கல்கத்தாவில் ஒரு அகதி

ரித்விக் கட்டக்கின் முதல் படம் நாகரிக், (Nagarik -The Citizen) .

1952ஆம் ஆண்டு நாகரிக் தயாரிக்கப்பட்டது. ஆனால் 1977ல் தான் வெளிவந்தது, அப்போது ரித்விக் உயிருடனில்லை. காணமல் போன நாகரிக் படத்தின் மூலப்பிரதி 1977ல் தற்செயலாகக் கிடைத்து அரங்குகளில் வெளியானது, படம் மிக மெதுவாக இருந்த காரணத்தால்  மக்களிடையே பெரிய வரவேற்பு பெறவில்லை, தனது முதல்படம் வெளியானதை ரித்விக் கட்டக்  காணவேயில்லை,.

ஒருவேளை இப்படம் பதேர்பாஞ்சாலிக்கு முன்பாக வெளியாகி இருந்தால் இதுவே இந்திய மாற்றுசினிமாவின் முதல்படமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும், அந்த அளவு கலைநேர்த்திமிக்கபடமிது, வங்காளத்தின் ஆன்மாவை இப்படத்தில் ரித்விக் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் என சத்யஜித்ரே இப்படத்தை வியந்து கூறியிருக்கிறார்

படத்தின் துவக்க காட்சியில் வேலை கிடைக்காத ராமு என்ற இளைஞன் சோர்ந்து போய் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான், அப்போது ஒரு வீட்டில் இருந்து அற்புதமான இசை ஒலிப்பதைக் கேட்கிறான், உடனே அந்த வீட்டினைத் தேடிப்போகிறான், அங்கே தன்னை மறந்து இசைத்துக் கொண்டிருந்த ஒரு கலைஞன் வாசிப்பதை முடித்துவிட்டு காசு சேகரித்தபடி கிளம்ப முயற்சிக்கிறான்,

அற்புதமான இசை, இன்னொரு முறை வாசியுங்கள் என்று ராமு கேட்கும்போது காசு கொடு என்று இசைக்கலைஞன் சொல்கிறான்

தன்னிடம் பணமில்லை, ஆனால் இந்த இசை அற்புதமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிப் போய்விடுகிறான்,

வறுமையில், ஏழ்மையில், வேலைகிடைக்காத தவிப்பில் என மனிதர்கள் எப்போது மனத்துயரம் அடைந்தாலும் இசையே அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என்கிறார் ரித்விக், இதற்குச் சான்றாக இப்படம் முழுவதும் தனது கஷ்டங்களின் ஊடாக இசையை மட்டுமே கதாபாத்திரங்கள் ஆறுதலாக கொள்கிறார்கள்

ராம், சீதா என புராண கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்ட வங்கதேசத்து அகதி மனிதர்களின் வாழ்வை நாகரிக்கில் விவரிக்கிறார், அடிநிலை மக்கள் வாழும் இருண்ட குடியிருப்பும் அதன் வாழ்க்கையும் தான் படத்தின் கதைக்களம்.

சீதாவைப் பெண் பார்க்க வருகின்ற மனிதர் அவளது கூந்தலை அவிழ்த்துப் பார்ப்பதோடு அவள் சேலையை முழங்கால் வரைத் தூக்கிப் பார்க்கவும் செய்கிறார், அப்படியும் அவருக்குப் பெண்பிடிக்காமல் போய்விடுகிறது,

திருமணத்திற்காக ஏங்கும் சீதா ஒரு பக்கம், வேலை தேடி அலைந்து சலித்து போன ராம் இன்னொரு பக்கம்,  இரவில் பார்வை மங்கிப்போன காரணத்தால் மகளின் கண்களில் வழியும் கண்ணீரின் ஈரத்தை கையால் தொட்டுப் பார்த்து அவளது மனக்கஷ்டத்தை உணரும் அப்பா மறுபக்கம், இத்தனை பேருக்கும் சமைத்து போட்டு அவர்களைக் காப்பாற்றும் ராமின் தாய் என ஊரை, வீட்டை இழந்து அகதியாக கல்கத்தாவிற்கு வந்த ஒரு குடும்பத்தின் அவலக்கதையை ரித்விக் மிக உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்

வேலை கிடைப்பது லாட்டரியில் பரிசு விழுவதைப் போன்றது, திறமையானவர்களுக்கு ஒரு போதும் வேலை கிடைப்பதில்லை என ராமுவின் அப்பா சலித்துக் கொள்கிறார், ராமுவோ தனக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என நம்புகிறான்,

ராமு காதலிக்கும் உமா எப்போதும் ஒரு தையல் இயந்திரத்தை ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை கடத்துபவள், அவளது வீட்டில் உள்ள ஜதின் பாபு மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம், அவர் ராமுவிடம் கடனாக ஒரு ரூபாய் கேட்கிறார்,

அவன் தன்னிடம் பணமில்லை என மறுத்துவிடுகிறான், அவர் நாலு அணாவாவது கொடேன் எனக் கெஞ்சுகிறார், தொந்தரவு செய்யாதீர்கள் என ராமு கோவித்துக் கொள்ள, வறுமை அடுத்தவரை எளிதாகக் கோபம் கொள்ள செய்துவிடும் என அவர் தன்னிலை விளக்கம் அளிக்கிறார்,

இருண்ட சுவர்கள் கொண்ட உமாவின் வீடும், உடல் நலமற்ற தங்கையும், தூசிபடிந்த வாசலும், அழுக்கான உடைகளும் புறக்கணிக்கபட்ட உலகம் ஒன்றில் வாழும் ஆத்மாக்களை போலவே அவர்களைச் சித்தரிக்கிறது,  அந்த நிலையிலும் ராமுவிற்கும் உமாவிற்கும் காதல் வளர்க்கிறது,

ராமுவிற்காக அம்மா பசியறிந்து உணவு தருகிறாள், ராமு வங்காளத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான், அழகிய வீடு ஒன்றினைப் பற்றி அடிக்கடி கனவு காண்கிறான், ராமுவின் நம்பிக்கைகளை புறவாழ்வின் நெருக்கடி கலைத்துப் போடுகிறது, அவன் இயலாமையின் உச்சத்திற்குத் தள்ளப்படுகிறான்,

ராமு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்துத்தங்கும் சாகர் மீது சீதா காதல் கொள்கிறாள், அந்தக் காதலை சாகர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறான்,  வறுமை, கடன், நெருக்கடி, அவர்களின் இயல்பான ஆசைகளை கூட நிராகரிக்கிறது,

வாடகை கொடுக்க முடியாமல் குடியிருந்த வீட்டிலிருந்தும் துரத்தபடுகிறது ராமுவின் குடும்பம், மழையோடு அவர்கள் வெளியேறுவதுடன் படம் நிறைவு பெறுகிறது,

மெலோடிராமா எனப்படும் உணர்ச்சிபூர்வமான நாடகப்பாங்கில் படம் அமைந்துள்ளது, மிக மெதுவாக, உரையாடல்களின் வழியாகவே படம் விரிவு கொள்கிறது, ஆனால் காட்சிக்கோணங்களும், ஹரிபிரசன்ன தாஸின் இசையும், படத்திற்கு புதிய பரிமாணத்தை உருவாக்கிவிடுகின்றன, அன்றைய வணிக சினிமாவின் துளிபாதிப்பு இல்லாமல் தனக்கான படத்தை ரித்விக் உருவாக்கியிருக்கிறார்,

படத்தில் வரும் ஜதினும் ராமுவின் அம்மாவும் மறக்கமுடியாத இரண்டு கதாபாத்திரங்கள், ராமுவின் அம்மா உறுதியாக தாங்கள் பழைய வாழ்க்கையை மீண்டும் அடைந்துவிடுவோம் என்று நம்புகிறாள், அவள் ஒருத்தி மட்டுமே வறுமைக்குள்ளும் மனஉறுதியோடு நம்பிக்கையோடு செயல்படுகின்றவள்,  ஜதின்பாபு உருக்குலைந்து போனவர், எதையாவது பற்றிக் கொண்டு வாழ்ந்துவிட வேண்டும் என்று போராடுகின்றவர், வறுமை அவரை வாட்டி வதைக்கிறது, பணமில்லாமல் உலகில் எந்த உறவும் நிலைப்பதில்லை என்பதை அவர் உணர்ந்து நிலைகுலைந்து போகிறார், உதிரும் காரைகளை போல அவர் கண்முன்னே உறவுகள் உதிர்ந்து போகின்றன

வேலை தேடி அலையும் ராமுவிற்கு உள்ள ஒரே ஆறுதல் அவனது காதலி உமா, இரவில் அவளைத் தேடி போய் பேசிக் கொண்டிருக்கிறான், அவன் வீடு திரும்பும் போது வாசல் வரை வந்து அவனை வழி அனுப்புகிறாள், அப்போது அவளிடம் மெல்லிய புன்னகை ஒன்று லேசான ஒளிக்கீற்றினைப் போல வெளிப்படுகிறது, இலையளவு நம்பிக்கை மட்டுமே அவர்களிடம் உள்ளது

படத்தின் முதற்காட்சியில் உயர்ந்தோங்கிய ஒரு மரமும் மேகமும் காட்டப்படுகிறது, இது போன்ற ஒரு காட்சி தான் மேகே தாக்கே தாராவிலும் இடம் பெற்றுள்ளது, இக்காட்சி ஒரு குறியீடு,  அதிலிருந்து கேமிரா நகர்ந்து நகரவாழ்வின் நெருக்கடியான நிலையைக் காட்டுகிறது, ராமு ஒரு வயதான பெண் சாலையை கடந்து செல்ல உதவி செய்கிறான், இது அவனது இயல்பை வெளிப்படுத்துகிறது,

வீட்டிற்கு வரும் ராமு , பள்ளி ஆசிரியராக வேலை பார்த்த தந்தையிடம் கடன் வாங்கி அணிந்து கொண்ட கோட்டைத் திரும்ப தருகிறான், அவனது இயல்பு இப்போது வேறாக மாறிவிடுகிறது, ஒரு வேஷத்தை கலைத்தவனை போல அவன் உருமாறுகிறான்.

நாகரிக் படத்தின் துவக்கத்தில் ஒலிக்கும் குரல் ஆறு தன் இயல்பில் ஒடிக்கொண்டேயிருப்பதை சுட்டிக்காட்டுகிறது, வாழ்க்கையும் அது போன்றது தான், ஆனால் அந்த ஒட்டத்தில் சிக்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கை மனிதர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையே ரித்விக் ஆராய்கிறார்

இப்படத்தை உருவாக்கிய போது ரித்விக் கட்டக்கின் வயது 27. தனது வாழ்நாளில் எட்டு முழுநீளபடங்களையும் பத்து டாகுமெண்டரி படங்களையும் இயக்கியிருக்கிறார்,

பூனே திரைப்படக்கல்லூரியில் ரித்விக் கட்டக் முதல்வராக இருந்த போது இவரிடம் பயின்ற மாணவர்கள் குமார் சாஹனி, மணி கௌல், சையத் மிர்ஸா, அடூர் கோலாகிருஷ்ணன், கேதன் மேத்தா, ஜான் ஆபிரஹாம் ஆகியோர்  பின்னாளில் மகத்தான சினிமா இயக்குனர்களாக உருவானார்கள்,

இந்திய சினிமாவின் மிக முக்கிய ஆளுமையான ரித்விக் குமார் கட்டக்  கிழக்கு வங்காளத்திலிருந்த டாக்காவில் பிறந்தவர். இந்திய சுதந்திரத்தை ஒட்டி தேசம் இரண்டாக பிளவுண்டபோது ரித்விக்கும் அவரது குடும்பமும் டாக்காவில் இருந்து வெளியேறி அகதிகளாக கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார்கள். வங்கப்பிரிவினையின் பாதிப்பு ரித்விக்கின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்த வலியாகும்.

தன்னை ஒரு அகதியாக உணர்ந்த அவர் அகதியின் புகலிட வாழ்வை, அதன் வலியை, அவலத்தை மிக உண்மையாக, நுட்பமாக தனது படங்களில் பதிவு செய்திருக்கிறார்,

இப்டா எனப்படும் Indian People’s Theatre Associationல் இணைந்து முக்கிய நாடக ஆசிரியராக, இயக்குனராக செயல்பட்ட ரித்விக் கம்யூசினிச சிந்தனைகளால் வசீகரிக்கபட்டவர்.  இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர், பாடகர், நடிகர் என பன்முக ஆளுமையாக உருவான ரித்விக் நிமாய் கோஷ் இயக்கிய சினமூல் படத்தில் உதவி இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் நுழைந்தார்.

இந்திய சினிமாவில் தனக்கென தனிபாணி ஒன்றினை உருவாக்கி கொண்ட இவரது படங்கள் சிறந்த இசையாலும், நேர்த்தியான நடிப்பாலும், ஆழமான சமூகபிரச்சனை குறித்த கருப்பொருளாலும், கவித்துவமான படமாக்கும் முறையாலும் மிக முக்கியமான திரைப்படங்களாக அறியப்பட்டன, வங்காளத்தின் நாட்டார் இசையை, மரபான பாடல்களை, பண்பாட்டுக்கூறுகளை, நம்பிக்கைகளை அழுத்தமாக தனது படங்களில் ரித்வி கட்டக் பதிவு செய்திருக்கிறார்,

பொருளாதார ரீதியாக பெரும் வெற்றியை இவரது படங்கள் அடையவில்லை என்ற காரணத்தால் இவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் எவரும் முன்வரவில்லை, தானே நண்பர்களின் உதவியைப் பெற்று சில படங்களை ரித்விக் உருவாக்கினார், அவரது எல்லா படங்களிலும் ஆறு ஒரு முக்கிய படிமமாக முன்வைக்கபடுகிறது,

காத்திரமான கலைஞனாக வாழ்ந்த ரித்விக் சமரசங்கள் அற்ற கலைப்படைப்பை உருவாக்க முயன்ற பெருங்கலைஞன் ஆவார்,

குடியும் ,பொருளாதார பிரச்ச்னைகளும், உறவுகள் கசந்து போன மனவெறுமையும் அவரை ஒடுக்கின, 1976 பிப்ரவரி 7ல் ரித்விக் இறந்து போன நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு விருப்பமான பாடலை பாடி  அஞ்சலி செலுத்தினார்கள்,

இந்திய சினிமா நூற்றாண்டில் ரித்விக் கட்டக்கை நாமும் கொண்டாடுவோம்,

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: