ஒஹெரு வாழ்கிறாள்

இதிகாசங்களின் தனித்தன்மை உணர்ச்சிகளைக் கையாளும் முறையாகும், குறிப்பாக பிரிவை, மரணத்தை, நிர்கதியை, பெருங்கோபத்தை, அதனால் ஏற்படும் மனக்கொந்தளிப்புகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும்  குரலை உயர்த்தாமல் ஆழமாக மனதில் உணர்த்துவதாகும்.

மகாபாரதமும் ராமாயணமும் இதில் பெரும் சாதனையைப் புரிந்திருக்கின்றன, அதனால் தான் நூற்றாண்டுகளாக அவை மீள்வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கின்றன, அத்தோடு காவியநிகழ்வுகளைக் குறித்து  புதிய கண்ணோட்டத்தில் படைப்புகள் வெளியாகி வருவதும் இதன்பொருட்டே,

மகாகவி பாஷனின் சமஸ்கிருத நாடகமான உறுபங்கம் (Urubhangam )துரியோதனனைப் பற்றிய பொதுப்பிம்பத்தை மாற்றியமைக்க கூடியது. இதிகாசம் காட்டும் ஒரு கதாபாத்திரத்தினை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது நாடகம்

’உறுபங்கம்’ என்பதற்கு ’தொடைகளைப் பிளப்பது’ என்று பொருள்.  கிமு மூன்றாம் நூற்றாண்டினை சேர்ந்த நாடகமது

பொதுவாக சமஸ்கிருத்தில் டிராஜடி எனப்படும் துன்பவியல் நாடகங்கள் கிடையாது, காதலையும் கேளிக்கையையும், மதச்சண்டைகளைப் பகடியான குரலில் விவரிக்கும் சமஸகிருத நாடகங்களுக்கு ஊடே உறுபங்கம் தனிச்சிறப்பு கொண்ட துன்பவியல் நாடகமாகும்

பீமன் துரியோதனின் தொடையைப் பிளந்து கொல்வது தான் நாடகத்தின் மையக்கதை என்றபோதும், நாடகம் போருக்கு எதிரான குரலையே முதன்மைப் படுத்தி எழுதப்பட்டிருக்கிறது

தன்னை முறைதவறி தொடையில் அடித்து வீழ்த்திவிட்டான் பீமன் என்று துரியோதனன் கோபம் கொள்வதில்லை, போரின் பொருட்டு தான் இழந்து போன உறவினர்களை, நண்பர்களை, நேசிப்பிற்குரிய மனிதர்களைப் பற்றியே நினைத்துப் பார்க்கிறான். அது ஈடுசெய்யமுடியாத இழப்பு என்பதைப் புரிந்து கொள்கிறான்,

இந்த நாடகத்தில் வரும் துரியோதனன் ஒரு மகத்தான மனிதன், அவன் உணர்ச்சிகளால் நிரம்பியவன், கிருஷணனின் கீதா உபதேசம் கேட்டு மாறிய அர்சுனனைப் போலின்றி, தன்னைத் தானே அறிந்து கொண்ட மனிதனாக சித்தரிக்கபடுகிறான் துரியோதன்ன்

நாடகத்தில் யுத்த கள விவரணைகளை மூன்று போர்வீரர்கள் மேடையில் தோன்றி விவரிக்கிறார்கள், அவர்கள் பார்வையில் தான் துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் கதாயுத்தம் நடந்தது விவரிக்கபடுகிறது, அதில் பீமன் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்துகிறான், உடனே பீமனை பாண்டவர்கள் அந்த இடத்தில் இருந்து கூட்டிப்போய்விடுகிறார்கள்

அடிபட்டு வீழ்த்து கிடந்த துரியோதனனின் கடைசி நிமிசங்களே நாடகத்தின் கதைக்களம்,

வீழ்ந்துகிடக்கும் துரியோதனன் முற்றிலும் மாறுப்பட்டவன், அவனிடம் உக்கிரமில்லை, அவனை யாராலும் கோபப்படுத்த இயல்வதுமில்லை, அவன் பீமனின் செயலுக்கு பின்னுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்கிறான், இப்போது துரியோதனனுக்குப் போர் அர்த்தமற்றதாகத் தெரிகிறது

மரணப்படுக்கையில் உள்ள தன்னைத் தேடி வரும் மனைவியிடம் பார்வையற்ற தனது தந்தை, தாயை அவள் நேசித்து காப்பாற்ற வேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறான். அடுத்தபிறவியிலும் தான் தனது தாயின் வயிற்றிலே பிறக்க வேண்டும் என்று தாயிடம் வேண்டுகிறான்,

நாடகத்தின் உச்சபட்ட சோகம் அவனுக்கும் மகன் துர்ஜயனுக்குமான உரையாடல், இனி தன்னுடைய மகன் ஆசையாக தனது தொடையில் அமர முடியாது, அது முறிக்கபட்டுவிட்டது என்பதைச் சொல்லும் துரியோதனனுக்குள் ஒரு தந்தையின் அளப்பறிய அன்பு பீறிடுகிறது,

அவன் மகனிடம் சொல்கிறான்

“இந்தத் தொடை உனக்கு மிகவும் பரிச்சயமானது, உனக்கானது, ஆனால் இன்று அது முறிக்கபட்டுவிட்டது, இனி நீ இத்தொடையை மறந்து  அங்குமிங்கும் உட்காரப் பழகிக் கொள்ள வேண்டும் “

துரியோதனனின் தொடை என்பது அவனது பிள்ளைகளுக்கு உரிய ஒன்று, அதில் ஆசை ஆசையாக எத்தனையோ முறை மகனை உட்கார வைத்திருக்கிறான், தொடை என்பது பிள்ளைகளின் சொத்து என்ற சுட்டிக்காட்டல், துரியோதனன் என்ற தந்தையின் மனவலியை அழகாக எடுத்துச் சொல்கிறது

ஆண்களின் தோள்கள் மனைவிக்கானவை, தொடை பிள்ளைகளுக்கானது என்ற எண்ணம் துரியோதனனின் வீழ்ச்சியைத் தாங்கமுடியாத துயரமாக மாற்றிவிடுகிறது

இப்படி ஒரு இளகிய மனம் கொண்ட தந்தையாக துரியோதனன் மகாபாரதத்தில் கவனம் பெறவில்லை, ஆனால் நாடகம் அவனைப் பற்றிய புதுப்பிம்பத்தை உருவாக்கிக் காட்டுகிறது, கலையின் வெற்றி என்பதே நாம் அறிந்த கதாபாத்திரம் ஒன்றினை அறியாத தளத்தில் வைத்து அதன் அகச்சலனங்களை அடையாளம் காட்டுவது தானே

தன் மகனிடம் துரியோதனன், பாண்டவர்களின் தாயாகிய குந்தியிடமும், திரௌபதியிடமும் நீ மதிப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்கிறான், பகைமை மரணத்துடன் முடிந்துவிட வேண்டியது, அது தொடரக்கூடாது என்ற எண்ணம் அவனுக்குள்ளிருக்கிறது

அப்போது அந்த இடத்திற்கு வந்த அஸ்வத்தமா ஆத்திரத்துடன், துரியோதனா பிளக்கபட்டது உனது தொடை மட்டுமில்லை, இனத்தின் கௌரவமும் கூட, அதற்கு நான் பழிவாங்கியே தீருவேன் என்கிறான், அதைக் கேட்ட துரியோதனன் என்னுடைய மரணம் எனக்கு கிடைத்த தண்டனை, எனது கடந்த காலச் செயல்களை நான் நியாயப்படுத்த போவதில்லை, அந்த குற்றமே என்னை வீழ்த்திவிட்டது என்று தனது செயல்களின் நியாயம் அறிந்தவனாகப் பேசுகிறான் துரியன்,

வீழ்ச்சி ஒரு ஆசான், அது உலகம் கற்பிக்கமுடியாத அரிய ஞானங்களைத் தானே கற்பித்துவிடுகிறது, துரியோதனுக்குள் நடந்திருப்பதும் அது தான், ஆனாலும் அவனது கையறு நிலை மனதைப் பிசையவே செய்கிறது,

வாழ்வில் இருந்து துரியோதனன் விடைபெறுவது தான் நாடகத்தின் இறுதியம்சம், அதனை வாசிக்கையில் வாழ்க்கையின் பொருள் தான் என்ன என்ற கேள்வி எழுந்து அடங்குகிறது

இதிகாசங்கள் உருவாக்குகின்ற இது போன்ற தீவிர மனஎழுச்சியை அரிதாகவே திரைப்படங்கள் உருவாக்குகின்றன, சினிமா உலகின் உன்னத சாதனையாளர்களால் உருவாக்கபட்ட திரைப்படங்களில் தான் இத்தகைய ஆழ்ந்த மனவெழுச்சிகள் காட்சியின் வழியே பார்வையாளனைத் தொடுகின்றன

அந்த வகையில் வீழ்ச்சியுற்ற துரியோதனின் கதாபாத்திரத்திற்கு நிகராக உருவாக்கபட்ட ஒரு கதாபாத்திரம் ஒஹெரு, இது ஒரு வீழ்ச்சியுற்ற பெண்ணின் கதை, ஒருவகையில் பார்த்தால் மணிமேகலையின் மாற்றுவடிவம் போன்ற கதையிது, ஒரு பெண் தனது அழகின் காரணமாக துரத்தப்படுகிறாள், சூழ்நிலையால் வீழ்த்தபடுகிறாள், சமூகம் அவளை நுகர்வு பொருளாக பாவிக்கிறது, அவள் பசியிலும் தனிமையிலும், பிரிவிலும் வாடி பரத்தையாகிறாள், ஒஹெருவின் வாழ்க்கை ஒரு காவியம், அதை மிசோகுஷி கவித்துவமான அழகுடன் படமாக்கியிருக்கிறார்

கென்சி மிசோகுஷி ஜப்பானிய இயக்குனர்களில் முக்கியமானவர், 1920முதல் 1930களுக்குள் ஐம்பது படங்களை இயக்கியிருக்கிறார், 90க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மிஷோகுஷி பன்னாட்டு விருதுகளை பெற்றிருக்கிறார்,  Life Of Oharu 1952ல் வெளியானது  , இப்படம்  வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படமாக பரிசு பெற்றது,   பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையிது.

படத்தின் துவக்கத்தில் ஐம்பது வயதைக்கடந்த முதிய வேசையாக அறிமுகமாகிறாள் ஒஹெரு, இரவில் மெதுவாகத் தயங்கி தயங்கி அவள் நடந்து செல்வதில் தான் படம் துவங்குகிறது,  அவளைத்தேடி ஆண்கள் யாரும் வருவதில்லை, உடற்சுகத்திற்காக இல்லாவிடினும் தன்னையும் ஒரு ஆண் விரும்பக்கூடும் என்பதை அடையாளம் காட்ட சாலையில் செல்லும் ஆண்களை வசீகரப்படுத்த முயற்சிக்கிறாள், ஆனால் அவளை யாரும் பொருட்படுத்துவதில்லை, சோர்ந்து, ஏமாந்து போய் மடாலயம் ஒன்றின் வெளியே குளிரைப் போக்கி கொள்ள போடப்பட்ட நெருப்பின் முன் வந்து உட்காருகிறாள், அங்கே குளிர்காய்ந்து கொண்டிருந்த வேசைகள் அவளை பற்றி விசாரிக்கிறார்கள், அவள் தனது கடந்தகாலத்தை பற்றி எதுவும் சொல்வதில்லை

அந்த காட்சியில் நடைமேடையில் தோன்றும் ஒரு முதிய புத்ததுறவி நெருப்பைக் கவனமாக பார்த்துக் கொள்ளவும் என்று எச்சரிக்கை செய்கிறார், அதிகம் கவலைப்பட வேண்டாம், கவலையில் கொட்டிப்போக உங்களுக்கு தான் தலைமுடியே கிடையாதே என்று வேசைகள் அவரைக் கேலி செய்கிறார்கள்,  ஒஹெரு  அருகில் உள்ள பௌத்தமடாலயத்தில் கேட்கும் டிரம் ஒசையை நோக்கி நடக்கத் துவங்குகிறாள்

மடாலயத்தினுள் அவள் காலடி எடுத்துவந்தவுடன் இசை நின்று போகிறது, பேரமைதி, காட்சியில் இசையே இல்லே, அவள் நடக்கிற சப்தம் கூட கேட்கவில்லை, எண்ணிக்கையற்ற பௌத்த பிரதிமைகளை அவள் காண்கிறாள், அந்த பௌத்த சிலைகள் அவளைப் பரிகசிப்பது போலவே இருக்கின்றன அதில் உள்ள ஒரு உருவத்தை உற்றுப் பார்க்கிறாள்,  அவள் இளவயதில் காதலித்த சாமுராயின் தோற்றத்தைப் போலவே இருக்கிறது, அவன் தானா என நம்பமுடியாமல் மறுபடி பார்க்கிறாள், அவளது கடந்த காலத்திற்குள் கதை நகர்கிறது, அதே சாமுராய், ஒஹெரு இளம்பெண்ணாக இருக்கிறாள், இசை மீண்டும் துளிர்த்து துள்ள துவங்குகிறது

கடந்த காலத்தினை மற்றவர்களிடம் நினைவு படுத்த அவள் விரும்பவில்லை, தனக்கு தானே நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறாள்,  அதற்கு ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது, அந்த தூண்டுதல் தெருவில் போகும் ஒரு இளைஞனாக இருக்க முடியாது என்பதால் அவள் பௌத்த உருவம் ஒன்றினை நாடிப் போயிருக்கிறாள், அது அவளது காதல் பரிசுத்தமானது என்பதை மறைமுகமாக குறிக்கிறது, அந்த உருவத்தை காணும் போது தனது இளவயதிற்குள் அவள் பயணிக்க துவங்குகிறாள், இப்படி கவித்துவமான காட்சிகளின் நகர்வினை கொண்டு கதையைச் சொல்வதன் வழியே தான் ஒரு சினிமா மேதை என்பதை மிசோகுஷி நிருபணம் செய்கிறார்

ஒஹெரு ஒரு அழகி, ஜப்பானில் உள்ள உயர்குடியைச் சேர்ந்தவள். அவள் ஒரு சாமுராயைக் காதலிக்கிறாள், அந்த காதலை அவன் வெளிப்படுத்தும் விதமும், அந்த இளைஞன் மீது ஒஹெரு கொள்ளும் காதலும் வேடிக்கையாக உள்ளன, ஆனால் சாமுராய் வசதியற்றவன், அவனை காதலிப்பது அவமானத்திற்கு உரியது என்று கண்டிக்கப்பட்டு குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறாள், சம்பந்தபட்ட சாமுராய் கொல்லப்படுகிறான்

காதலித்த குற்றத்திற்காக தன்னை ஊர் விலக்கி வைத்திருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, தானும் காதலுடன் செத்துப்போக விரும்பி தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள், ஆனால் தோற்றுப்போகிறாள் , இந்த நிலையில் அந்தப் பகுதியை ஆட்சி செய்யும் தாமியோ பிரபுவிற்கு ஆண்வாரிசு இல்லை, அரச வம்சத்திற்கு பிள்ளையை பெற்று தருவதற்கு ஒரு அழகான, உடலில் எந்தவொரு மருவும் மச்சமும் இல்லாத பெண் வேண்டும் என்று தேடி வருகின்ற ஒருவன், ஒஹெருவைக் காண்கிறான், அவளது பெற்றோருக்கு ஆசைக்காட்டி அவளை பல்லக்கில் அரண்மனைக்கு கொண்டு போகிறான்,

இனிமேல் தனக்கு ஒரு புதுவாழ்க்கை துவங்க இருக்கிறது, இதைக் கொண்டு மீதமிருக்கும் காலத்தை ஒட்டிவிட வேண்டியது தான் என்று ஒஹெரு கனவு காணத் துவங்குகிறாள், அரண்மனையில் உள்ள பிரபுவின் மனைவி இவளை போட்டியாளராக கருதுகிறாள், அதனால் அவமதிக்கிறாள், ஆனால் பிரபு அழகியான ஒஹெருவைக் காதலிக்கிறான், அவளுடன் உறவு கொண்டு கர்ப்பிணியாக்குகிறான், ஒஹெருவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.  இனி அவள் தேவையில்லை என்று சொல்லிய பிரபுவின் மனைவி அவள் வழியாக பிறந்த குழந்தையை தானே வளர்க்கப்போவதாக அவளைத் துரத்திவிடுகிறாள்,

தான் பெற்ற பிள்ளையைக் கூட பார்க்கமுடியாமல் தவிக்கும் ஒஹெருவை பல்லக்கில் அவளது தாய்வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கிறார்கள், மகள் வசதியான வீட்டிற்கு போயவிட்டாள், இனி செல்வம் கொட்டும் என்று நம்பிய ஒஹெருவின் பெற்றோர் நிறைய கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள், ஆனால் வெறுங்கையோடு மகள் திரும்பி வந்த்தை கண்டு அவளது அப்பா ஆத்திரத்தில் பொங்குகிறார்

முடிவில் தான் வாங்கிய கடனுக்குப் பதிலாக அவளை ஒரு கெய்ஷா விடுதியில் விற்றுவிடுகிறார், அங்கே வரும் ஒரு வியாபாரி அவளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி ஏமாற்றுகிறான், முடிவில் கெய்ஷா விடுதியை விட்டு வெளியேறி ஒரு வியாபாரியின் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேர்கிறாள் ஒஹெரு,

அங்கே விசிறி செய்யும் ஒருவன் அவளை விரும்பித் திருமணம் செய்து கொள்கிறான்

இன்னொரு முறை புதிய வாழ்வு துவங்குகிறது. புதிய கணவன், கலைப்பொருள் விற்பது  என்று கடந்தகாலத்தை மறந்து சற்று சந்தோஷமாக இருக்கிறாள் ஒஹெரு, ஆனால் அவளது கணவன் வழிப்பறி கொள்ளையர்களால் கொல்லப்படவே விதவையாகிறாள்

வாழ்க்கை தன்னை புழுதியில் குப்புறத்தள்ளி கேலி செய்கிறது என்பதை உணர்ந்து, கலக்கமுற்று புத்த விகாரை ஒன்றில் அடைக்கலம் ஆகிறாள், அங்கு துணிவிற்க வரும் பழைய வாடிக்கையாளன் ஒருவன் அவளுடன் பாலுறவு கொள்ள முயற்சிக்கிறான், அவள் மறுக்கிறாள், அவன் பலவந்தமாக உறவு கொள்ள முயற்சிக்கிறான், அப்போது மடாலயத்தின் துறவியால் கண்டுபிடிக்க பட்டு ஒஹெரு வெளியே துரத்தபடுகிறாள்,

அவளது இளமை அவளை நிம்மதியாக வாழவிடுவதில்லை, தொடர்ந்து அலைக்கழிக்கபடுகிறாள், கடைசியில் பிச்சைகாரியாக வாழத் துவங்குகிறாள், அப்போது  ஒரு நாள், தனது மகன் வளர்ந்து பெரியவனாகி  பிரபுவாக இருப்பதை அறிந்து கொள்கிறாள், ஒரு ஊர்வலத்தில் மகனை ஒரு நிமிசம் காண நேர்கிறது

அவனைத்தேடி தான் அவனது தாய் என்று அறிமுகம் செய்து கொள்ள  ஒஹெரு தவிக்கிறாள், அந்த காட்சி படத்தில் அற்புதமாக படமாக்கபட்டிருக்கிறது, ஒஹெருவிற்குள் தாய்மை பீறிடுகிறது, பிறந்தது முதல் தான் கண்டறியாத தனது மகனை ஒரேயொரு முறை அருகில் கண்டுவிட கூடவே ஒடுகிறாள், ஆனால் அவளை காவலர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள், வெடித்து அழுகிறாள் ஒஹெரு, முடிவில் ஒரு வினாடி மட்டும் மகனை தொலைவில் நின்று பார்க்க அனுமதிக்கப் படுகிறாள்,

தோற்றுப்போன தாயாக தன்னை உணரும் அவள் மீண்டும் வேசைகளுடன் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபடத்துவங்குகிறாள், அது தான் ஆரம்பக்காட்சியாக காட்டப்படுகிறது

தனது தாய் தெருவில் வேசையாக அலைகிறாள் என்பது தனக்கு அவமானம் என உணரும் ஒஹெருவின் மகன், அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறான், ஆனால் அதற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள், அவள் ஒரு வேசி, அவளை அரண்மனைக்குள் அனுமதிக்கமுடியாது என்று எதிர்குரல் எழுப்புகிறார்கள், அவளுக்கு தேவையானப் பணத்தை தந்து எங்காவது வாழ ஏற்பாடு செய்வோம் என்று ஆலோசனை சொல்லுகிறார்கள்,

ஒஹெரு தனது மகனை நெருக்கமாக, ஆசைத்தீர பார்த்துக் கொள்கிறாள், பெருமூச்சுவிடுகிறாள், அது போதும் என்று வெளியே கிளம்பி போய்விடுகிறாள்,

மனம் வெறுத்துப்போய் இனி தன் வாழ்க்கையில் ஒரு அர்த்தமும் இல்லை என்று உணர்ந்த முதிய ஒஹெரு ஒரு துறவியாகி பௌத்த மடாலயத்தில் வாழ்வதுடன் படம் நிறைவு பெறுகிறது

இப்படத்தில் வரும் ஒஹெருவின் மனநிலை மணிமேகலையில் உள்ள  மணிமேகலையின் நிலை தான், ஆனால் மணிமேகலை பசிப்பிணி தீர்க்கும் துறவியாக தன்னை ஆரம்பத்திலே உருமாற்றிக் கொள்கிறாள், ஒஹெருவோ  வாழ்வின் கசடுகளுக்குள் சிக்கி சகல இடர்பாடுகளையும் நேரே அனுபவிக்கிறாள். முடிவில் துறவியாகிறாள்,

ஒஹெருவின் கதை உலகெங்கும் உள்ள புறக்கணிக்கபட்ட பெண்களின் கதை, அவள் ஆண்களால் துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள், எவரையும் அவளால் நம்ப முடியவில்லை,  உலகம் அவளை மாமிசத்துண்டினை போலவே கருதுகிறது, ஒஹெரு பலநேரம் தனது வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் கோபம் கொள்கிறாள், உடனேயே தனது கோபத்தால் எதையும் மாற்றிவிட முடியாது என்பதை உணர்ந்து இயலாமையில் வெடித்து அழுகிறாள். ஒஹெருவின் வாழ்க்கை பெண்களை இந்த சமூகம் எப்படி நடத்தியது என்பதற்கான ஆவணம்

நூற்றாண்டு காலமாக பெண்கள் கலாச்சார கட்டுபாடுகளாலும், காமத்தின் பெயராலும்,நசுக்கபட்டுவருகிறார்கள் என்பதையே மிசோகுஷி அடையாளம் காட்டுகிறார்

உலக சினிமா வரலாற்றில் இப்படம் மிகவும் முக்கியமானது, மிசோகுஷியின் திரைப்படமாக்கல் கவித்துவமானது, அவர் நுட்பமான காட்சிகளின வழியே தான் கதையை நகர்த்திக் கொண்டு போகிறவர், மகனை தேடி ஒடும் ஒஹெருவின் காட்சி சினிமா வரலாற்றில் ஒரு பாடமாகவே போதிக்கபடுகிறது

படத்தின் ஒளிப்பதிவு ஆகச்சிற்ந்த ஒன்று, Yoshimi Hirano , Yoshimi Kono ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்,         வைட் ஆங்கிள் காட்சிகள் எடுப்பதில் மிசோகுச்சி  அதிக விருப்பம் கொண்டவர், இப்படத்திலும் அது தனி அழகாக வெளிப்பட்டிருக்கிறது, குறிப்பாக கிரேனை பயன்படுத்தி எடுக்கபட்ட வைட் காட்சிகள் நேர்த்தியானவை, அது போலவே மிசோகுஷியின் குளோசப் காட்சிகள், அது சொல்லின் தேவையின்றி உணர்ச்சிகளை பார்வையாளனுக்கு முழுமையாக உணர்த்திவிடக் கூடியது

பின்னணி இசை படத்தின் மற்றும் ஒரு சிறப்பம்சம், துவக்க காட்சியில் ஒலிக்க துவங்கும் பௌத்த பிரார்த்தனைப் பாடலே படத்தின் தன்மையை பார்வையாளனுக்கு உணர்த்திவிடுகிறது

ஒஹெருவாக நடித்துள்ள கினுயோ தனாகா  மிசோகுச்சியின் முக்கியக் கதா நாயகி. அவருடைய பல படங்களில் நடித்திருக்கிறார், தேர்ந்த கச்சிதமான நடிப்பு அவருடையது

ஒஹெருவின் கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று, அவளது வாழ்க்கை காற்றில் அடித்துச் செல்லப்படும் இலவம்பஞ்சினை போலவே இருக்கிறது, நிரகாரிப்பு, அவமானம், ஒடுக்குமுறை, இது தான் அவளுக்கு கிடைத்த பரிசுகள், ஆனால் அவள் சோர்ந்து போகவில்லை, வாழ்வதற்கான அவளது எத்தனிப்பு மீண்டும் மீண்டும் துளிர்த்தபடியே இருக்கிறது

டால்ஸ்டாயின் அன்னாகரீனனாவை வாசித்தபோது கிடைத்த மன எழுச்சிக்கு நிகரானது மிசோகுச்சியின் இப்படம் தரும் அனுபவம்,

துரியோதனனுக்குள் உள்ள தந்தையும், ஒஹெருவிற்குள் உள்ள தாய்மையும் ஒன்று சேருகின்றன, இரண்டும் தனி நபர்களின் வலி வேதனை மட்டுமில்லை, அவை வீழ்ந்தவன் உணர்த்தும் பாடங்கள்

பெண்மையின் வலிமையை, துயரை, மாறாத அன்பை வலியுறுத்தும் இப்படம் உலக சினிமாவில் ஒரு இதிகாசமாகும்

•••

The Life of Oharu

http://youtu.be/MhgrNwnkGtU

(ஆங்கில சப்டைட்டிலை பெற யூடியூப்பில் உள்ள caption மெனுவிற்குள் சென்று தேர்வு செய்து கொள்ளவும்)

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: