பாராட்டிற்குரியவர்கள்

கடந்த ஒரு வாரத்தின் முன்பாக மதுரையில் நடைபெற்ற விருட்சத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது குறித்து நண்பர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தார்கள், நானும் அதில் கலந்து கொள்ள விரும்பியிருந்தேன், ஆனால் வேறு ஒரு முக்கியப்பணியின் காரணமாக சேலம் சென்ற காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை

குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த விருட்சத்திருவிழா  களமாக அமைந்திருந்தது என்று பல பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், இதனை சாத்தியமாக்கிய நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்த இந்த விழா தமிழகத்தில் ஒரு முன்னோடி நிகழ்வு , பசுமை நடை என்ற பெயரில் மதுரையைச் சுற்றியுள்ள முக்கியமான சமண ஸ்தலங்களைப் பாதுகாக்கவும் அதன் பெருமைகளை மக்கள் அறியவும் செய்கின்ற முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது, நானும் அவரது பசுமை நடை நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்,

அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் சார்ந்து தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வரும் முத்துகிருஷ்ணன் ஒரு தீவிர சமூகப்போராளி, இவரது செயல்பாடுகள் நாம் அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியவை,

இளம் தலைமுறை படைப்பாளிகளில் முத்துகிருஷ்ணன் தனது களச்செயல்பாடுகளுக்காகவும் கட்டுரைகளுக்காகவும் கொண்டாடப்பட வேண்டியவர்,

விருட்சத்திருவிழா அவரது சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு, அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

••

கிரிக்கெட், இளைஞர் உலகம், மற்றும் சமகால அரசியல் பிரச்சனைகள் பற்றிய  அபிலாஷின் கட்டுரைகளை நான் விரும்பி வாசிக்கிறேன்,

கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், கட்டுரையாளர் என்று பன்முக ஆளுமையாக விளங்கும் அபிலாஷ் தொடர்ச்சியாக எழுதி வரும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக உள்ளன,

அவரது கால்கள் நாவல் சமகாலத் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று,

அபிலாஷ் தனது இணையதளத்தில் நிறைய மொழிபெயர்ப்புகளை, தான் வாசித்த முக்கிய ஆங்கில நூல்களை, திரைப்படங்களைப் பற்றி சிறப்பாக எழுதிவருகிறார்,

அபிலாஷின் கட்டுரைகளில் வெளிப்படும் கேலி ரசனைக்குரியது, அவரது கட்டுரைகளின் பலமாக நான் கருதுவது நுட்பமாக அவர் முன்னெடுத்து வைக்கும் வாதங்கள், அதற்கு உறுதுணை சேர்க்கும் கருதுகோள்கள், ஆங்கிலத்தில் வரும் பத்தி எழுத்துகளில் காணப்படும் புத்திசாலித்தனமும், தேர்ந்த அழகியலும் இணைந்த கட்டுரைகள் அவை,

உயிர்மையில் அபிலாஷ் எழுதி வரும் கட்டுரைகள் அவரது ஆளுமை வீச்சினை தனித்து அடையாளம் காட்டுகின்றன, அவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

•••

தக்கை பதிப்பகம் வெளியிட்டுள்ள  வே. பாபுவின் மதுக்குவளை மலர் என்ற கவிதைத்தொகுப்பினை வாசித்தேன்,

பாபுவின் ஒன்றிரண்டு கவிதைகளை முன்பாக வாசித்திருக்கிறேன்,

மது விடுதியின்

மரக் கிளையில் இருந்து

சின்னஞ்சிறு இலை

மதுக் கோப்பையினுள்

விழுகிறது

மதுவோடு

இலையைக் குடிப்பவன்

பிறகு

கிளையைக் குடிக்கிறான்

மரத்தைக் குடிக்கிறான்

இறுதியாக

ஒரு வனத்தை!

என்ற பாபுவின் கவிதை எனக்குப் பிடித்தமானது

மதுக்குவளை மலர் தொகுப்பினை வாசிக்கையில் வே. பாபுவை முக்கியமான கவிஞராக உணர்ந்தேன்,

நகுலனின் கவிதைகளைப் போன்ற தொனியும், எளிமையின் அழகும், மரணத்தை முன்வைத்து வாழ்வினை அர்த்தம் கொள்ளும் தேடலும் பாபுவின் கவிதைகளிலும் காணப்படுகிறது,

வே. பாபுவின் கவிதைகளில் தற்கொலை உணர்வுக்கு காரணமான தருணங்களும், மரணம் ஏற்படுத்தும் வெறுமையும் தொடர்ந்து பேசப்படுகின்றன, அன்பிற்காக ஏக்கமே அவரது முக்கிய கருப்பொருள், நேசம் மறுக்கபட்டவனின் துயரக்குரலில் தான் அவர் கவிதைகளை எழுதுகிறார், ஆனால் அவற்றை புகாராகவோ, புலம்பல்களாகவோ வெளிப்படுத்துவதில்லை,

மதுக்குவளை மலர் கவிதைத்தொகுப்பு தினசரிவாழ்வோடு பொருந்திப்போக முடியாமல் துரத்தப்படுபவனின் மனவலியை அழகாக வெளிப்படுத்தியுள்ளது

கவிஞர் வே, பாபுவிற்கும் எனது பாராட்டுகள்

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: