்டு மேகம் போல ஒவியம் தீட்டும் டீ மாஸ்டரின் ரசனைக்காக எத்தனை டீ வேண்டுமானலும் குடிக்கலாம்,

இவ்வளவு நிதானமாக, தியானம் செய்வதைப் போல டீ போடும் மாஸ்டர் ஒரு நாளைக்கு ஒரு டீக்கு மேல் குடிப்பதில்லை என்ற உண்மை பெரிய ஞானத்தை நமக்குப் புகட்டிவிடும்,

புதியதாக எங்கே ஒரு டீக்கடை திறந்திருந்திருந்தாலும் அங்கே தேநீர் குடித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிடும், தேடிக்குடித்து ஏமாந்துவருவேன், அது போலவே பயணத்தின் போது எங்காவது சிறுகிராமத்தில் பாய்லர் அடுப்புடன் உள்ள தேநீர்கடைகளை கண்டால் நிச்சயம் நின்று தேநீர் அருந்துவேன், அந்தத் தேநீரின் சுவை அலாதியானது,

சாப்பாடு, குடிதண்ணீரை விட தேநீரை நேசிக்கிறவன் நான், இப்போது கிரீன்டீ குடிக்கப் பழகிவிட்டேன், ஆனாலும் நண்பர்கள் சந்திப்பு,  பயணத்தின் ஊடே என நாள் ஒன்றுக்கு எப்படியும் மூன்றோ நான்கோ கோப்பைகள் தேநீர் குடித்துவிடுகிறேன்

எனக்கு தெரிந்த டீ மாஸ்டர் சொல்வார்

ஒரு ஊரில் அதிக டீக்கடைகள் இருக்கிறது என்றால் அங்கே தரமான டீ இன்னமும் கிடைக்கவில்லை என்று அர்த்தம்,

அது நிஜம், ஒரு நல்ல டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குள்ளும் இருக்கிறது, அதற்காக தேடி அலைவோம், வெகு அரிதாகவே அப்படி ஒரு தேநீர் நமக்கு வாய்கிறது, மற்றபடி பெரும்பான்மைக் கடைகளில் செங்கல் கலரில் சுடுதண்ணீர் தான் டீ என்ற பெயரில் தரப்படுகிறது

வீட்டு டீ ஒரு போதும் கடை டீ ஆகிவிடாது என்பது பொதுமொழி, வீட்டில் தயாரிக்கபடும் போது டீயின் ருசி ஏனோ மட்டுபட்டுவிடுகிறது, அது போலவே தான் ஸ்டார் ஹோட்டல்களில் தரப்படும் டீயும், அது பாயசத்தின் தம்பியைப் போலவே இருக்கிறது, இதில் மசாலா டீ என்று ஒரு ரகம், அது தேயிலை கலக்கபட்ட பாயசமே தான்,  மறந்தும் நட்சத்திர உணவகங்களில் டீ குடித்துவிடக்கூடாது,

கேரளாவில் கிடைக்கும் கட்டன்சாயாவின் ருசி தனியானது, அதுவும்  மலைக்கிராமங்களில் கிடைக்கும் கறுப்புசாயாவிற்கு தான் எத்தனை அரிதான மணம், சுவை, மலைவாழ் மனிதர்கள் தான் தேநீரின் உண்மையான சுவையை அறிந்தவர்கள், வடஇந்திய ரயில்களில் மண்குவளைகளில் தரப்படும் தேநீர் அலாதியானது, அப்படியொரு தேநீரை ரயிலில் மட்டுமே குடிக்க முடிகிறது, பெரும்பான்மை ரயில்வே பிளாட்பார தேநீர்கடைகள் மோசமானவையே,

ஒக்கூரா சொல்கிறார் டீ தயாரிப்பதற்கு முதல்தேவை மனநிலை, நல்லமனநிலை அமையும் தான் தேநீர் சுவையாகத் தயாரிக்கபட முடியும், ஆகவே தயாரிப்பவரின் மனநிலையே தேநீரின் ருசியைத் தீர்மானிக்கிறது, தெற்கு சீனாவில் அறிமுகமாகி உலகெங்கும் பரவியுள்ள தேநீர் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு ருசி கொண்டிருக்கிறது, சீனாவில் தேயிலைகளை அரைத்து மூட்டுவலிக்கு பத்து போடுவார்களாம், அது ஒரு சிறந்த மூலிகை என்கிறார்கள் சீனர்கள்,

பௌத்த துறவிகள் நீண்ட தியானத்தில் அலுப்பு ஏற்பட்டுவிடாமல் இருக்க தேநீரை குடிக்க பயன்படுத்தினார்கள், எட்டாம் நூற்றாண்டுவரை தேநீர் தயாரிப்பது முறைப்படுத்தபடவேயில்லை

தேநீர் கலை என்பது ஒரு தத்துவம், மனிதனை மேம்படுத்தும் முயற்சியது, அழகுணர்ச்சியும், உடல்நலமும், புத்துணர்வும் ஒன்று சேர்ந்த கலையது, அதற்கென தனி அறமிருக்கிறது, முறையாக தேநீர் தயாரிக்கப்பழகுவது எளிதானதில்லை, அது கடினமான பயிற்சியால் மட்டுமே சாத்தியமாக கூடியது  என்கிறார் ஒககூரா

ஒரு காலத்தில் தேயிலைகளை அரைத்து அரிசியோடு கொதிக்கவிட்டு இஞ்சி, வெங்காயம் சேர்த்து சூப் வைத்து குடித்திருக்கிறார்கள்,  டீயில் எலுமிச்சையை சேர்க்கும் பழக்கத்தை அறிமுகம் செய்தவர்கள் ரஷ்யர்கள், அவர்கள் தான் லெமன் டீயை அறிமுகம் செய்திருக்கிறார்கள், எட்டாம் நூற்றாண்டில் Luwuh என்றொரு கவிஞர் இருந்தார், அவர் தான் தேநீர் தயாரிப்பதற்காக வழிமுறைகளை வகுத்து தந்தவர், இவரை தேநீர் கலையின் தந்தை என்கிறார்கள், இவர் தேநீர் தயாரிப்பதன் அடிப்படை அம்சங்களை பற்றி மூன்று தொகுதியாக புத்தகம் எழுதியிருக்கிறார், இந்த புத்தகமே தேநீர் கலையின் ஆதாரம்,

இதில் தேயிலையை தேர்வு செய்வதில் தான் நல்ல தேநீர் தயாரிப்பு துவங்குகிறது என்கிறார், பல்வேறு விதமான தேயிலை ரகங்கள் இருப்பதால் என்ன தேயிலையை பயன்படுத்துகிறோம் என்பது தேர்வின் முதல்படி, அதன்பிறகு தேயிலையை அப்படியே கொதிக்க விடப்போகிறோமோ, அல்லது பொடி செய்து கொதிக்க விடப்போகிறோமோ, அல்லது பாக்கெட்டில் வைத்து சூடான தண்ணீருடன் கலக்கவிடப்போகிறோமா என்பது முக்கியம் என்கிறார், டீ தயாரிப்பது 300க்கும் மேற்பட்ட முறைகளை கொண்டிருக்கிறது,

தயாரிக்கபட்ட தேநீரை எந்தக் கோப்பையில் ஊற்றுவது என்பது முக்கியமானது, சீனர்களின் பீங்கான் பாத்திரங்கள் டீக்குடிப்பதற்கு என்றே தனித்து உருவாக்கபடுகின்றன, இதில் நீலநிறமான குவளைகளே டீக்குடிப்பதற்கு சிறந்தவை என்கிறார் ஒககூரா

ஜப்பானில் மரபான தேநீர் தயாரிக்க 24 வகையான பாத்திரங்கள், பொருட்கள் தேவைப்படுகின்றன, இதில் தேநீர் தயாரிக்கபடும் தண்ணீர் மலைஊற்றுகளில் அல்லது சுனைகளில் கிடைத்த தூய்மையான தண்ணீராக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்

தண்ணீரைக் கொதிக்க விடும் போது மீன்களின் கண்கள் விழிப்பதை போல சிறிய கொப்பளங்கள் தோன்றும், அது முதல்நிலை, அதே தண்ணீர் மேலும் கொதித்து கோலி உருண்டைகளை தரையில் உருட்டிவிட்டது போல பெரியதாக மாறும், அது இரண்டாம் நிலை, நீராவியுடன் அது கொதிக்க துவங்கும் அதுவே மூன்றாம் நிலை, அந்த நிலைக்கு தண்ணீர் வந்தபிறகே அதை தேநீர் தயாரிக்கபயன்படுத்த வேண்டும், தேயிலையை குழந்தையின் உள்ளங்கை போல மிருதுவான அளவிற்கு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும், டீயில் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும் என்பதே ஜப்பானிய மரபு,

கொதிக்கும் தண்ணீரில் தேயிலையைப் போட்டு கொதிக்க விட்டு நன்கு கொதித்த பிறகு அதன் மீது குளிர்ந்த தண்ணீரைத் தெளித்து அதைத் தணிக்க வேண்டும், அப்படி தயாரிக்கபட்ட தேநீரை அழகிய குவளைகளில் பரிமாற வேண்டும், சூடான தேநீரைக் குடித்தவுடன் தனிமை பறந்து போய்விடும், சிறகு முளைத்து பறப்பது போன்ற அனுபவம் உண்டாகும், மனதைத் தூய்மைப்படுத்தும் என்கிறார் ஒககூரா

மங்கோலியர்களின் படை எடுப்பின் காரணமாக இந்த தேநீர்கலை அழிக்கபட்டது, இன்றுள்ள தேநீர் கலையானது அசலான மரபில் இருந்து அதிகம் உருமாற்றம் கொண்டது,

தேநீர்கலையை பிரபலமாக்கியது ஜென் பௌத்தம், அதில் தேநீர் குடிப்பது ஒரு சடங்கு, ஒரு தியானமுறை, அது ஒரு மெய்வழிப்பாதை, தேநீரின் வழியே மனிதன் தனது ஆன்மாவின் நிலையை அறிகிறான் என்கிறது ஜென்

கோப்பை காலியாக இருக்கும் போது தான் தேநீரை ஊற்ற முடிகிறது என்பது ஞானத்தை அடைய விரும்பும் மனிதன் தனது மனதைச் சுத்தப்படுத்தி காலியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது, மணமும் தேநீரும் பிரிக்கபட முடியாதது என்பது போலவே தான் மனிதனின் இயல்பும் அவனது எண்ணங்களும் பிரிக்கபட முடியாதவை என்கிறது ஜென்,

மாற்றம் ஏற்பட கொதி நிலையை அடைய வேண்டும், உருமாற்றம் அடைந்த தேயிலையே தேநீராகிறது, முதல்துளி தேநீருக்கும் கடைசித்துளி தேநீருக்கும் இடையில் ஒரு வேறுபாடும் கிடையாது,  தேநீரின் ருசி நாவில் துவங்கிய போதும் மனமே அதை முடிவு செய்கிறது, ஆறிப்போன தேநீர் சுவைப்பதில்லை என்பது போலே சலித்துப்போன மனிதனாலும் எந்த செயலையும் ஆற்றமுடியாது, இப்படி தேநீரை வைத்துக் கொண்டு நிறைய பாடங்களைக் கற்றுதருகிறார்கள் ஜென் மாஸ்டர்கள்

தேநீர் பரிமாறுவதற்கு என்றே டீ ரூம் என்ற விசேச அறை ஜப்பானியர்களிடம் உள்ளது, அது எளிமையான, அழகிய கூரைவேயப்பட்ட மூங்கில் அறையாகும் தேநீரைப்பற்றி ஜப்பானில் நிறைய கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன,

தமிழ்நாட்டில் தேநீர் அறிமுகமான நாட்களில் அதை எப்படி இலவசமாக தந்து மக்களை பழக்கினார்கள் என்பதை கரிசல் எழுத்தின் ஆசான் கி. ராஜநாராயணன் எழுதியிருக்கிறார்

சென்னை ராதகிருஷ்ணன் சாலையில் உள்ள நிவேதனம் உணவகத்தில் சுவையான ஜப்பானிய தேநீர் கிடைக்கிறது, தேயிலைகளும் விற்கிறார்கள், நேரடியாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலைகளை இங்கே வாங்கிக்கொள்ளலாம்

தேநீர்கடைகள்,மற்றும தேநீர் சார்ந்து ஒவ்வொருவருக்கும் நினைவு கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் நிறைய இருக்ககூடும்,

சுவையான தேநீரைப்போலவே ருசித்துப் படிக்க வேண்டிய புத்தகமிது

••

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: