லூரே கேவன்ஸ்

இந்தியாவில் எத்தனையோ குகைகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் வர்ஜினியாவின் லூரேபகுதியில் அபேலேசியன் மலைத்தொடரில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள குகைதளம் போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை, அதை லூரே கேவன்ஸ் (Luray Caverns )என்று அழைக்கிறார்கள்

நானும் நிர்மலும் பாலாஜியும் அதைக்காண்பதற்காக சென்றிருந்தோம்,

பூமி மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது  இக்குகைத்தளம், . ஒரு பரந்த தெரு ஒன்றினுள் நடந்து சுற்றுவது போல மேலும் கீழுமாக அகன்று விரிந்திருக்கிறது குகை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையில் சுண்ணாம்பு படிவக் கற்கள் உருகி ஆலம் விழுதுகள் தொங்குவது போல வேறுவேறு உயரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன, நம் வீட்டு பிரிட்ஜில் உள்ளே ஐஸ் தொங்குமே அது போல ஆயிரம் மடங்கு பெரியதாக ஒரு வீதியே அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள், அது தான் லூரே கேவன்ஸ்

உள்ளே அழகான மின்விளக்குகளை அமைத்திருக்கிறார்கள், மெதுவாக நடந்து சுற்றிப் பார்க்கலாம், பூமியின் ஆழத்தினுள் சுற்றிக் கொண்டிருக்கிறோம்  என்ற நினைப்பே நம்மை உற்சாகப்படுத்துகிறது, ஆங்காங்கு பளிங்கு போன்ற நீர் தேக்கங்கள்  காணப்படுகின்றன, ஒவ்வொரு கல்லும் ஒரு அழகிய தோற்றம் கொண்டிருக்கின்றன, ஒன்று மஞ்சள் கரு கொண்ட முட்டை போன்ற வடிவத்தில் இருந்தது, தொட்டுப் பார்த்தால் முட்டையின் அதே மிருது, எப்படி அது என்று ஆச்சரியமாக இருந்தது

லார்ட் ஆப் தி ரிங்ஸ் நாவலில் வரும் மிடில் எர்த்  போல கண்முன்னே ஒரு மாய உலகமாக விரிந்து கிடக்கிறது லூரே கேவன்ஸ், கற்கள் குறித்து அதுவரை என் மனதில் இருந்த பிம்பங்களை முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டது இந்த குகைப்பயணம்

கற்கள் மிருதுவானவை, பனிக்கட்டி போல உருகி தொங்க கூடியவை என்பதே சந்தோஷம் தருவதாக இருந்தது, மஞ்சள், இளம் சிவப்பு, மற்றும் அரக்கு வண்ண கற்பாறைகள் ஊசி ஊசியாக தோற்றம் கொண்டிருக்கின்றன, இரட்டை தூண்கள் எனப்படும் அறுபது அடி உயர நீளமாக தொங்கும் கற்களை காணும் போது பனி வெடித்து அப்படியே உறைந்து நிற்கிறதோ என்றே தோன்றுகிறது

இது போல இன்னொரு உருகிய பாறை வடிவத்தின் பெயர் Pluto’s Ghost.  இளகிய நிலையில் நீர்சொட்டிய படி உள்ள இந்த கற்களை தொட்டு பார்க்கையில் கையில் பிசுபிசுப்பு ஏற்படுகிறது,

இந்த குகையினுள் திருமணம் செய்து கொள்வது, பிறந்த நாள் விழா கொண்டாடுவது போன்றவற்றிற்காக சிறப்பு  அரங்கு அமைத்திருக்கிறார்கள், வெவ்வேறு உயரங்களில் சரிவுகளில் சிறிய பாலங்களை கடந்து கற்களின் விநோத கோலத்தை கண்டபடியே நாம் பயணிப்பது அரியதொரு அனுபவமாக உள்ளது

ஒரு இடத்தில் கூரையில் தொங்கும் கற்களின் விழுதுகள் தண்ணீரில் பிரதிபலிப்பு கொண்டு பூமிக்கு மேலே உயரமான புற்கள் முளைத்து நிற்பது போல கற்கள் எழுந்து நிற்கின்றன என்பது போன்ற ஒரு பொய்தோற்றத்தை தருகின்றன,

இந்த குகைத்தளம் தனியார் வசம் உள்ளது, August 13, 1878ல்  கேம்பல் மற்றும் அவரது ஐந்து நண்பர்கள் இந்த பகுதியில்  சுண்ணாம்பு பாறையை தோண்டும் போது ஏதோ தண்ணீர் ஒடும் சலசல சத்தம் கேட்டு ஆராய்ந்து இக்குகையை  கண்டுபிடித்திருக்கிறார் என்கிறார்கள்

இங்கே ஒரு லித்தோபோன் இசைக்கருவி காணப்படுகிறது, இது கற்களை கொண்டே எப்படி இசையை உருவாக்குவது என்பதை செயல்படுத்திக்காட்டுகிறது, இசைதூண்களை மதுரையில் கண்டுள்ள எனக்கு இந்த கற்கள் இனிமையான சங்கீதம் தருவதை கேட்பது நல்ல அனுபவமாக இருந்தது

லூரே கேவன்ஸ் பகுதியில் அடிக்கும் காற்று ஏகாந்தமானது, அதை அனுபவிப்பதற்காகவே அங்கே சில மணிநேரங்கள் தனித்திருக்க வேண்டும், மலையை ஒட்டியே செல்லும் அழகிய சாலையும், சரிவுகளும் மாலைநேரத்தின் மயக்கமூட்டும் வெளிறிய மேகங்களும்,  ஒன்று சேர்ந்து லூரே கேவன்ஸ்யை விந்தை உலகமாக மாற்றுகின்றன, இங்கே ஆண்டிற்கு ஐந்து லட்சம் பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் என்கிறார்கள்.

லூரே கேவன்ஸ் நுழைவாயிலில் அலங்கார பொருள்விற்பனையகம் உள்ளது, அங்கே அந்த கற்களின் மாதிரிகளை விற்கிறார்கள், நானும் அதில் ஒன்றை வாங்கிக் கொண்டேன், எனது அமெரிக்கப் பயணத்தில் லூரே கேவன்ஸ் காணமுடிந்த்து அரிய வாய்ப்பு என்றே கூறுவேன்

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: