மார்க் ட்வைனின் வீடு

அமெரிக்கப்பயணத்தில் நான் இருவரது வீடுகளைப் பார்க்கவிரும்பினேன், ஒன்று வில்லியம் பாக்னர் மற்றொன்று ஜாக் லண்டன் ,இருவர் எழுத்தின் மீது அதிகமான விருப்பம் கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் நினைவிடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் பயணதிட்டமிடலில் அது சாத்தியமாகவில்லை,

கனெக்டிகெட் மாநிலத் தலைநகர் Hartford இல் உள்ள அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் ம்யூசியத்திற்குச் சென்றிருந்தேன், ட்வைனின் வீட்டைச் சுற்றிப் பார்க்க கட்டணம் 20 டாலர்.

அருங்காட்சியகத்தில் அவரது படம் போட்ட பேனா. டாலர், கீ செயின், டி சர்ட் போஸ்டர்கள், புத்தகஙகள் கிடைக்கின்றன, இது தவிர ட்வைனிற்கு விருப்பமான ஒரு காபிபொடியும் விற்கிறார்கள்

நானும் பாஸ்டன் பாலாஜியும் ம்யூசியத்திற்குச் சென்றிருந்தோம், மிகப் பழமையான வீடு அப்படியே நினைவகமாகப் பாதுகாக்கபட்டுள்ளது, , உள்ளே சிறிய அரங்கு ஒன்றில் மார்க் ட்வெய்ன் பற்றிய ஆவணப்படம் நாள் முழுவதும் ஒடிக்கொண்டிருக்கிறது

மார்க் ட்வைனின் இயற்பெயர் சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ் படகோட்டிகள் ஆற்றின் ஆழம் 12 அடி இருப்பதைக் குறிக்க ‘மார்க் ட்வைன் ‘ என்று குறிப்பிடுவார்கள். அதை வர்ஜீனியாசிட்டியில் கட்டுரை எழுத துவங்கிய போது தனது புனைப்பெயராக்கி கொண்டார்,

அங்கத எழுத்திற்குச் சரியான அடையாளம் ட்வைன், அவரது பயண நூலான Following the Equator படித்திருக்கிறேன், ட்வைனின் மிக முக்கியமான புத்தகமிது

ட்வைனின் டாம்சாயரையும் ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்களையும் எனது பள்ளிநாட்களில் வாசித்திருக்கிறேன், அன்று அது வெறும்புனைகதையாக மட்டுமே புரிந்திருந்தது, ஆனால் பின்னாளில் அமெரிக்கவரலாற்றை வாசித்த பிறகு மார்க் ட்வைனின் இலக்கியப் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நன்றாக உணர முடிந்தது,

ஒருவகையில் மார்க் ட்வைன் தான் சரியான அமெரிக்க அடையாளம், அவரிடம் காணப்படும் எள்ளல், சரளமும், நுட்பமுமான எழுத்துமுறை, கறுப்பின அக்கறை, தீராத பயண அனுபவங்கள், சமகால அரசியல் போக்குகள் மீதான சாட்டையடி விமர்சனம் மற்றும் கட்டற்ற சுதந்திர மனப்போக்கு. ஆகியவை அமெரிக்க இலக்கிய வரலாற்றில் அவரைத் தனித்த ஆளுமையாக அடையாளம் காட்டுகின்றன

அமெரிக்காவின் நவீன எழுத்துகள் அத்தனையும் மார்க் ட்வைனிடமிருந்து தோன்றியவையே என்று ஹெமிங்வே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

சிறிய பாலம் ஒன்றின் வழியே நடந்து சென்றால் வீட்டின் முகப்பினை அடையலாம், உயரமான வீட்டின் முகப்புத் தோற்றம் கம்பீரமானது அவரது வீட்டிற்கு அருகாமையில் அங்கிள் டாம்ஸ் கேபின் எழுதிய ஹாரியட் பீச்சர் ஸ்டூடாவ் என்ற எழுத்தாளரது வீடிருக்கிறது, இரண்டு எழுத்தாளர்கள் அருகருகில் குடியிருப்பது ஆச்சரியமானது, ட்வைனின் புகழ்வெளிச்சத்திற்கு நிகரானது ஹாரியட்டினை பிரபலம் ஆகவே, இருவருக்குள்ளும் பொதுவான நட்பு இருந்தபோதும் நெருக்கமான உறவு உண்டாகவில்லை,

ட்வைனின் வீடு அவரது மனைவி ஒலிவியாவின் விருப்படி, அவர் அருகில் இருந்த வடிவமைத்த வீடு என்று சொன்னார் வழிகாட்டும் பெண், ,1874 முதல் 1891 வரை இந்த வீட்டில் ட்வைன் வசித்திருக்கிறார், 1903ல் வீடு விற்கபட்டுக் கைமாறிப்போயிருக்கிறது,

மூன்று தளங்களைக் கொண்ட இந்த வீட்டின் தரைத்தளத்தில் அழகிய வரவேற்பறை காணப்படுகிறது, அங்கே உள்ள அலங்காரப்பொருட்கள், மற்றும் பூகுவளைகள் சீனாவில் இருந்து தருவிக்கபட்டிருக்கின்றன, பெரிய கணப்பு அடுப்பும், அதை ஒட்டிய ஒரு மரநாற்காலியும் காணப்படுகிறது, அதில் சாய்ந்து அமர்ந்தபடியே ட்வைன் குளிர்காய்வார் என்றார்கள்

ஹாலில் ஆள் உயர கண்ணாடி ஒன்று காணப்படுகிறது, சுவரில் நீர்வண்ண ஒவியம் ஒன்றும் மாட்டப்பட்டிருந்தது

ஹாலை ஒட்டியபடியே சென்றால் அவரது நூலகத்திற்குச் செல்லமுடியும், பெரிய நூலகமில்லை என்றபோதும் அவர் வாசித்த பழைய நூல்கள் அப்படியே பாதுகாத்து வைக்கபட்டிருக்கின்றன, கவிதைத் தொகுதிகள், கதைதொகுப்புகள், சிறுவர்கள் வாசிக்கும் புத்தகங்கள், வரலாற்று நூல்கள் எனப் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களிருந்தன, ஒரு வீனஸ்சிலை ஒன்று ஒரமாகக் காணப்பட்டது,

அந்தப் புத்தகங்களில் ஒன்றை கையில் தொட்டுப் புரட்டி பார்த்தேன், டெகமரான் கதைபுத்தகமது, பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருக்கிறது, அந்த அறையில் புகைபிடித்தபடியே ஒய்வாகப் படிப்பது ட்வைனின் வழக்கம் என்றார் வழிகாட்டி,

கிழே உணவு அருந்து மேஜை பெரியதாக இருந்த்து, அந்த அறைச்சுவர்களில் அழகிய சிவப்பு மற்றும் தங்கநிற பூவேலைப்பாடுகள் கொண்ட காகிதம் ஒட்டப்பட்டிருந்தது, பிரத்யேகமாக அது ட்வைனிற்காக வடிவமைக்கபட்டது என்றார்கள், உணவு மேஜையின் வலது புறம் சமையல் அறை இருந்தது, அதை ஒட்டி பணியாளர்களின் குடியிருப்புகள் காணப்படுகிறது, ஏழு பணியாளர்கள் அந்த வீட்டில் பணியாற்றியிருக்கிறார்கள்,

பணியாளர்கள் அறை மிகச்சிறியதாக ஒற்றைப் படுக்கையுடன் காணப்பட்டது. சமையல்அறையில் இரும்பு ஸ்டவ் ஒன்றும், டீக்குவளைகளும் சீனபாத்திரங்களும், சுடுகலன்களும் அப்படியே பாதுகாத்து வைக்கபட்டிருந்தன,

அந்த ம்யூசியத்தில் பதினாறாயிரம் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கின்றன, இதில் மார்க் ட்வைன் அவர் மனைவிக்கு எழுதிய காதல்கடிதம் ஒன்று என்றார் வழிகாட்டும் பெண், ட்வைனின் இரண்டு மகள்கள் நாடக ஒத்திகை பார்க்கும் அரிய புகைப்படம் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தேன், அந்தப் பெண்கள் முகத்தில் விளையாட்டுதனம் பீறிட்டுக் கொண்டிருந்தது, சில முகங்கள் ஒரு போதும் பார்த்திராத போதும் இனம் புரியாத நெருக்கதை உருவாக்கிவிடக்கூடியவை, அந்தப் பெண்களின் தோற்றம் அப்படிதானிருந்தது

முதல்தளத்திற்குச் செல்ல அகலமான சிவப்பு நிற மரப்படிகள் காணப்பட்டன, அதில் அழகிய கம்பளம் விரிக்கபட்டிருந்தது. மாடிப்படியின் கைப்பிடியில் உயரமான விளக்கு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது, முதல்தளத்தில் விருந்தினர் தங்கும் அறை காணப்படுகிறது, அங்கே ட்வைனின் நண்பரான வில்லியம் ஹாவல் என்பவர் அடிக்கடி வந்து தங்குவது வழக்கம் என்றார்கள், அந்த அறை மிகவும் அலங்காரமாக வடிவமைக்கபட்டிருக்கிறது, அதன் உள்ளே தனியான குளியல் அறை, அதில் ஷவர் மற்றும் குளியல் தொட்டிகள் காணப்பட்டன,

இரண்டாவது தளத்தில் மூன்று படுக்கை அறைகள் காணப்படுகின்றன, அவை அவரது மகள்களின் அறைகள் என்றார்கள், படுக்கை அறையை ஒட்டி பிள்ளைகள் பாடம் பயிலும் படிப்பறை ஒன்றும் காணப்பட்டது,

பிள்ளைகளுக்கு மார்க் ட்வைனின் மனைவியே பாடங்களைப் போதித்து இருக்கிறார், பெரிய பியான ஒன்று அறையின் ஒருபகுதியில் காணப்பட்டது,

மூன்றாவது தளத்தில் பில்லியர்ட் விளையாடும் பெரிய கூடம் ஒன்று காணப்பட்டது, அதை ஒட்டியும் பெரிய விருந்தினர் அறை ஒன்றிருந்தது, அங்கே வாரம் தோறும் நண்பர்கள் ஒன்று கூடி விளையாடுவார்கள். குடிப்பார்கள் என்றார்கள்,

ட்வைனின் படுக்கை அறை இரண்டாவது தளத்தில் இருக்கிறது, அந்தக் கட்டில் வெனிஸ் நகரில் வாங்கபட்டிருக்கிறது, அக் கட்டிலில் தான் ட்வைன் இறந்து போனார் என்று சொன்னார்கள், மிருதுவான தலையணையும் போர்வைகளும் அந்தக் கட்டிலின் மீது அப்படியே இருந்தன,

ட்வைனின் வீட்டில் எனக்குப் பிடித்தமானது அவரது மூக்குகண்ணாடியே, அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பைப்பும் அந்த மூக்கு கண்ணாடியும் அவரது பிரத்யேக அடையாளங்கள்,

ட்வைனின் அப்பா ஜான் மார்ஷல் கிளமென்ஸ், டென்னசியைச் சேர்ந்த ஒரு வணிகர் . புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த போதும் ட்வைன் கடன்தொல்லை காரணமாக மிகுந்த நெருக்கடியை அனுபவித்தார், கடனை அடைப்பதற்காகச் சொற்பொழிவுகள் மேற்கொள்ள உலகப்பயணம் ஒன்றினை மேற்கொண்டார் ட்வைன்,

1895ல் இந்தியாவிற்கு வந்து தங்கி இந்திய மக்களையும், பண்பாட்டு சிறப்புகளையும், இயற்கைவனப்புகளையும் பற்றி Following the Equator. என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார், இந்தப் பயணத்தில் அவரது மனைவி ஒலிவியாயும் மகளும் உடன் வந்திருக்கிறார்கள்,

கல்கத்தா, பூனா, அலகாபாத், காசி, ஜெய்பூர், டெல்லி, மும்பை என்று பல்வேறு நகரங்களிலும் ட்வைன் தங்கியிருந்து சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார், இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தை அவர் மிகுந்த நையாண்டி செய்து இந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பது சுவாரஸ்யமானது

இந்தியாவிற்குள் ரயிலிலே சுற்றியலைந்து அனுபவம் கொண்டதால் பல்வேறுவிதமான கலைஞர்கள் மற்றும் சாமான்ய மனிதர்களைப் பற்றிய அரிய குறிப்புகளை இந்த நூலில் காணமுடிகிறது

மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை மார்க் ட்வைன் அற்புதமாகத் தனது நாவல்களில் எழுதியிருக்கிறார், இவர் எழுத்தின் ஊடாக மிசிசிபி நீரோட்டம் ஒடிக் கொண்டேயிருக்கிறது, மிஸ்ஸிஸிப்பி மிகப்பெரியது, கிட்டதட்ட 3780 கிலோமீட்டர் நீளத்துக்கு ஒடுகின்ற மாபெரும் ஆறாகும், அதில் ஒரு படகோட்டியாக வாழ்வதே தனது ஆதர்சமாகக் கொண்டிருந்தவர் ட்வைன், அதையே தனது நாவல்களிலும் எழுதி சாதித்திருக்கிறார்,

தனது காலகட்டத்தில் நடைபெற்ற அறிவியல் சோதனைகள் மற்றும் சிந்தனைகளில் அதிக ஈடுபாடு காட்டியவர் மார்க் ட்வைன், அவரே சில கண்டுபிடிப்புகளுக்கான உரிமைகளையும் பெற்றிருக்கிறார்

ட்வைனைப்பற்றிப் பல்வேறு கதைகள், வேடிக்கை துணுக்குகள் வழக்கில் இருக்கின்றன, அதில் பல பொய்யானவை, ஆனாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகின்றன, ட்வைனின் நகைச்சுவை தனிச்சிறப்பு வாய்ந்த்து,

மார்க்ட்வெய்ன் ஒரு தீவிரமாகச் சுருட்டுப் பிடிக்கக் கூடியவர்.

எப்போதுமே பிடிப்பீர்களா என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதற்கு

ட்வைன் சொன்ன பதில்

தூங்கும்போது பிடிப்பதில்லை

எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தில் தனது தேசம் இழந்து போனதற்காகக் கவலைப்படும் மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்காக வருத்தபடும் குழந்தையின் கண்ணீருக்கும் அதிகம் வித்தியாசமில்லை என்றார் மார்க் ட்வைன்,

ட்வைனின் எழுத்துகள் இன்றும் வாசிக்கபடுவதற்கு இந்த மானுடநேசமே முக்கியக் காரணம்,

பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகள் ஒயின்மாதிரி, என்னுடைய எழுத்துகள் தண்ணீர் போன்றது. என்ன எல்லோரும் தண்ணீரை தான் குடிக்கிறார்கள். என்று ட்வைன் சொன்ன வாசகம் கொண்ட போஸ்டர் ஒன்றினை அந்த ம்யூசியத்திலிருந்து வாங்கினேன்

ட்வைனின் வீட்டிற்கு அருகிலே இருந்த போதும் ஹாரியட் வீடு பெரியதாகப் பார்வையாளர்களால் கண்டுகொள்ளப்படவில்லை

ட்வைனின் வீட்டினை சுற்றிமுடித்துவிட்டு வந்து அருகில் உள்ள மரப்பலகை ஒன்றில் உட்கார்ந்து கொண்டோம், பருத்த மரங்களுடன் அந்தப் பகுதி மிக அமைதியாக இருந்த்து, நூறு வருஷங்களுக்கு முன்பு அது இன்னும் அமைதியும் அழகும் கொண்டிருந்திருக்க வேண்டும், அந்த காற்றும் ஏகாந்தமான மனநிலையும் அங்கேயே தங்கிவிட முடியாத என்ற ஏக்கத்தை உருவாக்கியது,

பொதுவாக பயணங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாதவன் நான், பாலாஜி தனது செல்போன் கேமிராவில் ஒன்றிரண்டு புகைப்படங்களை நினைவிற்காக எடுத்துக் கொண்டார்

ஒரு எழுத்தாளனின் வீட்டினை தேடி வந்து பார்த்து அவரது சிறப்புகளைப் பேசி, மகிழ்ந்து, அவர் சார்பான நினைவுப்பொருள்களை வாங்கிச் செல்லும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது சந்தோஷமாக இருந்த்து,

புதுமைபித்தனுக்கோ, ஜானகிராமனுக்கோ, கு.அழகிரிசாமிக்கோ இது போல அழகிய நினைவகம் அமைத்து மக்கள் கொண்டாட மாட்டார்களா என ஆதங்கமாகவும் இருந்தது.

மார்க் ட்வைனின் Following the Equator நூலை யாராவது தமிழில் மொழியாக்கம் செய்யலாம், படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: