கார்வரும் செகாவும்

உலக அளவில் சிறுகதை எழுத்தில் பெரும்சாதனை புரிந்தவர் ஆன்டன் செகாவ், அவரது பாணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று புதிய பாய்ச்சலை  நிகழ்த்தியவர் ரேமண்ட் கார்வர், (Raymond Carver) கச்சிதமான சிறுகதை என்பதற்கு அடையாளமாக கார்வரின் சிறுகதைகளைச் சொல்லலாம்,

அமெரிக்கச்சிறுகதை ஆசிரியர்களில் கார்வரே முதன்மையானவர், செகாவ் பாணி சிறுகதைகளின் முக்கிய அம்சங்கள், குறைவான வார்த்தைகளில் கதை சொல்வது, தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்குவது, துல்லியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, இந்த மூன்றுடன் கதையின் போக்கில் சட்டென  நிகழும் ஒரு பரவசம், ஒரு திகைப்பு, அல்லது ஒரு மகத்தான தரிசனம், அதன் காரணமாக வாசகன் அது வரை வாசித்து வந்த எளிய கதையை ஆஹா, அற்புதம் என சொல்லவைக்கும் சூட்சுமம் கொண்டது செகாவின் எழுத்துமுறை

தனது சிறுகதைகளை பற்றி செகாவ் குறிப்பிடும் கருத்துகள் முக்கியமானவை,

“சலிப்பு தான் எனது கதைகளின் ஆதாரப்புள்ளி, மனிதர்கள் மிகவும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள், காதலில், குடும்ப உறவுகளில், அலுவலக வேலையில், பொது நிகழ்வுகளில், காமத்தில் என சகலமும் சலிப்பு ஊட்டுகிறது, இவ்வளவு ஏன். மரணம் கூட அபத்தமான ஒன்றாகவே உள்ளது,

சலிப்பைப் போக்கிக் கொள்ள என்ன செய்வது என்று எவருக்கும் தெரியவில்லை, விருப்பமான காரியங்களை மறுமுறை செய்வது சலிப்பு தருகிறது என்பதால் புதியதாக ஒன்றினை மேற்கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அந்த ஒன்றை எப்படி அடைவது, அல்லது நிறைவேற்றிக் கொள்வது எனத்தெரியவில்லை, தனது இயலாமையின் மீது சலித்துக் கொள்கிறார்கள்,

சலிப்புடனே தொடர்ந்து வாழ வேண்டியிருக்கிறதே என்பதற்காக வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்திக் கொள்ளப் பகட்டாக, பொய்யாக, நடிக்கத் துவங்குகிறார்கள், அந்த நடிப்பு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளுதல் என உணரும் போது குற்றவுணர்வு அடைகிறார்கள், இப்படி சுயகுழப்பத்தில் ஊறிப்போன மனிதர்களின் வாழ்க்கையைத் தான் எனது கதைகள் பேசுகின்றன,

நம் காலத்தின் முக்கியப்பிரச்சனை மனிதஉறவுகளின் அவநம்பிக்கை, சிதைந்து போன குடும்பம், குறிப்பாக ஆண் பெண் உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அதிருப்தி, அறியாமை, மிகை கற்பனையான மதிப்பீடுகள், இவையே எனது கதைகளுக்கான கருப்பொருட்கள்,

ஒரு மருத்துவராக நான்  பிணியாளர்களின் உடலைப் பரிசோதனை செய்து பார்க்கிறேன், எழுத்தாளராக அவர்களின் மனதைப் பரிசோதனை செய்கிறேன், பல சமயங்களில் எழுத்து மருந்தை விடவும் அதிக சக்தி உள்ளதாக இருக்கிறது,

நம் சமூகம் நோய்மையுற்றது, இங்கே வறுமையை விடவும் அடையாளமின்மை, புறக்கணிப்பு அதிக சிக்கலான பிரச்சனையாக காணப்படுகிறது, பசியால் உந்தப்படும் மனிதன் உணவின் வழியே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும், ஆனால் புறக்கணிப்பை, அதில் உருவாகும் அவமானத்தை உணரும் மனிதன் எதிலும் ஆறுதல் பெற முடிவதேயில்லை, அவன் தன்னை ஒரு துரத்தப்படும் எலியைப் போலவே நினைக்கிறான், சாக்கடைக்குள் ஒளிந்து வாழக்கூட வாழ உலகம் தன்னை அனுமதிக்காது என்று தனக்குத் தானே புலம்பிக் கொள்கிறான், என்னுடைய கதைகள் அவனது அடக்கப்பட்ட குரலைத் தான் பேசுகின்றன“ என்கிறார் ஆன்டன் செகாவ்,

செகாவை தனது ஆசான் என்று கூறும் ரேமண்ட் கார்வர் செகாவின் இறுதிநாட்களை பற்றி எர்ரண்ட் (Errand) என்றொரு அற்புதமான சிறுகதையை எழுதியிருக்கிறார், இக்கதையை தமிழில் ஜி, குப்புசாமி மொழியாக்கம் செய்திருக்கிறார், இக்கதை செகாவிற்கு செய்யப்பட்ட காணிக்கை என்றே கூறுவேன், இதில் மரணப்படுக்கையில் உள்ள செகாவின் மனநிலை துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது

செகாவிற்கும் கார்வருக்கும் எழுத்தில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன, இருவரது வாழ்க்கையும் ஆச்சரியமான வகையில் ஒன்று போலவே இருக்கிறது, செகாவிடமிருந்து தான் சிறுகதைகளின் அத்தனை நுட்பங்களையும் தான் கற்றுக் கொண்டதாக கார்வர் ஒரு நேர்காணலில் கூறுகிறார் , அது உண்மையே, கார்வரின் கதைகளை வாசிக்கும் ஒருவர் அதில் செகாவின் வாசனையை நன்றாக உணரமுடிகிறது,

செகாவின் கதைக்கருக்களில் இருந்து கிடைத்த உந்துதலே கார்வரைத் தொடர்ந்து எழுத வைத்திருக்கின்றன, செகாவின் பந்தயம் சிறுகதையையும் கார்வரின் கதீட்ரல் சிறுகதையையும் ஒரு சேர வாசிக்கும் ஒருவன் இரண்டும் வேறுபட்ட கதைகள் என்று கருதக்கூடும், ஆனால் அடிநாதமாக செகாவின் பந்தயம் கதையின் பாதிப்பில் இருந்தே கதீட்ரல் கதையின் சொல்லும் முறையும் எதிர்மறையான கதைநகர்வும் உருவாக்கபட்டுள்ளதை கொஞ்சம் நுட்பமாக வாசித்தால் அவனால் அறிந்து கொள்ள முடியும், உண்மையில் எல்லா எழுத்தாளர்களும் தங்களின் ஆசான்களின் பாதிப்பு கொண்டவர்களே, அது ஆரோக்கியமான ஒன்றே, இசையில் குருவின் பாடும்முறை சீடனுக்கு தன்னியலபாக வந்து சேர்வதைப் போன்றதே இதுவும்,

பந்தயம் கதை ஒருவனின் அனுமானத்தை மற்றவன் முறியடிப்பதில் கட்டப்பட்டிருக்கிறது, தனிமையை எதிர்கொள்ளும் விதமே  கதையின் முக்கிய அம்சம், அதுவே தான் பிறிதொரு தளத்தில் கதீட்ரல் கதையில் வெளிப்படுகிறது, பார்வையற்ற ஒருவனை பற்றிய முன்அனுமானங்கள் கதையின் ஊடாக தகர்ந்து போகின்றன, முடிவில் இருவருமே ஒரே கதீட்ரலை உணரும் தருணம் கதையினை உயர்வெழுச்சி மிக்க ஒன்றாக மாற்றுகிறது, இதுவும் பந்தயம் கதையில் வரும் கதையின் முடிவின் மறுவார்ப்பே,

செகாவும், கார்வரும் சிறுகதை குறித்து ஒற்றை உண்மையை முன்வைக்கிறார்கள், அது என்னவென்றால், ஒரு கதையைப் பலமுறை திருத்தி எழுதுங்கள் என்பதே,

தச்சன் மரச்சிற்பத்தை செதுக்குவதைப் போல பார்த்து பார்த்து கவனமாகச் செதுக்குங்கள், எல்லாக் கதைகளும் ஒரே முறையில் சரியாக எழுதப்பட்டுவிடாது, தொடர்ந்த ஈடுபாடும், திருத்தமும், மொழியின் மீதான கவனமும், எளிய, அழுத்தமான கதை சொல்லும் முறையுமே கதையின் வெற்றிக்கான காரணங்கள் என்கிறார்கள்,

ரேமண்ட் கார்வர் தன்னைப் பற்றி இப்படித்தான் சொல்லிக் கொள்கிறார், “எனது அம்மா ஒரு நரம்பு நோயாளி, அப்பா பெருங்குடிகாரர், இதனால் இளமைகாலத்தில் மிகவும் நெருக்கடியாக வாழ்க்கையை எதிர்கொண்டேன், அந்தக் கசப்புணர்வே என்னை பதினெட்டு வயதிற்குள் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள செய்த்து, அவள் கர்ப்பமாகிவிட்டாள், அதனால் கல்யாணம் உடனே நடந்தது, அப்போது என் மனைவிக்கு வயது பதினேழு, கல்லூரியில் படிக்க ஆசைப்பட்ட பெண் அவள், அதற்காக லத்தீன் கூட படித்திருக்கிறாள், அவளை என் சுயநலத்தால்  ஏமாற்றிவிட்டேன், இருபது வயதிற்குள் இரண்டு பிள்ளைகளின் தகப்பனாகிவிட்டேன்,

இளமைப்பருவம் என்பதை நான் அனுபவிக்கவேயில்லை, இந்த நெருக்கடி என் மனதை வெகுவாக அழுத்தியது, பிழைப்பதற்காக  பல்வேறு சிறுவேலைகள் செய்து கொண்டு படித்தேன், என் மனைவியும் தொடர்ந்து கடினமாக வேலைகள் செய்தாள், இருவருமே படித்துப் பட்டம் பெற்றோம்,

தற்செயலாகவே கதைகள், கவிதைகள் எழுத துவங்கினேன், ஹெமிங்வேயும் செகாவும் தான் இதற்கான முக்கிய காரணங்கள்,

ஒரு கதையை யோசித்து இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து எழுதி ஒரு நாவலாக வெளியிடும் அளவிற்கு அன்று என்னிடம் வசதியில்லை, அவசரத்திற்காக எழுத வேண்டிய  சூழ்நிலை இருந்தது, கேள்விபட்ட விஷயங்களை, என்னைப் பாதித்த சம்பவங்களை, ஏமாற்றங்களை எழுதத் துவங்கினேன்,

அதில் எனது சுயசரிதைத் தன்மை இருக்கவே செய்கிறது, ஆனால் மூன்று பங்கு கற்பனையும் ஒரு பங்கு நிஜமும் கலந்தவை எனது கதைகள், சுயசரிதைத்தனம் கொண்ட சம்பவங்களை கதையாக மாற்றுவது எளிதானதில்லை, அதற்கு எழுத்தாளன் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கதை பல்லை இளித்துவிடும், ஒரு நாவல் எழுதுமளவு வசதியான கால அவகாசம் கொண்டவனாக ஒரு போதும் நான் இருந்ததில்லை

என் அப்பாவைப் போலவே மிதமிஞ்சி குடிக்கத் துவங்கினேன், குடியிலே மூழ்கிக் கிடந்தேன், ஏமாற்றமிக்க வாழ்வே அதற்குக் காரணம், பின்பு அதில் இருந்து மீண்டு வந்து நாள் எல்லாம் எழுதத் துவங்கினேன், குடியின் வழியாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்,  குடியால் என்னை பலரும் எவ்வளவு வெறுத்திருக்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டேன்,

வெற்றி அடையாத மனிதர்களை பற்றி தான் நிறைய எழுதியிருக்கிறேன், அவர்கள் எனது சகாக்கள், எதை அடைவதற்காக வாழ்க்கையில் உயிரை கொடுக்கவும் தயாராக இருந்தோமோ, அது ஒரு அற்ப விஷயம் என்று பின்னாளில் தோன்றுகிறதில்லையா, அந்த முரண் தான் எனது கதைகளை உருவாக்குகின்றன

இலக்கியம் அதைப் படைக்கின்ற எழுத்தாளனுக்கு அளிக்கின்ற உன்னதமான பரவசமும், வாசிப்பவனுக்குள் நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிற இன்பமும் மட்டுமே  எனக்குப் போதுமானதாகயிருக்கிறது“

செகாவ் 44 வயதில் இறந்து போனார், ரேமண்ட் கார்வர் 50 வயதில், செகாவே உலகின் உன்னதக் கதை சொல்லி எனப்புகழும் கார்வருக்கு செகாவின் நாடகங்களை சுத்தமாகப் பிடிக்காது, இதே போன்ற ஒரு எண்ணத்தையே லியோ டால்ஸ்டாயும் கொண்டிருந்தார்,

நோயுற்று இருந்த காலத்தில் டால்ஸ்டாயைக் காண்பதற்காக செகாவ் சென்றிருந்தார், இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள், செகாவ் விடைறும் போது  அவரிடம் டால்ஸ்டாய், நீ உன்னதமான சிறுகதை எழுத்தாளன் ஆனால் உனது நாடகங்களை சகிக்க முடியவில்லை, உனது நாடகங்களின் பிரச்சனை கதாபாத்திரங்கள் வெளியேறுவதற்கான வழியற்று போயிருப்பது தான், அது உனக்கு புரியவேயில்லை என்று சொல்லி செகாவை முத்தமிட்டு வாழ்த்தியிருக்கிறார், தனது ஞானதந்தையின் ஆசிபெற்ற செகாவ். டால்ஸ்டாய்க்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களையே பிடிக்காது, அந்த வகையில் தான் என்னையும் பிடிக்கவில்லை என்று கூறி சந்தோஷப்பட்டிருக்கிறார்

Minimalist என்று செகாவைச் சிறப்பித்து கூறிய இலக்கிய விமர்சகர்கள், இன்று கார்வரை சிறுகதை உலகின் மினிமலிஸ்ட் என்கிறார்கள், ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கூட இதுவரை தமிழில் வெளியாகவில்லை,ஆனால் கார்வரின் முக்கியச் சிறுகதைகளில் பல தமிழில் வெளியாகி உள்ளன, கவிஞர் சுகுமாரன், ஜி,குப்புசாமி சிறில் அலெக்ஸ், எம் கோபாலகிருஷ்ணன், சங்கர நாராயணன் என பலரும் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள் கற்றுக் கொள்ள கார்வரிடமும் செகாவிடமும் நிறைய உள்ளன, இருவரையும் தொடர்ந்து தீவிரமாக வாசிப்பதே அதற்கான முதற்படி.

ரேமண்ட் கார்வரை வாசிக்க

http://solvanam.com/?author=142

ஆன்டன் செகாவை வாசிக்க

http://www.online-literature.com/anton_chekhov/

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: