ஹாங் இசை.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பவாசெல்லதுரையின் சிறுகதை தொகுதி வெளியீட்டுவிழாவிற்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞர் அறிமுகப்படுத்தி வைக்கபட்டார். முப்பது வயதைக்கடந்த தோற்றம். யூத இனத்தைச் சேர்ந்த அவர் தனது மெய்தேடலின் வழியில் ரமண ஆசிரமத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். அவர் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பூ வேலைப் பாடு கொண்ட பை என் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சி ஆரம்பமானதும் அந்த ஜெர்மானிய இளைஞர் அரைமணி நேரம் தனது இசையை வழங்கவிருக்கிறார் என்றார்கள். அவர் தனது பூவேலைபாடுள்ள பையிலிருந்து கேடயம் போன்ற கருவி ஒன்றை வெளியில் எடுத்து வைத்தார். என்ன அது என்று வியப்பாக இருந்தது.
அந்த இசைக்கருவியின் பெயர் ஹாங் (HANG) என்றும் அது கண்டுபிடிக்கப்பட்டு ஏழு வருடங்களே ஆகியிருக்கின்றன. இதுவரை அந்த வாத்தியக்கருவியை வாசிக்கத் தேர்ச்சி பெற்றவர்கள் ஐநூறு பேர்கள் மட்டுமே என்ற தகவலைத் தெரிவித்தார்கள்.
கைவிரல்களால் வாசிக்கப்படக்கூடிய அந்த இசைக்கருவியை அவர் வாசிக்கத் துவங்கியவுடன் அதுவரை நாம் கேட்டிராத மயக்கமூட்டும் இசை கசிந்து பெருகத் துவங்கியது. அதை என்ன வகையான இசை என்று வகைப்படுத்த தெரியவில்லை. இசை துவங்கும் போது கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அது தியான நிலையை உருவாக்க கூடியது என்றார்கள். அதை மெய்பிப்பது போன்றே இருந்தது ஹாங் இசை.
சில வேளைகளில் ப்யானோ இசை போன்றும் சில கணங்களில் டிரம்ஸ் இசை போன்ற தாளக்கட்டும் ஆங்காங்கே சந்தூர் இசையின் துள்ளலும் கலந்த விநோத இசைக்கருவியது. தன்விரல்களால் அவர் ஹாங்கின் மேல்பரப்பில் ஆங்காங்கே தாளமிட இசை உயர்க்கிறது.
முன்பு கேட்டிராத விசித்திர இசையால் அரங்கமே மயங்கியிருந்தது. காண் உலகம் துண்டிக்கப்பட்டு ஆற்றின் பெருக்கில் படகில் செல்வதைப்போல என் மனது நழுவிக் கொண்டிருந்தது. இரண்டு மாறுப்பட்ட இசையமைப்புகளை அவர் வாசித்துக் காட்டினார். அந்த இசைத் துணுக்குகள் நமது மரபான இசையோடு வெகுவாக நெருக்கம் கொண்டிருப்பதை உணர முடிந்தது. எட்டு இசைப்புள்ளிகளுக்குள் அவரது விரல்கள் ஊர்ந்து நகர்கின்றன. தாவரத்தின் இலையைப் போல பசுமை பொங்க துளிர்க்கிறது இசை.
இந்த இசை நிகழ்வில் இரண்டு விஷயங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. ஒன்று இசைக்கலைஞரின் முகத்திலிருந்த புன்னகை. நிகழ்ச்சி முழுவதும் அவர் முகத்தில் மெல்லிய சந்தோஷம் பீறிட்டுக் கொண்டிருந்தது. துள்ளும் மீன்களைப் போல விரல்கள் அசைந்து கொண்டிருந்த போதும் முகத்தில் மாறாத புன்சிரிப்பு. இன்னொன்று வெகுதிரளாக வந்திருந்த பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள். அவர்கள் அந்த இசையை தன்னை மறந்து ரசித்தது.
Leave a Reply