அஸ்தபோவில் இருவர்

சிறுகதை

உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது, டால்ஸ்டாய் ரயிலினுள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், அவரது மகள் சாஷாவும் மருத்துவர் துஷானும் அருகில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்,

தளர்ந்து போன அவரது உடலை குளிர்காற்று ஊசிமுனை போல குத்திக் கொண்டிருந்த்து, அவரது கால்முட்டிகளில் கடுமையாக வலி, உதடுகள் வெடித்து சிவந்து, கண்கள் சோர்ந்து அயர்ந்து போயிருந்தன,

நுரையீரலில் புகைபடிந்தது போல மூச்சுவிடுவதற்கே கனமாகிக் கொண்டிருந்தது. அவராக கழுத்தடியில் தொட்டு பார்த்துக் கொண்டார், உள்ளுற காய்ச்சல் அடிப்பது போலவே தோன்றியது, நாக்கில் கசப்புணர்வு படிவதை முன்தினமே உணர்ந்திருந்தார், அடிவயிற்றை புரட்டிக் கொண்டு குமட்டுவது போல ஒரு உணர்ச்சி நாள்முழுவதும் இருந்து கொண்டேயிருந்தது, அத்துடன் யாரோ முதுகில் கைவைத்து அழுத்திபிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு இறுக்கமும் பீடித்திருந்த்து, எண்பத்திரெண்டு வயதில் எதற்காக இப்படி வீட்டை விட்டு விலகி தனியாக ஒடிக் கொண்டிருக்கிறோம் என்று தன்மீதே எரிச்சலாக வந்தது,

எப்படியானாலும் இனி ஒரு போதும் வீடு திரும்பக்கூடாது, போதும், ஒரு மனிதன் குடும்பத்தை அமைத்துக் கொள்வதைப் போலவே குடும்பத்தில் இருந்து வெளியேறி தனியனாக போவதும் விரும்பி மேற்கொள்ள வேண்டிய செயலே, வயதான பலரையும் போல தன்னை வீடு வெளியே துரத்திவிடவில்லை, நாமாகத் தானே வெளியேறி வந்தோம், விரும்பி எடுத்த முடிவினை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது என்று சோர்ந்திருந்த தன் மனதை தேற்றிக் கொண்டார்

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது அன்றாட வாழ்க்கை மிகுந்த சலிப்பாகிக் கொண்டு வந்தது,  வீடு. மனைவி, பிள்ளைகள், எழுத்து, பதிப்பாளர்கள் என்று  ஒரு மீளமுடியாத ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போல ஆயாசமளித்தது, மீதமிருக்கும் நாட்களை ஒரு நாடோடியை போல எங்காவது ஆள் அரவமற்ற இடத்தில் தங்கிக் கொண்டு கழித்துவிட வேண்டும் என்ற ஏக்கம் தீவிரமாக உருவாகியிருந்த்து, வீட்டில் இருந்து எப்படி விடுபடுவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்

ஒரு மனிதன் தனது அடையாளத்தை உருவாக்கி கொள்வதை போல அதை அழித்துக் கொள்வதும் ஒரு சவால் தான், அதிலும் தான் வெற்றிபெற வேண்டும் என்று டால்ஸ்டாய்க்கு தோன்றியது,

இது சாவை தேடிப்போகிற பயணம், அவசரம் காட்டாதே என்று  மனம் உள்ளுற சொல்லி கொண்டிருந்தது, நிஜம் தான், மனிதனைத் தேடி சாவு வருவதை விட சாவைத் தேடி மனிதன் செல்வது துணிச்சலானது தானே, வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை கடந்து வந்த அவருக்கு சாவை நேர் கொண்டு காண புறப்பட்டதும் ஒரு சவாலாகவே தோன்றியது,

இளைஞனாக இருந்த காலத்தில் சூதாடி குடும்ப சொத்துகள் முழுவதையும் இழந்தார் அப்போது வீட்டினை விட்டு வெளியேறி கண்காணாத இடம் நோக்கி போய்விட வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகத் தோன்றியது, ஆனால் வாழ்க்கை தன் பிடிமானத்தை விடமால் அவரை இழுத்து வைத்துக் கொண்டது, பின்பு பலமுறை மனைவி சோபியாவோடு சண்டையிட்ட நாட்களில் வீட்டை துறந்து போவதை பற்றி யோசித்திருக்கிறார், வெளியேறி சென்றுமிருக்கிறார், ஆனால் வீடு தனது அரூபமான கரங்களால் அவரை திரும்ப இழுத்துக் கொண்டது,

இந்த முறை ஒரு கனி பழுத்து மரத்தை விட்டு தானே கிழே விழுவதை போல வெளியேறிவிட்டார், உதிர்ந்த கனிகள் ஒரு போதும் திரும்ப மரத்தில் ஒட்டுவதில்லை என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார்

புகைரயிலின் வேகம் அதிகமில்லை என்ற போதும் ரயிலின் ஜன்னலுக்குள் பனிப்புகை ஊடுருவி குபுகுபுவென வந்து கொண்டிருந்த்து, அவரது கண்கள் மங்கிப்போனதை போல வெளியே கடந்து செல்லும் நிலக் காட்சிகள் தெளிவற்று தெரியத்துவங்கின,

வாழ்வில் எதன்மீதெல்லாம் தான் பற்றுக் கொண்டிருந்தோம் என்று யோசிக்க துவங்கினார், குடி, பெண்கள், யுத்தம் இவையே ஒரு வயதில் பற்றுமிக்கதாக இருந்தன, உண்மையில் தான் ஒரு சுயநலவாதி, தனது சுகங்களை பிரதானப்படுத்தி மட்டுமே வாழ்ந்திருக்கிறோம் என்று பட்டது,   சட்டம் பயின்ற நாட்களில் வேசைகளுடன் குடித்து நடனமிட்டு உல்லாசமாக இருந்த போது உலகம் எடையற்று இலவம்பஞ்சு மிதப்பது போலிருந்தது, அன்று எவரது உறவும் தேவையற்றதாக தோன்றியது,

பெற்றோர்கள் இல்லாமல் உறவினர்களால் வளர்க்கபட்ட காரணத்தால்  வீடு திரும்பமாலே மாஸ்கோவிலும் பீட்டர்ஸ்பெர்கிலும் சுற்றிக் கொண்டிருந்தார் யஸ்னயா போல்யனா பண்ணைக்கு போவது கசப்பான பால்யகாலத்திற்கு திரும்பி போவதை போன்று வலி தருவதாகவே இருந்த்து, அதனால்  வீடு என்பது பலவீனமானவர்களின் புகலிடம் என்று நண்பர்களிடம் கேலி பேசினார்

ஆனால் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துவிட்டவள் சோபியா, அவளை காதலிக்க துவங்கிய பிறகே வீட்டினை  நேசிக்க துவங்கினார், ஒரு மனிதன் பெண்ணை நேசிக்க துவங்கும் போது தான் வீடு அவனுக்குள் முளைவிடத்துவங்குகிறது, காதல் வளர வளர வீடு அவனுக்கு முக்கியமானதாகிப் போகிறது, உண்மையில் அது ஒரு வலைப்பின்னல், பெண்களும் வீடும் ஒன்று தான் போலும், எப்போது இடம் தந்து அணைத்துக் கொள்ளும், எப்போதும் விலக்கி வெளியே அனுப்பும் என்று புதிராகவே இருந்தது

உண்மையில் அவர் சோபியாவை தேடிப்போய் காதலித்தார், அப்போது அவள் சிற்றிளம் பெண், தனது அக்காவை காதலிப்பதற்காக வீடு தேடி வரும் மனிதன் என்றே அவரை நினைத்துக் கொண்டிருந்தாள், தன்னை ஏன் அவர் தேர்வு செய்தார் என்று சோபியாவிற்கு கூட வியப்பாகவே இருந்த்து, அவளது அன்பிற்காக காத்திருப்பதாக மன்றாடினார், அவளை திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு யாஸ்னயா போல்யனா வீடு உருமாறத்துவங்கியது,

பணியாளர்கள் முகங்களில் சந்தோஷம் பீறிடுவதை கண்டார்,  விருந்தும் நண்பர்களின் சந்திப்பும், குழந்தைகளும் அவருக்கு வீட்டின் மேல் தீவிரமான பற்று உருவாக காரணமாக இருந்தது, பதிமூன்று பிள்ளைகளை சோபியா பெற்றிருந்தாள், இதில் நால்வர் பிறந்த சிலமாதங்களிலே இறந்து போய்விட்டார்கள்

இறந்து போன குழந்தைகளைப் பற்றி கூட பலநேரம் அவர் யோசித்திருக்கிறார், அவர்கள் எதற்காக தன் பிள்ளையாக பிறந்தார்கள், கடவுள் தன்னிடம் ஏதோவொன்றை சொல்ல விரும்பி அவர்களை அனுப்பி வைத்தாரோ, என்ன செய்தியது ஏன் அது தனக்கு புரியவேயில்லை என்று குழம்பியிருக்கிறார்,

தன்னை சுற்றிய உலகம், அதன் மனிதர்கள், அவர்களின் அன்றாடப்பிரச்சனைகள் எதையும் விட எழுத்தும் அதில் உருவான மனிதர்களும், தீவிர வாசகர்களும், சக எழுத்தாளர்களும், எழுத்தின் மீதான விமர்சனங்களும் அவரது உலகை முழுமையாக ஆக்ரமிக்க துவங்கின, பலநேரங்களில் தான் எழுதுவதற்காக மட்டுமே உயிர்வாழ்கிறோம் என்று கூட அவருக்கு தோன்றியது,

சோபியா அதை புரிந்து கொண்டிருந்தாள், இல்லாவிட்டால் அவரது நாவலின் கையெழுத்துபிரதிகளை அவள் ஏன் அத்தனை கவனமாக பிரதி எடுத்தி எழுதி தந்தாள், ஆயிரக்கணக்கான பக்கங்களை கையால் பிரதி எடுத்து எழுதுவது எளிதானதில்லை தானே,

சோபியா அவருடன் கதைகளை பற்றி ஒரு போதும் வாதம் செய்தவளில்லை, சில வேளைகளில் அவரது கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களை போலவே இருக்கிறார்கள் என்று அவள் சுட்டிக்காட்டியதுண்டு, எழுதி எழுதி சோர்வுற்ற நேரங்களில் அவருக்கு பிடித்தமான இசைத்தட்டுகளை ஒடவிட்டு அவரை கட்டாயப்படுத்தி ஒய்வெடுக்க சொன்னதுண்டு,  அப்போது எல்லாம் சோபியாவின் அன்பை நினைத்து உருகியிருக்கிறார்

பிள்ளைகள் வளரதுவங்கும் போது பெற்றோர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டத் துவங்குகிறார்கள், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி சம்பாதிக்க துவங்கியதும் பெற்றோர்கள் தானாகப் பிரிக்கபடுவார்கள், முதுமையை ஆணா. பெண்ணோ தனியாக சந்திக்கவே விரும்புகிறார்கள், அதற்கு மேல் எந்த உறவையும் ஒட்டி வைக்க முடியாது அது தான் உலக இயல்பு என்று சொல்வாள் அத்தை தாத்ரியானா

அது தான் அவரது விஷயத்திலும் நடந்தேறியது, பிள்ளைகள் வளர்ந்து தனித்து போக ஆரம்பித்துவிட்டார்கள், வீடு பிரச்சனைகளின் கூடராமாகிவிட்டது, ஒவ்வொரு நாளும் சோபியா அவருடன் சண்டையிட்டாள், சிறிய விஷயங்களில் கூட இருவரும் கோவித்துக் கொண்டார்கள், உணவு மேஜையில் அவர் தனித்து சாப்பிட்டார், சோபியாவின் கோபம் பணியாளர்களையும் விட்டுவைக்கவில்லை, டால்ஸ்டாய் மனச்சோர்வும் ஏமாற்றமும் கொண்டவராகியிருந்தார்,

வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவருக்கு தடையாக இருந்தது அவரது மகள் சாஷா மட்டுமே, அவள் மீதான அதீதமான பாசம் ஒன்றே வீட்டோடு அவரை ஒட்ட வைத்திருந்த்து, முடிவில் அவளிடமே தனது ஆற்றாமையை கொட்டி தீர்த்து விட்டார், அவள் தான் அவரை வழியனுப்பி வைத்தாள்

அந்த இரவு மறக்கமுடியாதது. வழக்கமான நாட்களை போலவே அன்றிரவும் அவர் படுக்கைக்குச் சென்றார், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார், அசையும் சுடர்கள் அவரிடம் இனியும் என்ன தாமதம் என்று  கேட்பது போலவே இருந்தது

அந்த படுக்கை அறையில் அவர் அழுதிருக்கிறார், தன்னை மறந்து உடற்சுகத்தில் கிறங்கி கிடந்திருக்கிறார்,  எழுத வேண்டிய கதைகளை நினைத்துக்கொண்டு புலம்பியிருக்கிறார், காரணமே இல்லாமல் துக்கப்பட்டுக்  கொண்டு தன்னை வருத்திக் கொண்டிருந்திருக்கிறார், இப்படியாக அப் படுக்கை அறை ஒரு பிரார்த்தனை கூடம் போலவே தோன்றியது, அந்த கட்டிலின் கீழே அவரது கனவுகள் உதிர்ந்து கிடப்பதாகவே நினைத்தார்,

அவரது உடல்நலத்தை கருதி இரவில் படுக்கை அறையின் கதவுகளுக்கு தாழ்பாள் போடக்கூடாது என்று சோபியா கட்டளையிட்டிருந்தாள், அதனால் கதவு பாதி திறந்தேயிருந்த்து,

சோபியா அன்றிரவு நெடுநேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு தாமதமாகவே படுக்கைக்கு வந்தாள், படுக்கையில் அயர்ந்துகிடந்தவரை காணும் போது அவளுக்கு வருத்தமாக வந்த்து, அவரது கைகளை மென்மையாக தொட்டு பார்த்தாள், அது வெதுவெதுப்பாக இருந்தது, அன்றிரவு அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு போவதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்,

பின்னரவில் எழுந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார், சாஷாவை எழுப்பி தான் வீட்டை விட்டு வெளியேறிப்போவதை பற்றி சொன்னார், அவள் அதை முன்னதாகவே எதிர்ப்பார்த்திருந்தவளை போல இப்போதா என்று மட்டும் கேட்டாள்,

வீட்டிலே தங்கி அவருக்காக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் துஷான் எழுந்து வந்து அவரது ரத்தவோட்டத்தை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ரத்தஅழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக கவலையுட்ன் தெரிவித்தார்,

அது தனது பதற்றத்தின் அடையாளம் என்றபடியே அவசரமாக தனது உடைகளை எடுத்துக் கொண்டு சோபியாவிற்கு ஒரு கடிதம் எழுத துவங்கினார்,

ஏற்கனவே அந்த கடிதம் மனதில் முழுமையாக எழுதி முடிக்கபட்டிருந்தது, பலநாட்கள் அந்த கடித்ததில் எந்த வரிகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்திருந்தார் ஆகவே வேகமாக அக் கடிதத்தை எழுதி சாஷாவிடம் ஒப்படைத்தார், குதிரைவண்டிக்காரனை எழுப்பி பயணத்திற்கு தயார் செய்யும்படி உத்தரவிட்டார்

சாஷா அவரது தொப்பியையும் குளிரங்கியையும் எடுத்து வந்து தந்தாள், சாஷாவை முத்தமிட்டு வருத்தமான குரலில் சொன்னார்

உனது அம்மாவை கவனித்துக் கொள்,

அவள் கலஙகிய கண்களுடன் உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா என்றாள்,

தெற்கு நோக்கி பயணிப்பது என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவர் மனதில் இருந்த்து, எங்கே போவது என்பதை ரயில் நிலையத்தில் போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்

குதிரை வண்டி தனது பண்ணையை விட்டு கிராமசாலையில் செல்ல துவங்கிய போது ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார், விரிந்து பரந்த அந்த பண்ணை நிலமும், பிரம்மாண்டமான வீடும், நூற்றுக்கணக்கான எளிய விவசாயிகளும், நீர் நிறைந்த குளமும், மரங்களும் குளிர்கால காற்றும் இனி ஒரு போதும் தனக்கானதில்லை, தான் இனி வெறும் ஆள், தான் ஒரு துறவியோ, பிச்சைக்காரனோயில்லை, துரத்தப்பட்ட மனிதன், வீட்டை துரத்து வெளியேறும் ஒரு முதியவன், அவ்வளவு மட்டுமே

ரயில் நிலையத்திற்கு வந்தபோது காலியாக இருந்தது, பின்னரவில் ரயில்கள் இல்லை என்பதால் காத்திருக்க வேண்டியதாகி இருந்தது, பயணிகள் ஒய்வறையில் அவர் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்,

துறவியர்மடத்தில் வசிக்கும் தனது தங்கை மரியாவை தேடிப்போய் சந்திக்கலாமே என்று தோன்றியது, உண்மையில் அது வெறும் சாக்கு, மரியா வசிக்குமிடத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஏதாவது ஒரு குடிசை கிடைத்தால் போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று உள்ளுற நினைத்துக் கொண்டார்

பயணியர் ஒய்வறையில் ஒரு மாணவன் அவரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான், அவன் உற்சாகமான முகத்துடன் அவரை நெருங்கிவந்து வணங்கியபடியே சொன்னான்

உங்களது படைப்புகளால் நான் பெரிதும் ஈர்க்கபட்டிருக்கிறேன், டால்ஸ்டாய் பண்ணை ஒன்றை எனது கிராமத்தில் ஆரம்பிக்க விரும்புகிறேன், உங்கள் எழுத்துகள் எனக்கு வழிகாட்டுகின்றன, உண்மையில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, இப்போது புதிதாக என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான்

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் டால்ஸ்டாய் சொன்னார்

இத்தனை காலம் உலகின் துயரங்களை நான்  கதைகளாக மாற்றிவந்தேன் , ஆனால் இன்றோ எனது வாழ்க்கை உலகிற்கு வெறும் கதையாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது , நான் தோற்றுப்போனவன், ஒருவருக்கும் பயனற்ற ஒரு கிழட்டு குதிரை,

அந்த இளைஞனுக்கு அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்று புரியவில்லை, குளிர்தாளமுடியாமல் டால்ஸ்டாய் தனது கைகளை உரசிக் கொண்டார், அந்த இளைஞன் தனது தலையை  சாய்த்து வணங்கி உங்கள் உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள், நன்றாக ஒய்வெடுங்கள் என்று கூறிவிட்டு கடந்து போய்விட்டான்

ஷமார்டினோ மடாலயத்திற்கு போவதற்கான ரயில் எப்போது வந்துசேரும் எனத் தெரியவில்லை, மனதில் திடீரென காகசஸ் பகுதிக்குப் போனால் என்னவென்று தோன்றியது, அங்கே அவரது சிஷ்யர்கள் பலர் ஒன்று கூடி ஒரு பண்ணையொன்றை உருவாக்கியிருக்கிறார்கள், நிம்மதியாக அங்கே போய் தங்கிவிடலாமே என்ற யோசனை உருவாகத்துவங்கியது,

அங்கே போவதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை அவர் தனது தங்கை மரியாவை காண விரும்பினார், அவளை சந்திப்பது  இறந்து போன தாயை மறுமுறை சந்திப்பதை போன்றது, முகம் அறியாத தாயின் மறுவடிவம் போலவே மரியா இருந்தாள், பெண்கள் வயதாக துவங்கியதும் தாயின் சாயலை அடைந்துவிடுகிறார்கள், ஆனால் பையன்கள் தந்தையை போல ஒரு போதும் ஆவதில்லை, அது என்ன புதிர், தாயிடம் நன்றி சொல்லி விடைபெற்றுவிட்டால் போதும் பிறகு எங்கும் தங்கி வாழ்ந்துவிடலாம் என்று அவருக்கு தோன்றியது,,

நீண்ட பல வருஷங்களுக்கு பிறகு நேற்று அவர் தனது தங்கையை மடாலயத்திற்கு சென்று சந்தித்தார், அவள் கணவனை இழந்தவள், கொடுந்தனிமையை தாங்கிக் கொள்ளமுடியாமல் தேவாலய சேவையில் தன்னை ஒப்புக கொடுத்திருந்தாள

இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை, தேவாலயத்திற்குள் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள், பிறகு பசுமையான மரஙகளின் ஊடே இருவரும் நடந்து போனார்கள் வீழ்ந்துகிடந்த மரம் ஒன்றில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்

மரியா சொன்னாள்

லியோ. உனது செயல்களால் எப்போதுமே அடுத்தவரை வருத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய், உனது பிரச்சனை வீடில்லை,  நீ தான், தேவையில்லாமல் உன்னை அலைக்கழித்துக் கொள்ளாதே, சுற்றியது போதும், உன்னை முழுமையாக கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு ஒரு துறவியை போல சாந்தம் கொண்டுவிடு, உலகம் நீ அப்படி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது

இல்லை மரியா, என்னால் ஒரு போதும் துறவியாக முடியாது, துறவிகள் தன்னை வருத்திக் கொள்பவர்கள், நான் என்னை கொண்டாட நினைப்பவன், என் மீது எனக்கு அதீதமான நம்பிக்கைகளும், பிடிப்பும் உள்ளன, இதை உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் என்றார்

லியோ, நீ ஒரு குழப்பவாதி, எல்லா பிரச்சனைகளையும் நீயே உருவாக்கி கொண்டு அதில் இருந்து தப்பிக்க போரிடுகிறாய், உன்னை ஏன் இப்படி வருத்திக் கொள்கிறாய், தெளிவற்ற உனது கண்களில் காணும் குழப்பங்கள் என்க்கு கவலை அளிக்கின்றன என்றாள் மரியா

இந்த உலகம் தூய்மையானதாகயில்லை, கசடுகளும் வெறுப்பும், துவேசமும், அதிகாரவெறியும் கொண்டதாகயிருக்கிறது, அதிகாரம் என்னை ஒரு அற்ப புழுவைப் போல நடத்துகிறது,  உலகின் சகல கசடுகளையும் நானும அள்ளிக்குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது, நான் தவறு செய்யாத மனிதனில்லை, ஆனால் சந்தர்ப்பவாதியாக, என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனாக ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன், என்றார் டால்ஸ்டாய்

நீ உன்னை சுற்றிய எல்லோரிடமும் குறைகள் காண்கிறாய், அதை பெரிது படுத்தி சண்டையிடுகிறாய், உனது கோபம் உனது விருப்ப்படி பிள்ளைகளும் மனைவியும் நடந்துகொள்வதில்லை என்பது தானே, உண்மையில் நீ விரும்புவது போல உனது நிழலை கூட நடந்து கொள்ளாது,  பிறகு எப்படி வீட்டோர் நடந்து கொள்வார்கள், வீடு என்பது சவுக்கடிக்கு பயந்து புலி முக்காலியில் ஏறும் சர்க்கஸ கூடாரமில்லை லியோ என்றாள்,

டால்ஸ்டாய்க்கு ஆத்திரமாக வந்த்து, மரியாவிட்ம் கடுமையான குரலில் சொன்னார்

எனது ஆசைகளை நான் ஒரு போதும் அவர்கள் மீது திணிக்கவில்லை, எனது கோபமெல்லாம் அவர்கள் ஏன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள், அற்பத்தனங்களை ஆசையோடு அரவணைத்து கொள்கிறார்கள், வீண்பேராசைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையே, சுருக்கமான சொல்வதாயின் நான் அவர்களை சுயபரிசீலனை செய்து கொள்ள சொல்கிறேன், அது அவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது, அதை மறைத்துக் கொள்ள என்னை கோவிக்கிறார்கள்,

இரும்பை நெருப்பில் போடுவது அதை தண்டிப்பதற்காக இல்லை மரியா, அதை இளக்கி புதிய வடிவம் கொடுப்பதற்கு, நிச்சயம் அது சூடுபடவே செய்யும், ஆனால் நெருப்பை தவிர வேறு எதனால் இரும்பை இளக்க முடியும் சொல்லு என்றார் அவர்

துயரமான குடும்பங்கள் எதுவும் ஒன்று போல இருப்பதில்லை என்று நீயே தான் எழுதியிருக்கிறாய், லியோ, இந்த உலகம் உன்னை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறாய் அது தவறு, நீ தான் இன்னமும் இந்த உலகை புரிந்து கொள்ளவில்லை,  என்றாள் மரியா

நான் ஒரு முட்டாள் என்று தானே சொல்கிறாய்  எனக்கேட்டார் டால்ஸ்டாய்

அப்படியில்லை, நீ உன்னை முட்டாளாக்கி கொள்கிறாய் என்றாள் மரியா

அதோ, அந்த மரங்களுக்கு இடையில் உள்ள விவசாயி வீட்டினைப் பார், அவனுக்கு இந்த உலகில் உணவும் உடையும் இருப்பிடமும் மட்டுமே தேவையாக இருக்கிறது, அதுவே போதும் என்ற மனம் கொண்டிருக்கிறான், அவன் தனது உணவிற்காக ஒவ்வொரு பொழுதும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான், பேராசையின் நிழல் கூட அவன் மீது படவில்லை, நான் அப்படி ஒரு மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன், எனது செல்வம் தான் எனது சத்ரு, நான் அவற்றை இழந்துவிடும்போது என்னை சுற்றிய பகட்டு உலகம் தானே விலகி போய்விடும் எனறு நம்புகிறேன் என்றார்  டால்ஸ்டாய்

அது உண்மையில்லை லியோ, நீ அப்படி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்,  அது தவறு, பெரும்பான்மை மனிதர்களை இப்படி முடக்கி வைத்திருப்பது அவர்களின் இயலாமை, அது ஒரு அற்ப காரணம் என்றே சொல்வேன், அவர்கள் இயலாமையை காரணம் சொல்லி ஒதுங்கி கொண்டுவிடுகிறார்கள், அதை கடந்து செல்ல முயன்றவர்கள் மட்டுமே வாழ்க்கையில் விரும்பியதை ஜெயித்திருக்கிறார்கள், என்றாள் மரியா

மரியா எனக்கு போதனைகளை கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது  என்றார் டால்ஸ்டாய்

தவறு போதனைகளிடம் இல்லை, அதை கேட்கும் மனதை நீ இழந்துவிட்டாய் என்பதே பிரச்சனை என்றாள் மரியா

எனது தவறுகளை நான் அறிந்து கொண்டுவிட்டேன், அதை பகிரங்கமாக ஒப்பு கொள்கிறேன், அது தான் எனது பிரச்சனை, என்றார் டால்ஸ்டாய்

சரியாக சொன்னாய், உனது தவறுகளை நீ அடையாளம் காண துவங்கும் போது அதற்கு மற்றவர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதை நீ உணர்ந்து கொண்டிருக்கிறாய், அவர்களை வெறுக்க துவங்குகிறாய், எல்லா பிரச்சனைகளும் அங்கிருந்தே துவஙகுகின்றன என்றாள் மரியா

இனி நான் என்னை ஆராய்ந்து கொண்டிருக்கப்போவதில்லை, ஒரு புல்லை போல இயற்கையிட்ம் முற்றாக என்னை ஒப்புக் கொடுக்கப்போகிறேன், என் விதியை இயற்கை தீர்மானிக்கட்டும் போதுமா என்றார்

கடவுளின் ஆசி உன்னோடு இருப்பதாக என்றபடியே மரியா எழுந்து நடக்க துவங்கினாள்,

அவள் மடாலயம் நோக்கி போவதை அவர் பார்த்துக்  கொண்டேயிருந்தார், மரியா அவரிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டுவிட்டாள், எவரிடமிருந்தும் ஒருவர் விடைபெறுதல் எளிதானதில்லை, பிரிவு எப்போதுமே வலிமிக்கதே, இனி அவள் நினைவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பாள், மரியா அவரை தனித்து விட்டுச்சென்ற பிறகு அவர் நீண்ட நேரம் அதே இடத்தில் அமர்ந்தபடியே தூரத்து மரங்களை பார்த்துக் கொண்டிருந்தார்,

ஒவ்வொரு மனிதனும் தனியாக தான் வாழ வேண்டும், அது தான் விதி, அது தான் இயற்கையின் தேர்வு, மனிதர்கள் தனக்கான துணையை தேடிக் கொண்டது அவர்களின் விருப்பம், இயற்கையே முடிவில் வெல்கிறது, முதுமையில் மனிதன் தனிமைப்படுத்தபடுகிறான், இயற்கை அவனது ஆசைகளை கைதட்டி பரிகசித்து மீண்டும் அவனை தனதாக்கி கொள்கிறது,  அது தான் நிதர்சனம் என்று தோன்றியது,

யோசிக்க யோசிக்க மீளமுடியாதவொரு மனச்சோர்வு கூடியது, அன்றிரவு அவருக்கு உறக்கம் கூடவில்லை, என்றோ பாரீஸ் நகரில் கண்ட காட்சி கனவாக வந்த்து, ஒரு குற்றவாளியை பொது இடத்தில் தலையை துண்டிக்கும் தண்டனையை அவர் நேரில் பார்த்திருந்தார், அந்த மனிதனின் கண்கள் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தன, அதில் தனது வாழ்க்கைய ஏன் மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வி ஊசலாடிக் கொண்டிருந்த்து,

மனிதன் தனது சுகங்களை பாதுகாத்து கொள்ளவே சட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறான் என்று தோன்றியது, அந்த மனிதன் அன்று கனவில் தோன்றி உலகம் கருணையற்றது என்ற சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான், அவர் திடுக்கிட்டு விழித்து எழுந்து கொண்டார்,  அந்த இரவு முழுவதும் அவர் படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார், விடிந்தால் போதும் என்று திணறலாக இருந்தது

அந்த இரவில் வீசிய குளிரும் பனிப்பொழிவும் அவர் உடலை அதிகம் நடுங்க வைத்தன, உறக்கமற்ற காரணத்தால் அவரது முகம் ஒடுங்கிப்போனது, அதன் மறுநாள்  மகள் சாஷா அவரை காண வந்து சேர்ந்திருந்தாள், இருவருமாக தெற்கு நோக்கி செல்ல ரயில் ஏறினார்கள்,

அந்த பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை, மனமும் உடலும் நலிந்து கொண்டே வந்தன, தனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து வந்த சாஷாவிடம் அடுத்து ரயில் எங்கே நிற்கும் என்று கேட்டார்

அஸ்தபோவ் என்று சொன்னார் டாக்டர் துஷான்

அங்கே இறங்கி ஒய்வெடுக்க வேண்டும், ஒருவேளை தொடர்ந்து பயணம் செய்ய நேர்ந்தால் நிச்சயம் மயங்கிவிழுந்துவிடுவோம் , எங்காவது கதகதப்பான அறை ஒன்றில் சற்று நேரம் அயர்ந்து கண் உறங்க வேண்டும், என்று தோன்றியது,

சாஷா அவரிடம் சொன்னாள்

அப்பா இறங்கி ஒய்வெடுத்து கொள்ளுங்கள், உடல் நலம் சரியானதும் மீண்டும் பயணம் செய்யலாம்

டால்ஸ்டாய் அதை ஏற்றுக் கொண்டவரைப் போல தலையாட்டினார்

ரயில் அஸதபோவிற்கு வந்த போது மாலையாகி இருந்தது, அவர்கள் இறங்கி மெதுவாக பிளாட்பாரத்தில் நடந்தார்கள், அஸ்தபோவ் மிகச்சிறிய ரயில் நிலையம், பயணிகளுக்கான தங்குமிடம் என எதையும் காணமுடியவில்லை, அருகில் தங்கும் விடுதிகளோ, ஒய்விடங்களோ எதுவும் தென்படவில்லை,

எங்கே போய் தங்குவது என்ற யோசனையுடன் ரயில் நிலையத்தின் இரும்பு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார், சாஷாவும் டாக்டரும் ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்டால் ஒய்வறை கிடைக்க கூடும் என்று அவரை காண சென்றிருந்தார்கள்

அவர் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார், யாரோ உறுதியான மனிதர் ஒருவர் நடந்து வருவது போன்ற சப்தம் கேட்டது, கையில் ஒரு துணிமூட்டை ஒன்றுடன் அழுக்கடைந்த கோட் ஒன்றினை அணிந்து கொண்டு ஒரு வயதான மனிதன் நடந்து வந்து அவரது பெஞ்சின் ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டான், அவன்து தாடி நரைத்துகோரையாக இருந்தது, பளுப்போடிய கண்கள், அவன் தனது துணிமூட்டையில் இருந்து ஒரு புட்டியை திறந்து எதையோ குடித்துக் கொண்டான், பிறகு அவரை உற்று நோக்கியபடியே கனவானே குடிப்பதறகு வோட்கா வேண்டுமா என்று கேட்டான்

டால்ஸ்டாய் வேண்டாம் என்று மறுதலித்தார்,

அவன் தனது வோட்கா புட்டியை துணிமூட்டையில் திணித்துவிட்டு கருணையே இல்லாத சாத்தான்கள் என்று யாரையோ திட்டினான்

அவன் யாரை அப்படி சொல்கிறான் என்று அவர் கேட்டுக் கொள்ளவில்லை, அந்த மனிதன் தானாக அவரிடம் சொன்னான்

டிக்கெட் இல்லாத பயணி என்று என்னை வழியில் இறக்கிவிட்டார்கள், நான் ஒரு விவசாயி, எனது தோட்டத்தில் விளைந்த முட்டைகோஸகளை எவ்வளவோ முறை பிச்சைகாரர்களுக்கு இலவசமாக தந்திருக்கிறேன், கோச்விக் மடாலயத்திற்கு ஒரு முறை இருபது மூடை தானியங்கள் இலவசமாக தந்தேன், அதை எல்லாம் மறந்துவிட்டு  என்னை ஒடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்,

நான் எதற்காக பயணம் போகிறேன் என்று ஒருவரும் கேட்டுக் கொள்ளவில்லை, சட்டம் பேசுகிறார்கள் சாத்தான்கள், நான் ஒன்றை உறுதியாக சொல்வேன், படித்தவர்கள் எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்,

நான் படிக்காதவன், கையில் ஒரு ரூபிள் கூட பணமில்லாதவன், நான் எதற்காக போகிறேன் என்பதை நீங்களாவது கேட்டுக் கொள்ளுங்கள், எனது மனைவியின் கல்லறையை பார்ப்பதற்காக போய்க் கொண்டிருக்கிறேன், அது நீவா கிராமத்திலிருக்கிறது, அங்கு தான் அவள் இறந்து போனாள், அந்த கல்லறையை ஆண்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்து அவளை நினைத்து பிரார்த்தனை செய்து வருவேன்,

அவள் என்னை விட்டு இன்னொருவனுடன் ஒடிப்போனவள், அதனால் என்ன, அது அவளது விருப்பம், என் மனைவியாக வாழ்ந்த நாட்களில் என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறாள் தானே, அதற்கு கைமாறு செய்ய வேண்டியது என கடமை தானே என்றான்

நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று டால்ஸடாய் அந்த மனிதரிடம் கேட்டார்

லெப்தவோ, துலா பகுதி என்றார்

நானும துலா பகுதியை சேர்ந்தவன் தான் என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் விவசாயியா என்று கேட்டான் அந்த மனிதன்

ஆமாம், எனது பண்ணை அங்கேயிருக்கிறது , யஸ்னயா போல்யனா என்றார் டால்ஸ்டாய்

கவுண்ட் நிக்கோலாயின் பண்ணையது, நீங்கள் அவரது உறவினரா என்று கேட்டான் அந்த மனிதன்

நான் தான் கவுண்ட் நிக்கோலாய் தால்ஸ்தோய் என்றார்

நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விபட்டிருக்கிறேன், என்றான் அந்த மனிதன்

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் டால்ஸ்டாய்

எனது மனைவியின் சகோதரன் ஒரு பாதிரியார், அவன் புத்தகம் படிக்க் கூடியவன், அவன் அடிக்கடி உங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பான், உங்களை பார்த்தால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனிதரைப் போலிருக்கிறீர்கள், பிள்ளைகளுடன் சண்டையா என்று கேட்டான் அந்த மனிதன்

யாரும் என்னை துரத்தவில்லை, நானாக வெளியேறி விட்டேன், வீடு என்னை மூச்சு திணறச் செய்கிறது, முதுமையில் ஒரு மனிதன் வேண்டும் அமைதி மட்டுமே என்றார்

உங்கள் மனைவி நீங்கள் வெளியேறியதை  தடுக்கவில்லையா என்று கேட்டான் அந்த மனிதன்

அவள் ஒரு முன்கோபி, அவளது பிடிவாதம் தாங்கமுடியாமல் தான், நான் வெளியேறினேன், ஒரு வளர்ப்பு பிராணி போல அவள் கட்டுபாட்டிற்குள் நானிருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்றார்

அந்த மனிதன்  வெளிறிய மேகங்களை ஏறிட்டு பார்த்தபடியே சொன்னான்

நீங்கள் ஒரு விவசாயி இருந்திருந்தால் நிச்சயம் வீட்டை விட்டு  வெளியேறி இருக்க மாட்டீர்கள், எழுத்தாளன் இல்லையா, அதனால் தான் கற்பனையான பயத்தை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள்

டால்ஸ்டாய்க்கு அந்த மனிதன் மீது கோபம் வந்த்து

நான் அறுவடை காலங்களில் விவசாயிகளுடன் ஒன்றாக பாடுபட்டவன், உழைப்பின் வலியை அறிந்தவன், ஒரு போதும் நான் சுகவாசியாக இருந்தவனில்லை, என்றார்

அப்படி தோன்றவில்லை, விவசாயி தன்னை மற்றவர்கள் அவமதிக்கிறார்கள் என்பதற்காக வருத்தபடுகின்றவனில்லை, அவன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறவன், நிலம் அதை தான் அவனுக்கு கற்று தந்திருக்கிறது, காத்திருந்தல் தான் விவசாயின் முதல்பாடம் என்றான் அந்த மனிதன்

இத்தனை காலம் நானும் அப்படித்தான் இருந்தேன், ஆனாலும் என்னை வீடு புரிந்து கொள்ளவேயில்லை,   என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் உங்களையே முதன்மைபடுத்தியே பேசுகிறீர்கள், எப்போதில் இருந்து உங்களுக்கு நீங்கள் முக்கியமாக ஆனீர்கள் என்று கேட்டான் அந்த மனிதன்,

அந்த கேள்வி அவருக்கு வியப்பாக இருந்த்து, அது உண்மை தானே, எப்போதுமே தன்னை பற்றியே தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பட்டது, ஆனாலும் அவன் கேலியாக அதை கேட்கவில்லை என்பதை புரிந்து கொண்டவரைப் போல கேட்டார்

ஒருவன் தன்னை பற்றி ஆராயாமல் தனது சரி தவறுகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது

சரி தவறுகள் எல்லாம் மனிதர்கள் உருவாக்கி கொண்ட வரையறைகள், விவசாயிகள் தன்னை சுற்றிய உலகை, மனிதர்களை பற்றியே யோசிக்கிறார்கள், அதற்காகவே வருந்துகிறார்கள், தன்னை நம்பிய குடும்பத்திற்காக பாடுபடுகிறார்கள், தான் நம்புகிற நிலத்தின் மீது தீராத விசுவாசம் கொண்டிருக்கிறார்கள், விவசாயம் என்பதே தன்னை முதன்மைபடுத்தாமல் செய்யும் சேவைதானில்லையா என்றான்

அந்த மனிதன் ஒரு பாதிரியை போல பேசுவது எரிச்சலாக இருந்த்து, அவனோடு எதற்காக வாதம் செய்கிறோம் என்று தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் டால்ஸ்டாய்

அந்த மனிதன் சொன்னான்

நான் ஒரு அதிகபிரசங்கி, இங்கிதம் தெரியாமல் நிறைய உளறிக் கொண்டு தானிருப்பேன், கனவானே உங்களை போல மனதில் தோன்றும் எண்ணங்களை மறைத்து பேச எனக்கு தெரியாது,

அவனோடு பேசியது போதும் என அவர் தலைகவிழ்ந்து உட்கார்ந்து கொண்டார், அந்த மனிதன் முணுமுணுப்பான குரலில் சொன்னான்

முதுமையில் பெண்களுக்கு கடவுள் தேவைப்படுவதில்லை, ஆண்களுக்கு முதுமையில் தான் கடவுள் தேவைப்படுகிறார்,

டால்ஸ்டாய் வியப்புடன் அந்த மனிதனின் சொற்கள் வீர்யமிக்கதாக இருப்பதை உணர்ந்தபடியே அவனை ஏறிட்டு பார்த்தார்,

அந்த மனிதன்  உற்சாகத்துடன்  அவரது முகத்தை பார்த்து மீண்டும் பேச ஆரம்பித்தான்

நான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்துடன் போராடி வாழ்ந்துவருகிறேன், நிலம் என்னை தாங்கியிருக்கிறது, என்னை ஏமாற்றியிருக்கிறது, என்னை வாழ வைத்திருக்கிறது, நிலம் மிகவும் புதிரானது, அதை எந்த மனிதனாலும் முழுமையாக தன்வசமாக்கிவிட முடியாது, முழுவதும் உரிமை கொண்டாட முடியாது, , அது ஒரு புதிரான உறவு,

கனவானே  உங்கள் கதைகளில் வரும் மனிதர்களை போல உலகமும் உங்கள் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்,

வீடு என்பது ஒய்விடமில்லை, அது ஒரு விசித்திரமான தாவரம், தன் விருப்பபடி தான் அது வளரும், அதன் விதி ரகசியமானது, கடந்த காலத்தை மறந்தவர்களால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும்,

வயது தான் மனிதர்களின் ஒரே பலவீனம், காலம் வளர வளர இயற்கையின் அங்கமான தாவரங்கள், பாறைகள், என அனைத்தும் உறுதியாகின்றன, வலிமை கொள்கின்றன, மனிதனோ வயதானதும் பலவீனமாகிவிடுகிறான்,

இருபது வயதில் அவனால் சகித்துக் கொள்ள முடிந்த எதையும் எழுபது வயதில் சகித்துக் கொள்ள முடியவில்லை, வயது அவனை அழுத்துகிறது, திணறடிக்கிறது, வயது அவனை மண்டியிடவும் அழவும் வைக்கிறது,

முதுமையில் வசிப்பதற்கு என ஒரு மனிதனுக்கு ஒரு வீடு தேவைப்படுகிறது, அது நத்தையின் முதுகில் உள்ளதை போல ஒரேயொரு ஆள் மட்டுமே வசிக்க கூடிய வீடு, உண்மை நானும் கூட அப்படியொரு வீட்டினை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்,

எனக்கு எவர் மீதும் புகார் இல்லை, ஒருவேளை நான் மற்றவர்களின் தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் என் வாழ்க்கையை நானே நரகமாக்கி கொள்வதாக நம்புகிறேன், தன்னை பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களே எல்லா பிரச்சனைகளுக்கும் விதையாக இருக்கின்றன, உங்களை நீங்கள் பகிர்ந்து கொடுங்கள், தண்ணீரை போல நிறையும் பாத்திரங்களின் வடிவம் கொள்ளுங்கள், காற்றை போல எடையற்று இருங்கள் என்றான்

டால்ஸ்டாய் அந்த மனிதன் தனது அனுபவத்தின் சாரத்திலிருந்து பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவரை போல தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் வோட்கா வேண்டும் என்று கேட்டார்

அந்த மனிதன் தனது புட்டியை எடுத்து நீட்டியபடியே சொன்னான்

அஸ்தபோவ் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்குவோம் என்று என்றாவது உங்கள் வாழ்க்கையில் நினைத்த்துண்டா என்று கேட்டான்

இல்லை என்றார்

என்னை சந்தித்து இந்த ஒரு மடக்கு வோட்கா அருந்துவோம் என்று யோசித்திருக்கிறீர்களா எனக்கேட்டான்

ஒருபோதுமில்ல என்றார் டால்ஸ்டாய்

எதிர்பாராமை தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, நமது திட்டங்களை மீறி வாழ்க்கை நம்மை இழுத்துப் போகிறது, நம்மை முழுமையாக அதற்கு ஒப்படைப்பதை தவிர வேறு வழியேயில்லை என்றான்

வோட்கா புட்டியை திறந்து ஒரு மிடறு குடித்தார், உடலில் சூடு பரவ துவங்கியது

அந்த மனிதன் சொன்னான்

உங்களால் நடந்து வர முடியும் என்றால் அருகாமையில் ஒரு துறவியர் மடம் இருக்கிறது, அங்கே போய் தங்கி கொள்ளலாம்

இல்லை என்னால் நடக்க இயலாது, இங்கேயே நான் தங்கிக் கொள்ளப்போகிறேன் என்றார்

உங்களை போல உங்கள் மனைவி வீட்டை துறந்து வெளியேறிப் போயிருந்தால் நீங்கள் புலம்பி தள்ளியிருப்பீர்கள், அவமானத்தில் துடித்திருப்பீர்கள், அப்படி துடித்தவன் நான், ஆனால் நான் ஒன்றை புரிந்து கொண்டேன், அன்பு தான் வீட்டின் அடிப்படை, அதை ஒரு போதும் சந்தேகிக்காதீர்கள், குறை சொல்லாதீர்கள், எவரது அன்பையும் புறக்கணிக்காதீர்கள்,

என்றபடியே அந்த மனிதன் தனது துணிமூட்டையுடன் எழுந்து மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான்,

சாஷா அவரை ரயில்வே நிலைய அதிகாரி வீட்டின் ஒரு அறையிலே தங்கி கொள்ளலாம் எனறு அழைத்துப் போனாள்,

சிறிய படுக்கை அறையாக இருந்த்து, அவர் தலையணையில் சாய்ந்து படுத்துக் கொண்டார்

சாஷா அவரிடம் கேட்டாள்

வேறு ஏதாவது தேவையா அப்பா,

உன் அம்மாவிற்கு ஒரு தந்தி கொடுக்க வேண்டும் என்றார் டால்ஸ்டாய்

மனைவி சோபியா வந்து சேரும்வரை அவர் அஸ்தபோவ் ரயில்நிலைய ஊழியரின் வீட்டு படுக்கையில் நிமோனியா காய்ச்சலுடன் படுத்துகிடந்தார், அவருக்கு தெரியும் தன்னை தேடி மனைவி கோபத்துடன் வந்திருப்பாள் என்று, தான் எழுதிய கடித்த்தை அவள் படித்திருப்பாள், அதற்கான தனது தரப்பு நியாயங்களை சொல்வதற்கு அவள் காத்திருப்பாள், அவளை எப்படி முகம் கொடுத்து பார்ப்பது என யோசனையாக இருந்த்து

ஒரே நாளில் உடல் நலிவுற்று பூஞ்சை போலாகியிருந்தது, மூச்சுவிடுவதற்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது, ரயில்வே நிலையத்தை சுற்றிலும் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் என பலரும் வந்து நிரம்பியிருந்தார்கள், வாழ்வின் கடைசிபடிக்கட்டில் வந்து நிற்கிறோம் என்று அவருக்குப்புரிந்த்து

தன்னை காண்பதற்காக வந்து காத்திருந்த மனைவியிடம் தன்னை மன்னித்துவிடும்படியாக கதறி அழ விரும்பினார், ஆனால் சாஷாவிடம் தனக்கு சோபியாவை பார்க்கவிருப்பமில்லை, அவளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உறுதியான குரலில் சொன்னார்

வெளியே சோபியா அழும் குரல் கேட்டது,

என்னை போல ஒருவனை சகித்துக்கொண்டு அன்பு செலுத்தியதற்கு நன்றி சோபியா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்,

அதன் பிறகு அவர் இறக்கும்வரை சோபியாவிடம் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளவேயில்லை

••••

( உயிர்மை 2013 ஜுலை இதழில் வெளியானது)

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: