கடவுளின் செய்தி

இந்த உலகிற்கு கடவுள் அவ்வப்போது ஏதாவது செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார், அந்தச்  செய்தி, யார் வழியாக, எப்படி வருகிறது என்பதைக் கண்டு கொள்வது கடினமானது என்று ஆப்ரிக்க மக்கள் நம்புகிறார்கள்

ஒரு பெண் சிங்கத்திற்கும் மான்குட்டிக்கும் இடையில் உருவான பாசத்தைப் பற்றிய  Heart of lioness என்ற அனிமல் பிளானெட்டின் ஆவணப்படத்தில் கென்யாவை சேர்ந்த ஒரு பழங்குடி மனிதன் பெண்சிங்கம் மான்குட்டியை தனது பிள்ளையைப் போல நேசிப்பது என்பது  கடவுள் இந்த உலகிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியே என்று கூறுகிறான்,

அந்த ஒருவரி என்னை தீவிரமாக யோசிக்க வைத்தது,

ஆப்ரிக்க மக்கள் கடவுளின் செய்தி என்று சொல்லி வானை நோக்கி விரலைக் காட்டுவதில்லை மாறாக பூமியை நோக்கியே தங்கள் கண்களை தாழ்த்திக் கொள்கிறார்கள், கடவுள் பூமியில் தங்களுடன் ஒருவராக இருக்கிறார் என்று நம்புகிறார்கள்,  பெண்சிங்கம் குலக்கடவுளின் மறுவடிவம் என்று கருதுகிறார்கள், அதை வேட்டையாடுவதோ, தீங்கு செய்வதோ கடவுளுக்கு எதிரான செயல் என்று நினைக்கிறார்கள்,

கடவுளின் செய்தி என்பதை வாழ்க்கை நமக்கு தெரிவிக்கும் உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா,இந்த உண்மை அவ்வப்போது சில சமூக நிகழ்வுகளின் ஊடே மின்னல்வெட்டென பளிச்சிடுவதை கண்டிருக்கிறேன், ஆனால் அந்த உண்மையை உடனே பொய்மையும் அகந்தையும், அதிகார இருட்டடிப்புகளும் மூடிவிடுகின்றன,

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜப்பானைச் சேர்ந்த ஒகவா என்ற பெண்ணிற்கு 115வயது நடந்து கொண்டிருக்கிறது, அவரே உலகின் மிக வயதான பெண் எனறு தொலைக்காட்சியில் அந்த முதிய பெண்ணைக் காட்டினார்கள், அவர் மூன்று வயது சிறுமியை போல ஒடுங்கிப்போயிருந்தார், நாக்கு தடித்துப் பேச முடியவில்லை, உதடு அகன்று விரிந்திருக்கிறது, அவர் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் ஆனால் அது சொல்லாக உருவெடுக்கவில்லை, அதைப்பற்றி செய்தியாளர் குறிப்பிடும் போது அவர் கடவுளின் செய்தியாக எதையோ அறிவிக்க முயற்சிக்கிறார் என்று குறிப்பிட்டார்,

உலகின் மிகவயதான அந்தப் பெண்மணி கடவுளின் செய்தியாக எதை அறிவிக்க முயற்சிக்கிறார், தன்னை உலகிடம் ஒப்படைத்துக் கொண்டவர்களை நாம் காரணமேயில்லாமல் புறக்கணித்து ஒதுக்கிறோம் என்பதையா,

இல்லை, அன்பும் அக்கறையும் ஆதரவும் இல்லாத வாழ்க்கை என்பது அர்த்தமற்றது என்பதைத் தானா,

அந்த முதிய பெண்மணியின் அருகில் அவரது கொள்ளுப்பேத்தியின் பேத்தி தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறாள், அவளுக்கு வயது இரண்டு மாதங்கள், பார்க்கையில் இருவரும் ஒன்று போலவே இருக்கிறார்கள், வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் தான் போலும்,

இவருமே தனது இருப்பை அடுத்தவரின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார்கள், இவருக்குமே உலகம் அச்சமூட்டுவதாகயில்லை,

அந்த முதிய பெண்ணைக் காணும் போது அவரது பெயரோ, ஊரோ எதுவும் முக்கியமில்லாமல் போய்விட்டதாக உணர்கிறேன், எல்லா முதியவர்களும் தங்கள் அடையாளங்களைத் துறந்துவிடுகிறார்கள், முதுமை அவர்களை வேற்றுலகின் மனிதர்களை போல மாற்றிவிடுகிறது,

உண்மையில் ஜப்பானிய முதியவளை விட அதிக வயதான ஆணோ பெண்ணோ இந்தியாவிலே இருக்க கூடும், ஆனால் அவர்கள் தங்களின் வயதைக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை, மேலும் ஊடகங்களின் கண்களில் விழுவதில்லை, அந்த முதிய ஜப்பானியப் பெண்ணைக் காணும் போது நீரோட்டத்தில் கிடந்து தண்ணீரின் வேகத்தால், குளிர்ச்சியால் வடிவேறிய கூழாங்கல் ஒன்றினைப் போன்ற தனிஅழகு கொண்டிருப்பதாகத் தோன்றியது,

நான்கு வருஷங்களுக்கு முன்பாக முதன்முறையாக அனிமல் பிளானெட்டில் Heart of lioness தொலைக்காட்சி படத்தை பார்த்தேன், அப்போதே  மனதை உலுக்குவதாக இருந்தது, விலங்குகளைப் பற்றி படங்களை காணும் போது அதன் தீராப்போராட்டமாக இருப்பது பசி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது,  உணவை எவ்விதமாகவும் தேடிக் கொள்ளவும், சேமிக்கவும் தெரிந்தவன் மனிதன், ஆனால் மிருகங்கள் பசியால் உந்தப்பட்டு இரை கிடைக்காமல் அலைகின்றன, பசியும் காம்மும் தான் மிருகங்களின் அலைச்சலுக்கான முக்கிய காரணிகள், இரண்டும் எளிதாக கிடைத்துவிடுவதில்லை,

பசி கொண்ட மிருகத்தின் காத்திருப்பு என்பது சொல்லில் விளங்கமுடியாதது, ஒரு முறை  கால் உடைந்து போன கிழட்டு புலி ஒன்று மானை துரத்திப்போய் தோற்றுப்போய் தனது இரையை வேட்டையாட  முடியாமல் தவித்து இயலாமையில் தரையில் விழுந்து புரள்வதைக் கண்டேன், பசியின் உச்சநிலையது, பசியை தாங்கிக் கொள்ளமுடியாமல் மனிதர்கள் அழுகிறார்கள், மிருகங்கள் அந்த அழுகையை ஆத்திரமாக மாற்றிக் கொள்கின்றன, கற்பாறையை இறைச்சி துண்டென நினைத்து முகர்ந்து பார்க்கின்றன.

இயற்கை கருணையற்றது,  அது ஒரு வேட்டைக்களம், காட்டினை ரசனைக்குரிய சாந்தி நிலையமாக நினைப்பது முட்டாள்தனம், காடு  உயிர்வாழ்வதலின் போர்களம், அங்கே முடிவற்ற யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது, சாவின் காலடித்தடம் பதியாத ஒரு நாள் கூட காட்டில் கிடையாது,

மனிதன் தனது நினைவுகளின் அடியாழத்தில புதையுண்டு போயுள்ள வேட்டைக்கான எத்தனிப்பை மிருகங்களை வேடிக்கை காண்பதின் வழியே தீர்த்துக் கொள்கிறான், ஒரு புலி வேட்டைக்காக மானைத் துரத்துகையில் அவனது மனம் புலியோடு தான் ஐக்கியமாகிறது, மானைக் கொன்று புலி ருசிக்கையில் அதை பார்க்கும் மனித மனம் தானும் நாக்கைச் சுழற்றிக் கொள்கிறது,

பலம், பலவீனம் என்ற பேதங்கள் காட்டில் இல்லை, அதனதன் உயிர்வாழ்க்கை அதனதன் கையில், நீ வாழ்வதற்காக ஒடு, வாழ்வதற்காக சண்டையிடு, வாழ்வதற்காக கொன்று சாப்பிடு, இவையே காட்டின் மாறாத நியதிகள், மனிதர்களால் காட்டின் இயல்பை புரிந்து கொள்ளமுடியும், ஆனால் கட்டுபடுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது,

சில நாட்களுக்கு முன்பு தகழி சிவசங்கரன் பிள்ளையின் வெள்ளத்தில் என்ற சிறுகதையை வாசித்தேன், வெள்ளத்தில் சிக்கி கொண்டு தவிக்கும் ஒரு நாயின் கதையைச் சொல்கிறது இச்சிறுகதை, மலையாளத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று, நாயின் பரிதவிப்பு நம்மை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கிறது, கதையின் துவக்கம் அற்புதமானது, அந்த ஊரிலே மிக உயரமானது கோவில், ஆனால் அதன் உள்ளிருக்கும் கடவுளே தண்ணீரில் மூழ்க்கிக் கொண்டிருந்தார் என்று கதை துவங்குகிறது, மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படகேறி மேட்டு நிலம் தேடி தப்பிப்போகிறார்கள், ஆனால் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்த நாய் எங்கே போவது, அது போக்கிடம் இல்லாமல் தண்ணீரில் தட்டளிகிறது,  வெள்ளத்தில் அதற்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை, பசி, நிராகரிப்பு, தனிமை என அது கைவிடப்பட்டு சாவை எதிர்நோக்கி தன் எஜமானனின் கூரையின் மீது அது உட்கார்ந்தபடியே வெள்ளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது, என்ன ஒரு அற்புதமான காட்சியது,  மனிதர்கள் தன்னைக் கைவிட்டுப் போன பிறகும் அதற்கு மனிதர்கள் மீதான நம்பிக்கை கைவிட்டுப் போகவில்லை, அந்த நாய் கூரையை விட்டுப் போக மறுக்கிறது, கதையின் முடிவில் வெள்ளத்தில் அடித்துப் போகப்பட்டு முதலைக்குஇரையான நாயின் இறந்த உடலை அதன் எஜமானன் சென்னா காண்கிறான், மனிதர்கள் தங்களை நம்பிய உயிர்களைக் கைவிட்டு போய்விடுவதை பற்றி குற்றவுணர்ச்சி அற்றவர்கள் என்பதை அழுத்தமாக சொல்கிறார் தகழி,  அந்த கதையை படித்த இரவில் மறுபடி Heart of lioness யைப் பார்க்க வேண்டும் போலிருந்தது, யூடியூப்பில் தேடிப் பார்த்தேன்,  ஒரு மணிநேர நிகழ்ச்சியது.

காட்டில் வாழும் பெண்சிங்கம் ஒன்று தாயைப் பிரிந்த ஆரிக்ஸ் என்ற மான்குட்டியை தனது சொந்தக் குட்டிப்போல பாதுகாத்து நேசிக்கிறது, பெண்சிங்கத்திற்கு காமுன்யக் என்று படப்பிடிப்பு குழு பெயரிட்டிருக்கிறார்கள்

பெண்சிங்கத்தின் இதயம் மென்மையானது என்ற ஒரு வழக்குச்சொல்லை கேள்விபட்டிருக்கிறேன், அது உண்மை என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது,

இந்த ஆவணப்படத்தை தொகுத்து வழங்கியுள்ளவர் ஸாபா டக்ள்ஸ் ஹாமில்டன் , இவரே சிங்கத்தைப் பற்றிய நிகழ்வுகளை நமக்கு கூறுகிறாள், ஸாபாவின துணிச்சலும், அவள் சிங்கத்தைத் தேடி மேற்கொள்ளும் பயணமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன, பயம் என்ற வார்த்தையே தெரியாத பெண் என்ற எண்ணம் மனதில் வந்து போகிறது

கென்யாவின் ஸம்புரு இன மக்கள் காட்டில் உள்ள பெண் சிங்கத்தை தங்களின் கடவுளாகவே பார்க்கிறார்கள், அந்தப் பெண் சிங்கம் ஒரு மான்குட்டியைத் தத்து எடுத்து கொண்ட பிறகு வேட்டைக்குப் போக மறுக்கிறது, மான்குட்டியை எப்போதும் தன் கூடவே வைத்துக் கொண்டிருக்கிறது,. தண்ணீர் குடிக்கத் தன்னுடன் கூட்டிச் செல்கிறது. தனது குட்டியின் நிறத்தில் உள்ள மான்குட்டியை  பெண்சிங்கம் பெரிதும் நேசிக்கிறது, ஆனால் எதிர்பாராத ஒரு நிமிசத்தில் ஆண்சிங்கம் அந்தமான்குட்டியை தாக்கிக் கொன்றுவிடுகிறது,

அந்தக் காட்சி ஏற்படுத்திய திகைப்பில் இருந்து என்னால் மீளமுடியவேயில்லை, பெண்சிங்கத்தின் முகத்தில் காணப்படும் நிர்கதி, மற்றும் வேதனை மனதைப் பிசைகிறது, ஆண்சிங்கம் அந்த மான்குட்டியைத் தின்றுவிட்டு எழுந்து போகிறது, பெண்சிங்கம் அதன் பிறகான நாட்களில் தன் பழைய இயல்பில் மறுபடி வேட்டையாடத் துவங்குகிறது,

இவ்வளவு தான் உலகம், இது தான் வாழ்க்கை,

பற்று வைக்கின்ற ஒன்றினை இழப்பது எவ்வளவு துயரமானது என்பதற்கு இப்படத்தை விட பொருத்தமான இன்னொன்றைக் கூறமுடியாது, ஆண்சிங்கம் மான்குட்டியைக் கவ்வித் தூக்கிப் போகையில் உலகம் நிர்தாட்சண்யம் அற்றது என்ற உண்மை முகத்தில் அறைகிறது,

பசி தான் எப்போதும் உலகை இயக்குகிறது, அதன் முன்னே எல்லா அடிப்படை உணர்ச்சிகளும் தூக்கி எறியப்படுகின்றன, பசி என்பது வயிற்றோடு சம்பந்தமுடையாதாக மட்டும மனிதனுக்கு இல்லை, அவனது பசி கிளைவிட்டு வளரக்கூடியது, எந்த உணவாலும் திருப்தி கொள்ள முடியாதது.

மென்மையான உணர்ச்சிகளை உருவாக்கி கொள்வதற்கு விருப்பமும் எத்தனிப்பும் தேவை, ஆனால் மென்னுணர்ச்சிகளை அழிப்பதற்கு ஒரேயொரு செயல் போதுமானதாக இருக்கிறது,

வேட்டையாடுதல் தான் உலகின் மாறாத விதி என்ற உண்மை தான் கடவுள் சொல்லும் செய்தியா என்ற பதைபதைப்பு எழும் போது அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடவில்லை அதே பெண்சிங்கம் இன்னும் சில மான்குட்டிகளை நேசிக்க துவங்கிவிடுகிறதைப் பாருங்கள் என்று ஸாபா சுட்டிக்காட்டுகிறார்,

இந்த ஒரு காட்சி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிகுந்த மனச்சோர்விற்கு உள்ளாகியிருப்பேன்

அந்த பெண்சிங்கம் ஐந்து மான்குட்டிகளின் தாயாக உருமாறிவிடுகிறது, ஆஹா, இதை விட பெரிய நம்பிக்கையை உலகிற்கு யார் தர முடியும், எல்லா பறி  கொடுத்தலுக்குப் பிறகும் வாழ்க்கையின் அடிப்படை அறங்கள் பொய்த்துப் போவதில்லை, அவை யாரோ  சிலரால் உறுதியாகப் பற்று கொள்ளப்பட்டு முன்னெடுத்துப்போகப்படுகின்றன,

இந்த படம் சிங்கம் தொடர்பாக நமக்குள் இருந்த பொதுப்பிம்பத்தை மாற்றி அமைக்கிறது, சிங்கத்தை பெருமைக்குரிய ஒன்றாகவே நாம் கருதுகிறோம்.  சோம்பேறியாக வாழும் ஆண்சிங்கம் ஆண்மையின் அடையாளமாக கருதப்படுகிறது, அது பொய்மையின் பின்னுள்ள நிஜத்தை இப்படம் சுட்டிக்காட்டுகிறது

படத்தில் வரும் மான்குட்டி பெண்சிங்கத்தின் நேசத்தை ஆரம்பத்தில் மிகுந்த அச்சத்துடன் தான் ஏற்றுக் கொள்கிறது, அது தன்னுடைய மான் இனத்தைத் தேடி போய்விடவே துடிக்கிறது, நியாயம் தானே, இந்த அச்சவுணர்வு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஆழமான பயமில்லையா, அதை எப்படி ஒரு மான்குட்டி ஒரு நாளில் முறியடிக்கமுடியும், ஆனால் அது ஏதோவொரு கணத்தில் பயமற்று போனபிறகு பெண்சிங்கத்துடன் இணைந்து ஒன்றாகப் பயணிக்கிறது, இது தான் வாழ்க்கை என்று நம்பத்துவங்குகிறது

ஆண்சிங்கம் பாய்ந்து மான்குட்டியை தாக்குகின்ற காட்சியில் பெண்சிங்கம் அதை எதிர்பார்க்கவில்லை, அது வரை தான் ஒரு சிங்கம் என்பதை மறந்தே இருப்பது போல நடந்து கொள்கிறது, அந்த தாக்குதல் அது ஒரு சிங்கம் என்பதை நினைவுபடுத்துகிறது, இழுத்துச் செல்லப்படும் மான்குட்டியை ஆண்சிங்கம் கொன்றுவிட்டதா என்று பரிசோதனை செய்வதற்காக, தரையில் ரத்தத் துளி இருக்கிறதா என்று முகர்ந்து பார்க்கிறது, அப்போது அதன் முகத்தில் காணப்படும் துயரபாவம் விவரிக்கமுடியாத வேதனை கொண்டிருக்கிறது

பசியில் வாடிய பெண்சிங்கம் 14 நாட்கள் வேறு வாழ்க்கை ஒன்றுக்குத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது, அந்த நாட்களும், அதன் புதிய உறவும் பரிவும் தான் படத்தின் ஆதார மையம்,

காட்டின் விதி மனிதர்களால் புரிந்து கொள்ளபட முடியாதது, மனிதர்கள் இயற்கை குறித்து மிகையாகவே கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள், இயற்கை மனிதனை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை, அதன் இயல்பு நாம் தீர்மானிக்கவே முடியாத ஒன்று என ஜாக் லண்டன் தனது நாட்குறிப்பு ஒன்றில் கூறுகிறார்,

பெண் சிங்கத்தின் வாழ்க்கையைப் பற்றி இந்த ஆவணப்படம் திரும்ப திரும்ப பார்க்கவும் யோசிக்கவும் வைக்கிறது,

நீங்கள் முன்னதாக இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவர் என்றால் மீண்டும் மீண்டும் பாருங்கள், பார்க்கவில்லை என்றால் உடனே அதை பார்த்துவிடுங்கள்

முடிந்தால் கடவுள் சொல்லிய செய்தி எதுவென உங்களுக்கு நீங்களே கேட்டு விடை அளித்துக் கொள்ளுங்கள்

•••

Heart of a Lioness

http://youtu.be/dLo9-PEtM8Q

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: