அஞ்சலி

எனது விருப்பத்திற்குரிய பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைந்தேன்,

ஆனந்தவிகடனில் வெளியான விரும்பிக்கேட்டவள் என்ற எனது சிறுகதையை வாசித்துவிட்டு தொலைபேசி செய்து என்னை மிகவும் பாராட்டினார் பிபிஎஸ்,

அதன் ஒருவாரத்தில் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பி அழைத்தார், சந்தித்த நாளில் என் கையைப் பிடித்துக் கொண்டு என்னை மிகவும் கௌரவப்படுத்திவிட்டீர்கள் என்று உணர்ச்சி ததும்பப் பேசி என்னை ஆசிர்வாதம் செய்தார்

கடந்த சில மாதங்களில் பலமுறை மணிக்கணக்காக அவருடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது, மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட உயர்வான மனிதர் அவர்,

காந்திமதி என்ற எனது சித்தி தன் வாழ்நாள் முழுவதும் பிபிஎஸ் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தவர், நோயுற்று மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருந்த போதும் அவருக்கு ஒரே ஆறுதலாக இருந்தது பிபிஎஸ் பாடல்களே, அந்த நினைவில் தான் விரும்பிக்கேட்டவள் சிறுகதையை எழுதியிருந்தேன், அச்சிறுகதையை ஒரு குறும்படமாக்க வேண்டும் என்று பிபிஎஸ் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்,

எட்டு மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேலாக தான் கவிதைகள் எழுதியுள்ளதாகச் சொல்லிய பிபிஎஸ் எனக்கும் ஒரு கவிதை எழுதிப் பரிசாக தந்தார், ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவரது ஆங்கில கவிதைகள் சிலவற்றை வாசித்துக் காட்டுவார்,  எம்எஸ்வி, கண்ணதாசன் இருவர் மீதும் அவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் பேச்சுக்குப் பேச்சு வெளிப்படும், தமிழ் சினிமாவின் கடந்த ஐம்பது வருஷங்கள் குறித்து அவர் சொன்ன தகவல்கள் வியப்பூட்டுபவை

நான் 90களின் துவக்கத்தில் சென்னைக்கு வந்த நாட்களில் டிரைவ் இன் உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன், டிரைவ் இன் உட்லண்ட்ஸ் தான் அவர் எழுதுமிடம், தினமும் மாலைநேரம் அங்கே வந்து சேர்ந்துவிடுவார், யாரும் அவருடன் எளிதாகப் பேசி பழகலாம், அவரது வசீகரமே அவர் அணிந்துள்ள தலைப்பாகை, சால்வை தான்,

Chanda Se Hoga Wo Pyaara என்ற ஹிந்திப்பாடலை லதாமங்கேஷ்கர் உடன் இணைந்து பிபிஎஸ் அற்புதமாகப் பாடியிருக்கிறார், அதை ஒருமுறைப்பாடிக் காட்ட முடியுமா என்று ஆசையுடன் கேட்டேன், இந்தப் பாடலை யாரும் என்னிடம் விரும்பிக் கேட்டதில்லை என்று உற்சாகமாக பிபிஎஸ் அப்பாடலை பாடினார்,

இன்று அப்பாடலைக் கேட்கையில் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

Chanda Se Hoga Wo Pyaara

http://youtu.be/UB7VhpIcLSg

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: