பேட்ரிக் ரோசாரியோ

ரஷ்ய எழுத்தாளர் கொரலங்கோ கண்தெரியாத இசைஞன் என்றொரு குறுநாவலை எழுதியிருக்கிறார், அதில் பார்வையற்ற ஒரு இசைக்கலைஞனின் உலகம் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியான ஒரு அரிய இசைக்கலைஞர் சென்னையிலே வசிக்கிறார், அவரது இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள், மறக்கவே முடியாது என்று இசை ரசிகரான எனது நண்பர் கார்த்திக் ஒரு முறை தெரிவித்தார்,

பேட்ரிக் அலெக்சாண்டர் ரோசாரியோ. ஒரு அகார்டியன் இசைக்கலைஞர், இவரது இசை நிகழ்ச்சியினை எழுத்தாளர் ஷாஜியின் புத்தக வெளியீட்டு விழாவின் போது ஒரு முறைக் கேட்டேன், அவர் திரையிசைப்பாடல்களை அகார்டியனில் இசைத்துப் பாடுவது அற்புதமானது, அதன் பிறகு எனது நண்பர் சந்திரசேகர் இல்லத் திருமணம் மற்றும் எனது தங்கை மகள் திருமணத்தின் போது ரோசரியோவின் சிறப்புக் கச்சேரி நடைபெற்றது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ள இவர் ஒரு பார்வையற்ற கலைஞர்,

35 வருஷங்களுக்கு மேலாக அகார்டியன் வாசித்து வருகிறார், தமிழின் முக்கிய இசையமைப்பாளர்களான இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் ஆஸ்தான அகார்டியன் பிளேயர் இவரே, தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பங்களித்திருக்கிறார்,

ரோசாரியோவின் இசையைக் கேட்பது கடந்த கால இனிமையான நினைவுகளுக்குள் மீண்டும் பயணம் செய்வது போன்றது, குரல் வழியாக கேட்டுப் பழகிய பாடல்களை அகார்டியன் இசையில் கேட்பது தனியான அனுபவம், ஸ்டீவ் வொண்டர் உலகப்புகழ்பெற்ற பார்வையற்ற இசைக்கலைஞர், அவர் பாடும் போது பார்வையாளர்கள் ஒரு மேஜிக்கை அனுபவிப்பார்கள் என்பார்கள், அதே மேஜிக்கை ரோசாரியோவின் இசைநிகழ்ச்சியை கேட்கும் போது முழுமையாக உணர முடிகிறது

ரோசாரியோவிற்கு 19 வயதில் பார்வை இழப்பு ஏற்பட்டது, அவர் வழக்கறிஞராக ஆக விரும்பினார், ஆனால் பார்வை குறைபாடு காரணமாக படிக்க இயலவில்லை, அதற்கு மாறாக தனக்கு விருப்பமான இசைத்துறையில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டு இன்று இசையில் மகத்தான சாதனையாளராகத் திகழ்கிறார்

திருமணம், குடும்ப நிகழ்வுகள், பள்ளி விழாக்கள் என எந்த நிகழ்வாக இருந்தாலும் ரோசரியோவின் இசை பார்வையாளர்களை முழுமையாக கட்டிப்போட்டுவிடுகிறது, இப்படியொரு அதிசயமான திறமைசாலியை உலகம் இன்னமும் முழுமையாக கொண்டாடவில்லை என்பதே உண்மை

அகார்டியன் வாசிப்பவர்கள் இன்று வெகு அபூர்வம், அதில் பழைய பாடல்களை இனிமையாக இசைத்துப் பாடுகின்றவர் அரிதிலும் அரிது, அந்த குறையை பேட்ரிக் ரோசாரியோ போக்கிவிடுகிறார், இரண்டரை மணி நேரக் கச்சேரி செய்யும் போதும் அவரது எனர்ஜி குறைவதேயில்லை, அவரும் அவரது குழுவினர்களும் ஒன்றிணைந்து அற்புதமான ஒரு இசை அனுபவத்தை நமக்குத் தருகிறார்கள்

வெண்ணிற ஆடை படத்தில் இருந்து என்ன என்ன வார்த்தைகளோ பாடலை ரோசாரியோ அகார்டியனில் வாசித்துக் கேட்டது மனதில் இன்றும் ஒடிக் கொண்டேயிருக்கிறது

தொடர்புக்கு

Patrick Alexander Rosario

Greenland Orchestra

தொலைபேசி   98401 48079

••

Archives
Calendar
February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  
Subscribe

Enter your email address: