காப்காவின் அம்மா

கடந்த சில நாட்களாகவே காப்காவின் (Franz Kafka  )அம்மாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன், காப்காவிற்கு அவரது அப்பாவினைப் பிடிக்காது, அப்பா தன்னை எந்த அளவு கட்டுபடுத்தி வைத்திருந்தார் என்ற கோபத்தை, வலியை Letter to My Father என காப்கா எழுதியிருக்கிறார்,  அந்த கடித்த்திற்கு மறுப்பு போல நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கோடிமர் காப்காவிற்கு அவனது தந்தை எழுதியது போல ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்,

Letter from his Father -Nadine Gordimer

இரண்டையும் ஒரு சேர வாசித்து பாருங்கள், அப்போது தான் காப்காவின் உலகினை முழுமையாக நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும்,

இந்த இரண்டிற்கும் வெளியே நான்,  காப்காவின் அம்மா . தனது மகன், கணவர் இருவருக்கும் கடிதம் எழுதுவது போல ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்,

எனக்கு காப்கா, அவரது தந்தை இருவரையும் விட அவரது அம்மாவே முக்கியமான பாத்திரமாகத் தோன்றுகிறார்,

ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் வளர்ந்துவிட்ட பையன், இருவருக்கும் இடையில் தவிக்கும் அம்மாவின் மனநிலை சிக்கலானது, காப்காவின் தாய் உலகெங்கும் இருக்கிறார்,  அவரது அகவேதனைகள் சொல்லில் அடங்காதவை.

காப்காவை மிகச்சரியாக புரிந்து கொண்டவராக செக் எழுத்தாளர் மிலன் குந்தேராவைக் குறிப்பிடுவேன், அவர் தான் காப்கா எவ்வளவு துல்லியமாக தனது அகசிக்கல்களை, வேதனைகளை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பதை அடையாளம் காட்டியவர்,

நாவல் என்பது ஆசிரியனின் ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. மாறாக உலகம் நம்மைச் சிக்கவைக்கும் ஒரு பொறியாகிவிட்டது, அதில் மனித வாழ்வின் சிக்கல்களும் மீளும் சாத்தியப்பாடுகள் எப்படியிருக்கின்றன என்ற ஆராய்ச்சிதான் நாவல் என்று மிலன் குந்தேரா தனது  கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்,

புறவயமான உலகினை முதன்மைபடுத்தி மட்டுமே எழுதப்பட்டு வந்த நாவல் உலகை, அகவயமாக திருப்பியதில் ஜேம்ஸ் ஜாய்சுக்கும் மார்சல் புரூஸீற்கும் முக்கியப் பங்கிருக்கிறது,

அந்த பாதையில் முழுமையான ஒரு மனோவியல் தேடுதலை எழுதியவராக காப்காவைச் சொல்கிறார் மிலன் குந்தேரா,

காப்காவின் விசாரணை நாவலும் சில சிறுகதைகளும், டயரிக்குறிப்புகளும் மட்டுமே தமிழில் வெளியாகி உள்ளன, அவரது முக்கிய படைப்புகள் பல இன்றும் மொழியாக்கம் செய்யப்படவில்லை

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: