பவா கதை சொல்கிறார்


பவா கதை சொல்கிறார்

பவா செல்லத்துரை என்றொரு கதைசொல்லி ஆவணப்படத்தைப் பார்த்தேன் ,பவாவோடு இருபது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் படம் பார்க்கும் போது, அவர் கூடவே இருந்து கதை கேட்பது போல இயல்பாக, நேர்த்தியாக, உணர்ச்சிபூர்வமாக இப்படம் உருவாக்கபட்டுள்ளது,

சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர், கதை சொல்லி, இலக்கிய இரவுகளை உருவாக்கியவர், முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்திவருபவர், பதிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பவா செல்லத்துரை

இந்த ஆவணப்படம் பவாவின் கதை சொல்லும் திறனை முதன்மைபடுத்தியிருக்கிறது, இதனைச் சிறப்பாக இயக்கியுள்ள ஆர்.ஆர். சீனிவாசன் மிகுந்த பாராட்டிற்குரியவர், இயற்கையோடு இணைந்த காட்சிபடுத்துதலில் படம் கவித்துமாக உருவாக்கப்பட்டுள்ளது

பவா எப்போதுமே தான் படித்த சிறந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எதையும் மனம் திறந்து பாராட்டி கொண்டாடக்கூடியவர், சுந்தர ராமசாமியின் எலிசபெத் டீச்சர் கதையை அவர் மேடையில் சொல்வதைக் கேட்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன்,

உணர்ச்சிபூர்வமான ஈடுபாடும், தகுந்த குரலும், பார்வையாளரை வசியப்படுத்தும் சொல்லும முறையும் கதை சொல்வதற்குத் தேவை, இந்த மூன்றும் பவாவிடம் சிறப்பாக ஒன்றுகூடியிருக்கிறது,

இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு முதன்முறையாகச் சென்ற போது பவாவின் முதல் கவிதை தொகுப்பு வந்திருந்தது, அப்போது அவரது எளிய குடிசை வீட்டிற்குள் நானும கோணங்கியும் இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம், அந்த அன்பில் துளி கூட இன்றும் மாறவில்லை, அதே அக்கறை, ஈடுபாடு, அவரிடமிருக்கிறது,

பவாவின் வீடு நண்பர்களால் நிரம்பியது, அப்படி நட்பை கொண்டாடுவதற்குத் தமிழகத்தில் நான் அறிந்த இன்னொரு நபர் கிடையாது, நண்பர்களுக்கு அள்ளி அள்ளி தருவதற்கு அவர் ஒன்றும் பெரும் பணக்காரரில்லை, மிகுந்த கஷ்டப்பட்டிருக்கிறார், கடன்வாங்கியிருக்கிறார், அவரது வேலை மின்சார வாரியத்தில் ஒரு அலுவலர் அவ்வளவே, விவசாயமும், நண்பர்களின் ஒத்துழைப்பும், கடன்படுதலும் தான் அவரது இத்தனை செயல்பாடுகளையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

பெரிய எழுத்தாளர்கள் என்றில்லை, ஆரம்ப நிலை வாசகருக்கும் கூட அவரது பரியம் ஒன்று போலதானிருக்கிறது, ஒரு உதாரணம் சென்னையில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரை அவரைக் காண்பதற்கு அழைத்துப் போயிருந்தேன், நண்பர் புத்தக வாசிப்பில் ஈடுபாடு கொண்ட இளம்வாசகர்,

பவா அவரோடு மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தார், உணவளித்துப் புத்தகங்கள் கொடுத்து அன்போடு அனுப்பி வைத்தார்,

அந்த நண்பர் சென்னை திரும்பியதும் ஆதங்கத்துடன் என்னிடம் கேட்டார், ஏன் சார் இவரை இத்தனை வருஷமாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கவேயில்லை, எப்பேர்பட்ட மனுசன் என வியந்து வியந்து சொன்னார்,

ஒருநாள் பழக்கம் தான், ஆனால் அதற்குள் நண்பரது மனதில் பவாவிற்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது, இந்த உறவு எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை

அந்த வசீகரம் பவாவின் இயல்பிலே இருக்கிறது, அவரும் கருப்பு கருணாவும் இணைந்து திருவண்ணாமலையில் நடத்திய இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் நூற்றுக்கும் மேலாக இருக்கும், அவரது பலமே அவரது நட்பு வட்டம் தான்,

ஒரு மனிதன் சந்தோஷத்தைப் பகிர்ந்து தருகிறான், அடுத்தவர் கஷ்டத்தில் கூட நிற்கிறான், யாருக்கு உதவி என்றாலும் ஒடி வருகிறான் என்றால் எப்பேர்பட்ட மனசு இருக்க வேண்டும், அது பவாவிடமும் அவரது துணைவியார் ஷைலஜா மற்றும் அவரது குடும்பத்து மனிதர்கள் அத்தனை பேரிடமும் இருக்கிறது

இந்த நட்பு கைமாறு அற்றது, இதுவரை பவா என்னிடம் எதையும் எதிர்ப்பார்த்தவரில்லை,

,நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் பவாவின் வீடு எனது சொந்த வீட்டை போன்றது, நான் ஒவ்வொரு முறையும் எனது சொந்த ஊருக்குப் போவது போலத் தான் திருவண்ணாமலைக்குப் போகிறேன்,

பவா என்ற கதை சொல்லியின் ஆளுமை மட்டுமே இந்த ஆவணப்படத்தில் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, மனம் நெகிழ பவா கதை சொல்கிறார், இக்கதை அவரது வாழ்நிலத்தின் கதை, அவர் அறிந்த மனிதர்களின் கதை,

அவரது குடும்பம், படைப்புகள், அவரது இலக்கிய ஈடுபாடு, நட்புவட்டம், அவர் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், முகாம்கள்,  கண்காட்சிகள், அதில் கலந்து கொண்ட ஆளுமைகள், பவா வெளியிட்டுள்ள புத்தகங்கள், பதிப்பகம் என விரிவாகச் சொல்வதற்கு நிறைய இருந்த போதும் படம் ஒரு கோணத்தில் மட்டுமே பவாவை அடையாளப்படுத்துகிறது

இந்தப் படத்தைக் காணும் போது எனக்குப் பவாவோடு பழகிய பல்வேறு நினைவுகள் கிளர்ந்து எழுந்தன,

நானும் கோணங்கியும் எத்தனையோ இரவுகளில் அவர் வீட்டிற்குப் போய் இறங்கியிருக்கிறோம், பவாவின் தாயும் தந்தையும் அற்புதமான மனிதர்கள், எந்த இரவாக இருந்தாலும் எங்களுக்கு உணவளித்து, நலம் விசாரித்து அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்கள், வாரக்கணக்கில் நானும் கோணங்கியும் தங்கியிருக்கிறோம், இலக்கியம் பேசியிருக்கிறோம், ஊர் சுற்றியிருக்கிறோம்,

நான் கோணங்கியின் வீட்டிலும் பவாவின் வீட்டிலும் நாட்கணக்கில் தங்கி வளர்ந்தவன் என்பதை ஒருநாளும் மறக்கமாட்டேன்

தனது நண்பர்களுக்காகப் பவா எவ்வளவு இழந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும், அவரது மாறாத சிரிப்பின் பின்னே பகிர்ந்து கொள்ளப்படாத காயங்கள், வலிகள் இருக்கின்றன, அவர் தனது கஷ்டங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்கிற மனிதரில்லை, சந்தோஷத்தை மட்டுமே தேடித்தேடி பகிர்ந்து கொள்பவர்,

இந்த மனது தான் அவர் பற்றிய ஒரு ஆவணப்படத்தை உருவாக்க காரணமாகயிருந்திருக்கிறது, அவரது எழுத்தின் பின்புலமாக செயல்படுகிறது.

இதனை உருவாக்கிய செந்தழல் ரவி, மற்றும்எஸ்கேபி கருணா, ஒளிப்பதிவு செய்த சரவணக்குமார், பட்த்தொகுப்பாளர் தயாளன், இந்த முயற்சிக்குத் துணை நின்ற ஷைலஜா, ஜெயஸ்ரீ, உத்திரகுமாரன், வம்சி, மானசி, மற்றும் திருவண்ணாமலை நண்பர்கள், அத்தனை பேரும் பாராட்டிற்குரியவர்கள்,

நட்பையும் இலக்கியத்தையும் உயர்த்திப்பிடிக்கும் பவா என்ற நண்பனின் ஆவணப்படமிது, அவர் கதை சொல்வதைக் கேட்டுப்பாருங்கள், கண்ணில் நீர் வழிய உங்கள் கரங்களும் அவரது நட்பிற்காக நீளவே செய்யும்

•••

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: