தேர்தல் ஒவியங்கள்

பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் ஹோகார்த் (William Hogarth) மிக முக்கியமான ஒவியர், கேலிச்சித்திரக்காரர், காமிக்ஸ் புத்தகங்களின் முன்னோடி, சமூகவிமர்சகர், அரசியல் கேலிச்சித்திரங்களை வரைவதில் சிறப்பானவர், 1720ல் லத்தீன் ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் ஹோகார்த், செதுக்கோவியங்களில் தீவிரப்பயிற்சி பெற்று தேர்ந்த செதுக்கோவியக் கலைஞராக திகழ்ந்தார், சூதாட்டம், கள்ளச்சந்தை, மிருகங்களை சித்ரவதை செய்வது, அரசியலில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி வெளிப்படையான கண்டனத்துடன் ஒவியங்களை வரைந்திருக்கிறார்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரில் நடைபெற்ற தேர்தல் குறித்து கேலியான நான்கு செதுக்கோவியங்களை ஹோகார்த் வரைந்திருக்கிறார், 1755ல் வரையப்பட்ட போதும் இந்த ஒவியங்கள் இன்றளவும் அரசியல் இதே அபத்தநாடகமாகத் தான் உள்ளது என்பதை அடையாளம் காட்டுகின்றன

இங்கிலாந்தில் 1754ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நடந்த முறைகேடுகள், வேட்பாளர்களின் ஆடம்பர நடவடிக்கை, மற்றும் ஒட்டுப்பதிவில் நடைபெற்ற லஞ்சம், வெற்றிக்குப் பிறகு தலைகால் தெரியாமல் ஆடுகின்ற நிலை ஆகிய நான்கு நிலைகளையும் ஒவியமாக வரைந்திருக்கிறார்

இதில் ஒன்று 1755ல் வெளியானது, அதற்குக் கடுமையான எதிர்ப்பு வரவே மற்ற மூன்று ஒவியங்கள் முடக்கபட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகே வெளியாகின, தற்போது லண்டன் ம்யூசியத்தில் இந்த ஒவியங்கள் அரசியல் கேலிச்சித்திரங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன

முதல் ஒவியம் An Election Entertainment,

விடுதி ஒன்றில் விருந்து நடைபெறுகிறது, இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் ஆளும் கட்சியினர்,  அவர்களுக்கு எதிர்ப்பாக ஜன்னலுக்கு வெளியே பெரிய ஊர்வலம் போகிறது, அதில் யூதர்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கபடும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது தவறு என்று எழுதப்பட்டிருக்கிறது, இந்த எதிர்ப்பு ஊர்வலத்தை பிடிக்காத ஆளும்கட்சி ஆள் ஒருவன் நாற்காலியைத் தூக்கி கூட்டத்தின் மீது வீசி எறிகிறான், வெளியே இருந்து ஒரு செங்கல் பறந்து வந்து விருந்தில் இருந்த ஒரு ஆளின் தலையில் விழுகிறது, ஒவியத்தின் வலது பக்கம் விருந்தில் பரிமாறப்பட்ட ருசியான கடற்சிப்பியை மிதமிஞ்சிச் சாப்பிட்டு சரிந்து கிடக்கிறான் ஒரு கனவான், இன்னொரு பக்கம் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு ஆளை முத்தமிடுகிறாள்,  வயலின் வாசிப்பவர்கள் தன்னிஷ்டம் போல இசை வாசிக்கிறார்கள், இந்த களேபரத்திற்குள் இருவர் தங்களுக்குள்  ரகசியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அருகில் நாலைநது பேர் தேர்தலை கேலி பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள், தேர்தல் என்பது அவர்களுக்கு ஒரு திருவிழா, ஒரு கொண்டாட்டம், கேளிக்கை, அதன் துவக்கத்தையே இந்த ஒவியம் சித்தரிக்கிறது

இரண்டாவது ஒவியம் Canvassing for Votes.

இந்த ஒவியத்தில் விடுதி உரிமையாளனுக்கு ஒட்டுபோடுவதற்குப் பணம் கையூட்டாகத் தரப்படுகிறது, அதுவும் மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது வெளிப்படையாக நடைபெறுகிறது, இதை ஒரு பெண் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்கிறாள், ஒரு மாலுமி தனது ஊதுகுழலுடன் ஒரமாக உட்கார்ந்திருக்கிறான்,  ஒட்டுபோடுவதற்காக பெண்களுக்கு ரிப்பன் மற்றும் அலங்காரப் பொருட்கள் பரிசாகத் தரப்படுகின்றன,

மூன்றாவது ஒவியம் The Polling.

இதில் ஒட்டுபதிவில் நடைபெறும் தில்லுமுல்லுகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன, வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கு இரண்டு கட்சிகளும் மேற்கொள்ளும் தந்திரங்கள் மோசடிவேலைகள்  பதிவாகியுள்ளன, மனநலமற்ற ஒருவனை ஒட்டுபோடத் தூக்கி வந்து முயற்சி செய்கிறான் ஒருவன், இன்னொரு கட்சியோ இறந்து போனவனைத் தூக்கி கொண்டு வந்துள்ளது, அருகில் ஒரு வண்டி குடைசாய்ந்து கவிழ்ந்து கிடக்கிறது, அதைப்பற்றி கவலையின்றி வண்டியோட்டிகள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்

அடுத்த ஒவியம் Chairing the Member.

எதிர்கட்சி ஆள் வெற்றி பெற்று அதைக் கொண்டாடுகிறான், வீதியில் வெற்றிஊர்வலம் வருகிறது, தோற்றுப்போன கட்சியை சேர்ந்தவர்கள் ஒதுங்கி வேடிக்கை பார்க்கிறார்கள்,  இதில் கரடியை வைத்துக் கொண்டு நிற்பவன் மீது இருவர் உயரத்தில் இருந்து மூத்திரம் பெய்கிறார்கள்.  ஊர்வலத்தில் ஒருவன் தாக்கப்படுகிறான், பன்றிகூட்டம் ஒன்று இடையில் புகுந்து ஒடுகிறது,

ஒரே அமளியாக இருக்கும் இந்த ஊர்வலத்தினுள்  நாற்காலில் அமர்ந்துள்ள வேட்பாளரே தடுமாறி கீழே விழும் நிலையில் இருக்கிறார்.  கழைக் கூத்தாடியின் கரடியின் முதுகில் ஏறிக்கொண்டு ஒரு குரங்கு இந்த வேடிக்கைகளை உற்றுப்பார்க்கிறது. குரங்குக்கு நேர் மேலாக ஒரு பெண்மணி இந்த அபத்தக் கூத்தை தாங்கமுடியாமல் மயங்கி விழுகிறார், அவரைத் தெளியவைக்க வேலையாட்கள் எதையோ அவளை முகரச்செய்கிறார்கள்,  அருகிலேயே மண்டையோட்டையும் எலும்புகளையும் வைத்து இரண்டு பேர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

இந்த ஒவியத்தில் உள்ள முக்கியமான கிண்டலே இவ்வளவு களேபரத்திற்கு காரணம் மனிதர்கள் தான், விலங்குகள் அதனதன் இயல்பில் இருக்கின்றன என்பதே

வேட்பாளர் வாத்தை போல ஒரு முட்டாள் என்பதைக் குறிக்கும்படியாக அவர் தலைக்கு மேலே ஒரு வாத்து பறக்கிறது

1700களில் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இது போன்ற ஏமாற்றுவேலைகள், மோசடிகள், அடிதடியால் தான் நடந்திருக்கின்றன, குடிகாரர்கள், பொறுக்கிகளை ஒன்று சேர்த்து கொண்டு உயர்தட்டு பிரபுக்கள் தேர்தலைத் தங்களின் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்,

இந்த நான்கு ஒவியங்களின் சிறப்பு என்பது பொதுவாக ஒவியர்கள் பிரதானப்படுத்தும் அழகுணர்வை விலக்கி பல்வேறு யதார்த்த நிலைகளை, விலக்கட்ட, ஒடுக்கபட்ட மக்களை, அவர்களின் வாழ்வியல்புகளை, விலங்குளை பதிவு செய்ததாகும், அதிலும் குறிப்பாக பல்வேறுவிதமான மனிதர்களின் வேறுபட்ட உணர்ச்சிநிலைகளை நுட்பமாக பதிவு செய்திருப்பது தனித்துவமாகும்,

ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக பல்வேறு நிலைகளில் ஒவியங்கள் வரைவது என்ற முறையை ஹோகார்த் முன்னெடுத்திருக்கிறார்,

The Analysis of Beauty என்ற ஹோகார்த்தின் நூல் ஒவியத்தில் எப்படி அழகுணர்ச்சி உருவாக்கபடுகிறது என்பது குறித்த முக்கிய நூலாகும். இளம் ஒவியர்கள் அவசியம் இதை ஒரு முறை வாசிக்க வேண்டும்.

•••

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: